articles

img

நிலம் கையகப்படுத்துதலும் விவசாயிகளின் வாழ்வாதாரமும்... - பெ.சண்முகம்

திராவிட முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் 505 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் பல வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற்றி ருக்கிறது. இந்த வாக்குறுதிகளில் வரிசை எண்.43 “விவ சாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயி களின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன் பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளைநிலங்கள் பாதுகாக்கப்படும், விவசாயிகளுக்கு எதிரான சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது” என்பது.  மற்றொன்று, “திருச்சியில் அறிவித்த ஸ்டாலினின் 7 உறுதி மொழிகளில் ஒன்று” 10 லட்சம் ஹெக்டேர் அள வுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக அதாவது 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்” என்பது. 

முப்போக சாகுபடி நிலங்கள்

மேற்குறிப்பிட்டுள்ள திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் அணுகுமுறை, அமைச்சர்களின் பேச்சுக்கள் இல்லை  என்பதை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட விரும்பு கிறோம். உதாரணத்திற்கு, திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை புதிதாக ஆறுவழிச்சாலை அமைக்க அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அமைக்கப் படவுள்ள ஒன்றிய அரசு திட்டம் ஆகும்.  சாலை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள பகுதி  முப்போகம் விளையும் நல்ல நஞ்சை நிலமாகும். ஆழ்குழாய் மூலம் எண்பது அடி ஆழத்தில் தண்ணீர்  கிடைக்கும் பகுதி. இப்படியொரு வளமான நிலப்பகுதியை சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்த உள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகா பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, மலர் சாகுபடிகள் அதிகமாக செய்யப்படும் பகுதி ஆகும்.  மாவட்ட ஆட்சியரால் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்ட போதே நிலஉரிமையாளர்களான விவ சாயிகள் அனைவரும் நிலத்தை தர விருப்பமில்லை என்று தங்களது எதிர்பபை வலுவாக பதிவு செய்துள்ளனர். சாலை அமைக்கப்பட்டால் 787 சிறு- குறு விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 1236 ஏக்கர். நிலங்களை இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்படுவர். 15 ஏரிகள், 30 குட்டைகள் அழிக்கப்படும். அரசு 1956-ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் படி நிலத்தை கையகப் படுத்துகிறது. ஆனால் இழப்பீடு மட்டும் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே 2013-ஆம் ஆண்டும் சட்டத்தில் முப்போகம் விளையும் நிலங்களை உணவு பாதுகாப்பை கருத்தில் கொண்டு தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தங்களது நிலஉரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சாலைகள் இல்லாமல் விவசாயிகள் எப்படி  தங்கள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு  வருவார்கள். சாலை இல்லாமல் வளர்ச்சி எப்படி  ஏற்படும் என்று பொத்தாம் பொதுவாக நியாயப்படுத்தி பதிலளித்துள்ளார். குறிப்பிட்ட சாலை, அதற்காக கையகப்படுத்த உள்ள நிலத்தின் தன்மை ஆகியவற்றை அறிந்து அவர் பதிலளிக்கவில்லை.

மாற்றுவழியை மனம் கொள்ளாமல்

இதே போல், மதுரை திருமங்கலம் முதல் செங்கோட்டை புளியரைவரை நான்கு வழிச்சாலை அமைக்க பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், ராஜபாளையம் முதல் புளியரை வரை உள்ள பகுதி முப்போகம் சாகுபடி செய்யப்படும் பகுதி ஆகும். தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்கள், நெல் சாகுபடிகள் உள்ள பகுதி. இந்த திட்டத்திற்காக கடைய நல்லூர், வாசுதேவநல்லூர் பகுதியில் மட்டும் சுமார் 2800 ஏக்கர் நல்ல விளை நிலம் கையகப்படுத்தப் பட உள்ளது.  99 சதவீதம் சிறு-குறு விவசாயிகள். 1800 விவசாயி களும் 2019-ஆம் ஆண்டே மாவட்ட ஆட்சியரிடம் நிலத்தை கொடுக்க விருப்பமில்லை என்று தனித்தனி யாக மனு அளித்துள்ளனர். இப்போது அரசு திட்ட மிட்டுள்ள பகுதி முக்கிய நகரங்களை இணைக்கா மலும், வளைந்து நெலிந்தும் தேவையற்று அதிக தூரம் உள்ள வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, தூரம் குறைவாகவும், சாலை நேராக அமையும் வகையிலும், திருவேங்கடம், சங்கரன் கோயில், தென்காசி தாலுகாவுக்குட்பட்ட புஞ்சை நிலப்பகுதியில் சாலையை அமைக்கலாம் என்று மாற்று வழியை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.  இந்த மாற்று வழியை ஏற்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்பதை வெளிப்படையாக இதுவரை  தெரிவிக்கவில்லை. நில விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சில நபர்களின் நலன்களுக்காக, மாற்றுப் பாதையை பரிசீலிக்க அரசு தயாராக இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதை மறுப்பதற்கில்லை. இந்த திட்டம் தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில், சிலர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக திட்டத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

விவசாயிகளின் கருத்தை கவனத்தில் கொள்ளவில்லை

ஆனால், விவசாயிகளின் ஆட்சேபணையை கொஞ்சமும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், விவசாயிகளின் விருப்பமில்லாமல் நிலத்தை கையகப்படுத்தமாட்டோமென்று, கொடுத்த வாக்குறுதி  குறித்தும் கவலையேபடாமல், தானடித்தமூப்பாக, நிலத்தை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை பயன்படுத்தி அடாவடித்தனமாக கையகப்படுத்துவது எவ்விதத்திலும் நியாயமில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உத்தன பள்ளி பகுதியில் சுமார் 3300 ஏக்கரில் புதிதாக சிப்-காட் அமைக்க அரசு அறிவித்துள்ளது. இதில்  சுமார் 2200 ஏக்கர் முப்போகம் விளையக் கூடிய பாசன  வளம் நிறைந்த நிலப்பகுதியாகும். ஏற்கனவே ஓசூரைச் சுற்றி நான்கு சிப்காட்உள்ளது. இப்போது இது ஐந்தாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதி விவசாயிகளும் சிப்காட்க்கு நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தனித்தனி யாக மனுவை அளித்துள்ளனர். ஆனால், அது பற்றி கடுகளவும் கவலைப்படாமல் சட்டப்பேரவை யில் சிப்காட் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது.  விவசாயக் குடும்பங்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலம் தான். அரசு கொடுக்கும் சொற்ப இழப்பீட்டில்  அவர்களால் இதுபோன்ற வளமான வேறொரு நிலத்தை வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். 

உறுதிமொழியிலிருந்து நழுவும் போக்கு...

“சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம்  நிறைவேற்றப்படாது” என்ற உறுதி மொழியிலிருந்து திமுக அரசு நழுவல் போக்கை கடைப்பிடிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. நெடுஞ்சாலைதுறை அமைச்சரின் பேச்சுக்கள் அதைத்தான் வெளிப்படுத்து கிறது. சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வேண்டாம் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணங்கள் அனைத்தும் அப்படியே தான் உள்ளன என்பதை அரசுக்கு கவனப்படுத்துகிறோம். நாடு முழுவதும் ஆண்டுக்காண்டு மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே உள்ளது. 2050-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடி யாக அதிகரிக்கும் என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு மக்களுக்கும் உணவளிக்க உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க  வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. மக்களுக்கு  மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்க  வேண்டும். இதற்கேற்ப விவசாயப் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இருபோக  சாகுபடி பரப்பளவை இருமடங்காக உயர்த்துவதாக தொலைநோக்கு திட்டம் முதலமைச்சரால் அறி விக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொலைநோக்கிற்கு நேர் எதிர்மாறாக இருக்கிற நிலங்களை அழிக்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருக்கிறது. 

விவசாயிகளின் வாழ்வாதாரமும் உணவுப்பாதுகாப்பும்

விளைநிலங்களை வேறுபணிகளுக்கு மாற்றிவிட்டால், மீண்டும் விளைநிலங்களாக மாற்ற  முடியாது என்பது அரசிற்கு தெரியாததல்ல. “வளர்ச்சி”  என்ற வார்த்தைக்குள் எல்லாவிதமான அழிவுகளை யும் மூடி மறைத்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டு கிறோம். நல்ல விளைநிலங்களை, அதிலும் நஞ்சை நிலங்களை அழித்து சாலை அமைப்பது, தொழிற்சாலைகள் அமைப்பது அறிவார்ந்த செயலா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சனைகளில் மாற்றுவழிகள் குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரமும், நாட்டின் உணவுப் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.  எனவே, விவசாயிகளின் உணர்வுகளுக்கும், உரிமைக்குரலுக்கும் மதிப்பு கொடுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்ச ரைப் போலவே, அனைத்துத்துறை அமைச்சர்களும் செயல்படுவது அவசியம். உறுதிமொழிக்கு மாறாக, அமைச்சர்கள் வெவ்வேறு குரலில் பேசுவது அரசுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும்.

வேளாண் மேம்பாட்டுக்குழு அமைத்திடுக!

வேளாண் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை உருவாக்கவும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளைக் கொண்ட வேளாண் மேம்பாட்டுக்குழுக்கள் அமைக்கப்படும் என்பது மற்றொரு வாக்குறுதி. அது  அமைக்கப்பட்டிருந்தால் மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளையெல்லாம் அக்குழுவில் விவா தித்திருக்க முடியும். திமுக ஆட்சியில் எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முதன்மையான துறையாக விளங்கும் வேளாண் துறைக் கென்று சொல்லப்பட்ட ஒரே குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. நிலம் கையகப்படுத்துதல் பிரச்சனையில் மிகுந்த நிதானத்தோடும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு நடந்து கொள்வது அவசியம். 

கட்டுரையாளர் : மாநிலப் பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


 

;