articles

img

வரலாறும் வாரிசுகளும் - ஆர்.பத்ரி

தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கைவிட வலியுறுத்தி பிரிட்டிஷாருக்கு தன்னுடைய தந்தை விண்ணப்பம் அனுப்பியதை அறிந்து துடித்துப் போன மாவீரன் பகத்சிங், தந்தைக்கு அனுப்பிய கடிதம் இது: 

‘‘என்னை காப்பாற்றுவதற்காக தாங்கள் சிறப்புத் தீர்ப்பாயத்திடம் விண்ணப்பம் கொடுத்தீர்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அது என மன அமைதியை தகர்த்து விட்டது. ஒரு தந்தையின் எல்லா உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் அங்கீகரித்தாலும் என்னிடம் ஆலோசிக்காமல் இப்படியொரு காரியத்தை செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அப்பா, எனக்கு மிகவும் துயரத்தையும் மனக் கலக்கத்தையும் நீங்கள் ஏற்படுத்திவிட்டீர்கள். மிகவும் இழிவான பலவீனமாக இதை நான் பார்க்கிறேன். இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் மக்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த கடிதத்தை மறைக்காமல் பிரசுரிக்கும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்’’.

1930ம் ஆண்டு ஜனவரி 24 ம் நாள். தங்கள் கழுத்தில் சிவப்பு கைக்குட்டைகளை அணிந்து கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த பகத்சிங் மற்றும் தோழர்கள் சுகதேவ், ராஜகுரு உரத்து முழக்கமிடுகிறார்கள். ‘‘மாவீரன் லெனின் நாமம் வாழ்க வாழ்க; தொழிலாளி வர்க்க அரசுக்கு வெற்றி! ஏகாதிபத்தியம் ஒழிக! முதலாளித்துவம் ஒழிக!’’ என முழக்கமிட்டுக் கொண்டே வந்தவர்கள் ஒரு தந்தியை நீதிபதியிடம் அளித்ததோடு ‘‘இந்த தந்தியை கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவரிடம் சேர்த்து விடுங்கள். இக்கடிதத்தில் சோவியத் பரிசோதனைகளுக்கு நாங்கள் எங்கள் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறோம் என்பதையும் சொல்லுங்கள்’’ எனவும் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிற ‘வீர (?)’ சாவர்க்கரின் ‘சாகசங்களோ’ முற்றிலும் வேறு மாதிரியானவை. 1914 இல் அந்தமான் சிறையைப் பார்வையிட வந்த பிரிட்டிஷ் பிரதிநிதி சர் ரெஜினால்ட் கிராடக் என்பவரது ஒப்புதலோடு பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் எழுதிய கடிதம் இது: 

‘‘கருணை காட்டும் பேருள்ளம் கொண்ட அரசு என்னை விடுதலை செய்யுமானால் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். தவறிழைத்த ஒரு மகன் பெற்றோரைப் போன்ற பேரன்பு கொண்ட அரசாங்கத்திடம் முறையிடாமல் வேறு எங்கு முறையிட முடியும்..?’’

1923இல் எரவாடா சிறையில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு அவர் அனுப்பி வைத்த கடிதம் இது: 

‘‘எனது விடுதலைக்குப் பிறகு அரசு நிர்ணயிக்கும் காலம் வரையில் நான் அரசியலில் பங்கேற்கப் போவதில்லை. மேலும் எனது அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிப்பது உள்ளிட்ட நீங்கள் விதிக்கும் நிபந்தனைகள் முழுவதற்கும் கட்டுப்படுகிறேன்’’.

-தொடர்ச்சியாக எழுதிய மன்னிப்புக் கடிதங்களின் அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 1924 இல் அன்றைய பம்பாய் ஆளுநராக இருந்த சர் ஜார்ஜ் லாய்ட் அவர்களிடம் அளிக்கப்பட்ட தன் மீதான வழக்குகள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை குறித்து சாவர்க்கர் அளித்த  ஒப்புதல் வாக்குமூலம் இது: 

‘‘எனது வழக்கு விசாரணை நியாயமாக நடந்தது என்றும், எனக்கு அளிக்கப்பட்ட தண்டனை உரிய அளவில் (?) இருந்தது என்றும் ஒப்புக் கொள்கிறேன். மேலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் அனைத்தும் வெற்றி பெற உழைக்க விரும்புகிறேன் எனவும் உறுதி அளிக்கிறேன்’’.

இத்தகைய இருவிதமான வரலாறுகளின் தொடர்ச்சியாகவே, 24 வயதில் தாய்நாட்டின் விடுதலைக்காக தூக்கு மேடையேறிய மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளுக்கும், விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்று பலமுறை மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கரின் வாரிசுகளுக்கும் இடையேயான போர் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சாவர்க்கரின் வாரிசுகள் அதிதீவிர வலதுசாரி தேசியவாதம் பேசிக்கொண்டே நாட்டைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பகத்சிங்கின் வாரிசுகள் பெற்ற விடுதலையைப் பேணிப் பாதுகாக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதால் தேச விரோதிகளாகவும், விடுதலைப் போராட்டத்தில் துரோகம் செய்தவர்கள் இன்று தியாகிகளாகவும் நாமகரணம் சூட்டப்படும் விந்தை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

சாவர்க்கரின் வாரிசுகளான இன்றைய ஆட்சியாளர்கள் பொதுவுடைமையை போற்றுகிற பகத்சிங்கின் வாரிசுகளுக்கு தூக்குக்கயிற்றை நாள்தோறும் பரிசளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், ஏகாதிபத்தியத்தை புறமுதுகிட்டு ஓட விரட்டிய புரட்சியாளர்களின் வாரிசுகளுக்கு இவர்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பதை காலம் விரைவில் நிரூபிக்கத்தான் போகிறது.

;