articles

img

கொரோனா தொற்று... மோடி அரசே உடனே செயல்படுக....

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட் 19 பாதிப்பு மத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது; குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மிக மோசமான முறையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு பாஜக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் அப்பட்டமான அலட்சியமும், அறிவியல்பூர்வமற்ற செயல்பாடுகளும்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது தொடர்பான அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி, மக்கள் மீள்வதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி டிவிட்டரில் கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்டுள்ள விமர்சன பதிவுகளின் சாராம்சம் வருமாறு:

கொரோனா பாதிப்பு மிக மோசமான முறையில் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. பீகாரில் ஆயிரம் சதவீதம் பாதிப்புஅதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக தொற்று பரவல்தீவிரமடைந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் பத்திரிகை செய்தியின் அடிப்படையில் கொரோனா பாதிப்பால் 249பேர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசுதரப்பு வெறும் எட்டு பேர் என்றுசொல்கிறது. மத்திய அரசு எங்கேஇருக்கிறது என்றே தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் கும்பமேளா நடந்து கொண்டிருக்கிறது. அங்கு923 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரக்யா ராஜ் நகரில் 2313 சதவீதமும், வாரணாசியில் 1811சதவீதமும், கான்பூரில் 1542 சதவீதமும்கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அயோத்தியில் 1700 சதவீதம், பாலியாவில் 2660 சதவீதம், கோரக்பூரில் 1371 சதவீதம், மொராதாபாத்தில் 1010 சதவீதம் என உத்தரப்பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதீதமான நிலையை எட்டியுள்ளது. 

                                          ******************

உத்தரப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட மாநில அரசு நிர்வாகம்கொரோனா விவகாரத்தில் சீர்குலைந்துகிடக்கிறது. பாஜக ஆளும் குஜராத்திலும் இதுதான் நிலைமை. அந்த மாநில அமைச்சர்களும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஊடக செய்திகளும், புகைப்படங்களும், காணொலிகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அரசுச் செய்திகள் இவை எதையும் வெளியில் சொல்லவில்லை. தங்களது கட்சி ஆளும் மாநிலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மோடியும், அமித்ஷாவும்வெளியில் சொல்வதற்கு தயாராகயில்லை. 

                                          ******************

உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை ஒருபுறம் கும்பமேளா, மறுபுறம் கோமதி ஆற்றங்கரையில் பைசாகுண்ட் எனுமிடத்தில் கொரோனாவால் பலியான நூற்றுக்கணக்கானோரின் உடல்களை திறந்த வெளியில்வைத்து எரிக்கும் கொடிய காட்சிகள். 

                                          ******************

எப்போதுமே தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும், தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்ஒரு பிரதமரின் அரசு எந்த அளவிற்கு எந்த திறமையும் இல்லாததாக இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம். கோமதி ஆற்றங்கரையில் உடல்களை எரிக்கும் காட்சி மிகவும் துயரத்தை அளிக்கிறது. தனது பொறுப்பை முற்றிலும் கைவிட்ட உத்தரப்பிரதேச பாஜக அரசின் கிரிமினல் தனமான செயல் இது. 

                                          ******************

பொதுவெளியில் உடல்களை எரிப்பது போன்ற இன்னொரு துயரம், கொரோனா பாதிப்புஇருக்கும் பகுதிகளை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எவ்வித பாதுகாப்புமின்றி எரிக்கும் காட்சிகளை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று அந்தப் பகுதி முழுவதும் தகர ஷீட்டுகளால் மூடுவது. கோமதி ஆற்றங்கரையின் பைசாகுண்ட்டில் இந்தக் காட்சிகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்தவருடம் அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக டிரம்ப்பை அழைத்து வந்த மோடி, அந்த நகரின்குடிசைப் பகுதிகளை டிரம்ப் பார்த்துவிடக்கூடாது என்று சுவர் எழுப்பி மறைத்த கதைதான் நினைவுக்கு வருகிறது. மக்களுக்கு மரணத்தை பரிசாக அளிக்கும் மோடி, அவர்கள் அதை பார்த்து விடக்கூடாது என்று மூடி திரையிடுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் உண்மை விவரங்கள் அந்தசுவர்களையும் தாண்டி எட்டிப்பார்க்கின்றன. 

                                          ******************

அதைபோல, இந்த மாநிலங்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்திய மக்கள் சுகாதார வசதிகளுக்காக துயரத்தின் விளிம்பில் ஏங்கி நிற்கிறார்கள். ஆனால் மோடி அரசு பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை கணிசமாக வெட்டியுள்ளது. பணம் இல்லை என்று அரசுசொல்கிறது. சுகாதாரத்திற்கு பணமில்லை. ஆனால் நாடாளுமன்ற புதிய கட்டிடமும், ஆடம்பரமான மைய மாளிகையும், அவரது சொகுசுக்காக கட்டபபடுகிறது. அதற்கு பணம் இருக்கிறது. மற்றொரு புறத்தில் கோடிக்கணக்கான மக்கள் சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பது பற்றி அவருக்கு கவலையில்லை.

                                          ******************

பி.எம்.கேர்ஸ் நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அது ஒருதனியார் நிதி என்று சொல்லிவிட்டார்கள். பொதுமக்கள் பெருந்தொற்றால் பாதித்துக்கிடக்க, மேற்படி தனியார்நிதியில் காசு குவிந்து கொண்டிருக்கிறது. 

                                          ******************

இந்த நெருக்கடியின் மற்றொரு கொடுமை, மனிதத்தன்மையற்ற பெரும் துயரம் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை. தில்லியிலிருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? இன்னுமொரு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம். மோடி அரசு என்ன செய்யப் போகிறது என்றே தெரியவில்லை. இப்போதாவது சிறப்பு ரயில்களை இயக்குங்கள். அச்சத்தின் பிடியில் ஊர்களுக்கு செல்லும் அவர்களை இலவசமாக கொண்டு இறக்கிவிட்டு வாருங்கள். மீண்டும் ஒரு மிகப்பெரும் மனிதத்துயரத்தை உருவாக்கக்கூடிய ஊரடங்கு வருவதை தடுத்து நிறுத்துங்கள். அப்படி தடுத்து நிறுத்தவேண்டுமானால் கொரோனா பரவலை அதி வேகமாக தடுத்து நிறுத்தவேண்டும்.

                                          ******************

நமது அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகம் என்பது மக்களுக்கு நம்பிக்கையை அளிப்பதன் மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு பொறுப்பானவர் பிரதமர். மிகத் தெளிவாக தவிர்ப்பதற்கு வாய்ப்பு இருக்கக்கூடிய துன்பங்களை, துயரங்களை, வேதனைகளை மக்கள் மீது ஒருபோதும் திணிக்கக்கூடாது. ஜனநாயகத்திற்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அவர் தப்பித்துச் சென்று விட முடியாது. இந்த நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். உங்களுடைய ‘கோடி மீடியாக்கள்’ (மோடியின் புகழ் பரப்பும்ஊடகங்கள்) பரப்புகிற பொய்ப்பிரச்சாரங்களும், உங்களைப் பற்றிய புகழ் மாலைகளும் இந்த நாட்டு மக்களுக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை.

                                          ******************

எனவே உடனடியாக மாதம் ரூ.7500 நேரடி பணமாக மக்கள் கைகளில் அளியுங்கள். தேவைப்படும் அனைவருக்கும் உணவு தானியங்களை இலவசமாக விநியோகியுங்கள். மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுறுதித் திட்டத்தை இன்னும் விரிவான முறையில் உறுதியாக அமலாக்குங்கள். நகர்ப்புற வேலையுறுத்தித் திட்டத்தை உடனடியாக அறிவியுங்கள். 

                                          ******************

இதற்கு மாறாக மக்கள் மீது பழிசுமத்தி, அவர்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை என்று கூறி பொறுப்பை அவர்கள் மீது திணிக்கிற வேலையை கைவிடுங்கள். 

                                          ******************

பெருமளவிலான மக்கள் கூடும் நிகழ்வுகளை மத்திய அரசு உடனடியாக தடை செய்யவேண்டும்; தேர்தல் பிரச்சார கூட்டங்களை கறாரானமுறையில் ஒழுங்காற்று செய்ய வேண்டும். அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரயில்டிக்கெட் அளிக்க வேண்டும். பி.எம்.கேர்ஸ் நிதியை உடனடியாக சுகாதாரநடவடிக்கைகளுக்காக, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக செலவழிக்க வேண்டும். 

                                          ******************

மோடி அரசே உடனே செயல்படுக!

;