articles

img

சிவந்தது கேரளம்.....

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடி வடைந்து, தேர்தல் முடிவுகளும் வந்து விட்டன. பல வகைகளிலும் இத்தேர்தல்கள் முக்கியம் வாய்ந்தவை. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை வீசி, மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி இருந்த காலத்தில் இந்த  தேர்தல் நடைபெற்றது. மத்தியபா.ஜ.க. அரசின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம் எஜமானனின் ஆணைப்படி பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டு,  தனது பாரபட்சநிலையை சற்றும் வெட்கமின்றி செய்து முடித்தது. இது நாள்வரையில்லாத நிலையில் கோவிட் தொற்று காலத்தில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை எட்டு கட்டங்களாக நடத்தி பிரதமர் மோடிக்கு பிரச்சாரத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இது நாள் வரை எந்த பிரதமரும் செய்யாத அளவிற்கான அதிகப்படியான நேரடி பிரச்சாரத்தை மேற்கொண்டார் மோடி. இதனால் தமிழகம், கேரளம், புதுச்சேரி வாக்காளர்கள் வாக்களித்து விட்டு, முடிவுகளைத் தெரிந்து கொள்ளசுமார் ஒரு மாதம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இத்தகைய பல தகிடு தத்தங்களை பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி செய்தாலும், மோடி நாடுமுழுக்க பறந்து, பறந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டாலும்  ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க. எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை விட தோல்வியையே தழுவியுள்ளது. இப்பின்னணியில் தான் கேரள தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

வரலாறு படைத்த தேர்தல் முடிவு...
கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு தடவை ஆட்சியில் உள்ள கட்சியோ, கூட்டணியோ அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் தோல்வியைத் தழுவுவதே வரலாறு என்றும், இத்தேர்தலிலும் பினராய் விஜயன் தலைமையிலான அரசும் தோல்வியே அடையும்என்றும் பெரும்பாலான ஊடகங்கள் ஆரூடம் கூறின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் இந்த நம்பிக்கையுடனேயே தேர்தலைச் சந்தித்தன. ஆனால் இத்தேர்தலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியோ மிகவும் நம்பிக்கையுடன் சந்தித்தது. ஓறப்பாணு எல்.டி.எப் (இடது முன்னணி வெற்றி உறுதி), தொடர் பரணம் ( தொடரும் ஆட்சி) என்ற நம்பிக்கை முழக்கங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியது. வெறும் நம்பிக்கை அடிப்படையிலானது அல்ல இந்த முழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் சாதாரணமானதல்ல. எதிர்கட்சிகளோ, அல்லது பெரும்பாலான கேரள வலதுசாரி ஊடகங்களோ பொய்யான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு இடது ஜனநாயக முன்னணிக்கு அவப்பெயரை ஏற்படுத்த தொடர் முயற்சி எடுத்தாலும், இடது ஜனநாயக முன்னணி அரசின்பணிகளை மக்களை நேரடியாக அனுபவித்து வந்தனர். இதனால் அச்சாதனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கூட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இயற்கை பேரிடர் காலங்களில்...
ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே கேரள மாநிலம்ஓக்கி புயலால் மாபெரும் பேரழிவைச் சந்தித்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மக்களைக் காக்க களத்திலே இறங்கியது. மக்கள் உயிர்களைக் காக்க எல்லா முயற்சி களையும்எடுத்தது. பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும், சிகிச்சை வசதிகளையும் செய்து கொடுத்தது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கி வாழ்க்கையைத் தொடர கைகொடுத்து உதவியது கேரள பினராயி விஜயன் அரசு. புயலின் போது கடலில் சிக்கிக் கொண்டிருந்த மீனவர்களைத் தேடிக் கண்டு பிடித்து கரை சேர்த்தது மட்டுமன்றி அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. கேரள மீனவர்களைக் காப்பாற்றிய நேரத்தில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையும் கேரள அரசே காப்பாற்றி, உரிய சிகிச்சையும், உணவும் வழங்கி உயிர் காத்தது.. தமிழக அரசு கைகட்டி நின்ற போது தங்களைக் கைகொடுத்து காப்பாற்றியது கேரள அரசுஎன்று குமரி மாவட்ட மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் புகழ்மாலை சூடியது மட்டுமன்றி முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களை குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளோடு திருவனந்தபுரம் சென்று நேரடியாக சந்தித்து நன்றியும் தெரிவித்தனர்.தொடர்ந்து இரு பெருவெள்ள பாதிப்புகளால் கேரளம் பாதிக்கப்பட் போதும் இடது ஜனநாயக முன்னணியின் களப்பணிகளும், நிவாரண உதவிகளும் மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமைந்தது. மத்திய பாஜக அரசு மாநில அரசு கேட்ட நிதி உதவியை தர மறுத்ததோடு, கேரள மக்களின் துயர் துடைக்க ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க முன்வந்த உதவிiயும் வாங்கத் தடை விதித்தது. இருந்தும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அந்த சவாலையும் எதிர் கொண்டு மக்களைக் காத்தது.

தொற்று நோய்களும்,அரசின் நடவடிக்கைகளும்
2018 ல் கேரள மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களை நிபா வைரஸ் கடுமையாக பாதித்தது. ஊடனடியாக இடது ஜனநாயக முன்னணி அரசு மக்களைக் காக்க களத்தில்இறங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சரின் தலைமையில் சுகாதாரத் துறை போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கியது. தொற்று பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சையும், அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கு ஏற்பட்டது. கடுமையான அந்த சவாலைச் சாமர்த்தியாகவும், சாதுர்யமாகவும், மனிதாபிமானத்தோடும் கையாண்டதை உலகமே பார்த்து விய+ந்தது. மிகவும் பலவீனமான பொருளாதாரத்தையும், குறைவான அதிகாரத்தையும் கொண்ட கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு மக்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு அதிகரித்தது. 

கோவிட் 19 பெருந்தொற்று இந்தியாவில் முதன் முதலாக தாக்கியது கேரள மாநிலத்தைத் தான். முதன் முதலாக வூஹானிலிருந்து வந்த கேரள மாணவர்களிடம் அந்நோய் தென் பட்டது. உடனே சுதாரித்துக் கொண்டது கேரள அரசு. ஏற்கனவே நிபா வைரஸ் தாக்குதலின் போது அதைக் கையாண்ட அனுபவம் இருந்ததால் உடனடியாக துரிதகதியில் செயல்படத் துவங்கியது அரசு. முதல்வர் பினராய் விஜயன் அவர்களும், சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா டீச்சர் அவர்களும் நேரடியாககளத்திலே இறங்கினர். தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்தனர். திடீரென்று முன்னறிவிப்பின்றி பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பினால் மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றபோது அவர்களுக்கு தினசரி வாழ்க்கை தொடர உணவுத் தொகுப்பு வழங்கி நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. அன்றாடக்கூலிகளுக்கு சமூக சமையற்கூடங்கள் மூலம் தினசரி உணவுப் பொட்டலங்கள் வழங்கியது. புலம் பெயர்தொழிலாளர்களைத் எங்கள் விருந்தாளிகள் என்றுமுதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டு, அவர்கள் பட்டினியில் வாடாமல் இருக்க தினசரி உணவு வழங்க உத்தரவாதம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் தரமான கொரோனா சிகிச்சையை உத்தரவாதப்படுத்தியதோடு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கொள்ளை அடிக்கப்படாமல் பாதுகாக்க தகுந்த சட்ட பாதுகாப்பு நடவடிக்கள் எடுக்கப்பட்டன. இதனால் மகாமாரிஎன்று மலையாளிகளால் அழைக்கப்படும் கொரோனாமுதல் அலை தொற்று கேரளத்தில் கட்டுப்படுத்தப்பட்ட தோடு, கொரோனா மரணங்களும் நாட்டிலேயே மிகவும் குறைவான மாநிலம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. இதனால் தான் மத்திய பாஜக அரசாலும், உலக சுகாதார நிறுவனத்தாலும் கூட பாராட்டப்படும் நிலையை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அடைந்தது. 

முதல் அலை கோவிட் 19 பாதித்த போதே இரண்டாவது அலையின் சாத்தியக் கூறுகளை கண்டறிந்த கேரள அரசு அதை சந்திப்பதற்கான மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்கத் துவங்கியது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகளைச் செய்தது. ஆக்சிஜன் வசதி கொண்ட மருத்துவ படுக்கைகளை அரசு மருத்துவ மனைகளில் அதிகரித்தது. மருத்துவ வசதிக்கான கட்டமைப்புகளை முன் எச்சரிக்கையுடன் செய்து வந்தது. இது மட்டுமன்றி முதல் அலையின் போதும், இரண்டாம் அலையின் போதும் முதலமைச்சர் பினராயி விஜயன் கோவிட் பெருந்தொற்றின் நிலைமை குறித்தும், அதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகக்ள் குறித்தும், மக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வெளிப்படையாக தினசரி மாலை ஊடகங்கள் வழியாக மக்கடையே உரையாடியதோடு, ஊடகங்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார். இத்தகைய தினசரி நிகழ்ச்சி மக்களுக்கும் முதல்வருக்குமான நேரடித் தொடர்பாக அமைந்து வருகிறது. 18 வது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களுக்கு மாநிலஅரசு இலவசமாக தடுப்பூசி போடும் என முதன் முதலாக அறிவித்தவர் பினராயி விஜயன் என்பது குறிப்பிட்டத் தக்கது. கேரள மக்களைப் பொறுத்தமட்டிலும் அரசியலுக்குஅப்பால் இடது ஜனநாயக முன்ணி அரசு தங்களுடைய நலனைப் பாதுகாக்கும் அரசாக, வெளிப்படையான அரசாக, ஊழலுக்கோ, உதாசீனத்திற்கோ இடமளிக்காத தங்களுடைய அரசாகப் பார்த்தனர். கேரள இஸ்லா மியர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லீம் லீக்கும், கேரள காங்கிர
சும் இருப்பதால் ஐக்கிய முற்போக்கு அணிக்கு வாக்களிப்பர் என்ற  கனவு தகர்ந்தது. தங்களுக்கு நலம் செய்வதோடு, மதசார்பற்ற கொள்கையை வலுப்படுத்தி, வகுப்புவாதத்தோடு சமரசமின்றி போராடும் இடது ஜனநாயக முன்னணிக்கே அம்மக்களில் கணிசமானோர் வாக்களித்தனர். சபரி மலை பிரச்சனையைப் பயன்படுத்தி இந்துக்கள் வாக்குகளை அரசுக்கு எதிராக திருப்பலாம் என்ற பா.ஜ.க., காங்கிரஸ் கனவும் தகர்ந்தது.

அரசின் மீதான  அவதூறுப் பிரச்சாரங்கள்
ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மத்திய ஆட்சியில்இருக்கும் பா.ஜ.க.வும், பெரும்பாலான ஊடகங்களும் ஒரு மறைமுக கூட்டணியை அமைத்துக் கொண்டு அவதூறுகளை அள்ளித் தெளித்து வந்தனர். முதலாவதாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்க கேரள இடது முன்னணி அரசு முயற்சித்தபோது அரசுக்கு எதிரான ஒரு போரையேக் கட்டவிழ்த்து விட்டனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்.தலைமையில் பாஜக அரசுக்கு எதிராக களததில் இறங்கியது.  அகில இந்திய தலைமையின் நிலைபாட்டுக்கு மாறாக மாநில காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கைகோர்த்து சபரி மலை பிரச்சனையில் அரசுக்கு எதிரான கடுமையான போராட்டங்களை நடத்தி கேரள மாநிலத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சித்தன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு சபரிமலை  பிரச்சனை ஒரு முக்கிய காரணம் என்றபுரிதலைக் கொண்ட காங்கிரசும், பாஜகவும், தற்போது உச்சநீதிமன்ற பரிசீலனையில் உள்ள சபரி மலை பிரச்சனையை மீண்டும் தேர்தல் பிரச்சனையாக்க முயற்சித்தன. 

தூதரக பார்சல் மூலமாக தங்கம் கடத்தப்பட்ட பிரச்சனையில் மத்திய அரசிடம் தகுந்த விசாரணை நடத்த கோரினார் முதல்வர் பினராயி விஜயன். விமான நிலையப் பாதுகாப்பும், அங்குள்ள சுங்கத்துறையும், இதர பாதுகாப்பு அமைப்புகளும் நேரடியாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதை மறைத்து, தங்கக்கடத்தலில் இடது ஜனநாயக அரசின் மீது பழி சுமத்தினர். கொரோனா நிவாரண நடவடிக்கைகளில் அரசு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இப்பிரச்சனையை ஊதிப் பெருக்கி அரசுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பியதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் போராட்டங்களையும் நடத்திவந்தனர். இதிலும் காங்கிரஸ் பாஜக கள்ளக் கூட்டணி அமைத்து செயல்பட்டனர். தங்கக்கடத்ல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த குற்றவாளிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள்அதிக அழுத்தம் கொடுத்து, இக்குற்றத்தில் முத லமைச்சரையும், சிலஅமைச்சர்களையும் சமபந்தப்படுத்த  முயற்சித்தது அம்பலமாகியது. மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை, சுங்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை மாநில அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஏவிவிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறு துணையாக நின்றது. இத்தகைய கூட்டுக் களவாணி அரசியல் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற எண்ணத்தில் இத்தகைய முயற்சிகளெல்லாம் செய்யயப்பட்டன. ஆனால் இந்த அரசால் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர்ந்த கேரள மக்கள் அரசின்சேவைக்கு அங்கீகாரமும், ஆதரவும் அளிக்கும் வகையில் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தினர். 

சிவந்தது கேரளம்
மே 2 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அவதூறு அரசியல் செய்து, ஆட்சியை அகற்ற சதித்திட்டம் தீட்டியவர்கள் கனவுகள் தவிடுபொடியானது. தொடர் பரணம் எனும் முழக்கதுடன் தேர்தலைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக அணிக்கு மக்கள் தொடர் ஆட்சிக்கான வாய்ப்பை வழங்கி 40 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுதியது மட்டுமல்ல கடந்த தேர்தலை விட அதிகமாக மொத்தம் 99 இடங்களை தந்துள்ளனர். இது மூன்றில் இரண்டு பங்கை விட அதிக இடங்களாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்சியையே பிடிக்கப் போவது போல் பாவ்லா காட்டி பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. அவர்களது அவதூறு பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா, தேசிய தலைவர் நட்டா ஆகியோர் பறந்து பல தடவை வந்தனர். பா.ஜ.கவின் மாநில தலைவர் 2 இடங்களில் போட்டியிட்டதோடு, ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தி பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். கடைசியில் ஏற்கனவே பா.ஜ.க.வெற்றி பெற்றிருந்த நேமம் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் அதில் தோல்வியடைய, இருந்த ஒரு இடத்தையும் பறி கொடுத்தது பா.ஜ.க.

கேரள தேர்தல் வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் 5 ஆண்டு கால அளப்பரிய மக்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம். இடர் நிறைந்த காலங்களிலெல்லாம் தங்கள் துயர் துடைக்க இடது ஜனநாயக அணி எடுத்த நேர்மையான, உளப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவு. நெருக்கடி காலத்தில் கூட அரசின் மக்கள்நல  நடிவடிக்கைகளுக்கும் முன்னெடுப்புகளுக்கும் ஆதரவு கொடுப்பதற்கு மாறாக அவதூறு பிரச்சாரம் மூலம் இடது ஜனநாயக முன்னணி அரசை வீழ்த்தலாம் என கனவு கண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணிக்குகேரள மக்கள் கொடுத்த பதிலடி. மாநில அரசுக்கு ஆதரவுகரம் நீட்டி நெருக்கடி காலங்களில் மக்கள் நலனுக்கு துணை நிற்பதற்கு பதிலாக மத்திய அரசைப் பயன்படுத்தி சட்டவிரோத நெருக்கடிகளைக் கொடுத்து இடது முன்னணி அரசை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடித்த பா.ஜ.கவுக்கு மக்கள் கொடுத்த சவுக்கடி. எனவே தான் இது இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி மட்டுமல்ல. இது கேரள மக்களின் வெற்றி. கேரளம் வென்றது.

கட்டுரையாளர் : எஸ்.நூர்முகம்மது, சிபிஐ(எம்)  மாநிலச் செயற்குழு உறுப்பினர் 

;