articles

img

உங்கள் அடிமைப் பிரதேசமல்ல எங்கள் புதுச்சேரி...

புதுச்சேரி சட்டப் பேரவை சபாநாயகர் பதவியைபாஜக கைப்பற்றியுள்ளது. அந்தக் கட்சியைச்சேர்ந்த ஏம்பலம் செல்வம் சபாநாயகராகி உள்ளார். நியமன எம்எல்ஏக்கள் மூலம் சுயேச்சை எம்எல்ஏக்களை வளைத்து பிடித்ததன் மூலமும் என்.ஆர்.காங்கிரசை விட கூடுதலான பலத்தை பாஜக பெற்றுள்ள நிலையில் சபாநாயகர் பொறுப்பை கிட்டத்தட்ட அடித்துபிடித்து பறித்துள்ள அந்தக் கட்சி அடுத்த ஐந்தாண்டுகள் என்ஆர் காங்கிரசை ஆள விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த சித்து விளையாட்டிற்கு சபாநாயகர் பதவியை அவர்களால் பயன்படுத்த கூடிய ஆபத்து உள்ளது.  

அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தில் நம்பிக்கையும்இல்லாத பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற புதுச்சேரியில் நியமன உறுப்பினர் பதவிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகிறது. இது மாநில மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் (2016-2021) மாநில அரசின் பரிந்துரையின்றி ஒன்றிய அரசு 23.06.2017ல் பாஜக நிர்வாகிகள் மூவரை நியமனஎம்.எல்.ஏக்களாக நியமித்தது. 04.07.2017ல் ஆளுநர் கிரண்பேடி அவசரகதியில் இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்துவைத்தார். கொல்லைப்புற வழியாக பாஜக தன்னை சட்டமன்ற கட்சியாக, அன்றாட அரசியலில் ஈடுபடும் கட்சியாக திணித்துக் கொண்டது. சிறிதும் வெட்கமின்றிமாநில அரசின் உரிமையை பறித்துக்கொண்டது. 

மேற்படி ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் 2021 பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி 29 அன்று, மறைந்த நியமன உறுப்பினருக்கு மாற்றாக புதிய நியமன உறுப்பினர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியும், நியமன உறுப்பினர் பதவிகளை பயன்படுத்தியும் 25.02.2021ல் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இது பாஜகவின் திட்டமிட்டஅரசியல் ஜனநாயக படுகொலை. 

மீண்டும் நியமன உறுப்பினர்கள்
15வது சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்றது. மே 7ஆம் தேதி ந.ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள்மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை. முதல்வர் ந.ரங்கசாமி கொரோனோ நோய்த் தொற்றால் மருத்துவமனையில் இருந்த சூழலில் ஒன்றிய அரசு மே 10ஆம் தேதி 3 பாஜக நியமன எம்.எல்.ஏக்களை நியமித்துள்ளது. ஆட்சிப் பங்கீட்டில் தனது பேரத்தைஅதிகப்படுத்திட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. 

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையே அமைச்சரவை பங்கீடு, துறைகள் பங்கீடு இழுபறியில் உள்ளது. இடைக்கால ஏற்பாடாக இரண்டு அமைச்சர், சபாநாயகர், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் ஆகிய பதவிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டன. சபாநாயகர் பதவிக்கு நியமன உறுப்பினரை நியமிக்க பாஜக துணிந்தது.தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் நியமன எம்எல்ஏக்களுக்கும் உண்டு என 06.12.2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பை பயன்படுத்தி நியமனஉறுப்பினர்களை அமைச்சராக்கவும் பாஜக தயங்காது. மறைந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் புதுச்சேரி மாநில மகளிர் ஆணையர் தலைவர் பதவிநேரடியாக நியமிக்கப்பட்டது. இப்படியே பல வாரியத் தலைவர் பதவிகளை ஒன்றிய அரசு நியமிக்கும் என பாஜக கொக்கரித்ததை புதுச்சேரி மாநில மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சட்டம் - நடைமுறை
1954 நவம்பர் 1ல் புதுச்சேரி விடுதலையடைந்து இந்தியஒன்றியத்துடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16ல் புதுச்சேரிஇந்தியாவுடன் சட்டப்பூர்வமாக இணைந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 239 திருத்தப்பட்டு ஒரு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேச ஆட்சிப்பரப்புகள் சட்டம் 1963 ல் இயற்றப்பட்டன. மேற்படி சட்டப்பிரிவு 3(3)-ன் கீழ் 3 பேருக்கு மிகாமல் நியமன உறுப்பினர்கள் நியமிக்கவும், அவர்கள் அரசு ஊழியராக இருக்க கூடாது என்றும் குறிப்பிடுகிறது. 
புதுச்சேரி மாநில முதல் சட்டப்பேரவைத் தேர்தல் 25.08.1964ல் நடைபெற்றது. 1985ஆம் ஆண்டு வரையில் சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இக்காலத்தில் கட்சி மாறுவதும்   ஆட்சிக்கவிழ்ப்பதும் வாடிக்கையானது. ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடித்தது. 1985ல் காங்கிரஸ் ஆட்சியில் முதன்முதலாக 3 நியமனஉறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 5 ஆண்டு ஆட்சி நிறைவும் இங்கிருந்து தான் துவங்கியது. 1985 முதல் 2016 வரையில் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் வழியாக ஒன்றிய அரசின் அனுமதியோடு நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஒன்றியத்தில் பாஜக அதிகாரத்திற்குவந்த பின்னர் சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்படுகின்றன. முன்னெப்போதையும் விட மாநில நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுகிற போக்கு அதிகரித்துள்ளது.

சட்டம் உருவான வரலாறு
யூனியன் பிரதேசங்களுக்கான ஆட்சிப்பரப்பு சட்டமசோதா 1963 மே 4ஆம் தேதி மக்களவையில், மே 10ஆம்தேதி மாநிலங்களவையில் அப்போதைய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் முன்மொழியப்பட்டது.இம்மசோதா மீது ஆழமான விவாதம் நடைபெற்றது. 3 நியமன உறுப்பினர்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள், “நியமன  உறுப்பினர்கள் தேவைதான்; தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் பெறாத ஒடுக்கப்பட்ட, சமூகப்பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்க முடியும்” என்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர், “நியமன உறுப்பினர் பதவி தேவையற்றது, ஜனநாயகமற்றது. தவறுகளுக்கு வழிவகுக்கும்” என வாதாடினர். சிலர், “ஆளும் கட்சி (அ) அதிகாரத்தில் உள்ள
கட்சி சிறுபான்மையை பெரும்பான்மையாக்க வழிவகுக்கும்” என்றனர். எனினும் ஒடுக்கப்பட்ட பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பின் தங்கிய பிரிவினருக்கு வாய்ப்பளித்திட வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

(ஆதாரம் : மக்களவை விவாதம் பக்கம் 13785 முதல் 13908 வரை, மாநிலங்களவை விவாதம் பக்கம் 2911-3033 வரையிலான ஆவணங்கள் நாடாளுமன்ற நூலகத்தில் பார்க்கலாம்)விவாதங்களுக்கு விளக்கம் அளித்தும் நியமனம் குறித்தும் அப்போதைய உள்துறை அமைச்சர் லால்பகதூர்சாஸ்திரி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: “நியமனம் என்பது ஜனநாயக விரோதம் என்றோ, தவறானது என்றோ பார்க்க வேண்டியதில்லை. நியமன உறுப்பினர் பதவி அவசியமானது. நாட்டில் பல்வேறு பழங்குடியின பிரிவுகள் உள்ளன.இவற்றில் அதிக எண்ணிக்கை கொண்ட பிரிவினருக்கு வாய்ப்பளிக்கலாம். பெண்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இந்த இரு பிரிவினர் மட்டுமின்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தகுதியுடைய மக்கள் பகுதியினர் தேர்தலில் பங்கேற்காத நிலையில் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம்.  இவர்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றால் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும்” என தான் உறுதியாகநம்புவதாக கூறினார்.

உள்துறை அமைச்சர் திட்டவட்டமான தொகுப்புரையில் நியமன உறுப்பினர்களின் தகுதி குறித்த வழிகாட்டுதலை வழங்கினார். துரதிருஷ்டவசமாக, சட்டம் மற்றும் விதிகளில் நியமன உறுப்பினர் தகுதிகள் குறிப்பிடவில்லை. சட்டம் இயற்றும்போது எழுந்த உணர்வுகளும், வழிகாட்டுதலும் இன்றைக்கும் மிகப் பொருத்தமானது. 

அனுபவம்
யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்பு சட்டம் இயற்றிய58 ஆண்டுகளில், 1985 - 2016 கால கட்டத்தில் மாநிலஅரசின் பரிந்துரையின் பேரில் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் நாடாளுமன்ற வழிகாட்டுதல்படி நியமன உறுப்பினர்கள் இடம்பெறவில்லை. தேர்தல் தொகுதி பங்கீடு, ஆளும் கட்சி பதவி சண்டை போன்றவற்றைத் தீர்ப்பதற்கே நியமன பதவிகள் பயன்படுத்தப்பட்டன. 7 ஆண்டு ஒன்றிய பாஜக ஆட்சியில் சட்டம் மற்றும் நடைமுறையைப் பின்பற்றவில்லை. சட்டம் இயற்றிய போது நாடாளுமன்றத்தில் எழுந்த அரசியல் ஜனநாயக உணர்வுகளை, நாடாளுமன்ற வழிகாட்டுதல்களை தற்போதைய மோடி அரசு பின்பற்றவில்லை. புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப்பரப்பு சட்டம் 1963 ஆளுநருக்கே அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அதிகாரமற்ற அலங்கார பொம்மையாக உள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்கள் நியமன பதவிகளைதங்கள் குறுகிய அரசியல்  நோக்கத்திற்காக பயன்படுத்தினர். ஆகவே, தற்கால சூழலுக்கு பொருந்தாத யூனியன் பிரதேச ஆட்சிப்பரப்பு சட்டத்தில் இருந்து விடுவித்து, புதுச்சேரிக்குமுழு மாநில அந்தஸ்து வழங்குவதே இதன் தீர்வாகும். 

தேவை முழு மாநில சுயாட்சி
புதுச்சேரி இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த பிரதேசம். ஒன்றிய ஆட்சியாளர்களின் இலவச இணைப்போ (அ) அவர்களது கொள்கைகளை பரிசோதிக்கும் சோதனை கூடமோ அல்ல. ஒன்றிய அரசின் கண்காணிப்பில் உள்ள பிரதேசமே தவிர அடிமைப் பிரதேசம் அல்ல. இந்திய ஒன்றியத்தோடு புதுச்சேரி இணைகிற போது பிரதமர் நேரு உறுதியளித்தவாறு புதுச்சேரியின் தனித்தன்மை அடையாளத்தைபாதுகாக்கவும், வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும். இதுவே மாநில மக்களின் உணர்வாகும். யூனியன் பிரதேச சட்டம் அமலான 6 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கிட சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டன. 1969இல் திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில், தோழர் வ.சுப்பையா, சட்டத்திருத்தம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசினார். புதுச்சேரி பகுதிகள் அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்படும் என1979 ஜனவரி 18ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்அறிவித்தார். ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தால் இணைப்புநடவடிக்கை கைவிடப்பட்டது. அது முதல் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. புதுச்சேரி,  தில்லி தவிர அனைத்து யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்தினை பெற்றுவிட்டன. புதுச்சேரி விடுதலை பெற்று67 ஆண்டுகள், சட்டப்பேரவை அமைந்து 57 ஆண்டுகளாகிறது. ஆனால் இல்லாத துணை முதல்வர் பதவிக்கு ஒன்றிய அரசிடம் உரிய அனுமதி பெற முயற்சிக்கும் பாஜக மாநில அந்தஸ்து குறித்து வாய்திறக்க மறுக்கிறது. 

ஒன்றியத்திலும், மாநிலத்திலும் மாறுபட்ட ஆட்சிகள் அமையும் போது ஒன்றிய அரசின் தலையீடுகள் மாநில வளர்ச்சியை கடுமையாக பாதித்தன. தற்போதைய சூழலில்அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து மட்டத்திலும் ஜனநாயக பொதுதளம் சுருங்கி வருகிறது. மின்சார விநியோகம் தனியார்மயம், சாகர் மாலா திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் இணைந்த துறைமுகம், மூடிய பஞ்சாலைகளின் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் விற்பனை, ஹைட்ரோ கார்பன் திட்டம் எனகார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக புதுச்சேரி மாறக்கூடிய பேராபத்து சூழ்ந்துள்ளது.பசுவதை தடைச்சட்டம் உள்ளிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையும், ‘பெஸ்ட்’ புதுச்சேரி அதாவது தொழில்மயம் (B), கல்வி(E), ஆன்மீகமயம்(S) சுற்றுலாமயம்(T) என்ற பிரதமர் மோடியின் முழக்கம் புதுச்சேரியின் பாரம்பரியம், கலாச்சாரம் பண்பாட்டு அடையாளங்களை தகர்த்திடும் ஆபத்து உள்ளது. ஆகவே, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றிட, மாநிலத்தின் பாரம்பரியம், அடையாளங்களை பாதுகாத்திட வலுவான வெகுமக்கள் இயக்கத்தை கட்டமைப்போம். 

கட்டுரையாளர் :வெ.பெருமாள், சிபிஐ(எம்) தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் 

;