articles

img

மூன்றும் ஒன்றல்ல... (சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை)

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பிஜேபி மதவெறி கட்சி ஆட்சிக்கு வராமல் தடுக்க மக்கள் வாக்களித்துள்ளனர்.ஆயினும் இந்த மூன்று வெற்றிகளும் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் வெற்றியல்ல என்பதே உண்மையாகும்.

மேற்குவங்கம்
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவம் ஆளுமைசெலுத்திய இந்தியாவில் சுமார்  34 ஆண்டுகள் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்தமாநிலம். ஏகாதிபத்தியம், இந்திய பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள், மதவெறி சக்திகள், மாவோயிஸ்டுகள்  என அனைவரும் ஓரணியில் நின்று பொய்யான செய்தியை பரப்பி , ஆட்சிக்கு எதிராகவும், கம்யூனிஸ்ட்  கட்சிக்கு எதிராகவும் மாபெரும்தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு ஆட்சியை கைப்பற்றினர். நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர்.  இதை நாடு அறியும். சமீப நாட்களில் கூட ஆயிரம் பேரை கம்யூனிஸ்ட்கள் மக்கள் நலனுக்காக இழந்துள்ளனர்.

நந்திகிராமில் மம்தாவும், குண்டர்களும் நடத்திய தாக்குதல் தற்போது வெளியே வந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் நந்திகிராமில் மம்தாவின் தோல்வியாகும். மம்தாவும் சுபேந்து அதிகாரியும் மக்களுக்கு செய்த துரோகம் வெளியே தெரிய வந்துள்ளது.மம்தாவும், பிஜேபியும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி அதில் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். மக்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு, தன்னைதாக்கிவிட்டார்கள் என நாடகம் நடத்தி அனுதாப அலைமூலம் மம்தா வென்றிருக்கிறார்.  மறுபுறம் அவரது கட்சி ஆட்களை பிஜேபிக்கு அனுப்பி அக்கட்சியை  வளர்த்து விட்டு இருக்கிறார். தற்போது பிஜேபிக்கு எதிராக செயல்படுவது போல வேஷம் போடுகிறார். கார்ப்பரேட்டுகள், நிலப்பிரபுத்துவ குண்டர்கள், கார்ப்பரேட் ஊடகங்கள் இவற்றின் துணையோடு, பெறப்பட்டதே மேற்கு வங்க மம்தாவின் வெற்றியாகும்.

இடதுசாரிகள் இந்த தேர்தல் களத்தில் பல புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மக்களை சந்தித்துள்ளார்கள். அவர்கள் எதிர்பாத்த வெற்றி கிடைக்கவில்லை. தோல்விக்கான காரணங்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என கட்சி கூறியுள்ளது. ஆனால்மம்தாவிற்கும், மதவெறி பிஜேபிக்கும் சிபிஎம்தான் எதிரி என்பதை மம்தாவின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது பார்க்க முடிகிறது. சிபிஎம் தோழர்கள் தாக்கப்பட்டது, அலுவலகம் சூறையாடப்பட்டது, ஒரு தோழர் உயிர் இழந்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் அறியமுடியும்.

தமிழகம்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்தஅதிமுக ஆட்சியின் மீதான அதிருப்தி,  மத்திய ஆட்சியிடம் தமிழகத்தின் உரிமையை தொடர்ந்துகாவு கொடுத்து வந்தது போன்றவை தமிழகமக்கள் மத்தியில் ஆட்சி ற்றம் அவசியம்வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.மேலும் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்த அனைத்து அரசியல்கட்சிகளும் ஓரணியில் திரண்டதும் இந்த அணிதான் வெற்றி பெறும் என்ற  நம்பிக்கையை மக்களுக்கு  ஏற்படுத்தியது.கடந்த பத்தாண்டுகளில் நீட் தேர்வை கொண்டு வந்து 13 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருந்தது, உணவு பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது, உதய்மின்திட்டத்தை ஆதரித்தது போன்ற நடவடிக்கைகளும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில்  தமிழகத்தின் பங்கை கேட்டுப்பெறாதது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும், மகனும் அடித்துக்கொல்லப்பட்டது, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு ஏழை விவசாயிகளின் விளை நிலங்களை கைப்பற்றியது, அதனை எதிர்த்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது போன்ற நடவடிக்கைகள் இந்த அரசாங்கம் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.இறுதியில் தமிழகத்தை வஞ்சிக்கும் பிஜேபியோடு கூட்டணி அமைத்தது போன்றவையும் சேர்ந்தது. தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக சில விஷச் செடிகளையும் வளர்த்து விட்டு, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டுச்  சென்றிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. 

கேரளம்
இந்தியாவில் முதன்முதலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி ஏற்பட்ட மாநிலம். தொடர்ந்து மாறிமாறி ஆட்சிமாற்றம் ஏற்படும். தற்போது ஆட்சிமாற்றத்தை தடுத்து மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் அமர்வதன் மூலம் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆட்சிமாற்றம் எளிதாக ஏற்பட்டு விடவில்லை. மத்திய அரசாங்கமும், காங்கிரஸ் கட்சியும் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சிக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தார்கள். மேற்கு வங்கத்தில் நந்திகிராமில், சிங்கூரில் எத்தகைய பொய்யை விதைத்து கம்யூனிஸ்ட்கள் மீதான அடக்குமுறையை ஏவினார்களோ, அதைப்போன்ற நிலமையை ஏற்படுத்த, மத்திய ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியினரும் சேர்ந்து முயற்சித்தனர். முதல்வரையே தங்க கடத்தல் வழக்கில் சேர்க்க முயற்சித்தனர். ஐயப்பன் கோவில் விவகாரத்தை வைத்து கலவரம் செய்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்தனர். அத்தனை சதிகளையும் கம்யூனிஸ்ட் நேர்மையோடு எதிர்கொண்டது பினராயி தலைமையிலான அரசு.அதுமட்டுமல்ல கார்ப்பரேட் பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கொள்கையை முன்வைத்து, மக்கள் நலனை முன்வைத்து செயல்பட்டது.கொரோனா பாதிப்பின் போது மக்களுக்கு நிதிவழங்கியது, காய்கறிகள் உட்பட உணவுப்பொருட்களை வீடுதேடி கொண்டு போய் சேர்த்தது,கேரளத்தையே புரட்டிப்போட்ட மழைவெள்ளப் பாதிப்பின் போது மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டது போன்ற நடவடிக்கைகளால் அந்த அரசை உலக நாடுகள் பாராட்டின. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தான் செய்ததாக முதல்வர் தம்பட்டம் அடிக்கவில்லை. மக்கள் சாதித்தார்கள் என மக்களை உயர்த்திப் பேசியது போன்ற அணுகுமுறைகள் அரசின் மீதுமக்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தின.மேலும் விமான நிலையத்தை விற்க போவதாக அறிவித்த உடனேயே மாநில அரசாங்கம் வாங்கிக் கொள்ளும் என்று அறிவித்தது மாற்றுக்கொள்கையின் வெளிப்பாடு என்பதை மக்கள் உணர்ந்தார்கள்.இதன் வெளிப்பாடுதான் மீண்டும் இடதுசாரி ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து இடதுசாரி ஆட்சியை கொடுத்துள்ளார்கள்.

எனவேதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று வெற்றிகளும் ஒன்றல்ல. கேரளா வெற்றி தனித்துவம் வாய்ந்தது. 

கட்டுரையாளர்: எம்.சிவாஜி, சிபிஐ(எம்) இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

;