articles

img

இந்திய ரயில்வேயை பாதுகாக்க பொன்மலை தினத்தில் உறுதியேற்போம்...

ஒன்றிய நிதியமைச்சகம் நிதி ஆயோக் தயாரித்த “தேசிய சொத்துக்களை விற்று காசாக்கும் திட்டம்” என்ற பெயரில் பொதுசொத்தை விற்கும் மக்கள் விரோத திட்டத்தை வெளியிட்டுள்ளது. ரூ.6 லட்சம் கோடி திரட்டப் போகிறார்களாம். இதில் ரெயில்வேயின் பங்கு 1,52,496 கோடி. அதாவது 25 சதமானம். சாலை விற்பனை 1,60,200 கோடி அதாவது 27 சதமானம். மின் கடத்தல் (Transmission) ரூ.45,200 கோடி அதாவது 8 சதமானம்.

தொலைத்தொடர்பு 6 சதமானம். துறைமுகம் 2 சதமானம். விளையாட்டு மைதானங்கள் 2 சதமானம். விமானம் 3 சதமானம் சுரங்கம் 5 சதமானம். சேமிப்புக் கிடங்குங்கள் 5 சதமானம். மின் உற்பத்தி 7 சதமானம். எரிவாயு குழாய்கள் 4 சதமானம். நகர சொத்துக்கள் 2 சதமானம்.

இதில் ரெயில்வேயில் விற்பனை

ரெயில் நிலையங்கள் 400

பயணிகள் வண்டிகள் 90

தண்டவாளம் 1 ரூட் 1400கி.மீ

கொங்கன் ரெயில்வே 741 கி.மீ.

மலை ரெயில்கள் 4(244 கி.மீ.)

ரெயில்வே குட்ஷெட்டுகள் 265

தனி சரக்குப் பாதை 673 கி.மீ.

ரெயில்வே காலனிகள் மைதானங்கள் 15

இது உடனடித் திட்டம். ஆனால் 7325 ரெயில் நிலையங்களும் 13169 பயணி வண்டிகளும் 67956 கி.மீ. தண்டவாளமும் 1246 குட்ஷெட்டுகளும் 5 மலை ரெயில்களும் 2843 கி.மீ. கிழக்கு மேற்கு தனி சரக்குப் பாதைகளும் அனைத்தும் தனியாருக்கு விற்பதற்கு தயாராக உள்ளன என்று திட்டம் கூறுகிறது.

உடனடித்திட்டம் ஆனது 2022 முதல் 2025க்குள் அமல்படுத்தப்படும். இது அனைத்தும் தேசிய அடித்தள கட்டுமான திட்டத்தினையொட்டி அமல்படுத்தப்படும் என்றுள்ளது.இந்த NIP (National Infrastructure Pipe line) திட்டப்படி 2025க்குள் 500 பயணி வண்டிகள் 30 சதமான சரக்கு வண்டிகள் 70 ரெயில்வே நிலையங்கள் தனியாருக்கு விடப்படும் என்றுள்ளது.2023க்குள் 150 பயணி வண்டிகள் தனியாருக்கு விட ஏலம் விடப்பட்டது. 12 மையங்களில் இருந்து 150 வண்டிகள் ஓட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், மும்பை 2, தில்லி 1, தில்லி 2 ஆகிய மையங்களுக்குதான் அதுவும் ஐ.ஆர்.சி.டி.சி. தான் ஏலம் எடுத்தது. தனியார் யாரும் ரெயிலை ஏலம் எடுத்து வருமானத்தில் பங்களிக்க முடியாது என்று கோருகிறார்கள். எனவே அவர்கள் வரமறுக்கிறார்கள்.ஐ.ஆர்.சி.டி.சி. 29 இணை வண்டிகளுக்குதான் ஏலம் எடுத்துள்ளது. எனவே இப்போது சொத்து விற்று காசாக்கும் திட்டத்தில் மீதியில் 90 பயணிகள் வண்டிகளை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டமிடுகிறது. வருமானத்தில் பங்கு கேட்கமாட்டார்கள். எப்படியாவது தனியார்மயம் என்பதுதான் கொள்கை.

இதுமட்டுமல்ல,தேசிய ரெயில் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார்கள். அதன்படி, 2021 முதல் 2051 வரை 30 ஆண்டு திட்டம். அடித்தள கட்டுமானம் வளர்ப்பது என்று திட்டம் கூறினாலும் அதில் 2031க்குள் அனைத்து சரக்கு வண்டிகளும் தனியார்மயம் ஆக்கப்படும். அனைத்து லாபம் தரும் பயணிகள் வண்டிகளும் தனியார்மயம் ஆக்கப்படும்.90 ரெயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். இழப்பெல்லாம் இந்திய ரெயில்வேக்கு. லாபமெல்லாம் தனியாருக்கு என்பதுதான் கொள்கை.இத்திட்டத்தில் 44 பணிமனைகளும் ஐ.சி.எப். உள்ளிட்ட 8 உற்பத்திப் பிரிவுகளும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும்.

கண்டெய்னர் கார்ப்பரேஷன், ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., இர்கான், ரைட்ஸ் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்.பொதுமக்களுக்கு கட்டணம் உயரும். சேவை குறையும். ரெயில்வே தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். சமூகநீதியான இடஒதுக்கீடும் பறிபோகும். வருமானமின்றி இந்திய அரசு ரெயில்வே சம்பளமும் பென்சனும் தரமுடியாமல் போகும். ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல் வழிபோகும்.  பொதுமக்களும் ரெயில்வே ஒன்றிய அரசு ஊழியர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

ஆர்.இளங்கோவன், டி.ஆர்.இ.யு. துணைத்தலைவர்

;