articles

img

பத்திரிகையாளர் நலன் காக்க உறுதியேற்போம்.... (இன்று தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் நினைவு நாள்)

கடந்த 1990 ஆண்டு மே மாதம் 27ந் தேதி முன்னாள் பிரதமரும் பத்திரிகையாளருமான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தில், பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க போர்க்குணம் மிக்க அமைப்பான தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டியுஜே) உருவானது.பத்திரிகைகளை பாதுகாப்போம்! பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்போம்!! பத்திரிகையாளர்களைப் பாதுகாப்போம்!!!  என்கின்ற 3 முக்கிய உன்னதமான குறிக்கோள்களை தனது கொள்கையாக அறிவித்து, அந்த கொள்கையின் அடிப்படையில் 30 ஆண்டுகளைக் கடந்து தற்போது 31வது ஆண்டில் பீடுநடை போடுகிறது.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் உருவான பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் பத்திரிகையாளர்களை மாவட்டம், வட்டம், ஒன்றியம், புறநகர் என அனைவரையும் அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டிய பெருமை டியுஜே-வுக்கும், அதன் மறைந்த முன்னாள்தலைவர் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் மற்றும் அனைத்து நிர்வாகிகளையுமே சேரும்.அன்று சென்னை தலைநகர் மற்றும் மதுரை, கோவை,திருச்சி ஆகிய 3 மண்டலங்களிலிருந்து, நாளிதழ்கள் உருவாகி,பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் அச்சிடப்பட்டன. இந்த நிலையில் சென்னை மாநகரிலும் மற்றும் மண்டலங்களிலும், மாவட்ட அளவிலும் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரமும் மாவட்ட அளவிலான ஆட்சியர் அதிகாரிகளின் அங்கீகாரமும், கருணைப் பார்வையும் கிடைக்கும்.இவர்களது நலன்களை பாதுகாக்கவே அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

அதேபோல், சென்னையில் உள்ளது போல் மற்ற மாவட்டங்களில் பிரஸ் கிளப், ரிப்போர்டர்ஸ் கில்டு போன்ற அமைப்புகளை புதிதாக உருவாக்கி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவமும் அரசின் சலுகைகளும் வழங்கப்பட்டன.மழை, புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரழிவு காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 95 விழுக்காடுக்கும் மேற்பட்ட வட்டார, ஒன்றியம், புறநகர்களில் பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான பத்திரிகையாளர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.இதன் விளைவாக அடிமட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களின் நலன்களை காக்கவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், தமிழகம் தழுவிய ஒரே அமைப்பாக உருவானதுதான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (தமிழ்நாடு யூனியன்ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ், பதிவெண் 2016/1990) என்று கடந்த 199ம் ஆண்டில் தொழிற்சங்க அமைப்பாக, தொழிலாளர் நல ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு இயங்கி வருகிறது.இயக்கத்தின் முதல் பணியாக வட்டார, ஒன்றிய, ஊரக மட்டத்தில் பகுதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில் நிறுவனங்களின் அடையாள அட்டைகூட வழங்கப்படாமல் முழுநேரமாக செய்தி சேகரிப்பது மற்றும் விளம்பரங்கள் பெற்றுத்தந்த செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் அனைவரையும் சங்கத்தில் சேர்த்து, சங்கத்தின் அடையாள அட்டையை வழங்கி அவர்களது பணிகளை அங்கீகாரம் செய்தது.

பத்திரிகைகளை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் இந்து, தினகரன், தினமலர், தினபூமி, மாலைமுரசு, முரசொலி, நமது எம்.ஜி.ஆர்., நக்கீரன், தராசு, நெற்றிக்கண், ஜூனியர் விகடன், சன் டி.வி., ஜெயா டி.வி., திரிபுரா நாளிதழ் தேசர்கதா போன்றவை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது டியுஜே.மேலும், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மீதும் தமிழக அரசு பொய் வழக்கு புனைந்தும், கைது செய்யப்பட்டபோதும் அதை கடுமையாக எதிர்த்து பத்திரிகைகள் வேறுபாடின்றி அரசியல் வித்தியாசமின்றி அனைவருக்குமாக டியுஜே போராடியுள்ளது.தினகரன் நாளிதழ், தராசு வார இதழ் ஆகியவற்றில் பணிபுரிந்த தலா 2 பேர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், மாலைசெய்தி ஆசிரியர் சௌந்தரபாண்டியன், தினகரன்செய்தி ஆசிரியர் முத்துப்பாண்டியன், நக்கீரன் ஆசிரியர் கோபால், நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி போன்றவர்கள் கைது செய்யப்பட்டபோதும், இந்து என்.ராம், கே.பி.சுனில் போன்றோரை போலீசார் கைது செய்ய முயன்றபோதும், ஆனந்த விகடன் கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மீது சட்டப்பேரவை அவமதிப்பு வழக்கு வந்தபோதும், முரசொலி ஆசிரியர் செல்வம் சட்டசபை கூண்டில் கைதியாக நிறுத்தப்பட்டபோதும், டியுஜே மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன இயக்கத்தை நடத்தியது. 

மேலும், இதுதவிர, தனிப்பட்ட பல பத்திரிகையாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களை சொல்லி, பல்வேறு அரசியல் கட்சியினராலும், உண்மைகளை வெளிப்படுத்தியதால் சமூக விரோதிகளாலும், காவல்துறையினராலும் ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றபோது இதை எதிர்த்து வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியது.பத்திரிகையாளர்களின் நலம் காக்க மட்டுமன்றி இந்தியஅரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை கண்டித்து தேசத்தின் ஒருமைப்பாட்டை காக்கவும், உலகில் சமாதானம் நிலவவும்அதன் மேன்மைக்காகவும் பல்வேறு பொது இயக்கங்களை யும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (டி.யூ.ஜே.) நடத்தியுள்ளது.

1996ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்திரிகையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தைஈர்க்க, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் கையில் கோரிக்கை மனுவினை, நாங்கள் வாயில் கறுப்பு துணி அணிந்து அளித்தோம். இந்தப் போராட்டத்தில் பங்குபெற்ற 300 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் அருகில் இருந்த மண்டபங்களிலும் அடைக்கப்பட்டோம்.  இந்தியாவிலேயே முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஒரேநாளில் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் இந்தியாவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதன்பின்னர் அன்றைய  தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அன்றைய செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்த னை வரவழைத்து அவரிடம் பேசும்படி கூறினார்.பின்னர் 1996ல் மார்ச் மாத பட்ஜெட்டிற்கு முன்பு அமைச்சர் முல்லைவேந்தன், தோழர் டி.எஸ்.ஆர்., நான் உள்ளிட்ட முக்கியசங்க நிர்வாகிகளும், செய்தித்துறை செயலாளர்,  இயக்குநர்,செய்தித்துறை அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் பிறகுதான் 1997-ல் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஓய்வூதியம் ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 நிதி வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாயின. அதேபோல் ஏழ்மை நிலையில் உள்ள பத்திரிகையாளர் களுக்கு இலவச வீட்டுமனை உள்ளிட்ட டியுஜே வலியுறுத்தியஅனைத்து கோரிக்கைகளுக்கும் சட்டமாக நிறைவேற்றப் பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இன்று ஓய்வூதியம் ரூ.10,000, குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000- பணியின்போது உயிரிழக்கும்பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், ஒரு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 1200 பேருக்கு பட்டா நிலம் வழங்கப்பட்ட சாதனை டியுஜே-வுக்கு மட்டுமே உண்டு.பத்திரிகை நலன் காக்க தமது வாழ்வை அர்ப்பணித்த தோழர் ரவீந்திரதாஸ் எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 22 ஆம் தேதி காலமானார். 
பத்திரிகையாளர் நலன் காக்க அவர் விட்டுச் சென்ற பணிகளை உறுதியுடன் தொடர்வோம்.

கட்டுரையாளர் : பி.எஸ்.டி. புருஷோத்தமன்,மாநிலத் தலைவர், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம், (டியுஜே)

;