articles

img

அழைப்புகளின் அதிர்வும், ஆலோசகர்களின் பரிவும்... களத்தில் நிற்கும் சிபிஎம் மாநில கோவிட் மக்கள் உதவி மையம்....

கொரோனா மருத்துவ உலகிற்கு மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது. உலக நாடுகள் பல நோய் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து மக்களை காப்பாற்றி வருகின்றன. இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர நோய் ஆட்சியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது.  

முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பேணுவது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. அணு குண்டுவீசியதில் இறந்த மக்கள் தொகைக்கு ஈடாக கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிக்கு பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருகின்றனர்.தமிழகத்தில் நோய் தடுப்பு முறைகள் வேகமாக பலன் அளித்து வரும் இந்த வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் உதவி மையம் என்கிற பெயரில் அளப்பரிய சேவையை செய்து வருகிறது. இதன் மூலம் நோயாளிகள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சை முறை, மருத்துவமனை விவரம், படுக்கைகள் எண்ணிக்கை விவரம், ஆக்சிஜன் உள்ள மருத்துவமனை விவரம் மற்றும் நோய் தடுப்பு ஆலோசனைகள் வழங்கி பொதுமக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத்தும் கோவிட் மக்கள் உதவி மையம் பணிகள் குறித்து சமூக செயல்பாட்டாளர் வெ.பாலாஜி கூறியதாவது:

கொரோனா என்ற தொற்று உலகை அச்சுறுத்தி வரும் இந்த வேளையில், அதனிடமிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற வாழ்வியல் மற்றும் மருத்துவ வழிமுறைகள் நமக்கு பல வகைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சிறிது கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா நோயின் தாக்குதல் இந்த ஆண்டு மே மாத ஆரம்பத்தில் திடீரென்று அதிகரித்தது. இம்முறை இதன் பாதிப்பும் தீவிரமாக இருந்தது. இந்த நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மையம் மக்களுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவ உதவிகள், ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு  உருவாக்கியதே  ‘‘கோவிட் மக்கள் உதவி மையம்’’.இதற்கான ஆலோசனை வந்தவுடன், இயற்கையே இந்த நோயை பற்றி இன்னமும் நமக்கு முழுவதுமாக விளக்கவில்லை, அதற்கு நாம் என்ன ஆலோசனை வழங்க முடியும் என்ற வினா எழுந்தது. ஆனால் அனுபவம் உள்ள இடதுசாரி இயக்கத் தலைவர்கள் தீர்க்கமாக அதை முன்மொழியும் போது இது நிச்சயம் நம்மால் முடிந்த ஒன்றே என்ற நம்பிக்கை துளிர்விட்டது. மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் என்ற ஆலோசனை மேலும் உத்வேகம் தந்தது. மருந்து விற்பனை பிரதிநிதிகளின் பங்களிப்பு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது. மேலும் தமிழ்நாடு ஐ.டி ஊழியர் சங்கம், வாலிபர் சங்கம், அறிவியல் இயக்க அமைப்புகள் கூடுதல் பலம் சேர்த்தன.

மே 12 ஆம் தேதி முதல் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிப்பது என்ற திட்டத்தில் மாநில மையத்திலிருந்து சுற்றறிக்கை சென்ற நொடி முதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அன்று நம்மிடம் இருந்த ஒரே தொலைபேசி எண்ணை வைத்து அதற்கான அலைபேசியை கூட நாம் இரண்டு நாட்கள் கழித்து பெற முடிந்தாலும், தொடங்கிய வேகம் கொரோனா வேகத்தை விட அதிகம் என்றால் அது மிகையல்ல. முதல் நாள் மதியம் ஒன்று, இரண்டு என்று ஆரம்பித்து அன்று மட்டும் 72 அலைபேசி அழைப்புகள் வந்தன. 

முதல் நான்கு தினங்கள் கடுமையான நாட்கள். வந்த அழைப்பினில் பாதி படுக்கை வசதி, உயிர்காக்கும் சாதனங்களுடன் கூடிய படுக்கை, ஆக்சிஜன் வெகுவாக குறைந்து வீதியில் நிற்கின்றோம், ரெம்டெசிவிர் மருந்து இருக்கா என்றுதான். ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மால் ஓரளவு அவர்களை ஆசுவாசப்படுத்த முடிந்தது என்பதே நிதர்சனமான உண்மை. அலைபேசியில் வரும் அழைப்பினை குறித்து வைத்து கொண்டு, அவர்களின் பெயர், ஊர், மாவட்டம், வயது, என்ன தேவை என்பதை கவனமாகவும், கனிவுடன் கேட்டு அதற்கு ஏற்றாற்போல் வழிகாட்டப்பட்டன.

மருத்துவரிடம் மனம் விட்டு தங்களது குறைகளையும், சந்தேகங்களையும் கேட்டனர். நம் மருத்துவர்கள் காலம்,நேரம் பார்க்காமல் பொறுமையுடன் கேட்டு அதற்கான விளக்கத்தை அளித்தனர். பலரின் மன அழுத்தங்களும் மனநல ஆலோசகர்கள் கொண்டு தீர்த்து வைக்கப்பட்டது.இதுவரை 650க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மூலம் வந்த கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட உதவி மையங்களை தொடர்பு கொண்டு படுக்கை, ஆக்சிஜன் வசதி மற்றும் பல தகவல்களை அளித்து வருகிறோம்.

சீத்தாராம் யெச்சூரி பாராட்டு
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடும்  முன்களப் பணியாளர்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் அகில இந்திய தலைவர் டாக்டர்.ஜெ.ஏ.ஜெயலால், இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மக்கள் நல்வாழ்வு அமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் எஸ்.காசி, டாக்டர் ரெக்ஸ் சற்குணம் ஆகியோர் இந்த உதவி மையத்திற்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இதன்மூலம் நோயாளிகள், பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதாக பாராட்டு தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு வெ.பாலாஜி கூறினார்.

கோவிட் மக்கள் உதவி மையம் ஆலோசனை பெற @peopleshelpline என்ற சமூக வலைதளப் பக்கத்திலும் அல்லது 9176 046 164, 7200 336 164, 9176 436 164 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;