articles

img

மக்கள் சேவையில் மார்க்சிஸ்ட்டுகள்....

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும், மாவட்டங்களில், உதவி மையங்களை அமைத்து, அவை செயல்பட்டு வருகின்றன.

மக்கள் உதவி மையம்
ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கோவிட்-19 உதவிமையம் கடந்த 19-05-2021 முதல் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலிருந்தும் கட்சியின் பல்வேறு அரங்கங்களைச் சேர்ந்த தோழர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். தினசரி இரவு இந்த உதவி மையத்தின் கூட்டம் நடத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் நிலவும் தொற்றின் நிலை குறித்தும் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் காலியிடங்கள், மருத்துவ வசதி, படுக்கைவசதி, தடுப்பூசி, குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு தேவையான மக்களுக்கு தினசரி உதவிகள் செய்யப்படுகின்றன. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் மேற்கொள்ள வழிகாட்டப்படுகிறது.வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை ஆகியதுறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் உள்ள நிலைமைகள் குறித்தும் அவ்வப்போது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமும் கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் காணப்பட்டது.

கடந்த ஒரு மாத காலத்தில் இந்த உதவி மையத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட கட்சித்தோழர்கள் மற்றும் 100க்கு மேற்பட்ட வெகுஜன அமைப்புகளின் குடும்பங்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. கட்சித் தோழர்களில் தேவையானவர்களுக்கு நிதி உதவியும் செய்யப்பட்டது.

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே
ஈரோடு நகரத்தில், பிரதான சாலையில் அமைந்துள்ள, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் கா்ப்பிணிப் பெண்களுக்கு 26-05-21 முதல் நாளதுவரை மூன்று வேளையும் உணவும் மாலையில் பாலும் உதவி மையத்தால் வழங்கப்பட்டு வரப்படுகிறது. முதல்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையா் மற்றும் நகா் நல அலுவலா் ஆகியோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பணிக்கு ஈரோடு நகர மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ளது. கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். சிஐடியு அமைப்பைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்கள் நிதியுதவியும் பொருளுதவியும் அளித்தன. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலைவருமான எஸ்.சுப்பிரமணியன், ஈரோடு நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன், நகர இடைக்கமிட்டி உறுப்பினர் ஆர்.ரங்கநாதன், ஈரோடு தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஆர். நடராஜன், இவர்களுடன் கட்சி முன்னணி தோழர்களும் தொடர்ந்து உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சியின் ஆதரவாளரும், ஜவுளி தொழில் அதிபருமான எம்.ரவிச்சந்திரன் என்பவர் சத்தி, கடம்பூர் மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு 500 முகக்கவசமும், 5 கிலோ கபசுர குடிநீர்த் தூளும், ஈரோடு நகரத்தில் மகப்பேறு மருத்துவமனையில் உணவு வழங்கும் பணிக்கு ரூ.35000 மற்றும் பவானிசாகர் பகுதிக்கு 500 முகக் கவசம் மற்றும் 8 கிலோ கபசுர குடிநீர்த் தூளும் வாங்கி நன்கொடையாக தரப்பட்டது.ஈரோடு நகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சூளை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்கப்பட்டது.ஈரோடு தாலுகா, நகரம் மற்றும் பெருந்துறை இடைக்கமிட்டிகளில், மாதர் சங்கத்தினரும், வாலிபர் சங்கத்தினரும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவப் பணியில் மக்கள் பிரதிநிதி
சத்தியமங்கலம் வட்டம், திங்களூர் பஞ்சாயத்து, காடட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு அரசு உணவு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கும் முன்னரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலை இடைக் கமிட்டி உறுப்பினரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான மாதேஸ் தனது சொந்த முயற்சியில் அனைவருக்கும் உணவு வழங்கினார். இவரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
கடம்பூர் மலைப் பகுதியில், காவல் துறையின் ஒத்துழைப்புடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மலைவாழ் மக்களிடையில் தொற்று நோய் குறித்து கலைநிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பவானிசாகர் இடைக்கமிட்டியின் சார்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்துக்கள் மூலம் மக்களிடையே தொற்று குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. புளியம்பட்டி பகுதியில் மக்களுக்கும் முன் களப் பணியாளர்களுக்கும் முகக் கவசமும், கபசுரகுடிநீரும் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் இடைக்கமிட்டி சார்பில், அப்பகுதியில், ஊரடங்கு காரணமாக வருமானமின்றி அவதியுற்று வந்த 20க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடி கலைஞர்களுக்கு ரூ.6000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.அந்தியூர் இடைக்கமிட்டி முன் முயற்சியில் அந்தியூர் பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் ரூ.60,000 மதிப்புள்ள உணவுப்பொருட்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் மூலம் வழங்கப்பட்டது. மேலும் அந்தியூர் இடைக்கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி அரசினர் மருத்துவமனையின் அவசரத் தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைப்பதற்கு ரூ.10000 மதிப்புள்ள பிளாஸ்டிக் பெட்டிகளை கொடுத்துள்ளார். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கட்சித் தோழர்களின் குடும்பத்திற்கு ஆதரவாளர்களிடமிருந்து ரூ.2000 நிதி திரட்டி வழங்கப்பட்டுள்ளது.

கொடுமுடி-மொடக்குறிச்சி இடைக்கமிட்டி கொடுமுடி பகுதியில் ஊரடங்கு காரணமாக வருமானமின்றி அவதியுறும் 50 பேருக்கு ஒரு நாள் உணவு வழங்கி உதவி செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படுவதில் இருந்த குளறுபடிகளை சுட்டிக்காட்டி அனைத்துப் பிரிவினரும் தடுப்பூசி போட்டுகொள்ளும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்று கண்டறிந்தவர்களை சிகிச்சைக்குட்படுத்த வேண்டும் எனவும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும், அரசின் அனுமதி பெறாமல் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் நடவடிக்கை தொற்று பரவல் நீட்டித்து இருப்பதற்கு ஒரு காரணம் எனவும், தனியார் மருத்துவ மனைகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கட்டணமாக பெறுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தகுதியானவர்கள் அனைவருக்கும் அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

தொகுப்பு : கே.ஆர்.

;