articles

img

கி.ரா. என்னும் அபூர்வம்.....

“மனிதருள் நீ ஒரு அபூர்வமான பிறவி. அதாவது உன் இயற்கையைச் சொல்லுகிறேனே ஒழிய தூக்கி வைத்துப் பேசவில்லை.உன் உள்ளத்திலே என்னென்னவோ ஆட்டங்கள் நடக்கின்றன.ஆனால் வெளிப்படையாக ஒரு சொல்லும் சொல்லாத அடக்கம் உன்னிடம் பலப்பட்டு இருக்கிறது.ஏதோ ஒரு ஆழங்காண முடியாத சமுத்திரந்தான்.” 

- கரிசல் இலக்கிய முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனுக்கு அமரர் கு.அழகிரிசாமி எழுதிய கடிதம் இவ்வாறு துவங்குகிறது. அக்கடிதத்தை இப்படி முடிக்கிறார்: “நண்பர்களுடைய இதயங்கள் உயர்ந்த புஸ்தகங்கள்.அவற்றைப் பக்கத்திலிருந்து கொஞ்ச நாள் வாசிக்க வேண்டும்;தூரத்திலிருந்து கொஞ்சநாள் வாசிக்க வேண்டும். அவற்றில் இலைமறை காய்மறையாகக் கிடக்கும் உண்மைகளை ஓரளவாவது படித்துப் புரிந்துவிட்டால் அவன்கவிஞன் தானே?...மற்ற புத்தகங்கள் ஒரு பக்கமிருக்கட்டும்; நீ ஒரு நவீன புத்தகமாய்த்தான் இருக்கிறாய். இன்றைக்கில்லாவிட்டாலும் இன்னும் 50 வருஷம்கழித்து உன் ‘கதை’ ஒரு உயர்ந்த குணச்சித்திரமாக எத்தனையோ பேரின் இதயங்களைப் போய் குலாவத்தான் போகிறது.”

வரலாற்றில் முதல் முறையாக...
இது அருள்வாக்கு அல்லதான். ஆனால் கு.அழகிரிசாமி அன்று 1945 இல் சொன்னது இன்று அப்படியே நடந்துவிட்டது. நாங்கள் ’நைனா’ என்று அன்புடன்விளிக்கும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற மனிதரின் ‘கதை’ இன்று முடிந்திருந்தாலும் அவர் கதையை உலகமே பேசும் நிலை உண்மையில் உருவாகிவிட்டது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக அரசு மரியாதையுடன்  ஒரு எழுத்தாளரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.அவர் இடைசெவல் கிராமத்தில் இருந்தார்.நான் பக்கத்து நகரமான கோவில்பட்டியில் இருந்தேன் .அன்றாடம் கோவில்பட்டிக்கு வந்து போகிறவர்தான் அவர். ஆனாலும் அவரை நான் 1978 இல் தான் முதன்முறையாகச் சந்தித்தேன். ஒரு குடையுடன் வேட்டியை மடித்துக்கட்டி கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காகநின்றுகொண்டிருந்தார். அந்த முதல் காட்சி அப்படியே என் மனசில் சித்திரமாக இன்றும் நிலைத்திருக்கிறது. கையெழுத்து இதழ்கள் அப்போது பிரபலம். ஓவியர் மாரீஸ் நடத்திய ஒரு கையெழுத்து இதழில் வந்திருந்த என் கதையை அவர் ஏற்கனவே வாசித்திருந்தார் போலும். என்னை அவருக்கு மாரீஸ் அறிமுகம் செய்து வைத்த அடுத்த நிமிடமே அந்தக்கதையைப் பற்றிப் பேசத் துவங்கினார். பின்னர் அவர் தொகுத்த கரிசல் கதைத்திரட்டில் முதல் கதையாக என்னுடைய ‘வெயிலோடு போய்’ கதையை வைத்தார். சின்னப்பையனாக இருந்த எனக்கு  அன்று அது  பெருமித உணர்வைத்தந்தது.

முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி
மாரீஸ், உதயசங்கர், ஆசிரியர் முருகன் உள்ளிட்ட இளவல்கள் அடிக்கடி இடைசெவல் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள். அவர்கள் “கரிசல்வட்டார வழக்குச் சொல்லகராதி” தயாரிக்கும் பணியில் நைனாவுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். தமிழின் முதல் வட்டார வழக்குச் சொல்லகராதி அதுதான்.சோவியத் நாட்டில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய அரசு செய்த காரியங்களில் ஒன்று இது. தமிழ்நாட்டில் எந்த அரசும் பல்கலைக்கழகமும் செய்யாதபணியை கி.ரா. செய்து காட்டினார்.அதனைத்தொடர்ந்துதான் கண்மணி குணசேகரனின் நடுநாட்டுச் சொல்லகராதி,பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச்சொல்லகராதி போன்றவை எல்லாம் வந்தன.‘வண்டல்’ வட்டார வழக்குச் சொல்லகராதிக்கான நம் தோழர் சோலை சுந்தரபெருமாளின் முயற்சி இன்னும் முடிவுறாமல் நிற்கிறது.

பேச்சு வழக்கைக் கொச்சை மொழி என்று தமிழ்ப்பண்டித உலகம் சிறுமைப்படுத்தி வந்த பின்னணியில் பேச்சு மொழியை நவீன இலக்கியத்தின் மொழியாகமாற்றி வெற்றிக்கொடி நாட்டியவர் கி.ரா. இதை ஒரு பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக நாம் பார்க்க வேண்டும். உழைக்கும் மக்களின் மொழிக்கும் அவர்களின்சொற்களுக்கும் உரிய இடத்தைப் பெற்றுத்தரப் போராடிய படைப்பாளி  என்று அவரைக் கொண்டாட வேண்டும்.

கோபல்லபுரம்
முஸ்லீம் ராஜாக்களின் கொடுமைக்குப் பயந்து தெலுங்கு பேசும் மக்களின் ஒரு பகுதி அங்கிருந்து தப்பி தென் தமிழகம் வந்த கதையைத்தான் “கோபல்லபுரம்”, “கோபல்ல புரத்து மக்கள்” என்கிற நாவல்களாகப் படைத்தார். அவருடைய பூர்வீகக் குடும்பமும் அதில் ஒன்றுதான். ஆனால் வரலாற்றின் சுவாரஸ்யம்என்னவென்றால் கி.ரா.வின் பேத்தி அம்சா ,முகம்மது ஆசிஃப் என்கிற ஒரு இஸ்லாமிய இளைஞரையே காதலித்தது தெரியவந்தபோது, சுமுகமாகவும் கொண்டாட்டமாகவும் அத்திருமணத்தை முடித்து வைத்தார் நைனா என்பதுதான். சாதி,மதங்கள் கடந்த முற்போக்குப் படைப்பாளியாகத் தன் எழுத்திலும் நிஜவாழ்விலும் தன்னை நிறுவிக்கொண்டவர் கி.ரா.

கம்யூனிஸ்ட் போராளி
ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத குணாளன் அவர். அவர் ஒரு எழுத்தாளர் என்பது இடைசெவலில் யாருக்குமே தெரியாது. அங்கே அவர் ஒருவிவசாயி. 40களில் கம்யூனிஸ்ட் கட்சியை அப்பகுதியில் கட்டிய ஒரு போராளி. கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே தைரியமாக மேதினத்தில் செங்கொடி ஏற்றியவர்.“நான் எழுதுகிறேன் என்பதே ரொம்ப நாட்களுக்கு இங்கே யாருக்குமே தெரியாமல் இருந்தது.கொஞ்சம் பிரபலம் ஆக ஆக, தூரத்திலிருந்தெல்லாம் ஆட்கள் தேடிக்கொண்டு வர வர, சந்தேகம் பலப்பட்டுப்போச்சு. கிராமம் என்பது ரொம்பச் சின்ன வட்டம். தும்மினாலே ஊர் பூராவும் கேட்கும்! இதுக்குப்பிறகு என் சொந்தக்காரர்களே, ‘ஏப்பா..நீ என்னமோ எழுதியிருக்கயாமே..கொஞ்சம் கொடேன் படிச்சிப்பாக்கட்டும்’ என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்” என்று இதைப்பற்றி அவர் ‘கரிசல்காட்டுக் கடுதாசி’ நூலின் முன்னுரையில் எழுதுகிறார். ஜூனியர் விகடனில் வெளியான அத்தொடர் அவரை இன்னும் பரவலான வாசகத்தளத்துக்கு எடுத்துச்சென்றது.

இசையில் அவருக்கு ஈடுபாடு அதிகம். நாதஸ்வரக்கலைஞர் குருமலை பொன்னுச்சாமி பிள்ளையிடம் முறையாகச் சங்கீதம் கற்றவர். மட்டுமின்றி அன்று அவரது சமகாலத்தில் வாழ்ந்த இசைமகா சமுத்திரம் விளாத்திகுளம் சாமிகள், காருக்குறிச்சி அருணாசலம்,கம்யூனிஸ்ட் மேடைகளில் கொடிகட்டிப்பறந்த வில்லிசைக்கலைஞர் சாத்தூர்பிச்சக்குட்டி ஆகியோருடன் நெருக்கம் கொண்டிருந்தவர். இதையெல்லாம் விட முக்கியமானது பெரிதும் வெளிச்சம் பெறாத கலைஞர்களை அவர் கொண்டாடியதுதான்.

ஒரு உதாரணம்.வில்லிசைக் கலைஞரான சிவகிரி எஸ்.எம்.கார்க்கி ஆயிரக் கணக்கான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரச்சாரத்தைசாதாரண மக்களிடையே கொண்டு சென்றவர் காலவேகத்தில் அவரது பாடல்களும் அவரது வாழ்க்கை வரலாறும் காற்றில் கரைந்துவிட்டன.ஆனால் அவரைப்பற்றி கி.ராஜநாராயணன் எழுதிய இந்த வரிகள் கல்வெட்டாய் நிலைத்துநிற்கின்றன: “கலைச்செல்வன் கார்க்கியின் வில்லுப்பாட்டில் என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் நாடோடிப் பாடல்களைஜீவனோடு பாடுவதுதான். ஆகாஷ் வாணியின் சங்கீத டைரக்டர் நம்முடைய தோழர் கார்க்கியின் வில்லுப் பாட்டில்பாடும் நாட்டுப் பாடல்களை காது கொடுத்து கேட்க வேண்டும். கச்சேரி ஆரம்பத்தில் சபை வணக்கம் செலுத்தும்போதும், சுதந்திரத்திற்காக வும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திப்பாடும் போதும் நம்முடைய உடம்பு புல்லரிக்கிறது. ரத்தம் சூடேறுகிறது. உஷ்ணமான சுவாசம் வெளிவருவதோடு கண்கள்குளமாகி விடுகின்றன...”

40 களில் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் கிசான் சபாவுடனும்இணைந்து பயணித்த அவரது அனுபவங்களே தோழன் ரெங்கசாமி, கரண்டு, கதவு உள்ளிட்ட பல சமூக விமர் சனம் நிரம்பிய கதைகளின் ஆதாரம்.கம்யூனிஸ்ட் கட்சிபிளவுபட்டதை அவரது மனம் இறுதிவரை ஏற்றுக்கொள் ளவே இல்லை. சொல்லிக்கொண்டே இருப்பார்.

நாட்டுப்புற இலக்கியங்கள்...
அவரது இன்னுமொரு மகத்தான பங்களிப்பு நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரித்து அச்சில் கொண்டுவந்தது.1960 இல் கோவையில் முதன் முதலாக தமிழ்நாடு கலைஇலக்கியப்பெருமன்றத்தின் மாநாடு கூடியபோது தோழர்நா.வானமாமலை அவர்களின் தலைமையில் நாட்டுப்புறஇலக்கியங்களை சேகரிக்க என்று ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த அறைகூவலை கி.ரா. தன் வழியில் இறுதிவரைமுன்னெடுத்துச்சென்றார். காலமாகிவிட்ட எழுத்தாளர் கழனியூரான், பாரததேவி போன்றோர் இடையில் அவரோடு வந்து இணைந்து அவருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள்.நாட்டுப்புற இலக்கியங்களில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டம் உட்பொதிந்திருப்பதாக இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த- முசோலினியால் சிறையிலடைக்கப்பட்ட- தோழர்அந்தோனியோ கிராம்ஷி குறிப்பிடுவார். ஆகவே நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிப்பது என்பது. அய்யோ பாவம், அவற்றைச் சேகரிக்க ஆளில்லையே என்பதற்காகச் செய்வதில்லை.உழைக்கும் மக்களின் சிந்தனைப்போக்கைப் புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான கருவி என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே  நா.வானமாமலை அவர்களின் வழியில் கி.ரா. முன்னெடுத்த மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நடவடிக்கை அது.

“ஒருவனுக்கு, ஒருநூறு நாடோடிக்கதைகள் தெரிந்திருந்தால் போதும்; ஓரளவு உலக ஞானம் படைத்தவனாகிவிடுவான். நம்முடைய வீடும், நமது பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும் வாத்தியார்களும் எவ்வளவுதான்  உலக விஷயங்களைப்பற்றி நமக்கு விளக்கிச் சொன்னாலும் பல விஷயங்கள் நமக்குத் தெரிவிக்கப்படாமலேயே மிச்சம் விழுந்து விடுகிறது. இந்தக் கதைகள் நமக்கு நண்பர்களைப்போன்றது -.நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்படி – இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளும்படி செய்துவிடுகின்றன…. இந்தக்கதைகளின் முக்கியப் பிறப்பிடமும், இருப்பிடமும்  எழுதப்படிக்கத் தெரியாத  சாதாரண பாமரஆண் பெண் விவசாய மக்களிடம்தான் “ என்று கிராமியக்கதைகள் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.எவ்வளவு தெளிவான பார்வையுடன் அவர் இயங்கியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

இதன் நீட்சியாக அவர் நம் மக்களிடம் புழங்கும் பாலியல்கதைகளையும் தொகுக்கத் துவங்கினார்.மறைவாய் சொன்ன கதைகள்,பாலியல் கதைகள் என்று புத்தகமாகவும் கொண்டு வந்தார். “பாலியல் கதைகள் எல்லா மொழியிலும் இருக்கு. அதைத்திரட்டுவதாலும், வெளியிடுவதாலும் நம் ஆச்சாரம் போய்விடும் என்று அரற்றுவது ,பேதமைமானுடவியலில் இதெல்லாம் இருக்கு. மனுசன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கெல்லாம் மனுஷ நாத்தம் இருக்
கும்” என்று சொன்னார்.

மாபெரும் அரசியல் பணி
என்னவெல்லாம் நம் பாட்டாளிகளிடம், அவர்களின்வாய் மொழிக்குள், புதைந்து கிடக்கிறதோ அதையெல் லாம் ஒண்ணுவிடாமல் வெளியே கொண்டுவந்து விட வேண்டும் என்கிற முனைப்பும் வேகமும்தான் அவரை இயக்கியது எனலாம். இது எவ்வளவு பெரிய அரசியல் பணி என்பதைத் தமிழ்ச்சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இதை வேறு யாரும் செய்யாததால் நான் கதைஎழுதுவதைத் தள்ளி வைத்துவிட்டுச் செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

புதுச்சேரியில்... 
ஏழாவது வகுப்பைக்கூடத் தாண்டாத அவர் புதுச்சேரிப்பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டதும் அரசின் குடியிருப்பிலேயே இறுதி மூச்சுவரை வாழ்ந்ததும் நமக்கு ஒரு முக்கியமானசேதியைச் சொல்கின்றன.படிப்பு என்பது பள்ளிக்கூடத்தில்இல்லை. அல்லது பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லை.‘பள்ளிக்கூடம் இல்லா ஊருக்குப் பாடம் படிக்கப்போறேண்டா’ என்று பாடிய பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளுக் கான ரத்தசாட்சியாக கி.ரா.நிற்கிறார். “மழைக்காகத்தான் நான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன். அப்போதும்கூட நான்மழையைத்தான் பார்த்துக்கொண்டு நின்றேன் ” என்பது அவரது மிகப்புகழ்பெற்ற தன் வரலாற்று வாசகம்.

குழந்தைகளுக்கான நாவல் என்கிற முயற்சியிலும் கி.ரா. இறங்கினார். பிஞ்சுகள் என்கிற நாவல் அவ்வகைமையில் முக்கியமான பங்களிப்பு.

‘கதவு’
அவருடைய நாவல்களைப்போலவே அவருடைய சிறுகதைகள் தனித்த முத்திரை பதித்தவை.”கதவு” என்னும்கதை அவருக்கு அழியாப்புகழைத்தந்த கதை. வறுமையின் காரணமாக அரசாங்கத்துக்குத் தீர்வை-வரி- கட்ட முடியாத ஓர் ஏழைக்குடும்பத்தின் வீட்டுக்கதவைக் கழற்றிக்கொண்டுபோய் விடுகிறது அரசாங்கம்.   கதவு இல்லாததால் கைக்குழந்தையை தேள் கடித்து விடுகிறது. அதனால்குழந்தை இறந்துவிடுகிறது. இரவில் கடுங்குளிரில் நடுங்குகிறார்கள்.  காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை கதவு இல்லாததால் நாய் குடித்துவிடுகிறது. அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். தூக்கிச் செல்லப்பட்ட கதவு பள்ளிக்கு அருகில் உள்ளசாவடியில் உள்ளதைக் கண்டு பூரிக்கிறார்கள். கண்ணீர்வடிக்கிறார்கள். அதை பலமாக பற்றிக்கொண்டிருந்தார் கள் என்று முடிப்பார்.சத்யஜித்ரேயின் “பதேர் பாஞ்சலி” படத்தில் வரும் குடிசைக்காட்சிதான் நமக்கு ஞாபகம் வரும்.அப்படி ஓர் அழியாச்சித்திரமாக கதவு கதை தமிழர் நெஞ்சங்களில் நின்றாடுகிறது.  

வேட்டி
வேட்டி என்கிற கதையில் சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற ஒருவரைச் சந்திக்கப் பிரமுகர்கள் வருகிறார்கள்.“பரபரப்போடு எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார்”என்று எழுதுவார்.இந்த ஒருவரியே சுதந்திர இந்தியாவின் அகத்தைப் படம்பிடிப்பதாக அமையும்.பெரும்பாலும் கிராமப்புற விவசாயம் சார்ந்த வாழ்க்கையை மையமிட்டே அவரது அத்தனைகதைகளும் எழுதப்பட்டுள்ளன.விவசாயிகள் மத்தியில் களப்பணி ஆற்றச்செல்லும் ஒவ்வொரு தோழனும் வாசித்திருக்க வேண்டியவையாக அவரது சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றை அவர் சொல்லும் விதமும் கைக்கொள்ளும் மொழியும் அப்படைப்புக்களுக்கு புதிய அழகையும் அடர்த்தியையும் தருகின்றன.

பெண்களுக்கு கம்பீரம்
அவருடைய கதைகளில் பெண்கள் கம்பீரமாக நிற்பார் கள். வேலை..வேலையே வாழ்க்கை என்கிற கதையில் வரும் கெங்கம்மாள் ஒரு உதாரணம்.”தலைக்கோழி கூப்பிட்டதும் வழக்கம்போல முழிப்புத்தட்டியது. தொழுவில் மாடுகள் மணியோசையும் அவைகள் கூளம் தின்னும்போது காடிப்பலகையின் சத்தமும் கேட்டது.கெங்கம்மாபடுக்கையில் இல்லை.” அவள் எழுந்து வேலைகளைத் துவங்கிவிட்டாள். ஒரு நாளின் பொழுது முழுவதும் வேலைவேலை எனக்கடக்கும் கிராமத்து விவாசாயக்குடும்பத்துப் பெண்ணின் வாழ்விலிருந்து தறித்து எடுக்கப்பட்ட ஒரு கீற்றாக இக்கதை விளங்கும். அக்கதை முடியும் பத்தி முக்கியமானது;“புருஷன் பக்கத்தில் வந்து படுக்கையை விரித்தாள்.லாந்தரை சுருக்குவதற்குமுன் நாகையா அவளை ஒருதரம் பார்த்தார்.அந்த முகத்தில் துளிகூடக் களைப்போ ஆயாசமோ இல்லை.எப்படி அவளால் இப்படித் திகழ முடிகிறது?அந்தக்கணத்தில் அவருக்குப் பளிச்சென்று மனசில் ஒன்று தட்டுப்பட்டது.’நாம் வாழ்க்கை வேறு வேலைவேறு என்று நினைக்கிறோம்;இவளோ வேலையே வாழ்க்கையாக விளங்குகிறாள்’.தன் அருகே தலை சாய்த்த தன் மனையாட்டியை இறுகப்பற்றி முகர்ந்தார்.பூசுப்பொடியோ சோப்பு வாடையோ முதலிய எதுவும் இன்றி சுயம்பான,தனீ மனுஷி வாடைதான் அவளிடம் இருந்தது.”நான் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது இந்தக்கதை கோவில்பட்டியிலிருந்து வெளியான ‘நீலக்குயில்’ மாத இதழில் வெளிவந்தது.முதன் முதலாக நான் வாசித்த கி.ரா.வின் கதை இதுதான்.இன்றைக்கு“வேலையே பண்பாடாக..(WORK AS CULTURE) என்கிறவிவாதம் மார்க்சிய அறிவுலகில் நடப்பதைப் பார்க்கிறோம்.அதை இந்தக்கதைபோல எளிமையாக யாரால் சொல்லமுடியும்?இந்தக்கதையில் கிறங்கிப்போனவன் தான் அப்புறம் கி.ராவின் எழுத்தைத்தேடித்தேடிப் படிக்கலானேன்.பாட்டாளிகளுக்காக இலக்கியம் படைக்க நினைக்கும்இளம் படைப்பாளிகளுக்கு இந்தக்கதை பெரிய பாடமாகஇன்றைக்கும் நிற்கிறது.

இடையறாது எழுதிக்கொண்டிரு!
படைப்பாளிகள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியஇன்னுமொரு சேதி உண்டு.“இடையறாது எழுதிக் கொண்டிரு” என்கிற சேதி. 93 வயதில் இந்து தமிழ்திசைஇதழில் “மனுசங்க” என்கிற தொடரை எழுதினார். 97 வயதில் “அண்டரண்டாப்பட்சி” என்கிற குறுநாவலை எழுதினார். எழுதவே முடியாமல் போன கடைசி சில காலம் ஆண்ட்ராய்ட் தொலைபேசியை வாங்கித்தரச்சொல்லி அதன்வழி இணைய இலக்கியக் கூட்டங்களில் பங்கேற் றார். இறுதிவரை இயங்கு என்று நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார். முப்பது வயதுக்குமேல்தான் எழுதத்துவங்கினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வழங்கியவை ஒவ்வொன்றும் முத்துக்களும் பவளங்களும்தான்.

அவருடைய முன்னோர்கள் தெலுங்கர்கள். தாய்மொழிதெலுங்கு. அவர் வீட்டில் பேசிய மொழி தெலுங்கு.”ஆனால் தெலுங்கில் எனக்கு ஒரு அட்சரம் கூடத் தெரியாது” என்றார். இந்த வீட்டுமொழிப்பின்னணியுடன் தான் அவர் தமிழுக்கு சாகித்ய அகாடமி விருதையும்,கனடா இலக்கியத்தோட்ட விருதையும் கொண்டு வந்து தந்தார்.ஞானபீடப்பரிசையும் நோபல் பரிசையும் கூடத் தமிழுக்குப் பெற்றுத் தரும் வல்லமை அவர் படைப்புக்களுக்கு உண்டு.இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “ரயிலுக்கு டிக்கட் வாங்கிட்டேன். ரயிலுக்குக் காத்திருக்கிறேன்” என்று சொன்னார். அந்த ரயில்வந்துவிட்டதுதான். ஆனாலும் கி.ரா.வின் கதை ரயிலின் சக்கரங்கள் ஒருபோதும் நிற்கப்போவதில்லை.

இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “ரயிலுக்கு டிக்கட் வாங்கிட்டேன். ரயிலுக்குக் காத்திருக்கிறேன்” என்று சொன்னார். அந்த ரயில்வந்துவிட்டதுதான். ஆனாலும் கி.ரா.வின் கதை ரயிலின் சக்கரங்கள் ஒருபோதும் நிற்கப்போவதில்லை

செவ்வணக்கம் தோழர் கி.ரா.!

கட்டுரையாளர் : ச.தமிழ்ச்செல்வன், மதிப்புறு தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

;