articles

img

பொய் வழக்குப் புனையப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்க.... ஸ்டான் சுவாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தலைவர்கள் வலியுறுத்தல்....

மதவெறி ஆட்சிக்கு பலியான மனித உரிமைப் போராளி அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மரணம் தேசத்தின் மனசாட்சியையே பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்டான் சுவாமிக்கு நினைவேந்தல் தெரிவிக்கவும் இணையவழி கண்டனக் கருத்தரங்கம் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு முன்னணி தலைவர்களில் ஒருவருமான பீட்டர் அல்போன்ஸ் தலைமையேற்க, மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணன், உதயகுமார் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரான வன்னியரசு வரவேற்க, அருட்தந்தைகள் வின்சென்ட் சின்னதுரை, எம்.சி.ராஜன், பேராயர் ஷர்மா நித்தியானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ் கனி, பிரண்ட்லைன் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.விஜயசங்கர் ஆகியோர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தும் வீரவணக்கம் தெரிவித்தும் உரையாற்றினர். ஞானகுரு நன்றி கூற, நிகழ்ச்சியை தீபா ஒருங்கிணைத்தார்.

தட்டிக் கேட்க எழுவோம்!: பீட்டர் அல்போன்ஸ் 

“வலதுசாரி பாசிச தத்துவங்கள் பெரும்பான்மை வாதத்தின் முழுமையான வெளிப்பாடாக ஒடுக்கப்பட்ட, நலிந்த, விளிம்புநிலை மக்களை அழித்தொழிக்கும் பாசிச அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அருட்தந்தையின் மரணத்தில் எனக்கு மிகப்பெரிய ஆதங்கமும் வருத்தமும் நமது இந்திய நீதித்துறை மீதுதான்.அதிகார மீறல், சர்வாதிகாரம் நடக்கக்கூடும் என்பதை அறிந்துதான், குடிமக்கள், அப்பாவிகள், ஏதும் செய்யாதவர்களை அதிகாரம் தாக்கி விடக்கூடாது என்பதற்காகவும் பாதுகாப்பு கொடுக்கவும்தான் நீதிமன்றங்களை சுதந்திர அமைப்பாக வைத்திருக்கிறோம். நமது அரசியல் சாசனம்தான், போராடும் சுதந்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறது. நீதிக்காக, நியாயத்திற்காக, ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவர்களுக்காக பேசுவது, எழுதுவது, போராடுவது என்கிற உரிமைகளையும் கொடுத்திருக்கிறது. அதை மீறி ஏதாவது செய்தால், அதிலிருந்து பாதுகாப்பதற்காக நீதிமன்றம் செல்லக்கூடிய உரிமையையும் தந்திருக்கிறது. இந்த சாசனத்தின்படி, எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியாது. குறைந்தது இத்தனை நாட்கள்தான் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. இதையெல்லாம் நம்பியதும், இந்த சட்டத்தின் மீதும், ஆட்சியின் மீதும் அருட்தந்தை ஸ்டான் சுவாமி வைத்த ஒரே நம்பிக்கையும்தான் அவரது வாழ்க்கையில் அவர் செய்த மிகப்பெரிய குற்றமாக நான் கருதுகிறேன்.அருட்தந்தை ஸ்டான் சுவாமிக்கே இந்த கதி என்றால், நமக்கு என்ன நடக்குமோ? என்ற ஒரு அச்ச உணர்வை அனைவரது மத்தியிலும் ஏற்படுத்தி தாங்கள் விரும்புகிற வரை, விரும்பும் வரை தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும், ஆட்சி நடத்த முடியும் என்பதுதான் மதவாத பாசிச கும்பல் வைத்திருக்கும் செயல்திட்டம்.அருட்தந்தை சுவாமியின் மரணம், நமக்கு ஒரு தைரியத்தையும், தட்டிக் கேட்கும் துணிவையும், அநியாயங்கள், அக்கிரமங்கள் தொடர்ந்து நடந்து விடக்கூடாது. அப்படி நடந்தால் இந்த சமூகம் தாங்காது. அதை தட்டிக் கேட்க எழுந்து வருவோம் என்கிற உணர்வையும் எழுப்பியிருக்கிறது” என்றார்.

                                                  *****************

மாற்றத்தின் துவக்கம் எது? : உ‌‌.வாசுகி

“உலகெங்கிலும் மனித உரிமைக்காக, அரசியல் உரிமைக்காக, ஜனநாயக உரிமைக்காக போராடுகிற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதும் இயக்கங்கள் மீதும் அடக்குமுறை சட்டங்களை முதலாளித்துவ அரசுகள் ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் அதிதீவிர வலதுசாரி அரசியலைக் கடைப்பிடிக்கும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் அடக்குமுறையும், கருப்புச் சட்டங்களும், தேசிய புலனாய்வு முகமை, ஆட்சி நிர்வாகம், நீதித்துறை, காவல்துறைக்கு வழிகாட்டுகின்றன. பாசிச ஆட்சியில் நீதி, நியாயம், நேர்மை என்று நீதிமன்றத்திற்குச் சென்றாலும் நீதி கிடைக்காது என்கிற சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதால், நமது போராட்டம் தனிப்பட்ட ஒரு மரணத்திற்கு நியாயம் கேட்பதல்ல. அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பீமா கோரேகான் வழக்கில் உண்மைக்கு மாறாக புனையப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அரசியல்உள்நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டமாகும்.ஒரு பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் அங்கம்தான் பாஜக. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தும் சந்தேகமும் கிடையாது. இருக்கவும் முடியாது. இந்த பாசிச அமைப்பு ஏற்றுக் கொள்ளாத, ஒவ்வாத பல விஷயங்களில் மிக முக்கியமானது பன்முகத்துவமும், ஜனநாயகமும் ஆகும்.இந்தப் பின்னணியில்தான், நமது அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க, குரல் கொடுக்க, பாதிக்கப்படுகிறவர்கள் எந்த அளவுக்கு கோபப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு, அந்தப் பிரச்சனையில் பாதிக்கப்படாதவர்களும் என்றைக்கு கோபப்பட துவங்குகிறார்களோ அன்றைக்குத்தான் மாற்றம் துவங்கும்” என்றார் உறுதியுடன்.

                                                  *****************

செங்கோல் வடிவில் சூலாயுதம்: ஹாஜா கனி

“இவரைப் போன்ற ஒரு புனிதரை, மக்கள் போராளியை பார்த்ததே கிடையாது” என்று ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சரால் நற்சான்று வழங்கப்பட்ட அருட்தந்தை, சிறையில் தனக்கு சொகுசு வாழ்க்கை வேண்டும் என்று கேட்கவில்லை. வெளியில் ஷாப்பிங் சென்று வரவேண்டும் என்று கோரவில்லை. சிறை நிர்வாகம் கொடுக்கும் உணவை, வயது மூப்பு காரணமாக உறிஞ்சி சாப்பிடுவதற்கு ஒரு உறிஞ்சு குழல் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதைக்கூட கொடுக்க நீதிமன்றத்திற்கு மனமில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. ஸ்டான் சுவாமியை உயிரோடு கொல்லுவதற்கு துடியாய் துடித்த பாசிச கும்பலுக்கும், அரசுக்கும் நீதிமன்றம் துணை போகலாமா? இந்தக் கொடுமைக்கு எதிராக இதயங்கள் வெடிக்க வேண்டாமா?
“என் மக்களுக்காக போராடுவது குற்றம் என்று இந்த நீதிமன்றம் சொன்னால், அந்த குற்றத்தை கோடிமுறை செய்வதற்கு காத்திருக்கிறேன்” என்று சொன்ன தேசப்பிதாவை கொன்றவர்களின் கைகளில் இன்றைக்கு அதிகாரம் எனும் செங்கோல் இருக்கிறது. சூலாயுதங்கள் செங்கோலின் வடிவில் இருக்கின்றன. அதன் விளைவுதான் நமது அருட்தந்தை ஸ்டான் சுவாமியை இழந்திருக்கிறோம். அவரது படுகொலை பச்சைப் படுகொலை. இதற்கு துணைபோகும், மாநில உரிமைகளை பறிக்கும் தேசிய புலனாய்வு முகமை சட்டத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சி தேவை” என்பதை ஆணித்தரமாக தெரிவித்தார்.

                                                  *****************

இப்போது இல்லை என்றால், எப்போது பேசப் போகிறோம்? : ஆர்.விஜயசங்கர்

“நம் நாட்டு மக்களின் பணத்தை கொள்ளை அடித்த பெரும் பணக்காரர்களில் 36 பேர் நாட்டை விட்டு ஓடிய போது கைது செய்யாத ஒன்றிய பாஜக அரசு, மலைவாழ் மக்கள், ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், வாழ்வை மேம்படுத்தவும் குரல் கொடுக்கக்கூடிய சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள், இஸ்லாமிய, கிறித்துவ சிறுபான்மையினர் மீது புதுப்புது வழிகளில் தாக்குதல்கள் தொடுத்து வருகிறது.நாம் தற்போது மோசமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசி மக்களுக்காக சமூக சேவை செய்து வந்த மருத்துவர் பினாய் சிங், அவரது மனைவி இருவரையும் முதலமைச்சர் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, கைது செய்து சிறையில் அடைத்து பல மாதங்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை.சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசி பெண்கள் நலத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயையே ‘வெளிநாட்டு பணம்’ என்றெல்லாம் கதைகளை ஜோடிக்க, கணினி தரவுகளை ஆண்டுக் கணக்கில் கண்காணித்து திருடி வைத்துக் கொண்டு, சமூக செயற்பாட்டாளர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது பாசிச அரசு. 1925ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு, நூற்றாண்டைக் கொண்டாடும் நேரத்தில் ‘இந்து ராஜ்யத்தை’ அமைத்து விட வேண்டும் என்று கூறியது. அதனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக சமூக அரசியல் கூட்டணி, மதநல்லிணக்க குழுக்களை கிராமங்கள் தோறும் அமைத்து அனைவரையும் ஓர் அணியில் திரள வைக்க வேண்டியது காலத்தின் தேவை” என்றார்.

                                                  *****************

விதைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி: வின்சன் சின்னதுரை

“எந்த ஒரு சமுதாயம் நீதியிலிருந்து, உண்மையிலிருந்து நழுவிச் செல்கிறதோ, அந்த சமுதாயம் அதைப் பற்றி பேசுபவர்களை, அதில் செயல்படுபவர்களை வெறுக்கிறது, ஒழிக்கிறது” என்பார் அறிஞர் ஜார்ஜ் ஆர்வல். அதுதான் நமது தேசத்திலும் இன்றைக்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது. இந்திய நீதி அமைப்பின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கையை அடியோடு தகர்த்து விட்டது. அவரது மரணம் இந்திய நாட்டை உலக அரங்கில் தலைகுனிய வைத்திருக்கிறது.இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்று மார்தட்டி சொல்லிக்கொள்ளும் பாஜக ஆட்சியில், மதச் சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்த அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவை கண்டனத்துக்குரிய நாடாக அறிவித்து இருக்கிறது.இப்படி இந்தியாவிற்கு உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாஜக ஒன்றிய அரசு, ஆதிவாசி - பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடிய மனித உரிமைப் போராளி, சமூகப் போராளி அருட்தந்தை ஸ்டான் சுவாமியை திட்டமிட்டு இந்த நிலைக்குத் தள்ளி அவரை கொன்று இருக்கிறது. ஒன்றிய அரசு, நீதித்துறை, தேசிய புலனாய்வு முகமை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டுக் கொலைதான் இது.நமது அருட் தந்தையை கைது செய்த தேசிய முகமை கொடுத்த ஆதாரங்களில் முக்கியமானதாக குறிப்பிடப்பட்டிருப்பது அவர் ‘காம்ரேட்’ என்று சொன்னது. அந்த ஒரு வார்த்தை இன்றைய ஆட்சியாளர்களை எப்படி ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. போராளிகள் ஒருபோதும் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்” என்று கூறினார்.

                                                  *****************

கார்ப்பரேட் விசுவாசம்: வன்னியரசு

“ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அந்த மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கவும் சட்டப்பூர்வமாக பணியாற்றி வந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமியை மறைமுகமாக சிறைப்படுத்தி சட்டத்தின் வழியில் படுகொலை செய்து வேதாந்தா நிறுவனத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தனது விசுவாசத்தை காட்டி உள்ளது மோடி அரசு.ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே தலைவர் என்கிற ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் கும்பலின் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு யாரெல்லாம் தடையாக இருக்கிறார்களோ, ஜனநாயக உரிமைகளுக்கு குரல் எழுப்புகிறார்களோ அத்தகைய மனித உரிமை செயல்பாட்டாளர்களை சிறைப்படுத்தி அடக்குமுறையை ஏவி படுகொலையை செய்துவரும் சதி வேலைகளுக்கு எதிராக ஒருமித்த குரலோடு மீண்டும் எல்லோரும் களத்தில் இறங்க வேண்டும். அதுதான் அருட்தந்தை நமக்கு சொல்லிக் கொடுத்துள்ள பாடம்” என்றார்.

                                                  *****************

இன்று ஸ்டான் சுவாமி... நாளை...? நவாஸ் கனி

“நாட்டு மக்களை அறிவுப்பூர்வமாக அரசியல்படுத்துவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தங்களது சித்தாந்தங்களுக்கு எதிரானது என்பதால், ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்திற்காக கொடுக்கும் குரல்களை நசுக்கும் ஆபத்தான பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் மனித உரிமைப் போராளி ஸ்டான் சுவாமியை இழந்திருக்கிறோம்.சுதந்திரப் போராட்டத்தில்கூட ஈடுபடாத ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு கருத்தியல் சுதந்திரத்திற்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தி, பழிவாங்கும் சட்டங்களைக் கொண்டு வந்து, அடக்குமுறையால் அடக்கிவிட முடியும் என்று நம்புகிறது. ஆனால், நாட்டின் உண்மையான தேச பக்தர்கள் யார்? தேச துரோகிகள் யார்? என்று காலம் உணர்த்தும்” என்றார்.

                                                  *****************

காவிரி ஓரத்திலிருந்து ஜார்க்கண்ட் வரை...! : எம்.சி.ராஜன்

தமிழ்நாட்டின் இதயப் பகுதி காவிரிக்கரை ஓரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 83 ஆண்டுகளுக்கு முன்பு 1937-ல் பிறந்த ஒரு குழந்தைதான் ஸ்டான் சுவாமி. அப்போதே தனது வாழ்வை பிறருக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கண்ணோட்டத்துடனும் தொடங்கியது அவரது வாழ்க்கைப் பயணம்.பட்டப்படிப்பை தமிழ்நாட்டில் முடித்தாலும் உயர் படிப்புக்காக பிலிப்பைன்ஸ் சென்றார். இன்றைக்கு நமது தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் காட்சியை போன்று, அன்றைக்கு அங்கு நடந்த போராட்டத்தை பார்த்ததும், அதில் பங்கேற்று தனது இதயத்தை செம்மைப்படுத்தி கொண்டவர் நமது அருட்தந்தை.ஜனநாயக நாட்டில் மனித மாண்புகளை பாதுகாக்க அந்தப் போராட்டத்தில் ஏராளமான படிப்பினைகளை கற்றறிந்து, இந்தியா திரும்பினார். நமது நாட்டில் புறக்கணிக்கப்பட்ட ஏழை மக்கள், சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவர்.தனது சமுதாயப் பணியை 1975-86 களில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கி,  ஆதிவாசி மக்களுக்காக களப்பணியாற்ற ஜார்க்கண்ட் சென்றார். மலைப் பிரதேசங்களில் வசிக்கும் அந்த மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து கரைந்து விட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக ஆதிவாசி மக்களின் நிலங்கள், கனிம வளங்கள் சுரண்டப்படுகிறது. ஆதிவாசி மக்களின் அவலக் குரல் மீண்டும் மீண்டும் அவரது இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மறுபுறம், எந்த முகாந்திரமும் இல்லாமல் சந்தேகத்தின் பெயரில் 3000 ஆதிவாசி இளைஞர்களை சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது காவல்துறை.இந்தக் கொடுமையில் இருந்து விடுவிக்க, உரிமைகளை நிலைநாட்ட அந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூக சிந்தனையை ஏற்படுத்தினார். மற்றொரு புறம் சட்டத்தின் மூலமும் தனது போராட்டத்தை தொடர்ந்தார்.ஸ்டான் சுவாமியின் வாழ்வும் பேச்சும் போராட்டமும் “வர்ணாசிரம”க் கொள்கை கொண்ட பாசிச பாஜக அரசுக்கு கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே பாஜகவுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ளது. இத்தகைய பின்னணியில்தான் அவர் கைது செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு மரணமடைந்திருக்கிறார். அவரது மரணம் சமூகத்திலுள்ள அனைவருக்கும் பாடம் புகட்டியிருக்கிறது என்றார்.

                                                  *****************

ஆதிவாசிகளின் அணையா விளக்கு: ஷர்மா நித்தியானந்தம்

“தென் மாநிலத்தில் பிறந்து வட மாநிலத்திற்கு சென்று ஆதிவாசி மக்களோடு மக்களாக வாழ்ந்து அந்த மக்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததுடன் வாழ்விழந்த மக்களின் குரலாக ஒலித்தது அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் குரல். பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு அவரது வாழ்க்கை பாதை ஒரு சகாப்தம். அவர் மரணித்தாலும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். எனவே அவர் விட்டுச் சென்ற பணிகளை, போராட்டங்களை அவரது பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு

;