articles

img

முன்னுதாரணமான கம்யூனிஸ்ட்....

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்துள்ளனர். இன்னமும் நோய்த் தொற்றும் மரணங்களும் தொடர்ந்து கொண்டுள்ளது. இக்கொடுமையான நோய்த் தொற்றால் செங்கொடி இயக்கத்தின் அர்ப்பணிப்புள்ள தோழர்கள் பலரையும் இழந்துள்ளோம். பல்லாண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த மகத்தான தலைவர்கள் பலர் மறைந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழிலாளி வர்க்க களப்பணியாளராகவும், ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவராகத் திகழ்ந்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களையும் கொரோனா நோய்த் தொற்று நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது.

சென்னையில் மத்திய தர குடும்பத்தில் பிறந்த தோழர் மைதிலி தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து மேல்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பை முடித்துவிட்டு ஐ.நா. சபையின் அதிகாரியாக பணியாற்றினார். இக்காலத்தில் உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப்போராட்டங்கள், வியட்நாம் மீது அமெரிக்காவின் கொடூரமான போர், ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம், கியூபநாட்டின் மீது அமெரிக்கா தொடுத்திருந்த பொருளாதார தடை போன்ற பிரச்சனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சிந்தனையை தாக்கியது. இதன் பொருட்டு மக்களின் விடுதலை போராட்டங்களிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். அமெரிக்காவிலிருந்து தலைமறைவாக கியூபாவுக்கு சென்று கியூபா மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நேரடியாக கண்டுணர்ந்தார். கியூபா மக்களின் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டார். இவைகளெல்லாம் தோழர் மைதிலியை கம்யூனிஸ்ட் கொள்கைகளின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது. உழைப்பாளி மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து தனது ஐ.நா. வேலையை உதறித் தள்ளிவிட்டு சென்னை திரும்பினார். தோழர் மைதிலி தனது 29வது வயதிலேயே இத்தகைய தீர்க்கமான முடிவினை மேற்கொண்டார்.

1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் சென்னை திரும்பிய போது, மனிதகுலத்தையே உலுக்கும் சம்பவம் கீழ்வெண்மணியில் நடைபெற்றது. பட்டியலின விவசாய கூலித் தொழிலாளர்கள் 44 பேரை நிலப்பிரபுத்துவ வெறிநாய்க் கூட்டம் உயிரோடு தீயிட்டு பொசுக்கியது. சம்பவத்தை கேள்விப்பட்ட அடுத்த சில நாட்களில் தோழர் மைதிலி கீழ்வெண்மணி புறப்பட்டார். முன்பின்அறிமுகம் இல்லாத, யாரும் துணைக்கு இல்லாத காவல்துறையின் நெருக்கடிமிகுந்த அந்த பகுதிக்கு தன்னந்தனியாக பயணித்தார். சில நண்பர்களது உதவியோடு சர்வோதயா இயக்கத்தைச் சார்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் என்பவரோடு வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தார். அந்த பகுதியே இருள் சூழ்ந்து பதற்றம் நிறைந்து மக்கள் பீதியில் திகைத்துப் போயிருந்தனர். காவல்துறை அதிகாரிகள் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. யாரிடமும் எதையும் பேச முடியாதஅளவிற்கு இறுக்கமான சூழ்நிலையில் மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக கதறிக் கொண்டிருந்த நிலையில் பிண வாடை அடித்துக் கொண்டிருந்த தெருக்களில் நடந்து சென்று மக்களைச் சந்தித்தார். இவர் தீவிரவாதியாக இருக்குமோ என சந்தேகித்த காவலர்கள் இவரையும், கிருஷ்ணம்மாளையும் கைது செய்துகீழ்வேளூர் காவல்நிலையத்தில் வைத்துவிட்டனர். மிகுந்த சிரமப்பட்டு இவரோடு ஐ.நா. சபையில் பணியாற்றிய ஜி. பார்த்தசாரதி என்பவரை தொடர்புகொண்டு அவர் அளித்த விளக்கத்தின் பேரில் காவலர்கள் அவரை விடுதலை செய்தனர்.

வெண்மணி கொடுமையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவிட்டன. உண்மைக்கு மாறான அவதூறுகளை விவசாயத் தொழிலாளர்கள் மீதும்,கம்யூனிஸ்ட் கட்சி மீதும் புழுதிவாரி வீசியிருந்தன. இந்நிலையில் வெண்மணிகொடுமையை வெளியுலகிற்கு முதன் முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்தோழர் மைதிலியாவார். மேலும் இக்கொடுமையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் விரிவான கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதி காவல்துறை மற்றும் அரசின் நிலப்பிரபுத்துவ ஆதரவுப் போக்கினை அம்பலப்படுத்தினார். வெண்மணி சம்பவம் விவசாயத் தொழிலாளர்களின் கூலிக்கான வர்க்கப்போராட்டம் என்பதோடு அது சாதிய ஆதிக்கத்தினரால் நடத்தப்பட்ட சமூக ஒடுக்குமுறை என்பதையும் தெளிவுபடுத்தினார். பட்டியலின விவசாயத் தொழிலாளர்கள் படும் வேதனை நிறைந்த வாழ்க்கை முறையினை நேரடியாக கண்டு மனம் நொந்துபோன மைதிலி இதற்கான தீர்வை நோக்கி சிந்தித்து மார்க்சிஸ்ட் தலைமையிலான சமூக மாற்றமே தீர்வு என முடிவுக்கு வந்தார்.

சென்னையில் இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ரேடிக்கல் ரிவியூ என்ற ஆங்கில பத்திரிகையை துவக்கினார். இந்த பத்திரிகைஆசிரியர் என். ராம். உள்ளிட்ட பலரோடு சேர்ந்து பல அரசியல், சமூக கட்டுரைகளை ஆழமாக இப்பத்திரிகையில் இடம் பெறச் செய்தார். இக்கட்டுரைகள் இன்றைக்கும் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் சிறந்த ஆவணமாக உள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னையில் தொழிற்சங்கத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திகழ்ந்த தோழர் வி.பி.சிந்தன் அவர்களை சந்தித்த பின் சென்னையில் நடைபெற்ற பல தொழிலாளர்களின் போராட்டங்களில் கலந்து கொண்டார். கல்லுடைக்கும் தொழிலாளர்கள் போராட்டம், டேபிளட் தொழிலாளர்கள், டன்லப் தொழிற்சங்கம், பொன்வண்டு சோப்பு கம்பெனி போராட்டம், டி.வி.எஸ். போராட்டம், பாலு கார்மெண்ட்ஸ் போன்ற தொழிற்சங்கங்களுக்கு தலைமை தாங்கியதுடன் அத்தொழிலாளர் போராட்டங்களில் பங்கெடுத்தார். சிஐடியுவின் மாநில பொறுப்புகளையும் வகித்து வந்தார்.

இவர் தொழிற்சங்க தலைவராக தொழிலாளர் போராட்டத்தில் வழி நடத்தியடி.ஐ.சைக்கிள் கம்பெனியில் இவரது கணவர் கருணாகரன் பணியாற்றினார். இதன் காரணமாகவே பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இக்காலத்தில் சென்னையிலும், தமிழகத்திலும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பை உருவாக்கி பெண் தொழிலாளர்களை அணி திரட்டும் மகத்தான பணியை நிறைவேற்றினார். இவர் மென்மையாக பேசுபவர்.பொதுக்கூட்டங்களில் கூட அதிர்ந்து பேச மாட்டார். ஆனால் அதற்கு நேர்மாறாக விடாப்பிடியாக உறுதியாக போராடும் நெஞ்சுறுதி படைத்தவர்.தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் பெண்கள் உரிமைக்கு போராடுகிற ஜனநாயக மாதர் சங்க அமைப்பை உருவாக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அதன்தொடக்க கால அமைப்பாளர்களின் ஒருவராக தோழர் மைதிலி பணியாற்றினார். மாதர் இயக்க தலைவர்களான தோழர்கள் கே.பி. ஜானகியம்மாள், பாப்பாஉமாநாத் உள்ளிட்ட தலைவர்களோடு தமிழகம் முழுவதும் பெண்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். மாநில, அகில இந்திய மாதர் சங்க பொறுப்புகளை வகித்ததுடன் பெண்கள் உரிமைக்கும், ஆணாதிக்கப் போக்கினை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,பெண்கள் மீதான பாலியல் சீண்டல் தடுப்பு  போன்ற சட்டங்கள் நிறைவேற்றுவதற்கும் அதில் உரிய திருத்தங்களை செய்வதற்கும் ஜனநாயக மாதர் சங்கம்நாடு முழுவதும் குரலெழுப்பியதில் தோழர் மைதிலி முக்கியப் பங்காற்றினார்.

தருமபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி கிராமத்தில் வனத்துறையினர் மற்றும் காவலர்கள், வருவாய்த் துறையினர் சேர்ந்து நடத்திய கும்பல் பாலியல் மற்றும் கோரத்தாண்டவமாடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்றகுழுவில் இடம்பெற்று விசாரித்து அக்கொடுமைகளை தொகுத்து முழுமையானஆவணத்தை தயாரித்தார். இந்த ஆவணமே வாச்சாத்தி கொடுமையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் அடிப்படையாக திகழ்ந்தது. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட நந்தகோபால் மற்றும் பாலியல்வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அவரது மனைவி சம்பவத்தில் கண்டித்து குரலெழுப்பினார். குற்றவியல் வழக்கு விசாரணை மற்றும் நீதி விசாரணைகளுக்கு வழிகாட்டினார். 1972ஆம் ஆண்டு முதல் எனக்கு தோழர் மைதிலி அவர்களுடன் அறிமுகம் உண்டு என்றாலும் இந்த வழக்கு விசாரணைகளில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியதை மறக்க முடியாது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக நடைபெற்று வந்த பெண் சிசுக் கொலைகளை கேள்விப்பட்டதோடு பல இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அஇஜமாதர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்குகள், போராட்டங்கள் நடத்திய பின்னரே தமிழக அரசு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் தொட்டில் குழந்தை திட்டத்தை உருவாக்கியது.பெண்கள் குறித்த பார்வையை விளக்குகிற “பெண்ணுரிமை ஒரு மார்க்சீயபார்வை” பாடக் குறிப்பை தயாரிக்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல நாட்கள்கடினமாக உழைத்து அந்த ஆவணத்தை உருவாக்கினார். இன்றைக்கும் அந்தஆவணமே பெண்ணுரிமை இயக்கங்களுக்கான வழிகாட்டும் ஆவணமாக இருந்து வருகிறது.

தமிழகத்தின் பகுத்தறிவு இயக்க தலைவரான தந்தை பெரியார் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும், பெண்ணுரிமை, பகுத்தறிவு, தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தபெரியாரின் கருத்துக்களை பெரிதும் மதித்து கட்டுரைகள் எழுதினார். ஆனால்அதேசமயம், சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து குரலெழுப்பிய பெரியார் முதலாளிவர்க்கத்தின் பொருளாதார சுரண்டலை எதிர்த்து குரலெழுப்ப மறுத்தது அவரது குறை என சுட்டிக்காட்டினார்.
கீழ்வெண்மணி, சென்னையில் தொழிலாளர்கள் போராட்டம், சிம்சன் போராட்டம், தமிழக பட்டியலின மக்கள் வாழ்நிலை ஆகியவைகள் குறித்து அவர் எழுதிய பல கட்டுரைகள் கருத்தாழமிக்கவை.தனது அரசியல் பயணத்திற்கு இசைவான நம்பிக்கை கொண்டிருந்த தோழர் கருணாகரன் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமும், இவர்களது மகள் கல்பனாவின் திருமணமும் சாதி மறுப்பு திருமணமாக நடந்தது. அடுப்படி சிறையில் பெண்கள் சிக்கியிருக்கும் இன்றையகுடும்ப சூழ்நிலையில் தோழர் மைதிலி கருணாகரன் குடும்பம் முன்னுதாரணமான குடும்பமாகும். இவர் மகள் கல்பனா எழுதியுள்ள நூலில் தனது குடும்பம் எப்படி வித்தியாசமான குடும்பமாக திகழ்ந்தது என்பதை விளக்கியுள்ளார். எனது அம்மாவை நான் ஒருபோதும் கரண்டி கையோடு பார்த்ததில்லை. மாறாக, எப்போதும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்கிற, வழிகாட்டுகிற, கலந்தாலோசிக்கிற தாயாகவே பார்த்தேன் என கூறியிருப்பது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திடும்.

களப்போராளியாக, எழுத்தாளராக, பேச்சாளராக, பத்திரிகையாளராக அயராது பணியாற்றி வந்த தோழர் மைதிலி 12 ஆண்டுகளுக்கு முன்னர்அல்சமைர் நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரது நினைவாற்றல் குறைந்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் மைதிலி அவர்களை பாதுகாத்து பராமரிக்கும் பெரும் பொறுப்பினை அவரது கணவர்தோழர் கருணாகரன், மகள் கல்பனா, மருமகன் பாலாஜி ஆகியோர் கவனித்துவந்தனர். இவர்களது பணி மிகுந்த பாராட்டுக்குரியதாகும். இந்நிலையில் கடந்தமாதம் கடைசி வாரத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.சாதிய ஒடுக்குமுறை, முதலாளித்துவ சுரண்டல் முறைகளுக்கு எதிராகவும்,பெண்ணுரிமை, மக்கள் ஜனநாயக உரிமைகளுக்காக ஒரு லட்சிய வாழ்வை மேற்கொண்ட தோழர் மைதிலி அவர்களின் வாழ்வு மக்கள் இயக்கங்களில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக அமையும்.

கட்டுரையாளர் : கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;