articles

img

செவ்வானத்தில் பூத்த ஆயிரம் பூக்கள்...

தொழிலாளி வர்க்கத்தின் ஏடான தீக்கதிர் வெறுமனே ஒரு செய்திப் பத்திரிகையல்ல. இதர பத்திரிகைகள் செய்திக்கு பின்னே உள்ளவர்க்க கண்ணோட்டத்தையோ, சமூக கண்ணோட்டத்தையோ பிரதிபலிக்காமல் செய்திகளை வெளியிடுகிறார்கள் அல்லது ஆளும் வர்க்கம் மற்றும் ஆதிக்க சமூகங்களின் நோக்கோடு வெளியிடுகிறார்கள். மாறாக, ஒரு செய்திஎன்பதைத் தாண்டி அதன் பின் உள்ள சமூகமற்றும் வர்க்க கண்ணோட்டத்தை சுரண்டப் படும் வர்க்கங்கள் மற்றும் ஒடுக்கப்படும் சமூகங்களின் நோக்கிலிருந்து செய்திகளை விமர்சனத்தோடு வெளியிடுவதை தீக்கதிர் மற்றும் Theekkathir Digital தனது பணியாக மேற்கொண்டு வருகிறது. 

ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் சுரண்டப்படும் வர்க்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதுதான் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உழைக்கும் மக்களிடம் அவர்களுக்கான உரிமைகளையும் அதைவென்றெடுப்பதற்கான வழிமுறைகளையும் கொண்டு சேர்ப்பதை தீக்கதிர் தன் கடமையாக மேற்கொண்டு செய்து வருகிறது.இத்தகைய தீக்கதிரை அதன் மூலம் வரும் வர்க்க கண்ணோட்டத்தை வாசிப்பதற்காகவும், கற்றுக் கொள்வதற்காகவும் பொது மக்களிடம்கொண்டு சேர்ப்பதற்காகவும் தினசரி முக்கியமான செய்திகளையும் அந்த செய்திகளுக்கு உள்ளேயுள்ள வாசிப்பை தூண்டுகிற பகுதிகளையும் முன்வைத்து ஒவ்வொரு நாளும் தோழர் கே.சுவாமிநாதன் ஏறத்தாழ 33 மாதங்களாக ‘செவ்வானம்’ என்ற சமூக ஊடகக் குழுவின் மூலமாக குறிப்பிட்ட பகுதியினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறார். இந்த மகத்தான பணி ஜூலை 11 அன்று 1000 ஆவதுநாளை எட்டியுள்ளது. இந்த ஆயிரம் நாட்களில்ஒரு நாள் கூட தவறவில்லை.

இவற்றிற்கிடையே அவருக்கும் அவரது இணையருக்கும் அவரது தாயார் உள்ளிட்டு குடும்பத்தில் சிலருக்கும் கொரோனா பாதிப்புஏற்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடுவில் ஒருநாள் கூட தவறாமல் இந்த பணியை தோழர் சுவாமிநாதன் செவ்வனே நிறைவேற்றி வந்திருக்கிறார். ஒரு தனி மனிதனால் மட்டும் சாத்தியப்படுகிற நிகழ்வாக இது இல்லை. ஆனால், ஏறத்தாழ அதன் முழுமையான முயற்சி அவருடையது. இதற்கு பல தோழர்களின் உதவியையும் அவர் பெற்றிருக்கிறார்.அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பது ஒரு தனித் திறன் வாய்ந்த பணியாகும். சொல்லப்போனால் தலைமைக்குரிய முக்கியமான திறமையே, திறமைகளை இணைக்கும் திறமை தான். அதன் வழியே தான் இது சாத்தியமாகியிருக்கிறது.பலர் புத்தகங்களையும், பத்திரிகைகளையும், கட்டுரைகளையும் தேடித் தேடி கற்பவர் களாக இருக்கிறார்கள்.

ஆனால், அப்படி கற்பதை மற்றவர்கள் கற்கத் தூண்டுவது மிக முக்கியமான பணியாகும். அந்த பணியை மிகநேர்த்தியுடன் தோழர் கே.சுவாமிநாதன் செய்திருக்கிறார்.கற்றலும் கற்பித்தலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மிக மிக முக்கியமான கடமையாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில்“தொழிலாளி வர்க்கம் மற்றும் அனைத்துப் பகுதி உழைக்கும் மக்களுக்கு தனது வரலாற்றுக் கடமையை செய்வதற்காக கட்சி தனக்குத்தானே இடைவிடாது போதித்துக் கொள்ள வேண்டும், மீண்டும் மீண்டும் போதித்துக்கொள்ளவேண்டும்.” - (கட்சி திட்டம் பாரா8.4) என்று கூறப்பட்டுள்ளது.தனக்குத்தானே போதித்துக் கொள்வதோடு அந்த போதனை சென்றடையாத பகுதிக்கும் சென்றடையவதை உத்தரவாதப் படுத்துவதற்காக மிக கடுமையான முயற்சியோடு 1000 நாட்களை கடந்து ‘தீக்கதிர் இன்று’அறிமுகத்தைக் கொண்டிருக்கும் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கும், அதற்கு உதவியதோழர்களுக்கும் பாராட்டுக்கள்.இது அப்படியொன்றும் எளிய காரியம் அல்ல; ஆனால் இதை சாத்தியமாக்கிய தோழர்களுக்கு எந்த சிரமமும் ஒரு தடையாக இருக்கவில்லை.

கட்டுரையாளர் : : க.கனகராஜ், முதன்மைப் பொது மேலாளர், தீக்கதிர் 

படத்தில் இருப்பவர்... தோழர் கே.சுவாமிநாதன் 

;