articles

img

புழுத்துப் போன அரிசியும் உளுத்துப் போன சூழ்ச்சியும்....

ஒன்றிய அரசிற்கென்று தனியாக வாக்குகள் என்று ஏதும் இல்லை. மாநில மக்களின் வாக்குகள்தான் ஒன்றிய அரசை தேர்ந்தெடுக்கிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இது பாஜகவை பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்கியது. இதேபோல தடுப்பூசி குறித்த விபரங்களை மாநில அரசுகள் வெளிப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அடுத்த தினமே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பூசி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்று கூறி ஒன்றிய அரசுதேவைக்கேற்ப தடுப்பூசிகளை தமிழ கத்திற்கு தரவில்லை என்பதை அம்பலப்படுத்தினார். 

இதேபோல எரிபொருட்களின் விலையில் ஒன்றிய அரசின் கள்ளத்தனம், ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழகம் வஞ்சிக்கப்படுவது குறித்து ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைககளை தமிழக மக்களின் நலன் பேணும் கட்சிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. மதக்கலவரங்கள், வகுப்புவாத நடவடிக்கைகள், பிரித்தாளும் சூழ்ச்சி என எந்த வகையிலும் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை பாஜக புரிந்துகொண் டது. அதனால் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் மூலம்தான் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்த முடியும் என்பதை தற்போது உணர்ந்துள்ளது எனத் தெரிகிறது. ஆனால் அதிலும்  சாதி, மத துவேசத்தோடும், குறுகிய அரசியல் லாபத்திற்காகச் செயல்படுவது என்கிற இவர்களின் அஜண்டாதான் மேலும் மக்களிடம் இருந்து பாஜகவை அந்நியப்படுத்துகிறது. இவர்கள் திருந்தவேமாட்டார் கள் என்பதை அடுத்தடுத்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகிறது.

பாஜகவின் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தடலாடியாக டவுன்ஹால் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு ஆய்வுக்குச் சென்றார். அங்கு இருந்த புழுத்த அரிசியை பார்த்ததும் முகமெல்லாம் பூரிப்பு. புழுத்த அரிசியை பார்த்தால் இயல்பாக கோபம் வரவேண்டும். அது கம்யூனிஸ்ட்டுகளுக்குத்தான் பொருந்தும். வானதிக்கோ பூரிப்பு. தான்அரசியல் செய்ய கிடைத்ததொரு பொன்னான வாய்ப்பு என வானதியின் அழைப்பிற்காக காத்திருக்கும் ஊடகங்களை உடனே வரச்சொல்லி சேதி அனுப்பினார்.

இதற்குள்ளாக ரேசன் கடைக்காரரிடம் இதென்ன அரிசி மக்களுக்கு போடுவதா அல்லது விலங்குகளுக்கு போடுவதா என ஒரு அதட்டு அதட்டினார். ரேசன் கடைக்காரரோ கொஞ்சமும் அலட்டாமல் அது நீங்கதான் சொல்லனும். உங்க பாஜக கட்சி ஆட்சி செய்கிற ஒன்றிய அரசு அனுப்பியஅரிசி தொகுப்புதான் இது என பதிலளித்தார். அவ்வளவுதான் பூரிப்பு புஸ்வாணமாகி மீடியாக்கள் வருவதற்குள் ஓட்டம் பிடித்து எஸ்கேப் ஆனார். ஆனாலும் டிஜிட்டல் யுகத்தில் ஒன்றிய அரசினால் ஒட்டுக்கேட்க முடியும் என்றால், பாஜகவின் அரிசியின் அரசியலை படம் பிடிக்க சாமான்யனுக்கு தெரியாதா என்ன? அங்கிருந்த சிலர் அத்தனையும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தினார்கள்.

இப்போது அதே ஒன்றிய அரசின் புழுத்த அரிசியை நாங்கள்தான் வழங்குகிறோம் என துண்டறிக்கை அடித்து வீடு வீடாக விநியோகம் செய்கிறார்கள். இதில் அதிர்ச்சி என்னவென்றால் மாதம் ஐந்து கிலோ அரிசியை மோடி இலவசமாகத் தருகிறார். இதனை தரவில்லை என்றாலும் அல்லது பாஜகவில் உறுப்பினராக சேர விரும்பினாலும் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என சில எண்களை அச்சடித்துள்ளார்கள். இவர்களின் அடுத்தபடியான கணக்கெடுப்புத்தான் இவர்களின் சூழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாஜகவினர் வீடு வீடாக துண்டறிக்கை கொடுத்துவிட்டு ஒரு கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். இதில் மொத்த குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, இதில் ஓட்டு உள்ளவர்கள், இல்லாதவர்கள், என்ன ஜாதி, செல்போன் ஆகியவற்றை சேகரிக்கிறார்கள். ஒன்றிய அரசின் அரிசியை பெறுவதற்கு பாஜகவில் ஏன் உறுப்பினராக சேர வேண்டும்? ஓட்டு உரிமை உள்ளவர்கள் யார்? என்ன ஜாதி? செல்போன் எண் ஆகியவற்றை ஏன் சேகரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது.  

கொங்குநாடு கோசத்தை முன்வைத்து பிரிவினை அரசியல் அஜண்டாவிற்கு பாஜக தயார் ஆவது போல, இதுபோன்ற கணக்கெடுப்பின் மூலம் சாதியப் பிரிவினை அரசியல் நடவடிக்கைக்கு தயாராகிறதோ என்கிற ஐயம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.காசு உள்ளவனுக்கே தடுப்பூசி என்கிற ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த போராட்டமும், இதனையடுத்து உச்சநீதிமன்றம் தலையீடு செய்ததும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை உறுதிப்படுத்தியது. ஒன்றிய அரசிற்கு என்று தனியாக வாக்குகள் இல்லை என்பது எப்படி உண்மையோ அப்படியேதான் மாநிலங் களின் வருவாய் வரிகள்தான் ஒன்றிய அரசிற்கு நிதி வருவாய் என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக புழுத்த அரிசியிலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டால்மக்களும் பாஜகவை தனிமைப்படுத்து வார்கள் என்பது திண்ணம்.

கட்டுரையாளர் : அ.ர.பாபு

;