தூய்மைப் பணி தொழிலாளர்களின் போராட்டம் அரசு செய்ய வேண்டியது என்ன
பெருநகர சென்னை மாநக ராட்சி அலுவலக வாயி லை முற்றுகையிட்டு தொடர்ந்து 13 நாட்கள் இரவு பகலாகப் போராடி, நள்ளிரவில் காவல்துறையின் ஒடுக்கு முறையை எதிர்கொண்டு உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தூய்மைப் பணி தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் பேராதரவு அளித்தனர்.
போராட்டத்தின் பின்னணி
சென்னை மாநகராட்சியின் எல்லைகள் 2011 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு 200 வட்டங்கள் 15 மண்டலங்களாகச் செயல்படத் தொடங்கின. இதில் 10 மண்டலங்கள் முழுமை யாகவும், ஒரு மண்டலத்தில் சில வட்டங்களிலும் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறித் தூய்மைப் பணி நடவடிக்கைகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இதன் தொடர்ச்சியாக 2025 ஜூன் 30 அன்று 5 மற்றும் 6 ஆம் மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. அத்தீர்மானத்தில் “11 தனியார்மயமாக்கப்பட்ட மண்டலங்களில் துப்புரவுப் பணியின் செயல்பாடு, சேவை வழங்கல் மற்றும் திருப்தி கரமான செயல்திறனைக் கண்டு” பொது மக்களின் விருப்பத்திற்கேற்ப தனியார்மயப் படுத்தப்படுவதாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2023 ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனியார்மயத்திற்கு தெளிவான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பணம் சேமிக்கும் என்ற பொய்
இந்த இரண்டு மண்டலங்களுக்கு 10 ஆண்டுகளில் 276 கோடி ரூபாய் செலவில் Urbaser SAU-Spain, M/s. Elkoplast Envirosystems India Private Limited மற்றும் M/s Sumit Facilities Limited நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. “சேவைக்கான செலவு குறைய வாய்ப்புள்ளது” என மாநகராட்சி கூறினா லும், கடந்த 10 ஆண்டுகளில் இப்பணியில் ஈடுபட்ட ராம்கி நிறுவனம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 300 கோடி ரூபாய் பி.எஃப். தொகையை வங்கியில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு 2021 ஆம் ஆண்டு மாநகராட்சியால் நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டது. இப்போது சட்டப் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக Envirosystems என்று பெயர் மாற்றி மீண்டும் ஒப்பந்தம் பெற்றுள்ளது. DAY-NULM திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களின் மூலம் மாதம் 22,000 ரூபாய் ஊதியம் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு 16,950 ரூபாய் மட்டுமே மாதச் சம்பளமாக வழங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஈ.எஸ்.ஐ./பி.எஃப். ஆகியவற்றுக்கான பணமும் பிடிக்கப்படும்.
தொழிலாளர்களின் நியாயமான கேள்விகள்
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தொழிலாளர் தீர்ப்பாயத்தில் இந்த இரு மண்டலங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களைப் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என வழக்கு நடத்தி வருகின்றனர். “தமிழ்நாடு தொழில்துறை நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலையை வழங்குதல்) சட்டம், 1981”-இன் படி 480 நாட்கள் தொடர்ந்து (24 மாதக் காலத்திற்குள்) வேலை செய்திருந்தால், அவர் நிரந்தர தொழி லாளியெனக் கருதப்பட வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் நீதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், குறிப்பாக வழக்கு நிலுவையில் உள்ளபோது, எப்படித் தூய்மைப் பணியைத் தனியாருக்கு ஒப்படைக்க முடியும்? ஏற்கெனவே தூய்மைப் பணியாளர்கள் பெறும் சம்பளத்திலிருந்து நான்கில் ஒரு பங்கைக் குறைத்திட மாநகராட்சி எப்படி சட்டப்படி ஒப்புதல் அளிக்கலாம்? நிரந்தரப் பணி யாளர்களாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் சட்டத்தின்படி உள்ளபோது, இம்மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணி தொழிலாளர்களை ஏன் பணி நிரந்தரப்படுத்த வில்லை? இத்தகைய கேள்விகளையே கோரிக்கை களாக முன்வைத்துத் தொடர்ந்து 13 நாட்கள் வெயிலிலும் மழையிலும் மாநகராட்சி அலுவலக வாயிலில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தினர். மாநகராட்சி நடத்திய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டத்திலும் சிஐடியு-செங்கொடி சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியே தீர வேண்டுமென உறுதியாக எடுத்துரைத்தது.
மாநில அளவிலான பிரச்சனை
தூய்மைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை மாநகராட்சி உரிய வகையில் கையாளாமல், பொதுநல வழக்கில் உயர் நீதி மன்ற உத்தரவைக் காரணம் காட்டி நள்ளிரவில் காவல்துறையின் அடக்குமுறையை அராஜகமான முறையில் கட்டவிழ்த்துவிட்டு தொழிலாளர்களைக் கைது செய்து போராட்டத்தை ஒடுக்கியது. இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்றைய தினம் சென்னை மாநகரில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் காவல்துறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படைக் காரணம் இப்பிரச்சனையில், தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற கொள்கைகள்தான்.
ஊதியச் சட்டத்தின் மீதான தாக்குதல்
2017 அக்டோபர் 11 ஆம் தேதி உள்ளாட்சித் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வரையறுத்து அரசாணை வெளி யிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் இது அமல்படுத்தப்படவில்லை. 2023 ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் அரசாணை வெளியிட்ட திமுக அரசு, 2017 ஆம் ஆண்டில் விலைவாசி உயர்வை ஈடுகட்டப் பஞ்சப்படி 37.25 ரூபாய் நிர்ணயித்ததற்கு மாறாக, 6 ஆண்டுகளில் விலைவாசி குறைந்தது போல 6.25 ரூபாய் குறைத்துப் பஞ்சப்படி 31 ரூபாயாக நிர்ணயித்தது. விலை வாசி உயர்வுக்கேற்பச் சம்பள விகிதத்தை அதிகரிப்பதற்கு மாறாக, குறைத்து ஆணை வெளியிட்டது. அரசின் இத்தகைய தொழிலாளர் விரோதக் கொள்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்தபட்ச ஊதியத்தைக் குறைத்துப் போடப்பட்ட அரசாணைக்கு மாறாக முந்தைய அரசாணை யின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டுமென நீதிமன்றம் 2023 செப்டம்பர் 11 அன்று உத்தரவிட்டது. ஆனால் இது இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை.
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் அரசாணைகள்
முதலாளித்துவச் சந்தைப் பொருளாதார கோட்பாட்டின்படி ‘தொழிலாளர்’ என்ற வரை யறையை முழுமையாகப் பறிக்கும் வகையில், ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களை முழுவதுமாக அவுட்சோர்சிங் செய்யும் வகையில் அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. இது தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் அத்தகைய பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வையும் சூறையாடும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
அரசு என்ன செய்ய வேண்டும்?
துப்புரவுப் பணி, தூய்மைப்பணி என அழகழகாக நாம் அழைத்தாலும் அடிப்படையில் இது கையால் மலம் அள்ளும் இழிவுதான். தூய்மைப் பணியாளர்கள் கடுமையான நோய்களுக்கும் உயிரிழப்பு களுக்கும் ஆளாகிறார்கள். சாக்கடையைச் சுத்தம் செய்வது, மலக்குழிக்குள் அடைப்பை எடுப்பது, மருத்துவக் கழிவுகளை அப்புறப்ப டுத்துவது, செத்த விலங்குகளை அகற்றுவது என எல்லா வேலையையும் இவர்கள் வெறும் கைகளாலேயே செய்கின்றனர். தூய்மைப் பணியை இயந்திரமயப்படுத்தி எல்லோரும் பங்கெடுக்கும் தொழிலாக மாற்ற வேண்டும். சமூகப் பொறுப்புள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளின் வழியே அப்பணியில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் அந்த இழிவிலிருந்து மீட்கப்பட வேண்டும்.
உடனடி நடவடிக்கைகள்
தொழிலாளர் என்ற அடிப்படையில் தொழிலாளர் சட்டங்கள் வரையறுத்துள்ள உரிமைகளைப் பறிக்கும் வகையில் வெளி யிடப்பட்ட அரசாணைகள் 10, 139, 152 ஆகியவற்றை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தேவை, பணிச்சூழல் இவற்றைக் கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வெகுமக்களின் கோரிக்கையாக உருவெடுத்துள்ள சூழலில் தமிழ்நாடு அரசு இதை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பொதுச் சுகாதாரத்தையும் தூய்மைப் பணியையும் இயந்திரமயமாக்குவது, நவீனமய மாக்கும் வகையில் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சுகாதாரப் பொறியியல் துறைப் பாடப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகளில் தூய்மைப் பணித்துறையில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பச் செயல்பாடுகளைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த உரிய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் கடும் நிதி நெருக்கடியில் சிக்கவைத்து உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் உரிய வகையில் எதிர்கொள்வதற்கான ஒருங்கி ணைந்த நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு, கண்ணியம், சமூக நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான கொள்கை வகுத்து அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் போராட்டத்தை வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாகக் குறுக்கிப் பார்க்கக் கூடாது.