articles

img

அவர் மீது ஏனிந்தப் பேரன்பும் பெருமதிப்பும்....

தோழர் மைதிலி சிவராமன் என்று செங்கொடித் தோழர்களும், மற்ற இயக்கங்களின் அன்பர்களும் ஒரு நேச உணர்வோடு அவரை அழைத்தார்கள். அதில், அவருடைய உயர்ந்த அறிவுக் கூர்மை பற்றிய பிரமிப்பும், வியர்வை வர்க்கத்தினரோடு சமமாகக் கலந்து பழகியதுபற்றிய வியப்பும் கலந்திருந்தன. தோழர் மைதிலி காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மாநிலச் செயற்குழுவும் இரங்கல் அறிக்கைகள் வெளியிட்டன. தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டு கட்சிக்கு அப்பாற்பட்டு பல அரசியல் தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டார்கள். அச்சு ஊடகங்களில் பரவலாக தோழர் மைதிலி மறைவு செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகின. காட்சி ஊடகங்களில் சிறப்புத் தொகுப்புகள் ஒளிபரப்பப்பட்டன. மைதிலியின் கணவர் கருணாகரன்,  மகள் கல்பனா இருவரும் கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுவெளியிலுள்ள ஏராளமானோர் தங்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பியிருப்பதைத் தெரிவித்தனர்.

வர்க்க உணர்வோடு மக்களுக்காகப் போராட்டக் களம் இறங்குவதில் சளைக்காதவர், அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்காகச் சிறிதும் வருந்தாதவர் மைதிலி. அப்படிப்பட்டவர் எதற்காக வருந்தியிருப்பார் என்றால் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக  உடல்நலம் குன்றியதால் கட்சி நிகழ்ச்சிகளிலோ பொது இயக்கங்களிலோ கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்துத்தான்.இக்காலக்கட்டத்தில் ஊடகங்களிலும் அவரைப் பற்றிய செய்திகள் பெரிதாக வெளியாகவில்லை. ஆனால்  அவரது மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றியும், அவருடைய பங்களிப்பு பற்றியும், அர்ப்பணிப்பு மிக்க இயக்கப்பங்களிப்புகள் பற்றியும் பல்வேறு தளங்களிலும் வியப்போடும் மதிப்போடும் பேசப்படுகிறது. கட்சி அணிகளிடையே, தொழிலாளிகளிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களிடையே, பொதுவான அரசியல் - சமூக ஆர்வலர்களிடையே அவர் மையமானதொரு பேசுபொருளானார். இதற்கு என்ன காரணம்?

உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவரான  தோழர் மைதிலி அமெரிக்காவில் ஐ.நா. சபை அலுவலகத்தில் வேலை செய்யக் கிடைத்த வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டுத் தமிழ்நாட்டிற்குத் திரும்பியதும், தன்னை ஒரு தொழிலாளியாக, விவசாயத் தொழிலாளியாக, பெண்ணுரிமைப் போராளியாக, மனித உரிமைக் காவலராக, அநீதி எங்கெல்லாம் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று நீதிக்காக போராடுகிறவராக அர்ப்பணிப்போடு உழைத்தார். அதுதான் இறுதிப் பத்தாண்டுகளில் இயங்க முடியாமல் போனநிலையிலும் அவரது மறைவுச்செய்தியைத் தொடர்ந்து  மக்களிடையே அவரைப் பேசுபொருளாக்கியது. அவரதுமறைவு ஏற்படுத்திய துயரத்தை விடவும், அவரது வாழ்வு பற்றிய பகிர்வுகள் பலருக்கும் அவரைப் போல தாங்களும் சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டுமென்ற உறுதிப்பாட்டை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும்...
படிப்பதற்காக அமெரிக்கா சென்ற மைதிலி 1968ல் இந்தியாவிற்கு திரும்புகிற போதே, பொதுவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்ற  தீர்மானத்தை மனதுக்குள் நிறைவேற்றியபடிதான் வருகிறார். அந்த முடிவும், 1969ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைந்ததும் அவர் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான திருப்புமுனைகள் எனலாம். இரண்டே ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை உள்வாங்கிக்கொண்ட அவர், மார்க்சியப் பார்வையோடு சமுதாயப் பிரச்சனைகளை ஆய்வுப்பூர்வமாக அணுகினார். அரசியல் நிலைமைகள், பொருளாதாரஏற்றத்தாழ்வுகள், சமூகப் பாகுபாடுகள், பாலினப் பிரச்சனைகள் என அவருடைய சுயேச்சையான ஆய்வுக்கு உட்படாதகளங்களே இல்லை. அது கட்சி அணிகளை மட்டுமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களையும் ஈர்த்தது.

வெண்மணிக் கொடூரம் அரங்கேற்றப்பட்டபோது நேரில் சென்று தலித் விவசாயத் தொழிலாளி குடும்பங்களைச் சந்தித்து உடன் நின்றார். அந்தக் கோரச் சம்பவத்திற்கு முன்பும், பின்புமான நிகழ்வுப்போக்குகளை மார்க்சியத் தெளிவோடு ஆராய்ந்திருக்கிறார். நிலப்பிரபுத்துவ சுரண்டலைப் பற்றியும், வெண்மணி உள்ளிட்ட கீழத் தஞ்சையில் நிலவிய தீண்டாமைக் கொடுமை பற்றியும் ஆராய்ந்த அவர்,பாதிக்கப்பட்ட மக்களை மட்டும் சந்தித்ததோடு திரும்பவில்லை. அந்தக் கொடுமையை நிகழ்த்திய நிலச்சுவான்தார்கள் சிலரையும் சந்தித்துப் பேசினார். வெண்மணிக் கிளர்ச்சியைக் கூலி உயர்வுக்கான போராட்டமாக மட்டும் பார்க்கக்கூடாது, சாதியக் கொடுமை, நிலப்பிரபுத்துவச் சுரண்டல் இரண்டிற்கும் எதிராக அந்த மக்கள்திரண்டார்கள் என்று வர்க்கப்பார்வையோடு தமது கட்டுரையில் சுட்டிக்காட்டினார் மைதிலி. கட்சித் தலைவர்கள்,இயக்கத்தின் ஏடுகளில் வெண்மணிப் போராட்டம் பற்றி இயக்கத் தோழர்களுக்கு எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.  ஆனால் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் வெண்மணி தொடர்பான கட்சியின் பார்வையைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தனது ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார் தோழர் மைதிலி.

1960களின் பிற்பகுதியில் தொடங்கி அடுத்து 10 ஆண்டுகள் சென்னை மாநகரம் உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆலைத் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடந்தன. குறிப்பாக, சென்னை மாநகரமும்,சென்னை புறநகர் பகுதியும் தொழிலாளர்களின் போராட்டக்களமாக மாறின. சென்னையில் விம்கோ நகர், நெய்வேலி, நீலகிரி அரவங்காடு ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.அதற்கு அஞ்சிடாத தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். சென்னை சிம்சன் தொழிலாளர்கள், வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களில் மைதிலி தன்னை உணர்வுப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அது மட்டுமல்ல, அந்தப் போராட்டங்களைப் பற்றியும், தொழிலாளர்  கோரிக்கைகளின் நியாயங்களைப் பற்றியும் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய புத்தகங்களை எழுதினார்.  தொழிற்சங்கத் தலைவராக சென்னையில் அவரே பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

மார்க்சியப் பார்வையில் பெண்ணுரிமையை உயர்த்திப் பிடித்து...
தர்மபுரி வாச்சாத்தியில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்கொடுமை இழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தோழர் பாப்பா உமாநாத் உள்ளிட்ட தலைவர்களோடு சென்று பார்த்து, அவர்களுக்கு ஆறுதலாகநின்றார். பழங்குடியினர் ஆணையத்தின் இயக்குநர் பாமதி ஐ.ஏ.எஸ். வன்கொடுமை இழைத்தவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வலியுறுத்திய மனு ஒன்றை மைதிலி தயாரித்து அனுப்பினார். அந்த மனுதான் பின்னாட்களில் இயக்குநர் பாமதி வாச்சாத்திக்கு சென்று ஆய்வு செய்ததற்கும், நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதற்கும் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கொதித்து எழுந்தது மட்டுமல்லாமல், பெண் விடுதலைக்கான போராட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை வர்க்கக் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து ‘பெண்ணுரிமை ஒரு மார்க்சியப்பார்வை’ என்ற ஆவணத்தை அவர் தயார் செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அந்த ஆவணத்தை அங்கீகரித்து, இப்போதும் கட்சி அணிகளுக்கும், மற்றவர்களுக்கும் பயிற்றுவிப்பதற்கு ஒரு பாடக்குறிப்பாக பயன்படுத்தி வருகிறது.

ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனல்
1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த வியட்நாம் மக்களின் பிரதிநிதியாக (தெற்கு வியட்நாம் புரட்சி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர்) மேடம் பின் சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட ஜனநாயக இயக்க தலைவர்களும் அவரை வரவேற்பதற்காக வந்திருந்தனர். அங்கே மைதிலியும் வந்திருந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான் அப்போதுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று மாலை வியட்நாம் பிரதிநிதி வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் பல தலைவர்களோடு தோழர் மைதிலியும் பேசினார். அமெரிக்காவில் அவர் இருந்த போது வியட்நாமை ஆக்கிரமித்த அமெரிக்கஅரசுக்கு எதிராக நடந்த யுத்த எதிர்ப்பு இயக்கத்தின் தாக்கத்தினால் அரசியல் ஆர்வம் பெற்ற தோழர் மைதிலியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அவர் பேச்சில் கனலாக வெளிப்பட்டதை என்னைப் போன்ற மாணவர்கள் பார்த்தோம்.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, தொழிற்சங்கத் தலைவராக, பெண்ணுரிமைக்குக் குரல் கொடுப்பவராக, மனித உரிமைக்காக வாதாடுகிறவராக, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கம்யூனிஸ்ட் போராளியாக 1968ல்துவங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஆற்றிய பணிகளும் பங்களிப்புகளும் அவர் மறைந்த பின் நம் கண்களில் நினைவோட்டக் காட்சிகளாக நிற்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்த தோழர் மைதிலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தன்னுடைய சமூகப்பின்னணியை தூக்கி எறிந்து விட்டு, மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் நலனுக்காக செயல்பட்டது என்பது இப்போதும் அவரை கட்சிக்குள்ளும், கட்சிக்கு அப்பாலும் நினைவு கூர்வதற்கு காரணமாக அடிப்படையாக அமைந்தது. தோழர் மைதிலிஇறக்கவில்லை. நம்மோடு நம் நினைவில் வாழ்கிறார். வளரும் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;