articles

img

ஜவுளித் துறையில் 4.5 கோடிப் பேருக்கு வேலை; சராசரி மாத ஊதியம் ரூ.13,948 மட்டுமே!

ஜவுளித் துறையில் 4.5 கோடிப் பேருக்கு வேலை; சராசரி மாத ஊதியம் ரூ.13,948 மட்டுமே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மத்திய ஜவுளி அமைச்சரிடம் எழுப்பிய நட்சத்திர கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ் சிங், நாட்டின் ஜவுளித் துறையில் தற்போது நேரடியாக சுமார் 4.5 கோடிப் பேர் வேலை செய்து வருவதாகவும், இதில் கைத்தறித் துறையும் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜவுளித் துறையில் வேலை வாய்ப்பு நிலவரம், புதிய வேலைகள் உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தொழிலாளர்களின் சராசரி மாத ஊதியம், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சச்சிதானந்தம்  எம்.பி., கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் கிரிராஜ் சிங் அளித்த பதிலின்படி, 2022-23 ஆண்டு தொழில் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஜவுளித் துறையில் சராசரி மாத ஊதியம் ரூபாய் 13,948 என்று தெரிவித்துள்ளார். இந்த ஊதியம் பணியிடத்தின் இருப்பிடம், துறை, தொழிலாளியின் திறமை நிலை, பகுதி நேர அல்லது முழு நேர வேலை போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜவுளித் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்க சமர்த் திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், தேசிய கைவினைப்பொருள் மேம்பாட்டு திட்டம், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இலக்கு திட்டம், பிரதமர் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை பூங்கா திட்டம், உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கைத்தறி தொழிலாளர்களுக்கு சலுகை கடன்கள், காப்பீட்டு பாதுகாப்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்துக்கு குறைவாக உள்ள விருது பெற்ற நெசவாளர்களுக்கு நிதி உதவி போன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதாகவும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களில் மாதம் ரூ.21,000 வரை ஊதியம் பெறும் ஜவுளித் தொழிலாளர்களுக்கு ஊழியர் மாநில காப்பீட்டு கழகத்தின் மூலம் மருத்துவ பலன்கள் மற்றும் நோய்வாய்ப்பு பலன்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்படி குடும்பம் நடத்துவது?

இந்த விபரங்களை வெளியிட்டுள்ள சச்சிதானந்தம் எம்.பி., “ஜவுளித் துறையில் சராசரி மாத ஊதியம் வெறும் ரூபாய் 13,948 என்பது மிகவும் குறைவான தொகையாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் ஜவுளித் துறையில் 4.5 கோடிப் பேர் வேலை செய்தும், அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இல்லை. தற்போதைய பணவீக்க சூழலில் இந்த ஊதியத்தில் ஒரு குடும்பத்தை நடத்துவது மிகவும் கடினம்” எனக் குறிப்பிட்டுள்ளார். “மேலும், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களில் மட்டுமே பொருந்தும் என்பது பெரும்பாலான சிறுதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை வெளியேற்றுகிறது. ஜவுளித் துறை தொழிலாளர்களின் நலனுக்காக குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும், விரிவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்தவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.