articles

img

மாணவர்களின் இலவச பஸ்பாஸ்: தெளிவான உத்தரவு தேவை?

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10, பிளஸ்2 வகுப்புகள் மட்டும்  19ஆம்தேதி தொடங்கப்பட்டன. இந்நிலையில் மாணவ - மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததால், முன்பு போல் பஸ்களில் இலவசப் பயண அனுமதி உண்டா? அல்லதுடிக்கெட் எடுத்துதான் செல்லவேண்டுமா? என்று கேள்வி முன்வந்திருக்கிறது. இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கிடைத்த விளக்கம்: புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புதியபஸ் பாஸ் வழங்கப்பட மாட்டாது.அவர்கள், முந்தைய ஆண்டில் பயன்படுத்திய பஸ் பாஸைக் கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவர்கள் பள்ளி சீருடையில் பயணித்தாலே அவர்களுக்கு பஸ்களில் கட்டணம் வசூலிப்பது இல்லை. அதே நடைமுறைகள் தான்  19ஆம்தேதியிலிருந்து 10,பிளஸ் 2 வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கும்போது கடைப்பிடிக்கப்படும். கடந்த நவம்பரில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிட்டபோதே, இது பற்றி பள்ளிக்கல்வித்துறையும் போக்குவரத்து துறையும் தெளிவுபடுத்தியுள்ளன. 10,பிளஸ்2 மாணவ - மாணவியருக்கு வழக்கம் போல் இலவச பஸ் பயண சலுகை உண்டு.

பள்ளி சென்று வருவதற்கான பயணங்களில், அவர்கள் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால்  போக்குவரத்து துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது. ‘பள்ளிகளுக்கு வந்து செல்லும் 10, பிளஸ்2 மாணவ - மாணவியரிடம் டிக்கெட் எடுக்க வற்புறுத்தக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக’ தெரிவிக்கின்றனர். இருப்பினும் பள்ளி சென்று திரும்பும் மாணவர்களிடம் விசாரித்த போது, பேருந்துகள் நிறுத்தி மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றுவிடுகிறது என்றும் நிறுத்தி ஏற்றிச் செல்லும் பேருந்துகளில்  டிக்கெட் எடுக்க கண்டக்டர்கள் வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு   நடைமுறையில் எந்தஅளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. எனவே மாணவர்களின் இலவச பஸ்பாஸ் அனுமதி குறித்தும்புதிய இலவச பஸ்பாஸ் வழங்குவது குறித்தும் அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

==ஆரூரான்===

;