articles

img

நிலம் வெறும் மண்ணல்ல; விவசாயிகளின் உயிர்! - சாமி. நடராஜன்

நிலம் வெறும் மண்ணல்ல; விவசாயிகளின் உயிர்!

உலகம் முழுவதுமே நிலம் பொதுவான தாக இருந்தபோது, அதில் தங்களின் உழைப்பைச் செலுத்தி உற்பத்தி செய்த பொருட்களை பங்கீட்டு வாழ்ந்து வந்த சமூக அமைப்பில் எந்தவித பேதங்களும், வேறுபாடுகளும் இல்லாமல் தான் இருந்தது. நிலம் எப்போது தனியுடமையானதோ அன்றே துவங்கியது நிலப்பிரச்சனை. இதனோடு இணைந்து பிறந்தன வர்க்க வேறுபாடுகளும். மாறிக் கொண்டே வரும் சமூக பொருளாதார மாற்றத்தில் அடிமைச் சமூக அமைப்பு மாறி, நிலப்பிரபுத்துவ சமூ கம் வந்தது. பிறகு முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றியது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பு கெட்டிப்படுத்தப் பட்டு இயங்கி வருகிறது. சமூகம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் அடிப்படையில் நிலப்பிரச்ச னையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.  விடுதலைக்கு முந்தைய நிலை  ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பிருந்தே நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் ஒட்டுமொத்த நிலங்களையும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போதும் இந்த நில உடைமைதாரர்களில் எத்தகைய மாற்றமும் ஏற்பட வில்லை. ஏற்கனவே இருந்த குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகளோடு சேர்ந்து இனாம்தார்கள், ரயத்துவாரிகள் என்ற அடிப்படையில் நில உடமையாளர்களை உருவாக்கி தங்களுக்கு ஆதர வாக வைத்துக் கொண்டனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.  ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசு நிர்வாகமும், நிலப்பிரபுத்துவமும் கூட்டாக சேர்ந்து கொண்டு ஒட்டு மொத்த நிலங்கள் மீதும் மக்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த ஆதிக்கத்திற்கு எதிராகவும், நிலங்களில் தங்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காகவும் நாடு முழுவதும் பல இடங்களில் கிளர்ச்சிகள் வெடிக்க துவங்கியது, குறிப்பாக மேற்கு வங்கம், கேரளம், ஒன்றுப்பட்ட ஆந்திரா, தமிழ்நாடு ஒன்றுபட்ட உத்தரபிரதேசம் போன்ற பகுதியில் விவ சாயிகள் போராட்டங்கள் நடைபெற்றன.

1936ல் துவங்கப்பட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கம்  தான் முதன் முதலில் உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோஷத்தை முன் வைத்து நிலப்பிரபுத்துவ கொடுமைகளிலிருந்து விவசாயிகளை விடுவித்திட நிலப்போராட்டங்களை வீரியத்துடன் நாடு முழுவதும் நடத்தியது.  தமிழ்நாட்டில் நிலப்பிரச்சனை தமிழ்நாட்டில் மொத்தமுள்ள சுமார் 1.50 கோடி  ஏக்கர் நிலங்களில் 1500க்கும் மேற்பட்ட ஜமீன்தார்கள், பண்ணையார்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் சுமார் 60 லட்சம் ஏக்கராகும் - இது மொத்த நிலத்தில்  40 சதவீதம். இந்த நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் பகுதியினராக பெரும்பகுதி விவசாயிகள் மாநிலம் முழுவதும் இருந்தனர். ஒரு ஜமீன் என்றால் அவருக்கு சொந்தமான நிலங்களை மட்டும் குறிப்பிடமாட்டார்கள். ஒட்டுமொத்த கிராமங்களே ஜமீனுக்கு சொந்தமான நிலைதான் இருந்தது.  தமிழ்நாட்டில் 1943ல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தென்பரையில் துவங்கப்பட்ட தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவ கொடுமைகளில் சிக்குண்டிருந்த விவசாயிகளை, விவசாயத் தொழி லாளர்களை அமைப்பு ரீதியாக வர்க்கமாக திரட்டி பண்ணையார்களின் கொடுமைகளுக்கு எதிராகவும், நிலப்பகிர்வுக்கான போராட்டத்தையும் நடத்தியது. கீழத்தஞ்சையில் நிலவிய நிலப்பிரபுத்துவக் கொடுமை களுக்கு முடிவு கட்டியது செங்கொடி விவசாய இயக்கம் தான். தஞ்சையை தொடர்ந்து மதுரை, நெல்லை, இராமநாதபுரம், திருச்சி, ஒன்றுபட்ட வட ஆற்காடு, தென்ஆற்காடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்து வீரியத்துடன் நடைபெற்றன.  நில உச்சவரம்பு சட்டம்  தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நிலஉரிமைக் கான போராட்டங்களின் விளைவாக அப்போதைய மாநில அரசு நிலசீர்த்திருத்த சட்ட மசோதாவை 1960ம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வெளியிட்டு 1961 செப்டம்பரில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி யது.

இந்த சட்டமசோதாவிற்கு 13.4.1962ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு 2.5.1962ல் இச்சட்டம் தமிழ்நாட்டில் அமுலுக்கு வந்தது.   இடைப்பட்ட காலத்தில் இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தியது. குறிப்பாக இச்சட்டத்தில் திருத்தம் கோரி மாநிலம் முழுவதும் நடைபெற்ற மறியல்  போராட்டத்தில் 16 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு  4 மாதம் முதல் 6 மாதம் வரை சிறையிலடைக்கப்பட்ட னர். அதன் பிறகு 1972, 1973, 1974 ஆகிய ஆண்டுகளில் நில உச்சவரம்பு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப் பட்டன. ஸ்டாண்டர்டு 30 ஏக்கர் என்பது 15 ஸ்டாண்ட ர்டு ஏக்கராக குறைக்கப்பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த சட்டத்தில் உள்ள 13 வகையான நிலங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்குகளில் எந்த மாற்றமும் இல்லாமலேயே தொடர்கிறது.   உபரி நில விநியோகம்  நில உச்சவரம்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தியிருந்தால் சுமார் 20 லட்சம் ஏக்கர் நிலம்,  நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு கிடைத்திருக் கும். ஆளும் வர்க்கத்தினர் வர்க்க பாசத்தினால் இச்சட்டத்தை நீர்த்துப்போக செய்வதில் கவனமாக இருந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலம் வெறும் 2,08,207 ஏக்கர் மட்டுமே. அரசு தரிசு நிலங்கள்  2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதா 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளதாக அறிவித்து பெரும் நிறுவனங்களுக்கு கொடுக்கும் திட்டத்தை அறிவித்தார்.

கடுமையான போராட்டத் திற்கு பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆய்வில் சுமார் 70 லட்சம் ஏக்கர் அரசு  தரிசு  நிலம் இருப்பது தெரியவந்தது. திமுக தலைவர்  கலைஞர், குடும்பத்திற்கு தலா 2 ஏக்கர் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.  இந்நிலையில், 2006ல் ஆட்சிக்கு வந்த திமுக 2009 வரை 6 கட்டங்களாக 2,10,427 ஏக்கர் நிலங்களை 1,75,355 குடும்பங்களுக்கு வழங்கியதாக அறிவித்தது.  கோயில், மடம், அறக்கட்டளை நிலங்கள் உச்சவரம்பு சட்டம் இயற்றப்பட்ட போதே தமிழகத்திலிருந்த அனைத்து மதங்களைச் சேர்ந்த அறநிலையங்களுக்கு, அந்தந்த அறநிலையங் களுக்கு 200 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் வைத்துக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான கோயில் பெயர்களில் உள்ள நிலங்கள் 4.78 லட்சம் ஏக்கர் உள்ளது. இவற்றில் குடியிருப்பு பகுதிகள், சிறுகடைகள் தவிர மற்றவை நன்செய், புன்செய் மானாவாரி நிலங்களாக உள்ளன. இவற்றை பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான மக்கள்,  விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த  நிலங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்டவைதான். இவற்றில் உள்ள குத்தகை விவசாயிகள், வீட்டுமனை பயனாளிகளை அப்புறப்படுத்திட தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  இதேபோல் வக்பு வாரியத்தின் பெயரில் உள்ள  இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும்  விவசாயிகளுக்கும் பல நெருக்கடிகள் கொடுக்கப் பட்டு வருகிறது. மேலும் இனாம் நிலம், பஞ்சமி நிலம் குறித்த பிரச்சனைகள் மாநிலம் முழுவதும்உள்ளது.  தற்போதைய சவால்கள் மாநிலம் முழுவதும் நிலப்பிரச்சனைகள் நீறுப்பூத்த நெருப்பாய் நீடித்துக் கொண்டுள்ளன. குறிப்பாக, நிலஉச்சவரம்பு சட்டம், தரிசு நில விநியோகத்தின் மூலம் நிலம் கிடைக்கப் பெற்ற விவசாயிகளை விட இக்காலத்தில் நிலத்தை விட்டு வெளியேறிய விவசாயிகள் அதிகம் என்ற நிலை தான் உள்ளது. உலகமயக் கொள்கைகள் வேகமாக அமலாக்கப்பட்டு வரும் இக்காலத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் தவறான பொருளாதார மற்றும் வேளாண் கொள்கைகளினால் நிலமற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, புதிய வடிவிலான நிலக்குவியல்கள் அதிகரித்துள்ளன.   அரசுகளின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் முப்போகம், இருபோகம் விளையக்கூடிய விளை நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதும், அதற்கான இழப்பீட்டைக் கூட முறையாக வழங்காத நிலையும் உள்ளது. இவற்றிற்கு எதிராக வலுவான போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது.  குறிப்பாக உயரழுத்த மின் கோபுரங்கள் அமைப்பது, எண்ணெய் குழாய் பதிப்பது

, 4வழி, 6 வழி நெடுஞ்சாலைத் திட்டங்கள், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல், சிப்காட் தொழிற்பேட்டைகள், உணவுப் பூங்கா, ஜவுளிப்பூங்கா என பல திட்டங்களுக்காக பல்லா யிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துதல் தொடர்கின்றது.  சிறப்பு மாநாடு உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்குவதற்கும், அரசு தரிசு நிலங்களை 90 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர் களுக்கு வழங்குவதற்கும், கோயில், மடம், வக்பு வாரிய நிலப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், இனாம் மற்றும் பஞ்சமி நில பிரச்சனைகளுக்கு தீர்வு உரு வாக்குவதற்கும் 2025 ஆகஸ்ட் 14 அன்று திண்டுக்கலில் நிலஉரிமை சிறப்பு மாநில மாநாட்டை  தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து நடத்துகின்றன. தமிழகத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவோம். நிலஉரிமைக்கான களப் போராட்டத்திற்கு திட்டமிடுவோம்.