articles

img

வாழையடி வாழையாக தழைத்தோங்கும் செங்கொடி - ஜி.ராமகிருஷ்ணன்

இயக்குநர் மாரி செல் வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம்  துவக்கத்திலிருந்து கிளைமேக்ஸ் வரை மிகவும் விறுவிறுப்பாகவும், அழகியலோடும் உள்ளது.  ஒரு கிராமத்தின் சமூக, பொருளா தார சூழலை மையமாக கொண்ட  வாழை படம் மக்களுக்கு முன் வைக்கும் வலுவான கருத்து திரைக்கதை மூலமாகவும் பாத்திரங்களின் உரையாடல்கள் மற்றும் உடல்மொழி மூலமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என்றால் கொஞ்சம் யூகிக்க முடியும். வாழை என்ற இரண்டெழுத்தில் இயக்குநர் என்ன செய்யப் போகி றார் என்ற கேள்வியோடு திரைக்கு  சென்றோம். எதிர்பாராத திரைக் காவியம் அது.

பசுமையான வாழைத் தோப்பு.  காய்த்துக் குலுங்கும் வாழைக் குலைகள். செல்வச் செழிப்பான கிராமம். ஆனால், மறுபுறம் வறு மையில் உழலும் ஆண்கள், பெண்கள், சிறார்கள் என வாழைத்  தார் சுமக்கும் வேலை. மழை, தண்ணீர், சேறு, சகதி என்று எப்படி  இருந்தாலும் காலணி கூட அணி யாமல் கடுமையாக உழைக்கும் மக்கள். இந்த உழைப்புச் சுரண்ட லையும், வறுமையையும் கருவாக கொண்டு எடுக்கப்பட்ட வாழையின் களம் புளியங்குளம், காலம் 1990கள்.

படம் முழுவதும் எதார்த்த மான காட்சிகள். எதார்த்தத்தி லிருந்து பிரிக்க முடியாத புனைவு கள். இயக்குநரின் இளமைக் கால  வாழ்க்கையில் உழன்று, சுழன்ற வலிதான் வாழையின் தண்டு.

பள்ளிச் சிறுவன் சிவனணைந் தான் (பொன்வேல்),  அவனது அக்கா வேம்பு (திவ்யா துரை சாமி), தாய் (ஜானகி), பள்ளித் தோழன் சேகர் (ராகுல்), காய்  சுமக்கும் தொழிலாளி கனி (கலை யரசன்), பள்ளி ஆசிரியர் பூங் கொடி டீச்சர் (நிகிலா விமல்)  உள்ளிட்ட கிராமத்து உழைப்பாளி களின் எதார்த்தமான வாழ்க்கை தான் படத்தின் கதை.

பாத்திரங்களாக வருபவர் களில் பெரும்பான்மையான வர்கள் புது முகங்கள். சண்டைக்  காட்சிகள், விரசமான ஆடல்,  பாடல்கள், கதைக்கு தொடர் பில்லாத நகைச்சுவைக் காட்சி கள் போன்றவைகள் இல்லாமல்  எடுக்கப்பட்ட படம். மொத்தத்தில் கதை தான் படத்தின் கதாநாயகன். பள்ளி மாணவர்களான சிவன ணைந்தான், சேகர் இருவரின் குறும்பும், சேட்டையுமே திரைக் கதையோடு இணைந்த நகைச் சுவை காட்சிகளாக இயற்கையாக  அமைந்துள்ளது. இருவரும் ரஜினி, கமல் ரசிகர்களாக இருப்பது திரைக்கதையினுடைய காலத்தை உணர்த்துகிறது. (எம்.ஜி.ஆர், சிவாஜி திரையுலகில் கோலோச்சிய காலத்திற்கு பிறகு  ரஜினி, கமல் காலம் வருகிறது).

காய் சுமக்கும் வேலையைச் செய்யும் குடும்பங்கள் வறுமை யிலிருந்து விடுபட முடியாத சூழலில் ஒரு ரூபாய் கூலி உயர்வு  கேட்கிறார்கள். புரோக்கர் கொடுக்க மறுக்கிறார். கனி தலை மையில் வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. வியாபாரி ஒரு ரூபாய்  கூலி உயர்வு அறிவித்த பிறகு தான் காய் சுமக்கும் வேலை தொடர்கிறது.

அடைக்க முடியாத கடன் நகையையும் இருக்கும் ஒரு பசுவையும் விற்ற பிறகும் வறுமையிலிருந்து மீள முடியாத சூழலில் பள்ளி செல்லும் தன் மகன் சிவனணைந்தானை காய்  சுமக்க வலியுறுத்தும் தாய், பள்ளி  ஆண்டு விழாவை தவிர்க்க விரும்பாத சிவனணைந்தான் காய் சுமக்கச் செல்லாமல் பள்ளிக்கு செல்வது, பசியோடு  மீண்டும் காய் சுமக்க செல்லும்  வழியில் ஒரு வாழைத் தோட்டத் தில் வாழைப்பழத்தை தின்றதும் அதற்காக தோட்டக்காரர் அவனை அடித்து துவைப்பதும் துயரமிக்க காட்சி. கிராமங்களில் ஏழை குடும்பங்கள் குறிப்பாக பட்டியலின குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் கூலி வேலைக்குச் செல்வது கிராமங் களில் இப்போதும் குழந்தை கள் உழைப்பு என்ற அவலம்  தொடர்வதை படம் எடுத்துக்காட்டு கிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங் களில் படத்தின் கருவாக சாதியக்  கொடுமை என  அமைந்திருந்தது. வாழை படத்தில் பட்டியலின  மக்கள் மீதான உழைப்புச் சுரண்ட லையே மையமாக வைத்து இயக்குநர் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடித்த  கலைஞர்களும், பின்னணி இசை,  ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், இயக்குனரும் வெகுவாக பாராட்டப்பட வேண்டி யவர்கள்.

அன்றாடம் கூலி வேலைக்குச்  சென்றால்தான் (கூலி வேலை என்றால் கூலி அடிமை என்றார் மார்க்ஸ்)  வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலைமையை ஒழித்திட என்ன தீர்வு?

சிவனணைந்தான் தன் அக்காவிடம் கனியை திருமண செய்து கொள்ளுங்கள் எனக்  கூறுகிறான். அக்கா கனிக்கு  கொடுத்தனுப்பிய மருதாணி யோடு தன்னுடைய அப்பா வைத்திருந்த அரிவாள் சுத்தியல்  நட்சத்திரம் கொண்ட பேட்ஜையும் கொடுக்கிறான். கட்சி, கட்சினு ஓடிட்டு இருந்தவர், இன்னைக்கு உயிரோட இல்ல. ஆனாலும் அவரு என் கூட வாழ்ந்துக்கிட்டு இருக்கார் என்றுதான் நான் இதை கையில் போட்டிருக்கேன் என சிவனணைந்தான் தாய் தன் கையில் பச்சையாக வரையப் பட்டுள்ள அரிவாள் சுத்தியல் சின்னத்தை காட்டுவதும், சிவன ணைந்தான் அந்த சின்னத்தை கனியிடம் கொடுப்பதும் கூலி அடிமைக்கு செங்கொடிதான் தீர்வு என்பதை அழுத்தமாக பறை சாற்றுவதாக படம் அமைந் துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழி யராக உழைப்பாளி மக்களுக்குப்  பணியாற்றுவதை இன்னும் பல்லாயிரக்கணக்கான தோழர் கள் செய்து கொண்டு இருக்கிறார் கள். அவர்கள் யாரும் தங்கள் சொந்த வாழ்வை மேம்படுத்திக் கொள்ள அல்ல, ஒட்டு மொத்த  பாட்டாளி வர்க்கத்தின் உயர்வுக் காக அர்ப்பணித்துக் கொண்டிருக் கிறார்கள். கம்யூனிசம் ஒழிந்து விட்டது என்று என்னதான் முதலாளித்துவ ஊதுகுழல்கள் கூப்பாடு போட்டாலும் அப்பாவின்  செங்கொடி பேட்ஜ் மகளுக்கு கை மாறுவது போல உழைப்பாளி களின் உதிரச் செங்கொடி வாழை யடி வாழையாக புதிய இளம் தலைமுறையை ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிறது என்பதே “வாழையின்” சாரம். 

உச்சக் காட்சி முடிந்த பிறகும்,  படம் பார்க்கும் பெரும்பான்மை யானவர்கள் இருக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அப்படியே உறைந்து போனார்கள். சில வரிகளில் இக்காட்சியை கட்டு ரையில் வடிக்க இயலாது. திரையரங்குக்கு சென்று பார்த்தால் புரியும்.

வாழை திரைப்படம் தமிழ் திரையுலகில் முக்கியமான படைப்பாக திகழ்கிறது. மக்கள்  வாழ்வியலை பேசும் இதை போன்ற படைப்புகளும் முயற்சி களும் தொடர வேண்டும்.

 ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)