articles

img

மேகதாது அணைகட்ட துடிக்கும் கர்நாடகம் துணை போகும் ஒன்றிய அரசு! - சாமி. நடராஜன்

உலக வரலாற்றில் பல நாடுகளுக் கிடையே பாயும் நதிநீர் பிரச்ச னைகள், மாநிலங்களுக்கிடையே பாயும் நதிநீர் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டு, அதற்கான ஆணையங்கள் அமைக்கப்பட்டு இன்று வரை பிரச்சனைகள் ஏற்படாமல் நதிநீரை பங்கிட்டு வருகின்றனர். ஆனால் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை மட்டும் நூற்றாண்டைக் கடந்த பின்பும், மீண்டும் மீண்டும் இரண்டு மாநிலப் பிரச்சனையாக மாற்றப்பட்டு வருவதற்கான அடிப்படைக் காரண மாக அரசியலும், ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருந்த வர்கள், இருப்பவர்களின் ஒரு சார்பு நிலையும் காரணமாக உள்ளது. 1892, 1924, 1974 ஆகிய ஆண்டுகளில் காவிரி நீர் குறித்த ஒப்பந்தங்களையும், இவற்றை பின்பற்றி இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வை உருவாக்கு வதற்காக 26.1990ஆம் ஆண்டு காவிரி   நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர்மன்றம் காவிரி பாசன பகுதிகள் முழுவதையும் பார்வையிட்டு 25.6.1891ல் இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்திற்கு ஆண்டிற்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தர விட்டது.

5.2.2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு ஆண்டிற்கு 192 டி.எம்.சி தண்ணீர்வழங்க உத்தரவிட்டது. ஏற்கனவே இடைக்கால உத்தரவை விட 13 டிஎம்.சி குறைவாக இறுதித் தீர்ப்புவழங்கப்பட்ட நிலையில், இதை ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிட வைப்பதற்கு பல போராட்டங்களை நடத்திய பிறகு 6ஆண்டுகள் கடந்து  19.9.2013ல் ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப் பட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு களை விசாரித்த உச்சநீதிமன்றம் 16.2.2018ல் தனது தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்திற்கு கர்நாட கம் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு அடுத்த 15 நாட்களுக்கு தொடரும் என வழக்கை முடித்து வைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்திட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் கர்நாடக அரசு

1974க்கு பிறகு கர்நாடக அரசு எந்த காலத்திலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக வழங்கியதில்லை. காவிரி நடுவர்மன்ற இடைக்கால உத்தரவுப்படி மாதவாரியாக 205 டி.எம்.சி தண்ணீ ரையோ, இறுதித் தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீரை யோ அல்லது உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி 177.25 டி.எம்.சி. தண்ணீரையோ ஜூன் மாதம் துவங்கி மே மாதம் வரை மாதவாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கியதில்லை. அதிகமாக மழை பெய்து அவர்களால் அணைகளில் தேக்கி வைக்க முடியாத தண்ணீரை ஒரே நேரத்தில் திறப்பார்கள். மேலும் காவிரியில் தமிழகத்தின் பாசன உரிமையை மறுத்து உபரி நீரை பயன்படுத்தும் பகுதியாக தமிழ கத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

1970 முதல் 1960 கால கட்டத்தில் கர்நாடக அரசு ஒன்றிய அரசின் முறைப்படியான எந்த ஒப்புதலும் பெறாமல் காவிரி மற்றும் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் வரும் துணை ஆறுகளில் கபினி அணை, ஹேரங்கி, ஹேமாவதி, ஸ்வர்ணவதி என நீர்தேக்கங்களை கட்டி சுமார் 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் வருவதை தடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த அணைக் கட்டுகளை கட்ட ஒன்றிய அரசின் எந்த அனுமதியும் பெறாமலேயே கர்நாடக அரசின் நிதியிலிருந்தே கட்டினர். மேலும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் போது கர்நாடக பாசனப் பரப்பு 11.20 லட்சம் ஏக்கர். ஆனால் தற்போது 21.71 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகஅரசு. இதற்கு தேவைப் படும் தண்ணீர் 362 டி.எம்.சி. ஆனால் காவிரியில் கர்நாடகத்திற்கான ஒதுக்கீடு 270டி.எம்.சி மட்டுமே. எனவே, கர்நாடக அரசு தீர்ப்பிற்கு மாறாக 410 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு புதிய அணை கட்டிட முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் அடுத்த அணைக் கட்டு தான் மேகதாது.

மேகதாதுவில் கர்நாடகம் தன்னிச்சையாக அணை கட்ட முடியுமா? 5.3.2007இல் காவிரி நடுவர்மன்ற  இறுதித் தீர்ப்பில் காவிரி நதியின் கீழ்ப்படுகையிலுள்ள தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடையில்லாமல் வழங்குவதற்கு, எதிரான எந்த நடவடிக்கையினையும், செயலையும் கர்நாடகம் செய்யக் கூடாது என ஆணையிட்டுள்ளது. மேலும் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் 6ஆவது பிரிவில் “மேல் பாசன மாநிலம், கீழ் பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கி யுள்ள தண்ணீரின் அளவைப் பாதிக்கும் செயலைச் செய்யக் கூடாது. ஆனால் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்து பேசி - ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல்பாசன மாநிலம் தண்ணீர் திறந்து விடும் முறையில் மாறுதல் செய்து கொள்ள லாம்” என தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு கூறுவதைப் போல் காவிரியில் புதிதாக அணைகள் கட்ட அம்மாநில அரசிற்கு எந்த உரிமை யும் வழங்கப்படவில்லை.

மேலும் காவிரி நதிநீர் பாய்வது கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 4 மாநி லங்கள் என்பதையே கர்நாடகம் ஏற்றுக் கொள்ளுவ தில்லை. எனவே, தான் 2.11.1991இல் இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு  “காவிரி நதி கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமான தன்று. இது ஒரு பன்மாநில நதி (Interstate River). எனவே இதன் வழியில் இது ஓடிக்கொண்டே இருக்க  வேண்டும். இதைத் தடுத்து கீழுள்ள பாரம்பரிய உரி மையுடைய மாநிலங்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாது என்று கார்நாடகத்தை எச்சரித்தது. எனவே, கர்நாடக அரசு காவிரி பாயும் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஒப்புதலின்றி எந்த ஒரு அணைக்கட்டை யும் சட்டரீதியாக கட்ட முடியாது. ஆனால் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிலும் மாநில ஆட்சி பொறுப்பிலும் பாஜக  இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சட்டத் திற்குப் புறம்பாக காவிரியில் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு சட்டமன்றத்தில் சுமார் ரூ.9000  கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. பூர்வாங்கப் பணிகளை துவங்கிட முதலில் ரூ.1000 கோடி ஒதுக்கு கிறது. இவை அனைத்தையும் ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.

காவிரியில் கர்நாடகத்தில் உள்ள பெரிய அணைக் கட்டு கிருஷ்ணராஜசாகர் மட்டும்தான். இதன் கொள்ள ளவு 49 டி.எம்.சி. காவிரியில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பினால், அந்த தண்ணீர் வேகமாக மேட்டூர் அணை வந்து சேரும். இதற்கிடை யில் கர்நாடகத்தில் அணை க்கட்டுகள் இல்லை. எனவே தான் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி உபரிநீர் கூட தமிழகம் சென்றுவிடக் கூடாது  என்பதற்காக தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேக தாதுவில் புதிய அணைகட்ட கர்நாடகம் துடிக்கிறது.

ஒன்றிய அரசும்  காவிரி ஆணையமும்  துணை போகலாமா? 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணை யத்தின் பிரதானப்பணி என்பது, தீர்ப்பின்படி ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான தண்ணீரைப் பகிர்ந்து கொள்கிறார்களா? என்பதை கண்காணிப்ப தும், மாத வாரியாக காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறக்கிறதா என்பதையும், அவ்வாறு திறக்கவில்லை யென்றால் அதில் தலையீடு செய்வதும், நீர் பற்றாக்குறை ஏற்படும் போது, சம்மந்தப்பட்ட மாநி லங்களோடு பேசி பற்றாக்குறையை எப்படி பகிர்ந்து கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ அதன்படி எப்படி செயல்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதுதான்.

ஆனால் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேகதாது வில் அணைகட்டுவதற்கான பொருள் குறித்து விவாதிக்க வேண்டுமென்று கேட்ட போதெல்லாம் மறுத்த ஆணையம், தற்போது நடைபெறும் ஆணை யக்கூட்டத்தில் விவாதிப்போம் என அறிவித்தது கடும் கண்டனத்திற்குரியது. (ஜூன் 17 மற்றும் 22இல் நடைபெறுவதாக இருந்த ஆணையக் கூட்டம் ஜூலை 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது) மேகதாது வில் புதிய அணைகட்டுவதற்கு காவிரி நடுவர் மன்ற மோ, உச்சநீதிமன்றமோ அனுமதிக்காத நிலையில், இது குறித்து தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரி யம் எப்படி விவாதிக்க முடியும், அப்படி விவாதித்து முடிவு எடுப்பதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு உண்டா?

எனவே ஒன்றிய பாஜக அரசு  தனது அரசியல் லாபத்திற்காக மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தமிழக விவசாயிகளை வஞ்சித்து கர்நாடகத்திற்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்கிறது. காவிரி மேலாண்மை ஆணை யத்தையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்து கிறது.

மேகதாது அணைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம்

 தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாத்திட தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணைபோகும் ஒன்றிய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்தும் கடந்த 22.06.2020 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் - விவ சாயத் தொழிலாளர்கள் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

தமிழ்நாடு முதல்வர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 23.06.2022 அன்று  நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய  குழு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து நமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எக்காரணம் கொண்டும் காவிரியில் மேகதாதுவில் புதிய அணை  கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என  வலியுறுத்தியுள்ளனர். மேலும் காவிரியில் தமிழ கத்தின் பாசன உரிமையை பாதுகாத்திட, விவசாயி களை திரட்டி ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப் போம். மேகதாதுவில் புதிய அணைகட்டும் முயற்சியை முறியடிப்போம்.

;