articles

img

கம்யூனிஸ்டுகளும் கம்யூன்களும்! - சு. வெங்கடேசன் எம்.பி.

“கம்யூன்” என்ற லத்தீன் சொல்லுக்கு “பொது” என்று பொருள். பொதுவுடமை பேசும்  கொள்கைக்கு கம்யூனிசம் என்று பெயர் உருவானது, இந்த கம்யூன் என்ற வேர்ச்சொல்லில் இருந்து தான். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் உள்ள “கம்யூன்” கள் பற்றி கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமத்துவ கோட்பாட்டை ஏற்ற வர்களின் செயல்பாட்டுக்களமாக கட்சி அலுவலகங்கள் இருந்த போதும் அது தனக்குள் பயிற்றுவிக்கும் களங்களில் ஒன்றாக கம்யூன்கள் அமைந்திருக்கும். கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் ”கம்யூன்” செயல்பாடு மிக முக்கியமான பகுதி. இளந்தோழர்களுக்குத் தோழமையின் அனுபவத்தை உளம் குளிரப் பயிற்றுவிக்கும் இடம் அது. ஒரு தாய் சமைத்த உணவைக்கூட அப்படியே ஊட்டாமல் நன்றாகப் பிசைந்து பிள்ளைகளுக்கு ஊட்டுவதைப்போல கூடி வாழ்தலின் அழகை, சமத்துவத்தின் அனுபவத்தை, தோழமையின் உயர்வை தனது அன்றாட செயல்களின் வழியே ஊட்டிச் செல்லும் இடம் “கம்யூன்”.

பண்பட்டவர்களின் பொதுச் செயல்பாடு

1992ஆம் ஆண்டு எனது இருபத்து இரண்டாவது வயதில் கம்யூன் வாழ்வுக்கு நான் அறிமுகமானேன். மதுரை தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவில் இணைந்த போது அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த கம்யூனில் சேர்ந்தேன். மூத்த தோழர்கள் கே. முத்தையா, ஐ. மாயாண்டி பாரதி ஆகியோர் ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். தோழர் அப்துல் வஹாப் அப்பொழுது தீக்கதிரின் பொதுமேலாளர். கம்யூன் பொறுப்பாளரும் அவர்தான். பணியில் சேர்ந்த முதல்நாள் மதியம் ஒன்றரை மணிக்கு இண்டர்காமில் அழைத்தார். என்னால் அந்த அழைப்பை இன்றளவும் மறக்க முடியவில்லை. தோழர் அப்துல் வஹாப்  அவர்களுக்கு வயது சுமார் எழுபதிருக்கும். “தோழர் சு.வெ. காத்திருக்கிறோம். சாப்பிட வாங்க” என்றார். “என்னை  முதன்முதலில் “தோழர் சு.வெ.” என்று அழைத்தது அவர்தான். கட்சியின் பொறுப்பிலும் வயதிலும் மிகஉயர்ந்த இடத்திலிருக்கும் ஒருவர், அன்றுதான் வந்து சேர்ந்த இளைஞனை இவ்வளவு உயர்வாகவும் அழகாகவும் அழைத்தால் நான் எப்படி நடந்து வருவேன். பறந்து வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.   மரியாதை என்பது பெரியவர்களுக்குச் சிறியவர்கள் தருவது என்று தான் சமூகம் புரிந்துவைத்திருக்கிறது. ஆனால் சிறியவரா, பெரியவரா என்பதல்ல, அது பண்பட்ட மனதின் பொதுச்செயல்பாடு என்பதை இயக்க வாழ்வு தனக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

இயக்கப் பணிக்கான பயிற்சிக் களம்

இவ்வளவு அழகான அழைப்போடுதான் நான் கம்யூனுக்குள் நுழைந்தேன். கம்யூன் என்பது பகுத்துண்ணும் இடமட்டுமல்ல. பகுத்தலின் அரசியலை வாழ்வின் எல்லா இடத்திலும் நிரவிவைக்கும் செயலின் சான்றது. சமத்துவ அரசியலை முன்னெடுக்கும் இந்த இயக்க வாழ்விற்கு ஏற்றவர்களாகத் தலைவர்களையும் தொண்டர்களையும் நாளும் பயிற்றுவிக்கும் களங்களில் ஒன்றாக கம்யூன் இருப்பதை அனுபவித்து அறிந்தேன். சரியாக ஒன்றரை மணிக்குப் போய் சாப்பிடுவது என்பதற்கு என்னைத் தயார்படுத்த முதலில் சிரமப்பட்டேன். ஆனால் இன்று உடன்சாப்பிட யார் வந்துள்ளனர் என்ற ஆச்சரியம் என்னை இண்டர்காம் அழைப்பு இல்லாமலே சாப்பாட்டு அறைக்கு நாள்தோறும் சரியான  நேரத்துக்குச் செல்லவைத்தது. தோழர் கே.எம். அவர்களைப் பார்க்க எழுத்தாளர் சு. சமுத்திரம் வந்திருந்தார். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மாதம் ஐந்து நாட்கள் செம்மலர் பணிக்காக வருவார். அந்த ஐந்து நாட்களும் கம்யூன் உறுப்பினராவார். விருதுநகர் மாவட்ட கட்சி  அலுவலகத்தில் தோழர் எஸ்.ஏ. பெருமாள் அவர்களால் நிர்வகிக்கப்படும் கம்யூனின் பெருமையை வரும் போதெல்லாம் கூறுவார். 

டால்ஸ்டாய் துவங்கி கி.ரா. வரை

அருணன், கந்தர்வன், தமிழ்ச்செல்வன் என படைப்பாளர்களும் தோழர் ஏ. நல்லசிவன் தொடங்கி அர சியல் தலைவர்கள் பலரும் தீக்கதிர் கம்யூனுக்கு வரு வார்கள். வருவோரைப் பொறுத்து அன்றைய உரையாடல் அமையும். இலக்கியவாதிகள் வந்தால் டால்ஸ்டாய் தொடங்கி  கி.ரா. வரை பேசப்படும். கட்சித் தலைவர்கள் வந்தால் அதிகம் பேச்சு இருக்காது. ஆனால் சின்ன சின்னதாய்ச் சில கேள்விகள் என்னை நோக்கி இருக்கும். பெரும்பாலும் புத்தகங்களைப் பற்றியதாக இருக்கும். அதன்பின் அந்தப் புத்தகங்களோடு நாள்கள் நகரும். சற்றும் எதிர்பாராமல் ஒருநாள் கவிஞர் மீரா வந்திருந் தார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஒளிந்து திரிந்த காலம் அது. கவிஞர் வைரமுத்து பாரதியின் வாழ்வை “கவிராஜன் கதை” என்று எழுதியதைப்போல நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றி எழுதப்போகி றேன் என்று ஒருமுறை சொன்னேன். அதிலிருந்து அவர் பார்க்கும் போதெல்லாம் அதைப்பற்றி விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். மீரா ஞானத் தகப்பன் போல. அவரிடம் பொய்சொல்ல முடியாது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற பட்டுக்கோட்டை, செங்கப்படுத்தான்காடு, ராயப்பேட்டை என அழைந்து கொண்டிருந்தேன். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நேரில் அறிந்த, பழகிய பலரிடமும் பேட்டிகளை எடுத்து தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். 1952இல் நடந்த முதல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் மெட்டுக்கட்டி பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த கவிஞன் அவன். அந்த தேர்தலில் வேட்பாள ராக களம் கண்டவர் தோழர் கே. முத்தையா. முதல் தேர்தல் களம் பற்றியும், கம்யூனிஸ்டுகள் தேர்தலுக்குள் வந்த பொழுது நேர்ந்த சம்பவங்களைப் பற்றியும் கே.எம். கூறினார். காங்கிரஸ் வேட்பாளர் நாடிமுத்துப் பிள்ளை பற்றியும், அவர்கள் வாக்காளர்களுக்கு வெற்றிலை - பாக்கு  கொடுத்து வாக்குக் கேட்பதைப் பற்றியும் பாடப்பட்ட பாடலை நினைவுகூர்ந்தார்.

ஜெயகாந்தனை செதுக்கிய கம்யூன்

1950களில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்வும் வரலாறும் அறியப்பட வேண்டிய தேவையிருந்தது. தோழர் கே. முத்தையா எழுதிய ‘உலைக்களம்’, ‘விளைநிலம்’ என்ற இரண்டு நாவல்களும் அக்காலத்தின் பரப்பை எனக்கு அறிமுகப்படுத்தின. நல்ல அறிமுகம் அடுத்ததை நோக்கி நம்மை ஆர்வத்தோடு நகர்த்தும். இந்த நாவல்களும் அப்படித்தான். அந்த காலத்தை பற்றிய மேலதிகத் தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் எழுத்தாளர் ஜெயகாந்தனின் “இலக்கியவாதியின் அரசியல் அனுபவம்” நூலினைப் படிக்க ஆரம்பித்தேன். நான் எதிர்பாராத வேறொரு ஆச்சர்யம் அந்நூலில் எனக்கு காத்திருந்தது. ஆம் 1950களில் ஜனசக்தி நாளிதழ் அலுவலகத்தில் செயல்பட்ட கம்யூன் வாழ்வைப்பற்றி மிக அழகான பதிவினை தோழர் ஜெ.கே. செய்திருப்பார். தனது  பதிமூன்றாவது வயதில் ஜனசக்தி அலுவலகத்தில் செயல்பட்ட கம்யூனில் அவர் இணைகிறார். அது அவரது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பிற்கா லத்தில் தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் கூறி யிருப்பார். “அவ்வளவு சிறுவயதில் குடும்பத்தைப் பிரிந்து கம்யூன் வாழ்வுக்குள் போய்விட்டீர்களே அந்த இளமைக் காலம் எப்படி இருந்தது?” என்று பேட்டி எடுத்தவர் கேட்ட பொழுது “கோகுலத்தில் கிருஷ்ணனைப்போல் நான் மகிழ்ந்து இருந்தேன்”. என்று சொல்லியிருந்தார். கம்யூன் வாழ்க்கைப்பற்றிய ஜே.கே.யின் எழுத்துக்களைப் படித்தால் தான் அவர் சொன்ன உவமையின் முழுமையை நம்மால் உணர முடியும்.

ஜீவா, எம்.ஆர். வெங்கட்ராமன், இஎம்எஸ், ஜோதிபாசு

நாற்பதுக்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் ஒன்றாய்க் கூடி ஒரு குடும்பம் போல் வாழ்க்கை நடத்துகிற ஒரு கம்யூ னுக்குள் 1947ஆம் ஆண்டு தனது பதிமூன்றாவது வயதில் நுழைந்தவர் ஜெயகாந்தன். அவர் எழுதப்படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கம்யூனிலிருந்த இருவர் பொறுப்பாக்கப்பட்டனர். அப்படி பொறுப்பாக்கப்பட்ட மதுரைத் தோழர் நல்லழகின் வாக்கில் இருந்து தொடங்கு கிறது அவரது வாசிப்பு. அங்கு தொடங்கிய அவரது பயணம் தமிழ் இலக்கிய உலகின் உச்சத்தைத் தொட்டது. அன்றைய கம்யூனுக்கு ஜீவானந்தம், எஸ்.ஏ. டாங்கே, இ.எம்.எஸ்., அஜாய் கோஷ், ஜோதிபாசு, பாலதண்டாயுதம், எம்.ஆர். வெங்கட்ராமன் என பலரும் வந்துள்ளனர். எல்லோ ரின் உரையாடலையும் கேட்கும் அரிய வாய்ப்பு ஜே.கே.வுக்கு கிடைத்துள்ளது. அரசியல், இலக்கியம், தத்துவம் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக உரையாடித் திரிகிற இடம் கம்யூன். “தோழர் ஜீவானந்தத்திற்கு மாதச்சம்பளம் 50 ரூபாய்தான். எனக்கும் மாதச்சம்பளம் 50 ரூபாய்தான். கம்யூன் செலவுகளை எல்லோரும் பகிர்ந்துகொள்ள ஒரு நப ருக்கு 37 ரூபாய் வரும். அது போக 13 ரூபாய் கையில் கிடைக்கும்” என்று ஜே.கே. எழுதியிருப்பார். அவர் எழுதிய காலத்திலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின் கம்யூனுக்குள் நான் நுழைந்திருந்தேன். எனது காலத்தில் திருமணம் ஆகாத தோழர்களுக்கு மாத அலவன்ஸ் ரூ 700. நான் மாதத்தின் நடுவில் 16-ஆம் தேதி பணியில் சேர்ந்தேன். எனவே 350 ரூபாய் அலவென்ஸ். அதில் கம்யூன்  செலவுபோக நூற்றி இருபது ரூபாய் பெற்றதாக நினைவு.

சிபிஎம் தலைமை அலுவலக ‘கம்யூன்’

கம்யூனில் இணைந்து முதல் மாததிற்கான ரூபாயை செலுத்தி ஏறக்குறைய முப்பத்தி மூன்று ஆண்டுகளாகி விட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான பின் தில்லியில் உள்ள  கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கும்போது அங்கு இயங்கும் கம்யூனில் ஓரிரு முறை சாப்பிட்டதுண்டு. இன்று ‘நியூஸ் 18’ ஊடகத்தில் தில்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயல்படும் “கம்யூன்” பற்றிய காணொளியைப் பார்த்தேன். மிகச்சிறப்பான காணொளித் தொகுப்பு அது. கம்யூனிஸ்டுகளின் உயரிய பண்பாட்டின் எடுத்துக்காட்டாக இதன் செயல்பாடு விவரிக்கப்பட்டுள்ளது. எளிமை என்பதே  அருகிப்போய்விட்ட அரசியல் சூழலில் எவ்வாறு ஒரு அகில இந்திய கட்சியின் தலைமையகம் தோழமையோடு, உழைக்கும் மக்களின் பண்பாட்டோடு செயல்படுகிறது என்பதற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் தொடங்கி அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர்கள், தலைமையகத்திற்கு அரசியல் பணிகளுக்காக வருபவர்கள், தலைமையக ஊழி யர்கள் எல்லோரும் சமத்துவ உணர்வோடு இணைந்து பய ணிக்கிறார்கள் என்பதற்கான சான்றாக திகழ்கிறது கம்யூன்.

கணக்கோ கனவோ அல்ல; வாழ்க்கை!

ரூ. 12-க்கு எளிய மதிய உணவு. தலைவர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், முழுநேர ஊழியர்கள், பணி யாளர்கள் எல்லோரும் ஒரே மேசையை பகிர்ந்துண்ணும் அழகு. தோழர் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், எம்.ஏ. பேபி போன்றவர்களுக்கு கம்யூனுடன் இளமைக்காலம் தொட்டுத் தொடர்கிற உறவு. மகத்தான தலைவர்கள் இஎம்எஸ், ஜோதிபாசு, இம்பிச்சி பாவா மட்டுமன்றி லாலு பிரசாத் போன்ற இன்றைய அரசியல் ஆளுமைகள் உள்ளிட்டவர்களுக்கு பசியாற்றிய இடம். “கம்யூன் போர்டு” என்பது கம்யூன் அங்கத்தினரின் பெயர்கள் எழுதப்படிருக்கும். அதில் அவர்களின் செலுத்த வேண்டிய தொகை பற்றிய விபரங்களை காரியதரிசி எழுதியிருப்பார்” என்று 1950-களில் செயல்பட்ட கம்யூன் பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியுள்ளார். ‘நியூஸ் 18’ ஊடகக் காணொளி அதே போன்று கம்யூன் போர்டு ஒன்றினைக் காண்பிக்கிறது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி செலுத்தவேண்டிய பாக்கி தொகை ரூ. 132 என்று எழுதப்பட்டுள்ளது. இவை எல்லாம் கணக்குகள் அல்ல, இவை  எல்லாம் கனவுகளும் அல்ல. இவைதான் எங்கள்வாழ்க்கை. ”அதானியும், அம்பானியும் டிரெங்கு பெட்டியில் கருப்பு பணத்தை அள்ளித்தந்து உள்ளார்கள்” என்று குற்றம்சாட்டி முப்பது நாள்களுக்குள் தனது பதவியேற்பு விழாவுக்கு அவர்களை அழைத்து அழகுபார்க்கும் அரசியல் அசிங்கங்களுக்கு மத்தியில் சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்ட இயக்கத்தின் தலைவர்களும் அதன் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம் எங்களின் உணவு மேசையிலிருந்தே தொடங்குகிறது.