புதுவை தியாகிகள்
8 மணி நேர வேலைக்கான உரிமை முழக்கம்
மக்கள் தான் வரலாறுகளை படைக்கிறார்கள். வரலாற்றுப் போக்கில் மாமனிதர்களும், தனிமனித ஆளுமைகளும் உருவாகிறார்கள். கடந்த கால வரலாறுகள் புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கின்றன. அந்த வகையில் வெண்மணி தியாகிகளின் வீர வரலாறு உழைக்கும் மக்களுக்கு உந்து சக்தியாக திகழ்கிறது. புதுச்சேரியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தொழிலாளி வர்க்கம் பெருமைப்படக்கூடிய அடையாளங்களை, பாரம்பரியத்தை கொண்டதாகும். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய இந்தியப் பகுதிகள் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கீழ் நீண்ட காலம் அடிமைப்பட்டு கிடந்தன. ஏகாதிபத்தியங்கள் தங்களுக்குள் உலக சந்தைகளை பங்கிட்டு கொள்வதற்காக முதலாம் உலக மகா யுத்தம் (1914-1918) நடந்து முடிந்தது. சோவியத் புரட்சியின் தாக்கம்! இதே, காலகட்டத்தில் சோவியத் யூனியனில் தோழர் லெனின் தலைமையிலான அக்டோபர் புரட்சி ஜார் மன்னனை வீழ்த்தி சோசலிசத்தை மலரச் செய்தது. இப்புரட்சி காலனிய நாடுகளில் விடுதலைக்காகப் போராடுகிற சக்திகளுக்கு உத்வேகம் அளித்தது. இந்திய விடுதலை இயக்கத்தை உந்தி தள்ளியது. இத்தகைய புறச்சூழல் புதுச்சேரியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரஞ்சு இந்திய பகுதிகளில் விவசாயமும், புராதன தொழில்களும் பிரதானமாக இருந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கப்பட்ட ரோடியர் மில் (AFT), சவானா மில் (சுதேசி மில்) மற்றும் கேப்ளா மில் (ஸ்ரீபாரதி மில்) ஆகியவை மட்டுமே இருந்தன. பஞ்சாலை தொழிலாளி வர்க்கம்தான் சுரண்டலுக்கு எதிராக, 8 மணிநேர வேலை உரிமைக்காக, விடுதலைக்காக போராட வேண்டிய நிலை இருந்தது. சூரிய உதயமும்-மறைவும்.... பஞ்சாலை தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்கு சென்று சூரியன் மறைவிற்கு பின்தான் வீடு திரும்ப முடியும். அன்றாடம் 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. அடிமட்ட கூலி, கடுமையான அடக்குமுறைகள் இருந்தன. இவ்வாறு அடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் இலக்கான தொழிலாளர்கள் மத்தியில் இளைஞர் வ.சுப்பையா செயல்பட்டு வந்தார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க தோழர் அமீர் ஹைதர்கான் பொறுப்பாக்கப்பட்டார். அப்போது சென்னையில் தலைமறை வாக இருந்த தோழர் அமீர் ஹைதர்கானிடம் புதுச்சேரியில் கட்சியை உருவாக்க இளைஞர் சுப்பையாவின் அறிமுகம் கிடைத்தது. சுரண்டலுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதல்படி தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். ரத்தம் தோய்ந்த சாலை! 1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக உள்ளிருப்பு போராட்டம் துவங்கினார்கள். கடும் கோபம் கொண்ட பிரஞ்சு ஏகாதி பத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு ராணுவத்தால் ஆலையை சுற்றி வளைத்தது. ரோடு ரோலரை கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். பலர் கையில் கிடைத்ததை கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். அன்றைய துப்பாக்கி சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை, கால் என உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரியில் பிரதான சாலை ரத்தம் தோய்ந்து சிவப்பேறியிருந்தது. 8 மணி நேர வேலை! புதுச்சேரியில் ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக உலகநாடுகள் பலவும் கண்டனம்செய்தன. பிரஞ்சு நாடாளு மன்றத்தில் கம்யூனிஸ்ட்கள் வலுவான கண்டன குரல் எழுப்பினர். தோழர் சுப்பையா, ஜவஹர்லால் நேருவின் சிபாரிசு கடிதத்துடன் பிரான்சு சென்றார். இந்தப் பின்னணியில் 8 மணிநேர வேலை உரிமை சட்ட மாக்கப்பட்டது. தெற்கு ஆசியக் கண்டத்தில் புதுச்சேரியில் தான் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது. மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகும்.