சின்னியம்பாளையம் தியாகிகள்
1930களில் மில் தொழிலாளிகளின் வாழ்க்கை நிலை மிகவும் கடுமையானதாக இருந்தது. விடியற்காலை 4 மணிக்கு தொடங்கும் வேலை. காலை உணவுக்கு 15 நிமிடம், பகல் உணவுக்கு 30 நிமிடம் மாலை டீ குடிக்க 15 நிமிடம் என மொத்தம் ஒரு மணி நேரம் போக 14 மணி நேர உழைப்பு. பஞ்சாலைகளிலிருந்து சாறுபிழியப்பட்ட சக்கை களாக தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்வார்கள்
லட்சுமி மில் போராட்டம்
1937-இல் பிரசித்தி பெற்ற லட்சுமி மில் போராட்டம் வெடித்தது. அதுவரை போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து வேலைப் பளுவை திணிக்க லட்சுமி மில் நிர்வாகம் முயற்சித்த போது அதற்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம் வெடித்தது. இப்போராட்டத்திற்கு தோழர்கள் பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோர் வழிகாட்டினார்கள். அப்போது நடந்த ஆலை வாயில் கூட்டங்களில் மலர்ந்தது தான் ஜீவாவின், “காலுக்கு செருப்பும் இல்லை கால் வயிற்றுக்கு கூழும் இல்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே பசையற்று போனோமடா” என்ற பாடல். தொழிலாளிகளின் உறுதிமிக்க போராட்டங்களின் காரணமாக லட்சுமி மில் போராட்டம் வெற்றிபெற்றது. கே.ரமணி, எம்.பூபதி, கிருஷ்ணன், கண்ணாக்குட்டி, விருத்தகிரி, பாண்டுரங்கன், மலேசியா ராமையா என பல தலைவர்களை இப்போராட்டங்கள் உருவாக்கின. அவர்களுக்கு ஆற்றல் மிகு துணைவர்களாக சின்னியம்பாளையம் தோழர்கள் விளங்கினார்கள்.
பெண் தொழிலாளிகளின் தீரம்
பஞ்சாலைகளில் ரவுடிகளின் கொட்டம் வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தது. அதன் உச்சமாக ரங்கவிலாஸ் மில்லில் ஒரு மாலைப் பொழுதில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த இரு பெண் தொழிலாளிகள் மேஸ்திரி பொன்னான் மற்றும் அவனது எடுபிடிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு எதிராய் மில்லுக்குள் வைத்து ரவுடிகளை ராஜி என்ற பெண் தொழிலாளியின் தலைமையில் பெண் தொழிலாளர்கள் தாக்கினார்கள். இதில் தலைமை தாங்கிய பீளமேடு ராஜி என்ற அந்த பெண் தொழிலாளியை மேஸ்திரி பொன்னான் உள்ளிட்ட ரவுடிக்கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இச்சம்பவம் தெரிய வந்ததும் சின்னியம்பாளையம் தோழர்கள் ஆவேசமுற்றனர். அக்கிரமம் புரிந்த ரவுடி பொன்னானும், அவனது கூட்டாளிகளும் பிரதான சாலையில் மடக்கப்பட்டனர். இரு தரப்பும் மோதியதில் பொன்னான் படுகாயப்பட்டு வீழ்ந்தான். தோழர்கள் அவ்விடம் விட்டு நகர அடுத்து ரவுடி பொன்னானை சூழ்ந்த பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளிகளின் தர்ம ஆவேசத்தில் சிக்கி அவன் படுகாயமுற்று இறந்து போனான்.
முதலாளிகள் - போலீஸ் கூட்டுச் சதி
இந்நிகழ்வை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பஞ்சாலை முதலாளிகளும், அன்றைய சிங்காநல்லூர் காவல்அமைப்பும் கூட்டுச் சதி செய்து வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் அனுதினமும் ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அணி திரண்டனர். நீதிமன்றமே ஸ்தம்பித்தது. கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற்சங்கமும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மூலம் தோழர்களை விடுவிக்க கடுமையாகப் போராடின. ரவுடி பொன்னானின் மரண வாக்குமூலம் என பஞ்சாலை முதலாளிகளும், காவல் துறையும் ஜோடனை செய்திருந்தது, வலுவாக வேலை செய்தது. கோவை, சென்னை, தில்லி என வழக்கு விசாரணை நடைபெற்று இறுதியில் லண்டன் பிரிவி கவுன்சில் முடிவுக்கு போனது. அங்கே இங்கிலாந்தைச் சார்ந்த உலக புகழ்பெற்ற வழக்கறிஞர் டி.என்.பிரிட் தனது திறமை முழு வதையும் பயன்படுத்தி வாதாடியும் ஏகாதிபத்திய நீதி உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடிய, பெண் தொழிலாளிகள் மீது இழைக்கப் பட்ட வன்முறைக்கு எதிராக போராடிய சின்னியம் பாளையம் தோழர்கள் ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை அளித்து தொழிலாளி வர்க்கத்தை பழி தீர்த்துக் கொண்டது.
‘கண்ணீரைத் துடையுங்கள்’
சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நான்கு தோழர்களும் தங்கள் தலைவர்களை பார்ப்பதையே தங்களது கடைசி ஆசையாகக் கூறினார்கள். தூக்கிலிடுவதற்கு முன்தினம் மாலை தலைவர்களுடனான சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. தோழர்கள் பி.ராமமூர்த்தி, கே.ரமணி, எம்.பூபதி ஆகியோர் கண்களில் கண்ணீர் வழிந்தோட நின்ற பொழுது கட்சிக்கிளைச் செயலாளர் ராமையனின் குரல் கம்பீரமாக முழங்கியது. “ தோழர்களே எங்களது வழிகாட்டி நீங்கள், நீங்களே கலங்கினால் எங்களது கதி என்னாகும்? கூடாது. கண்ணீரை துடையுங்கள். இத்தோடு சரி, இனி எப்போதும் கலங்காதீர்கள்” என தங்களை காண வந்த தலைவர்களுக்கே ஆறுதல் சொன்னார்கள் சின்னியம்பாளையம் தோழர்கள்.
ஒரே சமாதியில்...
“நாங்கள் நாளை காலை மரணத்தை தழுவப் போகிறோம், எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச லட்சியங்களை அழித்துவிட முடியுமா? முடியவே முடியாது. எங்களைப் போன்று ஆயிரமாயிரம் தோழர்கள் முன்னுக்கு வருவார்கள். அவர்களை வளர்த்து ஊக்குவித்து சங்கத்தை பலப்படுத்தும் பணியை நீங்கள் உறுதி குலையாமல் செய்திட வேண்டும், அந்த வாக்குறுதியை எங்களுக்குத் தாருங்கள். தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டிக் காக்க தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையின் அடையாளமாக எங்கள் நால்வரையும் ஒரே சமாதியில் அடக்கம் செய்ய வேண்டும்” என்று தங்களது இறுதி ஆசையினை கூறினார்கள். மறுநாள் 1946ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி காலை 5 மணியளவில் கோவை நகர தொழிலாளர் வர்க்கம் கொந்தளித்தது. சின்னியம்பாளையம் தோழர்களை விடுவிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் சின்னியம்பாளையம் தோழர்கள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். சின்னியம்பாளையம் தோழர்களின் உடல்கள் கோவை தொழிலாளி வர்க்கத்தின் பிரம்மாண்ட அணிவகுப்போடு சின்னியம்பாளையத்தில் ஒரே சமாதியில் புதைக்கப்பட்டன. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையினை பறைசாற்றிய, உலகத் தொழிலாளரே ஒன்று கூடுங்கள் என்ற மாமேதைகள் மார்க்ஸ், ஏங்கெல்ஸின் அறைகூவலை தங்களுடைய வாழ்நாளின் இறுதியிலும் உயிர்ப்போடு ஏற்றுக்கொண்ட உன்னதப் போராளிகள் தான் சின்னியம்பாளையம் தியாகிகள். இன்றைக்கு உழைப்பாளி வர்க்கத்தினை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சீர்குலைக்கும் சக்திகளை அந்நியப்படுத்தி, உழைப்புச் சுரண்ட லுக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டி உறுதிமிக்க போராட்டங்களை மேலும் வலுவாக முன்னெடுத்துச் சென்றிட சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்திவோம்.