articles

img

வாழ்க நீ எம்மான்... .

ஜாமினி ராய், ஏ.டி. வஜூபாயி ஷா உள்ளிட்ட பிரபல இந்திய ஓவியர்கள் மகாத்மா காந்தியை வரைந்து புகழ்பெற்றிருக்கின்றனர்.  தமிழ்நாட்டிலிருந்து  சென்னை ஓவியக்கல்லூரியில் சமகாலத்தில் பயின்று மகாத்மா காந்தியை வரைந்து புகழ்பெற்ற ஓவியர்கள் இருவர். ஒருவர் மூத்த திரைக்கலைஞர் சிவகுமார் ; மற்றொருவர் கே.எம்.ஆதிமூலம். இவ்விருவரின் வரைகோடுகளின் அதிநுட்பம் நம்மை வசீகரிக்கும். தமக்குப் பிடித்த பிரபல ஆளுமைகளுக்கு தாம் வரைந்த காந்தி படத்தை ‘ஃபிரேம்’ செய்து வழங்குவது சிவகுமார் அவர்களின் தலையாய பண்பு.  காந்தியைப் பற்றிய அவரது தூரிகைச் சித்திரமும் சொற் சித்திரமும் இங்கே:

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததும் நாட்டை சுத்திப்பார்க்கணும்னு காந்தி ஆசைப்பட்டாரு.

இந்தியாவின் நீளம் 1,900 மைல்கள். அகலம் 1,200 மைல்கள்.மொத்த நாட்டையும் ரயில்ல மூணாம் வகுப்பு பெட்டில பிரயாணம் செஞ்சு பாக்கறதுன்னு புறப்பட்டாரு.ஒரு நாள் மதுரைக்கு ரயில்லபோறாரு. திண்டுக்கல் தாண்டி சின்னாளப்பட்டி பக்கம் ரயில் போகும் போதும் வழில நின்னுது.வயலில் வேலை செய்யற ஆளுகளைப்பாத்தாரு. தலையில துண்டு, இடுப்புல கோவணம். ‘ஏப்பா இதுதான்உங்க உடையா?’ன்னு கேட்டாரு.

‘எங்க சம்பாத்தியத்துக்கு இதுதான் போட முடியும்!’னாங்க.மதுரையில ராத்திரி அவரால தூங்க முடியலே. இரவு முழுக்க யோசனையிலேயே படுத்திருந்தாரு.மறுநாள் காலையில இடுப்புல 4 முழ வேட்டி- தோள்ல ஒரு துண்டு.

‘என்ன காந்தி?’

‘என் நாட்டு மக்களுக்கு முழுமையான உடை கிடைக்கிற வரைக்கும்இனி இதுதான் என் உடை!’ன்னாரு. தொடக்கக் காலத்தில நாடுபிரிவினை பற்றி ஜின்னா நினைத்ததே இல்லை. பின்னால 6 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாம் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று கோரிக்கை வச்சாரு. பிரிட்டீஷ்காரன் இருக்கும்போதே நாட்டைப் பிரிக்கணும்னு நெனைச்சாரு. ஆனா இந்தியாவைப் பிரிப்பதுஎன் உடம்பிலிருந்து உயிரைப் பிரிப்பது போன்றதுன்னு மறுத்தார் காந்தி.

விதி வசமாக நாடு பிரிக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு சுதந்திரம். ஆகஸ்ட் 15 இந்தியாவுக்கு சுதந்திரம். -அறிவிச்சவுடனே ஒண்ணரைக்கோடி மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி இந்துக்களும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை நோக்கி முஸ்லிம்களும் 57 மைல் நடந்து போய் மோதிக் கொண்டார்கள்.

‘இதற்காகவா அஹிம்சையைப் போதித்தேன்?’ என்று நொறுங்கிப் போனார் காந்தி.

தீண்டாமையை எதிர்த்து, இனக்கலவரத்தை எதிர்த்துச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். பிரிவினை வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார்.

இந்தியாவில் 2,089 நாள்சிறைவாசம்; தென்னாப்பிரிக்காவுல 249 நாள் சிறை வாசம் இருந்தும் மக்களைத் திருத்த முடியவில்லை. இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலாகவோ, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஆகவோ, ராஜதந்திரியாகவோ மக்கள் காந்தியைப் பார்க்கவில்லை.

புத்தராக, ஏசுவாக காந்தியைப் பார்த்தார்கள்.

அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆனால், அவர்உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருந்தும் அந்த 79 வயசுக் கிழவர் காலில் உலகமே வீழ்ந்து கிடந்ததால்தான் - நம் பாரதி பாடினான்...

‘வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்; தாழ்வுற்று வறுமை மிஞ்சி -விடுதலை தவறிக் கெட்டு- பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா - நீ வாழ்க!’

 கட்டுரையாளர் : திரைக் கலைஞர் சிவக்குமார்

;