articles

img

நாட்டுப் பற்று கொண்ட அனைவருக்கும் இது ஒரு சவால்...!

நாட்டுப் பற்று கொண்ட அனைவருக்கும் இது ஒரு சவால்...!

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க் (Rashtriya Swayamsewak Sangh) என்னும் அமைப்பின் மிகவும் முக்கியமான சித்தாந்தத்தின் மூளையாகச் செயல்பட்ட, அந்த அமைப்பின் சுப்ரீம் தலைவராகவும், அந்த அமைப்பின் இரண்டாவது தலைவராகவும் இருந்த மாதவ் சதாசிவ கோல்வால்கர் என்பவர், அந்த அமைப்பில் “குருஜி” என அழைக்கப்பட்டார். 1938இல் அவர் 77 பக்கங்கள் கொண்ட, “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்” (“We or Our Nationhood defined”) எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது 1939 இல் பிரசுரமானது. பின்னர் அது சற்றே பூசி மெழுகப்பட்ட வடிவத்தில் 1947இல் வெளியிடப்பட்டது.

இதன் ஒரிஜினல் பிரதிகளை எவரும் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது. காவிப் படையினரின் புத்தக அலமாரிகளில் வெளிப்படையாக அவை இருக்காது. இதற்கு மாறாக, கோல்வால்கர் பிற்காலத்தில் எழுதிய சிந்தனை துளிகள் (Bunch of Thoughts) என்னும் புத்தகத்தையே அவர்கள் பரவலாக விநியோகித்தார்கள். எனினும், 1990இல், நாட்டில் வெவ்வேறு சமூகத்தினர் மத்தியில் மதவெறி மற்றும் மதவெறி பாசிச சிந்தனை மிக வேகமாக அதிகரித்துக்கொண்டிருந்த பின்னணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, 1939இல் வெளியிடப்பட்ட கோல்வால்கரின் புத்தகத்தின் நகலை எப்படியோ பெற்று, அதனை நன்கு ஆய்வு செய்து, அதில் பொதிந்திருந்த மதவெறி மற்றும் மதவெறி பாசிச சித்தாந்தங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் ஆர்எஸ்எஸ்-இன் மதவெறி சித்தாந்தம் தொடர்பாக எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார். இவர் எழுதிய கட்டுரைகளில் கோல்வால்கர் கூறியிருப்பதை இவர் மேற்கோள் காட்டியதற்குப் பின்னர்தான், அவற்றின் அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்கள் முடுக்கிவிடப்பட்டன. இவை ஆர்எஸ்எஸ் கூடாரத்திற்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தின. இந்து ராஷ்ட்ரம் என்பதைப் பொறுத்தவரை, “குரு” கோல்வால்கர் கூறிய அனைத்து வரிகளும் ஆர்எஸ்எஸ் கூடாரத்தினருக்கு மிகவும் புனிதமானவைகளாகும், அவற்றுக்கு எதிராக எவரொருவரும் எவ்விதமான கேள்வியும் கேட்க மாட்டார்கள். நாம் அல்லது வரையறுக்கப்பட்ட ‘நம் தேசம்’ என்னும் அந்தப் புத்தகத்தில் பாசிச அடிப்படையில் பொதிந்துள்ள இந்துத்துவா சித்தாந்தத்தை எவரொருவரும் தெளிவாகப் பற்றிக்கொள்ள முடியும்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி, காவிப் படையினர் மத்தியில் “குருஜி”-யின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் மட்டுமல்ல, அவற்றின் அடிப்படையில் அவர்களுடைய பாசிச இந்து ராஷ்ட்ரத்தை எய்துவதற்கான ஒரு நிறுவனத்தையும் நிறுவுவதற்கு இட்டுச் சென்றது என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கோல்வால்கரால் 1939இல் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம் சாதாரணமான கல்வி கற்பிக்கும் புத்தகமாக மட்டுமல்லாமல், அவற்றில் கூறப்பட்டுள்ள மூர்க்கத்தனமான, பாசிச மதவெறி சிந்தனைகள் நாட்டின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிமை சமூகத்தின் விழுமியங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கின. இந்தப் புத்தகத்தின் உண்மை சொரூபத்தை சீத்தாராம் யெச்சூரி வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததன் காரணமாக சங் பரிவாரக் கும்பல் சீத்தாராம் யெச்சூரிக்கு எதிராக ஆத்திரமூட்டும் விதத்தில் கருத்துக்கள் கூறியதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

சீத்தாராமன் கருத்துக்கள், ‘கேஜிபி - பாணி’ தவறான தகவல் (KGB-type disinformation) என்றும், “குருஜி” கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் கூறி தப்பித்துக்கொள்ள முயன்றனர். இரண்டாவதாக, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் என்னும் அந்தப் புத்தகமே குருஜியால் எழுதப்பட்டதல்ல என்றும், ஜி.டி. சாவர்கர் என்பவர் மராத்தியில் எழுதியதன் மொழிபெயர்ப்பு மட்டுமே என்றும் கூறினர். மூன்றாவதாக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், இதில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பவை குருஜியின் சிந்தனைகளுடன் ஒட்டுமொத்தத்தில் முரணானவை என்றும் கூறி வருகிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில்தான் ஃப்ரண்ட்லைன் ஏடு, சீத்தாராம் யெச்சூரியிடம், 1989இல் வெளியிட்ட புத்தகத்தில் காணப்படும் கோல்வால்கரின் சிந்தனைகள், இப்போது இந்து ராஷ்ட்ரம் அமைப்பதற்கான அவர்களுடைய செயல்பாடுகளுடன் எந்த அளவிற்கு தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன என்று ஆழமான முறையில் ஆய்வு செய்து, அளித்திடுமாறு கேட்டுக்கொண்டது. அது 1993 மார்ச் 12, ‘ஃப்ரண்ட்லைன்’ இதழில், வெளியிடப்பட்டது. சீத்தாராம் யெச்சூரியின் இந்த முக்கியமான பங்களிப்பினை, ‘ஃப்ரண்ட்லைன்’ வெளியீடாக, ஒரு விரிவான வடிவத்தில் ‘இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ எனும் தலைப்பில் வெளியிட்டிருக்கிறோம். காவிப்படையினரின் இந்து ராஷ்ட்ரம் மற்றும் இந்துத்துவா சித்தாந்தம் ஆகியவற்றின் உண்மையான சித்தாந்த அடிப்படையை உலகின் பல பகுதிகளிலும் உள்ள வாசகர்கள் புரிந்துகொள்ள இது உதவிடும்.

உலக சிவப்பு புத்தக தினம் (Red Book Day) பிப்ரவரி 21 (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லெப்ட் வேர்டு புத்தக நிறுவனம் இணைந்து நாடு முழுவதும், கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய “இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ எனும் நூலை வாசிக்கும் இயக்கம் நடைபெறுகிறது. தமிழில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள இந்த நூலில், 1993 இல் ப்ரண்ட்லைன் ஏட்டின் அன்றைய ஆசிரியர், இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் எழுதியுள்ள அறிமுக குறிப்பு இது.