எளிமைக்கு இலக்கணம் எழுதிய முதல்வர் - அ.அன்வர் உசேன்
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினராகவும் 10 ஆண்டுகள் திரிபுரா முதல்வராகவும் இருந்த நிருபன் சக்கரவர்த்தி 1905ஆம் ஆண்டு இன் றைய வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்கு அருகில் பிறந் தார். டாக்கா பல்கலைக் கழ கத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது 1920களில் விடு தலைப் போராட்டத்தில் இணைந்தார். முதுகலைப் பட்டம் படிக்க கல்கத்தா வந்த அவர் அங்கு கம்யூனிஸ்ட் அரசியலில் ஈர்க்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பி... மார்க்சியம் நோக்கிய அவரது பயணம் யாருடைய செல்வாக்கும் வழிகாட்டுதலும் இல்லாமல் கம்யூனிஸ்ட் ஆவணங்களை கற்றதன் மூலம் பரிணமித்தது. 1934ஆம் ஆண்டு அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியை ரகசியமாக உருவாக்கியதில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். 1937ஆம் ஆண்டு ஒன்றுபட்ட வங்காள பிரிவின் கட்சி செயலாளராக உயர்ந்தார். பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட அவர் ஹிஜ்லி சிறையிலிருந்து தப்பியது அந்த கால கட்டத்தில் வங்காளம் முழுவதும் பேசு பொருளானது. அவர் சிறந்த பத்திரிகையாளராகவும் மிளிர்ந்தார். பத்திரிகையாசிரியர் முதலில் ஆனந்த பஜார் பத்திரிகாவில் துணை ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். அந்த பத்திரிகை அனுபவம் மூலம் “ஸ்வதினதா” எனும் வங்காள மொழி பத்திரிகையை வெளிக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றினார். பல தோழர்களுக்கு பத்திரிகை நடத்தும் கலையைக் கற்றும் கொடுத்தார். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தலைமறைவாக இருந்து கொண்டே அனைத்து அமைப்பு பணிகளையும் திறம்பட நடத்தினார்.
மரணத்தின் வாயிலில்...
விடுதலைக்கு பின்னர் காங்கிரஸ் குண்டர்கள் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அவர் இறந்து விட்டதாகக் கருதி கட்சி அலுவலகத்தின் வாயிலில் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். நீண்டநாள் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றார். மரணத்தின் வாயிலுக்கு சென்று நிருபன் திரும்பினார் எனில் மிகை அல்ல. திரிபுராவில்... திரிபுராவில் கட்சி தடைசெய்யப்பட்ட காலத்தில் காங்கிரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக கட்சியும் மக்க ளும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது 1950இல் கட்சி அவரை திரிபுராவுக்கு செல்ல பணித்தது. அன்றுமுதல் திரிபுரா அவரது சொந்த மண்ணாக மாறியது. கட்சியையும் இடது முன்னணியையும் ஜனநாயக இயக்கத்தையும் திரிபுராவில் உருவாக்கியதில் அவரது பங்கு முதன்மையானது. 1967 முதல் 1977 வரை திரிபுரா மாநிலக் குழுச் செயலாளராக திறம்படச் செயல்பட்டார். 1972ஆம் ஆண்டு மதுரை மாநாட்டில் மத்தியக் குழுவுக்கும் 1984ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மாநில முதல்வராக...
1978 முதல் 1988 வரை திரிபுரா முதல்வராக திரிபுராவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். காங்கிரசின் முறைகேடுகள் காரணமாக 1988இல் இடது முன்னணி தோல்வி அடைந்தது. அப்பொழுது அவர் மார்க்சிய நூல்களும் துணிகளும் அடங்கிய ஒரு தகரப் பெட்டியுடன் முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேறியது இந்தியா முழுதும் பேசு பொருளானது. இந்தியன் எக்ஸ்பிரஸ்/ தினமணி உட்பட பல பத்திரிகைகள் அவரது எளிமையை பாராட்டி தலை யங்கங்கள் எழுதின. அப்பொழுது தமிழ்நாட்டுக்கு கட்சி கூட்டங்களில் பேச வந்த அவரை இங்குள்ள பல இளைஞர்கள் சந்தித்து அவரது எளிமையைப் பாராட்டி தமது கையெழுத்தை ரத்தத்தில் போட்டுத் தந்தனர். நிருபன் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது பிரதமரை சந்திக்க தில்லி சென்றார். விமான நிலையத்திலிருந்து காரில் அவரது செயலாளர் சங்கரனுடன் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு நல்ல சட்டை ஏதாவது கடையில் கிடைக்குமா என கேட்டார். ஆச்சர்யமடைந்த அவரது செயலாளர் நீங்கள் வெளியில் ஆடம்பரமான சட்டை வாங்கும் பழக்கம் உள்ளவர் இல்லையே என வினவ தனது கார் ஓட்டுநர் மகனின் பிறந்தநாளுக்காக சட்டை வேண்டும் என நிருபன் கூறினாராம்.
18 ஆண்டு சிறைவாசம் தன் வாழ்நாளில் 18 ஆண்டுகள் சிறையில் இருந்தார் தோழர் நிருபன் அவர்கள். அதில் 18 மாதங்கள் அவசரநிலை காலத்தின் பொழுது வேலூர் சிறைவாசமும் அடங்கும். பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்வும் மேற்கொண்டார். மூன்றாவது முறையாக இடது முன்னணி அரசாங்கம் 1993இல் அமைந்த பொழுது அவர் திட்டக்குழுவின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பல அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்பும் நிருபன் கொண்டிருந்தாலும் 1993க்கு பிறகு கட்சியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சிக்கு எதிராக பேட்டிகள் தருவது, எழுதுவது என கட்சியின் கட்டுப்பாடுகளை மீறினார். முதலாளித்துவ பத்திரிகைகள் இந்த சூழலைப் பயன்படுத்தி கட்சியை சிறுமைப்படுத்த முயன்றன.
அப்பொழுது கட்சி யின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் சுர்ஜித் உட்பட பல தலைவர்களும் அவரது தவறை சுட்டிக்காட்டி அவருக்கு புரிதல் உருவாக்க முயன்றனர். ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராக வீணானது. எனவே வேறு வழியின்றி அவர் 1995ஆம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 2004ஆம் ஆண்டு அவர் உடல்நிலை மோசமான பொழுது கல்கத்தாவுக்கு சிகிச்சைக்காக கூட்டி வரப்பட்டார். அப்பொழுது கடந்த கால சேவையை கணக்கில் கொண்டு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தனது 99ஆவது வயதில் நிருபன் காலமானார்.