articles

img

அடக்குமுறைகளும் - சாதனைகளும் பின்னிப் பிணைந்தவை - பி.சம்பத்

அடக்குமுறைகளும் - சாதனைகளும் பின்னிப் பிணைந்தவை - பி.சம்பத்

இந்திய விடுதலையில் மகத்தான பங்கு, மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம், தாய்மொழிக் கல்வி, நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழிலாளர்களின் கூலிப் போராட் டங்கள் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் சாதனை கள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு சாதித்தவை. தியாகங்களின்  வரலாற்று ஆவணம் 1956 ஏப்ரல் 19-26 நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நான்காவது அகில இந்திய மாநாட்டில் 407 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களின் சிறைக்காலம் மொத்தமாக 1344 ஆண்டுகள் - அதாவது, ஒவ்வொரு பிரதிநிதியும் சராசரியாக 3  ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தனர். இவர்க ளின் தலைமறைவு காலம் 1021 ஆண்டுகள் - சரா சரியாக ஒவ்வொருவரும் இரண்டரை ஆண்டுகள் தலைமறைவில் வாழ்ந்தனர். கம்யூனிஸ்ட்டுகளின் தியாகத்திற்கு வேறு எந்த அரசியல் இயக்கமும் ஈடு கொடுக்க முடியாது என்பதே இவ்விவரம் பிரகட னப்படுத்தும் உண்மையாகும். உழைப்பாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் விடுதலைக்குப் பிறகு தொழிலாளி வர்க்கத்தின் நிலை முன்னேற்றம் பெற ஏஐடியுசி மற்றும் சிஐடியு  தலைமையில் ஏராளமான போராட்டங்கள் நடத்தப் பட்டன.

அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, வீட்டுவாட கைப்படி, நகர ஈட்டுப்படி, ஓய்வூதியம், சரண்டர்  லீவு, மருத்துவச் செலவுகள், பெண் தொழிலாளர்க ளுக்கு பேறுகாலச் சலுகைகள் போன்ற உரிமைகள் கிடைத்ததில் இத்தொழிற்சங்கங்களின் பங்கு மிகப்பெரியது. இதற்காக கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களும், சந்தித்த அடக்குமுறைகளும் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் தடம் பதித்துள்ளன. இன்று தாராளமயக் கொள்கைகளால் இந்த உரி மைகள் படிப்படியாகப் பறிபோவதை காண்கிறோம். உலகளவில் சோசலிச சக்திகளின் பின்னடைவும், வலதுசாரி சக்திகளின் வளர்ச்சியும் இந்தியாவில் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளன. வலதுசாரி சங்பரிவார் வளர்ச்சி மற்றும் இடதுசாரி இயக்க பின்னடைவின் பின்னணியில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. தன் மீதான அரசியல், சித்தாந்த, ஸ்தாபன ரீதியான தாக்குதல்க ளை எதிர்கொண்டு கொண்டே தொழிலாளி வர்க்க உரிமைகளை நிலைநாட்ட கம்யூனிஸ்ட் இயக் கத்தின் போராட்டம் தொடர்கிறது. அடக்குமுறையின்  தொடர் அத்தியாயங்கள் 1963 இந்திய-சீன எல்லைப் பிரச்சனையின்போது 800க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஊழி யர்களும் ஆண்டுக்கணக்கில் சிறையில் வைக்கப் பட்டனர். 1963ல் கைது செய்யப்பட்ட தோழர் பி.டி.ரணதிவே 1965இல் தான் விடுதலை செய்யப்பட்டார். தொழிலாளி வர்க்கத்தின் பிரதான தலைவராக இருந்த அவர் மீதான இந்திய அரசின் வன்மத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

1964இல் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் கம்யூனிஸ்ட்டுகள் (மார்க்சிஸ்ட்டுகள்) கைது  செய்யப்பட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை வலி யுறுத்தியதற்காக இக்கைது நடவடிக்கைகள் காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்டன. 1967: மக்களின்  ஆதரவு பெருகிய காலம் 1967 பொதுத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்தன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அணிகள் அதிகாரம் பெற்றன. தமிழகத்தில் சிபிஐ(எம்) - திமுக கூட்டணி யில் திமுக மாநில அரசு அமைத்தது. 22 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ(எம்) 11 தொகுதிக ளில் வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் பெரும் எதிர்க் கட்சியாக அமர்ந்தது. மார்க்சிஸ்ட்டுகள் மீது அடக்கு முறை தொடர்ந்தபோதும் மக்களின் அங்கீகாரம் பெற்று சாதனை படைப்பதை ஆளும் வர்க்கங்களா லும், காங்கிரஸ் கட்சியாலும் தடுக்க முடியவில்லை. இடதுசாரி அரசுகளின்  முன்மாதிரி ஆட்சி முறை மேற்குவங்கத்தில் அஜாய் முகர்ஜி முதலமைச்ச ராகவும், தோழர் ஜோதிபாசு உள்துறை அமைச்சரா கவும் பொறுப்பேற்றனர். ஜோதிபாசு தொழிலா ளர்களின் அமைதியான போராட்டங்களில் காவல் துறை அனாவசியமாகத் தலையிடக்கூடாது - புகார்க ளோ, வன்முறைக்கான சூழலோ இருந்தாலன்றி காவல்துறைக்கு வேலை இல்லை என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால் தொழி லாளர்களின் பல போராட்டங்கள் வெற்றி பெற்றன.  முதலாளிகள் அழைத்து காவல்துறை உடனடியாக செல்லும் நிலை அங்கு இல்லை. கேரளத்தில் 1957இல் இ.எம்.எஸ். தலைமையி லான முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையும் இதே போன்ற காவல்துறை கொள்கையை அமல்படுத்தி யது. 1958ல் இந்தியாவிற்கே முன்னுதாரணமான குறைந்தபட்ச கூலிச் சட்டமும், குத்தகை விவசாயிக ளின் பாதுகாப்புச் சட்டமும் நிறைவேற்றப்பட்டு நிலத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது. அரைப் பாசிச பயங்கரத்தின் காலம் 1971 தேர்தலில் வங்கதேச விடுதலைப் போருக்கு இந்தியா அளித்த உதவியால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்து பெரும் வெற்றி பெற்றது. ஆயினும், மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றது. ஆத்திரமடைந்த காங்கி ரஸ் மத்திய அரசு மேற்குவங்க அரசை பதவி நீக்கம்  செய்து, வன்முறை-மோசடி தேர்தல் நடத்தி அதிகா ரம் பெற்றது. சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் அரசின் அடக்குமுறைகளை “அரைப் பாசிச பயங்கரம்” என கட்சி விமர்சித்தது. இளைஞர் காங்கிரசைச் சார்ந்தவர்கள் ஏராளமான மார்க்சிஸ்ட் ஊழியர்களைப் படுகொலை செய்ததோடு ஆயி ரக்கணக்கானோரை குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தினர். அவசர நிலையும் மக்கள் எதிர்ப்பும் 1975இல் பிரதமர் இந்திரா அவசர கால நிலை பிரகடனம் செய்தார்.

சிபிஐ(எம்) ஊழியர்கள் மட்டு மல்ல, முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்களும், ஊழியர்களும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மக்களின் போராடும் உரிமை கள் - ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. இதை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் வலுவான மக்கள் இயக்கம் உருவா னது. பல எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. அவசரகால நிலைக்கு எதி ராக அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் இயக்கம் தீவிர வடிவம் எடுத்தது. ஜனநாயகத்திற்கான இந்த போராட்டத்தில் சிபிஐ(எம்) தனித்து ஒத்துழைத்தது. நாடு தழுவிய அளவில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மாநில அரசு செயல்பட்ட நிலையில் இங்கு மட்டுமே நிலைமை வித்தியாசமானதாக இருந்தது. ஜனநாயக உரிமைகள் அனுமதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம்  அப்போது திகழ்ந்தது. இதைப் பொறுத்துக் கொள்ளாத காங்கிரஸின் மத்திய அரசு 1976இல் திமுக அரசை சட்டவிரோதமாக கலைத்தது. இதன் பிறகு,  இங்கும் திமுக மற்றும் எதிர்க்கட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் தோல்வியும்  ஜனதா அரசும் 1976இல் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை இந்திரா அரசு தள்ளிவைத்தது. இதற்கு எதிராக ஜனதா  கட்சி மற்றும் சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளின் மகத் தான மக்கள் இயக்கங்கள் ஒடுக்குமுறைகளை மீறி பொங்கி எழுந்தன. வேறு வழியின்றி 1977இல் தேர்தல் நடத்த இணங்கிய இந்திரா அரசு வரலாற்றில் முதல் தடவையாக மத்திய அதிகாரத்தை இழந்தது. ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் முதல் பெரும் கட்சி யாக உருவெடுத்தது.

சிபிஐ(எம்) மேற்குவங்கம், கேரளா உள்பட கணிசமான தொகுதிகளை கைப்பற்றியது. ஜனதா கட்சியும் வர்க்க அடிப்படையில் ஒரு பெரு முதலாளித்துவ ஆதரவு கட்சியே என சிபிஐ(எம்) நிர்ண யித்திருந்தது. எனினும், அவசர கால நிலையை எதிர்த்துப் போராடிய பின்னணியிலும் - ஜனநாயக உரிமைகளை மீட்டுத் தருவது என்ற நிபந்தனை யிலும் ஜனதா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தர சிபிஐ(எம்) முடிவு செய்தது. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி அரசு பதவியேற்றது. “நிஜக் குதிரை அல்ல” ஜனதா அரசு ஒரு பெரு முதலாளித்துவ ஆதரவு அரசு என்ற முறையில் அதன் பொருளாதாரக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் ஜனதா கட்சிக்குள் ஜன சங்கத்திற்கு கடும் எதிர்ப்பு உருவானது.

அக்கட்சி வகுப்புவாத நடவடிக்கைகளை தூண்டுவதற்கு அரசு நிர்வா கத்தை பயன்படுத்திக் கொண்டது. ஜனசங்கம், ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக உறுதியான நடவடிக்கை யை ஜனதா தலைமை எடுக்காத பின்னணியிலும் அதன் தொழிலாளி வர்க்க எதிர்ப்பு நிலைக்காகவும் சிபிஐ(எம்) ஜனதா கட்சி அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றது. ஜனதா அரசு வீழ்ச்சியால் ஆத்திரமடைந்த மொரார்ஜி தேசாய் “மண் குதிரையை நம்பி ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதாக” ஆதங்கத்தை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த சிபிஐ(எம்) தலைவர் தோழர் இ.எம்.எஸ். “பெரு முதலாளித்துவவாதிகள் சவாரி செய்வதற்கு நாங்கள் ஒன்றும் நிஜ குதிரை அல்ல” என கடுமையா கச் சாடினார். வகுப்புவாதத்திற்கும் பெருமுதலா ளித்துவத்திற்கும் ஆதரவாக சிபிஐ(எம்) ஒருபோதும் துணைபோகாது என உறுதிபடத் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்விற்கு பிறகும் சிபிஐ(எம்) மீது அடக்கு முறைகள் மட்டுமல்ல, அவற்றை எதிர்கொண்டு அதன் சாதனைகளும் தொடரவே செய்தன.