வீரம், திறமை, கொள்கைப்பற்று - ஜூடோ கே.கே. ரத்தினம் - மயிலை பாலு
படப்பிடிப்புத் தளத்திலும் கம்யூ னிஸ்ட் கட்சி கொடியுடன் பய ணித்த ஜூடோ கே.கே. ரத்தினம், இந்திய திரைத்துறையில் முன்னணி சண்டைக்காட்சி இயக்குநர். 1,200க்கும் அதிகமான படங்களில் சண்டைக்காட்சி கள் அமைத்து கின்னஸ் சாதனை படைத்த வர். ரஜினிகாந்தின் 46 படங்களுக்கும், கன்னட நடிகர் ராஜ்குமாரின் 52 படங்க ளுக்கும் சண்டைக்காட்சிகள் அமைத்தார். 1930இல் குடியாத்தத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ரத்தினம், சிறு வயதி லேயே மில் தொழிலாளியாக மாறினார். சிலம்பம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்று குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்றார். தொழிலாளர் உரிமை களுக்காக போராடி மனைவி கோவிந்தம் மாளுடன் சிறை சென்றார்.
சிறையில் பிறந்த மகளுக்கு “சிறைவாணி” என பெயரிட்டு நெஞ்சுரம் காட்டினார். குடியாத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வி.கே. கோதண்டராமன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முக்தா சீனிவாசனின் ‘தாமரைக்குளம்’ படத்தில் நடித்ததுடன் தொடங்கிய பயணம், சேலம் மாடர்ன் தியேட்டரில் “கொஞ்சும் குமரி” படத்தில் சண்டைக்காட்சி இயக்குநராக மாறியது. ஜூடோ எனும் தற்காப்புக் கலையை திரைப்படங்களில் முதன்முதலில் அறி முகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. கைக்குட்டை கூட சண்டைக்கு பயன் படும் விதத்தில் புதுமையான காட்சிகளை உருவாக்கினார். தமிழக அரசின் கலை மாமணி விருது, சங்கரதாஸ் சுவாமிகள் விருது பெற்றவர்.
1960களில் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சண்டைப் பயிற்சி கலைஞர்களை அணிதிரட்டி சென்னை யில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். எம்.பி. சீனிவாசன், நிமாய் கோஷ் ஆகியோருடன் இணைந்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (ஃபெப்சி) உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார். விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார், ஃபெப்சி விஜயன் போன்றோரின் ஆசா னாக விளங்கிய ரத்தினம், தனது மூன்று மகன்களையும் திரைத்துறையில் நிலை நிறுத்தினார். இரண்டு பேர் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகவும், ஒருவர் ஒளிப்பதிவாளராகவும் உருவாகினர்.
1950களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், 1964இல் கட்சி பிளவின்போது கொள்கைத் தெளிவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நின்றார். திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரில் ‘லெனின் திருமண மண்டபம்’ கட்டினார். திரைப்பட உலகில் பிரபலமான சண்டைக்காட்சி அமைப்பாளராக இருந்த போதும், ரத்தினம் எப்போதும் தனது அரசியல் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடித்தார். சண்டைக்காட்சிகளில் புதுமைகளை புகுத்தியதோடு மட்டுமல்லா மல், சண்டை கலைஞர்களின் உரிமைக ளுக்காகவும் குரல் கொடுத்தார். செய்யும் தொழிலில் தரம் காப்பது மட்டுமின்றி, கொள்கைகளிலும் விட்டுக் கொடுக்காத உறுதியைக் காட்டினார்.
பல முக்கிய நடிகர்களுடன் பணியாற்றிய போதும், எம்ஜிஆருடன் ஒருபோதும் பணி யாற்றாதது அவரது அரசியல் நிலைப் பாட்டைக் காட்டுகிறது. “அவர் திமுககாரர்; நான் கம்யூனிஸ்ட். என்னை எப்படி அவர் கூப்பிடுவார்?” என்று வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் இருந்தார். 80 ஆம் வயதில் திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும், கம்யூ னிஸ்ட் இயக்கத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அவரது வீட்டில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படங்கள் தொடர்ந்து மரியாதையுடன் வைக்கப்பட்டிருந்தன. சிநேகிதர்களிடம் கம்யூனிச நூல்களை வாசிக்க ஊக்குவித்து வந்தார். 2023 ஜனவரி 26 அன்று 92ஆம் வயதில் காலமான அவரது உடல், இறுதி விருப்பப்படி சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, செங்கொடி போர்த்தப் பட்டு சண்டைப் பயிற்சி கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப் பட்டது. திரைத்துறையினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். திரைத்துறை யில் பெரும் புகழ் பெற்றபோதும், இறுதி வரை கம்யூனிஸ்ட் கொள்கையுடன் வாழ்ந்து மறைந்த ஜூடோ ரத்தினம், தனித் துவமான தொழிலாளர் வர்க்கப் போராளி.