சென்னை:
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரம்செம்பரம்பாக்கம் ஏரி. சுமார் 9 கி.மீட்டர் நீளமும் 24 அடி உயரமும் கொண்டது.500 ஆண்டுகள் பழமையும் கொண்ட இந்த ஏரிதான் சென்னைக்கு குடிநீர் வழங்கும்5 முக்கிய நீர் நிலைகளில் மிகப்பெரியது.இந்த ஏரி சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக எல்லைக்குட்பட்டது.இந்த ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர்சென்று கடலில் கலக்கும்.
ஏரி வெட்டப்பட்ட போது, நீர்மட்டம் 19.5 அடியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீர்மட்டம் 22 அடியாக உயர்த்தப்பட்டது.பின்னர், தெலுங்கு கங்கைத் திட்டத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரைத் தேக்கி வைப்பதற்காக நீர்மட்டம் 24 அடியாக உயர்த்தப்பட்டது.ஏரியில் 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 ஆயிரம் அடி நீளத்தில் தானாகவே உபரிநீர் வெளியேறும் கலுங்கல் ஆகியவற்றைக் கொண்டது.இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி ஆகும். ஏரியில் விநாடிக்கு 50,000 கனஅடி நீரை வெளியேற்றும் திறன்உண்டு. அடையாறு ஆற்றுக்கு நீர் வந்து சேரும்பல நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு808 சதுர கி.மீ ஆகும். இவற்றில், செம்பரம் பாக்கம் ஏரியின் அளவு மட்டும் 358 சதுர கிமீஎன்பது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரிகளில் திறக்கப்படும் தண்ணீர் அடையாற்றில் 43 கிலோ மீட்டர் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது.
சென்னைக்கு ஆண்டு தோறும் குடிநீர் தந்து உதவும் செம்பரம்பாக்கம் ஏரி நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மக்களை மிரட்டத் தொடங்கிவிடும்.கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் கனமழை கொட்டியதால், பெரும் வெள்ளம்ஏற்பட்டது. இந்த சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடுவதில் ஏற்பட்ட குளறுபடி சென்னை மாநகரையே கலங்கடித்தது.சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கியதற்கு முக்கிய காரணமே செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் நிர்வாக மேலாண்மை சரி இல்லாதது தான் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக தமிழக அரசு மீதும் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தன.
இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட வல்லுனர் குழு தனது ஆய்வின் முடிவில்,” முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென்று, 30,000 கன அடி நீர் வீதம் அடையாற்றில் திறந்துவிடப்பட்டதால், சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது ஏற்பட்ட சேதம் உயிரிழப்பு அனைத்தும் இயற்கையாக நிகழ்ந்தது அல்ல என்றும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்பதை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்தது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் ‘நிவர்’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயலின்தாக்கத்தால் தொடர்ந்து பெய்து வரும் பலத்தகனமழையால் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகரம் குளிர்ந்து உள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது புதனன்று செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியது. தனது முழு கொள்ளளவான 24 அடியைஇது விரைவில் எட்டி விடும் சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 22 அடி தண்ணீர்வந்தாலே உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பது கடந்த காலங்களில் கடைபிடித்து வரும் நடைமுறையாகும். அப்போதுதான் ஏரியை பாதுகாக்க முடியும். எனவே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.இந்நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொட்டும் மழையிலும் ஏரியை பார்வையிட்டார்.அப்போது, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,”செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர்வரத்து அதிகரித்திருப்பதால் உபரிநீர் 6 ஆயிரம் கன அடி வரைக்கும் வெளியேற்றப் படும்” என்றார்.ஏரியை திறப்பதற்கு முன்பாக இந்த முறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஏரியை ஆய்வு செய்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை யொட்டி அடையாறு, கூவம் நதி கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டது.திருநீர்மலை, குன்றத்தூர், சிறுகளத்தூர், கெழுத்திப்பேட்டை, அனகாபுத்தூர், முடிச்சூர்,ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கிடையே, கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அடையாற்றில் சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக் கிறது.கூடுதலாக 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துள்ளதால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங் களைச் சேர்ந்த 20 கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கூவம் நதிக்கரை ஓரம் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்சென்று முகாம்களில் தங்க வைப்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும்செய்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகமும்காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நிலைமைகளை உடனுக்குடன் உன்னிப்பாக கவனித்து நிலைமைகளை சரி செய்து கொடுத்தால் மட்டுமே 2015 ஆம் ஆண்டு அந்த சோக சம்பவம் மீண்டும் ஒருமுறை நிகழாமல் இருக்கும்.'
படக்குறிப்பு : தண்ணீர் திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை புதனன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தொகுப்பு : சி.ஸ்ரீராமுலு