articles

திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கக் கோட்டம்!

திருப்பரங்குன்றம்   மத நல்லிணக்கக் கோட்டம்!

சங்க இலக்கிய நூலான பரிபாடல்-  ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரை பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றம்” என்று திருப்பரங்குன்றம் வாழ் மக்களை வாழ்த்திப் பாடுகிறது. இதன் பொருள் தானம் செய்பவரைக் கொண்டாடியும், அதைப் பெற்று மன மகிழ்வோடு செல்வோரைப் பார்த்து பெருமிதமும் கொள்ளுகின்ற மக்களைக் கொண்டுள்ள கொற்றவையின் மகனும் கையில் வேலுடனும் காட்சி தரும் முருகன் குடி கொண்டுள்ள திருப்பரங்குன்றம் என்பதாகும். இப்பாடல் திருப்பரங்குன்றத்தில் குடியிருக்கும் மக்கள் எத்தகைய ஈகை குணமும், உயர்ந்த பண்பும் கொண்டவர்கள் என்பதை குறிப்பாய் உணர்த்துகிறது.

அருணகிரிநாதர் தனது கந்தரலங்காரத்தில்..  ‘சூர்க்கொன்ற ராவுத்தனே! மாமயிலேறும் ராவுத்தனே!”-  என்று முருகனை வருணிக்கிறார், அக்காலத்தில் முஸ்லிம்களில் குதிரை வணிகர்களை “ராவுத்தர்” என்று அழைப்பது வழக்கம், இதேபோல் திருவிளை யாடற்புராணமும் 59-ஆவது படலத்தில் குதிரைகளை ஓட்டிவந்த குதிரை வணிகரை ராவுத்தர் போல் வேட மணிந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இலக்கண வழக்கில் ராவுத்தர் என்பது “மேதகு” என்கிற சொல் லைக் குறிக்கும். எப்படியிருந்த போதிலும் தமிழ்க் கடவுளான முருகனுக்கும்,

முஸ்லிம்களுக்குமான உறவு பலநூறு ஆண்டுகளாக நிலவி வந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகின்றது. இத்தகு பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து சங்பரிவாரக் கும்பல் மதுரை மாவட்டம் முழுவதும் இந்து-முஸ்லிம் மதப் பகை யை உண்டாக்க முனைகின்றது. இது நாடு முழுவதும் இந்துத்துவா சக்திகள் முன்னெடுக்கும் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு  பகுதிதான் என்ற போதும் இதன் மூலம் உருவாக்கப் பட்டு வருகிற பதற்றமும் மதவெறிப் பிரச்சாரமும் அனைவரையும் கலக்கமடையச் செய்யக்கூடிய வையே! ஆனால்,

“யாமிருக்க பயமேன்” என்று முருகனே கூறுவதைப் போல இத்தகைய மதவெறி சக்திகளை எதிர்கொள்ளவும் முறியடிப்பதற்கான சாரத்தை தன் கருப்பையிலேயே கொண்டுள்ள திருப்பரங்குன்றம் உணர்த்தும் செய்தி என்னவென்றால்,

நல்லிணக்க மும் அதற்கு அடித்தளமாக விளங்கும் பன்மைத்துவக் கூறுகளுமே! ஆகும். ஒற்றைக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் திணிக்க முயலும் சங்கிகளை எதிர்த்த போரில் முற் போக்காளர்கள் கையில் ஏந்த வேண்டிய வலிமை யான ஆயுதங்களாக மேற்சொன்ன மத நல்லிணக்க மும் பன்மைத்துவக் கூறுகளும் விளங்கும். 

முருகனும் வீரவழிபாடும்!

பண்டைய தமிழர்கள் வகை பிரித்து வாழ்ந்த ஐவகை நிலத்தில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படும் குறிஞ்சி நிலத்தின் வழிபாட்டுத் தெய்வங்கள் ‘சேயோன் மற்றும் கொற்றவை’ ஆகும். இதில் கொற்றவை தாய் வழிபாட்டுத் தெய்வமாகும். இத்தெய்வங்களுக்கு படையலிட்டு வணங்கும் வழிபாட்டு முறையை வைத்து வீரவழிபாட்டுத் தெய் வங்களாக குறிப்பிடப்படுகின்றன. “நிறம் படின் குருதி புறம்படின்” (பதிற்றுப்பத்து -89) என்கிற வரியில் தொடங்கும் பாடலின் மூலம் கொற்றவைக்கு உயிர்கள் பலியிடப்பட்டதையும், “விடா முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்” (குறுந்தொகை -218) -  எனத் தொடங்கும் பாடல் வரியின் மூலம் கொற்றவை ஆலத்தைக் கொண்டிருந்ததால் “சூலி” எனப்பட்டாள் என்பதையும் அறிய முடிகிறது.

சங்க இலக்கியங்கள் ‘கொற்றவை மகன் சேயோன்’ என குறிப்பிடுகின்றன.

இதனை “வேல் போர்க் கொற்றவை சிறுவ’ (திரு முறுகாற்றுப்படை 258) என்கிற வரியில் அறியலாம். இது காலப்போக்கில் முருகு. முருகன், வேலன் எனவும் வழங்கப்படலாயின. மேலும், சேயோன் அதாவது முருகனுக்குரிய வாகனம் மற்றும் கொடி பற்றிய செய்தியை, “மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக ஆர்தி பொன்செய் யோனுமென” (புறநானூறு -56) எனும் பாடல் வரிகளும், “கருங்கின் விறல்வேள் களிறு ஊர்ந்தாங்கு (பதிற்றுப்பத்து 11.6) என்கிற பாடல் வரிகளும் தெரிவிக்கின்றன. அதாவது முருகனு க்கு கொடியாக மயிலும், ஊர்தியாக யானையும் போற்றப்பட்டன என்பது இதன் பொருளாகும்.

முருக வழிபாடு வீரவழிபாடாக இருந்ததினால் “செம்மறியாடு” வெட்டிப் படைக்கும் மரபும் தமிழ கத்தில் நிலவி வந்துள்ளது. இதனை

“மறிக்குரல் அறுத்துத் தின்னப் பிரப் பரீடு” (குறுந்தொகை -263) என்கிற வரியின் மூலமும் “சிறுமறி கொன்று” (குறுந்தொகை 362) என்கிற வரியின் மூலமும், குறுந்தொகை முருகனுக்கு ஆடு அறுத்து பலி கொடுத்த செய்தியை தெரிவிக்கின்றது.

கூடுதலாக... “மதவலி நிலைஇய மாத்தாட கொழுவிடைக் குருதியோடு விரைஇய தூவெண் அரிசி சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரிஜ் (திருமுருகாற்றுப்படை 232-234) என்கிற வரிகளில் தினை அரிசியில் ஆட்டு ரத்தத் தைக் கலந்து முருகனுக்கு படையலிட்டதையும், “முருக இயம் நிறுத்து முரணின் உட்க” (திரு முருகாற்றுப்படை - 244) என்கிற வரியின் மூலம் முருகன் ஈச்ச இலையால் வடிகட்டிய கள்ளைக் குடிப்பான் என்பதையும் திரு முருகாற்றுப்படை தெரிவிக்கிறது. ஆக, மேற்சொன்ன கொற்றவையும், சேயோன் என்கிற முருகனும் இயற்கை வழிபாட்டு தமிழ் கடவு ளர்கள் என்பது மட்டுமல்ல சுத்த “அசைவப் பிரியர் கள்” என்பதும் தெரிகின்றது!

சமணர்களின் குன்றம்

“எண் பெருங்குன்றத்து இருந்தவ முனிவர்” என நாலடியார் அதிகாரவியல் அடைவிலும், “

பரங்குன்றொருவகம் பப்பாரம் பள்ளி” என யாப் பருங்கால விருத்தியுரையிலும், மதுரையைச் சுற்றி யுள்ள எண்பெருங்குன்றத்தில் சமணர்கள் வாழ்ந்ததை யும் அதில் திருப்பரங்குன்றம் முதலாவதாகவும் குறிப் பிடப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கருகில் உள்ள பாறையில் சமண தீர்த் தங்கரர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன. மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி யாண்டவர் கோயிலின் பின்புறம் சுனை ஒன்றுள்ளது. அதன் அருகில் பாறையில் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இவை காலத் தால் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சமணம் இங்கு மிகவும் செல்வாக்கோடு திகழ்ந்தது என்பதற்கு இவைகள் சான்றுகளாகும்.

வைதீகம் கிளம்பியது

கி.பி.9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாத்தான் கணபதி என்பவரால் பராந்தக நெடுஞ்சடையானின் ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமானுக்காக கோயில் எடுத்ததை இங்குள்ள சமஸ்கிருதக் கல் வெட்டுத் தெரிவிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இப்போது காணப்படும் வடதிசை குடைவரைக்கோயிலில் 5 தெய்வங்களுக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது. சிவன், திருமால், துர்க்கை, விநாயகர், முருகன் ஆகிய ஐவர் சிற்பங்களும் இங்குள்ளன. முருகனை பரங்குன்றத்தின் இரு (வட தென் திசை களில் உள்ள) குடைவரை கோயில்களிலும் துணை கடவுளராகத்தான் காண முடிகின்றது.

வடக்கே உள்ள குகையில் உள்ள முருகன் தான் இப்போது வழிபடப் படும் கடவுள். இந்தக் குகையில் துர்க்கைக்கும், சிவ லிங்கத்திற்கும் தனித்தனி கோயில் குடைந்திருக்க முருகனை சுதை வடிவத்தில் துணை கடவுளாகத்தான் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது.

இங்கு முருகன் சுப்பிரமணிய சுவாமியாக தெய்வானையுடன் மணக் கோலத்தில் காட்சி தருகிறான் (செ.போசு, கல் வெட்டாய்வாளர், தொல்லியல் ஆய்வுத்துறை.) பிராமணிய வைதீக நெறிப்படி திருப்பரங்குன்றம் என்பது சிவபெருமானுக்கு உரிய மலையாகும். முரு கனே இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பய னெய்திய பெருமை உடையது என்கின்றனர்.

இதை உணர்த்தும் வண்ணம் மலை உச்சியில் உள்ள காசி விசுவநாதர் கோயிலுக்கு முருகனின் கைவேல் ஆண்டுதோறும் எடுத்துச் செல்லப்படுகிறது

சூழ்ச்சிகள் எத்தனை சூழ்ச்சியடி?!

பிராமணிய வைதீகத்தின் சூழ்ச்சிகள்தான் எத்தனை? எத்தனை? முருகனின் வீரவழிபாட்டை ஒழித்துக்கட்டி சுப்பிர மணியசுவாமி என்கிற பெருந்தெய்வமாக மாற்றியது. பலியிடும் படையலை தடை செய்து ஆகமத்தை வரித்துக் கொண்டது. கொற்றவையை துர்க்கையாக மாற்றி தாய் வழிபாட்டை நிராகரித்தது. முருகனின் வாகனமான யானையை பிராமணியம் செரித்து தெய்வயானையை துணைவியாக்கியது. தெய்வானையாக மாற்றி முருகனின் கொடியிலிருந்த மயிலை வாகனமாகவும், கொடியில் சேவலையும் பொறித்தது. சமணர்களை கழுவிலேற்றி ஒழித்துக் கட்டியது. பரங்குன்றத்தை சிவதலமாகவே பாவிப்பது.  வைணவக் கடவுளான திருமாலுக்கும் கூட கருவறை உண்டு. ஆனால் தமிழ் கடவுளான முருகனுக்கு தனிக் கோவிலோ, கருவறையோ இன்றி துணை கடவுள ராகவே  பாவிப்பது.