articles

img

சோசலிசப் பிரச்சாரத்தை இளம் தலைமுறையிடம் கொண்டுசெல்வோம்!

சோசலிசப் பிரச்சாரத்தை 
இளம் தலைமுறையிடம் கொண்டுசெல்வோம்!

கேள்வி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டு வரைவு தீர்மானங்கள் ‘இந்துத்துவா சக்திகளையும், அதன் கருத்தியலையும் எதிர்த்து போராட வேண்டும்’ என்பதை பிரதான கடமையாக குறிப்பிட்டுள்ளதே, ஏன்? பதில் : கடந்த 11 ஆண்டு காலமாக ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசு ‘இந்துத்துவத்தை அரசின் சித்தாந்தமாக்குவதற்கும், மதச்சார்பற்ற - ஜனநாயகக் குடியரசை இந்து ராஷ்ட்டிரமாக மாற்றுவதற்குமான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு  பின்பற்றப்பட்டு வருகிறது’. இத்தகைய சூழலில்தான் இந்தக் கடமையை கட்சி வலியுறுத்துகிறது. கேள்வி : எந்த அடிப்படையில் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது? பதில் : “இந்துத்துவாவையும், ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் பல்வேறு செயல்பாடு களையும், செல்வாக்கையும் எதிர்கொள்வதற்கு நமது கட்சி அரசியல், கருத்தியல், பண்பாடு,  பொருளாதாரம் மற்றும் சமூக தளங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக வேண்டும். பாஜகவை தோர்தலில் தோற்கடிப்பதற்கே மேற்கண்ட தளங்களில் கருத்தியல் ரீதியிலான போராட்டங்களை நடத்திட வேண்டும் என்பதை தீர்மானங்கள் சுட்டிக்காட்டுகின்றன. கேள்வி : இந்துத்துவா என்பது இந்து மதத்தைக் குறிப்பிடுகிறதா? பதில் : இல்லை. 1923 ஆம் ஆண்டு சாவர்க்கர் தனது, ‘‘இந்துத்துவாவின் அடிப்படை அம்சங்கள்” என்ற நூலில், “இந்துத்துவாவும் இந்து மதமும் ஒன்றல்ல; இந்துத்துவா என்பது ஒரு அரசியல் திட்டம்’’ எனக் கூறினார்.  இந்துத்துவா என்ற வார்த்தையை முதன்முதலாக கூறியது சாவர்க்கர் தான். சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முன்வைத்த இந்துத்துவா என்ற அரசியல் திட்டத்தைத்தான் கடந்த 11 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு அமலாக்கி வருகிறது. ‘இந்து ராஷ்டிரம்’ என்பது மதவழி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; மக்களை நால்வர்ண சாதி அடிப்படையில் கட்டமைக்க வேண்டும் என்கிறது. இதற்காகத்தான் இந்திய அரசியல் சட்டத்தை ‘மனுநீதி’ அடிப்படையில் அமைத்திட வேண்டுமென கோல்வால்கர் வலியுறுத்தினார். கேள்வி : இந்துத்துவா கருத்தியலை எதிர்த்து நடத்திட வேண்டிய போராட்டம் பற்றி மாநாட்டு வரைவு தீர்மானங்கள் கூறும் வழிமுறை, கடமைகள் என்ன? பதில் : பல காரணங்களால் சமூகத்தில் அனைத்து மத மக்களிடையேயும் மத ரீதியான உணர்வு வளர்ந்து வருகிறது. மதச் சடங்குகள், கோவில் திருவிழாக்கள் ஆகியவற்றின் மூலம் மத நம்பிக்கையாளர்களை ஈர்க்க, மத உணர்வுகளைப் பயன்படுத்தி இந்துத்துவா மத வெறி சிந்தனையை ஆர்எஸ்எஸ் வளர்த்து வருகிறது. இதற்கு அவர்கள் குறிப்பாக பெண்களையே குறிவைக்கிறார்கள். இவ்வாறு வழிபாட்டு தலங்களையும், மத நம்பிக்கை களையும் அரசியல் நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்துவதை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கேள்வி : மத நம்பிக்கையை தங்கள் நோக்கத்திற்கு தவறாக பயன்படுத்துவதை எப்படி தடுப்பது? பதில் : நாம் நடத்தும் பிரச்சாரம், கருத்தரங்கம், மாநாடுகள் போன்றவை தேவையான நடவடிக்கைகள் தான். ஆனால், இவை மத நம்பிக்கையாளர்களை முழுமையாக சென்றடைவதில்லை. எனவே இவற்றுக்கும் மேலாக நமது கட்சி அமலாக்கிட வேண்டிய கடமைகள் பற்றி மாநாட்டு வரைவு தீர்மானங்கள் தெளிவாக கூறியுள்ளன. கேள்வி: இன்னும் சற்று விரிவாக விளக்குங்களேன்... பதில் : “மத நம்பிக்கை உள்ளவர்களோடு நெருக்கம் ஏற்படுத்தி, தம் மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கும், அந்த நம்பிக்கையை பிற மதங்களை தாக்கும் நோக்கத்துடன் பயன்படுத்துவதற்குமான வேறுபாட்டை அவர்களுக்கு புரியவைக்கும் வகையிலான ஓர் அணுகுமுறையை நாம் உருவாக்க வேண்டும்” என வரைவு அரசியல் நகல் தீர்மானம் கூறுகிறது. இதன் பொருள் என்ன? நமது தேசத்தில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையாளர்களாக உள்ளனர். இது மனித இயல்பு. சங்பரிவார் அமைப்பினர், இந்த மத நம்பிக்கையை மத உணர்வாக மாற்றி; அடுத்த கட்டமாக பிற மதங்களின் மீது வெறுப்புணர்வூட்டி; மதவெறியர்களாக மாற்றுகிறார்கள். சங்பரிவார் அமைப்புகளின் இத்தகைய மதவெறி நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமென்றால் மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட மதசார்பின்மைக்காள செயல்பாட்டாளர்கள் மத நம்பிக்கையாளர்களோடு நெருக்கத்தை உருவாக்க வேண்டும். அவர்களுடன் உரையாடி அவர்களின் மனங்களில் மத நல்லினக்க உணர்வை உருவாக்கி அடுத்த  கட்டமாக மதச்சார்பின்மை பார்வையை உருவாக்கவேண்டும். “மதச் சார்பின்மைக்கான போராட்டம் என்பது மனித மனங்களை வென்றெடுக்கும் போராட்டம்” என்று பேராசிரியர் கே.என்.பணிக்கர் கூறுவார். கேள்வி: மோடி தலைமையிலான அரசை ‘கார்ப்பரேட் - கம்யூனல்’ அரசு என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறதே? பதில் : ஆம். இன்றைய ஒன்றிய மோடி அரசு வகுப்புவாத அரசு என்பதை மேலே கண்டோம். 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு உருவானதிலிருந்து இந்திய பொரளாதாரத்தையே அதானி, அம்பானி போன்ற பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது. இதனால் மிகமிக பாதகமான விளைவுகள் உருவாகி வருகின்றன. வரைவு அரசியல் தீர்மானம் 2.7இல், “உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது.  உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி, 2022-23 காலகட்டத்தில் நாட்டின் அனைத்து வருமானத்திலும் 22.6 சதவிகிதத்தை, மக்கள் தொகையின் முதல் 1 சதவிகிதம் பேர் கைப்பற்றியதுடன், நாட்டின் மொத்த செல்வங்களில் 40.1 சதவிகிதத்தை வைத்திருந்தனர். இது  இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விடவும் அதிகமான சமத்துவமற்ற பங்காகும். இந்தியாவின் முதல் 1 சதவிகிதத்தினர் பெறக்கூடிய வருமானப் பங்கு உலகிலேயே மிக அதிகமாகும்”  என விவரிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2.8இல், “ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலின்படி, மோடி பிரதமரான 2014 ஆம் ஆண்டில் நாட்டில் 100 பில்லியனர்கள்  இருந்தனர்,  அந்த எண்ணிக்கை  2024 இல் 200 ஆக இரட்டிப்பாகியுள்ளது என்ற  உண்மையிலிருந்து  மோடி ஆட்சிக் காலத்தில்  செல்வத்தின் அதீத குவிப்பினை விளங்கிட முடியும். மேலும்,  அவர்களில் 100 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு  முதல் முறையாக 1 லட்சம் கோடி டாலரைத்  தாண்டியுள்ளது .  இதுதான்  மோடி அரசின்  பத்தாண்டு கால ஆட்சியின் முத்திரை ஆகும்” எனக் கூறப்பட்டுள்ளது. 2.9இல், “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள், 2014 (மோடி ஆட்சியின் முதல் ஆண்டு) முதல் 2022 வரை (தரவுகள் கிடைக்கக் கூடிய கடைசி ஆண்டு), இந்தியாவில் 1,00,474 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைக்கு தள்ளப்பட்டதைக் காட்டுகிறது. 2024 உலகளாவிய பட்டினி குறியீட்டின்படி, 127 நாடுகளில் இந்தியா 105 வது இடத்தில் உள்ளது” எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே (15-29வயது) ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 10%க்கும் அதிகமாக உள்ளது. இதுவே நகர்புறங்களில் 15% என அரசின் புள்ளி விவரமே கூறுகிறது. கேள்வி : இதற்கு என்ன மாற்று? பதில் : மக்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கைத் தரத்தை, மொத்தத்தில் உழைக்கும் மக்கள் நலனை பாதுகாத்திட வர்க்கப் போராட்டத்தையும் மக்கள் கோரிக்கைகள் மீதான நீடித்த உள்ளூர் போராட்டங்களையும் நடத்திட வேண்டும். இதனுடன் ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான நமது மாற்றுக் கொள்கையை முன்வைத்து போராடவேண்டும். கடந்த 78 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்க அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகள், திட்டங்கள் தங்கள் மக்களிடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கி விட்டது. மக்கள் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வுகாண முடியாது என்பது நிருபனமாகிவிட்டது. சோஷலிசமே மாற்று என்ற முழக்கத்தை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்று கட்சி கூறுகிறது. வரைவு அரசியல் பரிசீலனை அறிக்கையில், ஸ்தாபனம் குறித்த கொல்கத்தா பிளீனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ள இந்த அம்சம் வலியுறுத்தப்பட்டுள்ளது: “சோஷலிசம் குறித்த தொலைநோக்கும், இந்திய நிலைமைகளில் எவ்வாறு அத்தகையதொரு சோஷலிச சமூகத்தை வென்றடைய முடியும் என்பதும் தனிச்சிறப்பான வகையில் எடுத்துக் கூறப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை நம் பக்கம் ஈர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது சமகால, இந்தியப் பின்னணியில் சோஷலிசம் குறித்த தொலைநோக்குப் பார்வையைப் பரப்புவதாகும்.” (பாரா 1.176)