ஆலைத் தொழிலாளியிலிருந்து அரசியல் தலைமைக் குழுவுக்கு!
தோழர் பாலானந்தன் 1924ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் சக்திகுலங்கரா எனுமிடத்தில் பிறந்தார். அலுமினியம் தொழிற்சாலையில் தொழிலாளியாக சேர்ந்து தொழிற்சங்கத் தலைவராகத் தொடங்கிய அவரது பொது வாழ்வு தனது அயராத உழைப்பின் மூலமும் ஆழமான அரசியல் சித்தாந்த உணர்வு மூலமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உயர்ந்தார். இளம் வயதில் குடும்ப நிதி நெருக்கடி காரணமாக பள்ளிப் படிப்பை முடிக்க இயலாத பாலானந்தன் வேலை தேடி கோயம்புத்தூர் உட்பட பல ஊர்களுக்கு பயணித்தார்.
ர்நாடகாவுக்கு தப்பிச் சென்றார்
பின்னர் அலுவாவில் உள்ள அலுமினியம் தொழிற்சாலையில் முதலில் ஒப்பந்த ஊழியராகவும் பின்னர் நிரந்தரத் தொழிலாளியாகவும் சேர்ந்தார். தான் பணியாற்றிய அலுமினியம் தொழிற்சாலையில் சங்கம் துவங்கிப் போராடினார். விரைவில் மாவட்டத்தில் முக்கிய ஏ.ஐ.டி.யூ.சி. தலைவராக பரிணமித்தார். போராட்டங்கள் நடத்தியதால் அவர் வேலையை இழந்தார். அவர் மீது கைது அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. கைதிலிருந்து தப்பிக்க கர்நாடகாவின் ஷிமோகாவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு அலுவாவுக்கு கொண்டு வரப்பட்டார். சிறையில் கைதிகளின் உரிமைக ளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். அவசரகாலம் உட்பட 4.5 ஆண்டுகள் சிறையிலும் 5 ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கையிலும் துன்பங்களை எதிர்கொண்டார்.
மத்தியக்குழு - தலைமைக்குழு
தோழர் பாலனந்தன் 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சிபிஐ(எம்) உதயமான பொழுது கேரள மாநிலக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். மதுரையில் நடந்த 9ஆவது மாநாட்டில் மத்தியக் குழுவுக்கும் 10ஆவது மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டு அந்த பொறுப்பில் 2005ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
சிஐடியு தலைவர்
1970ஆம் ஆண்டு சிஐடியு தோன்றிய பொழுது கேரளாவின் செயலாளராகவும் பின்னர் அகில இந்திய பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். தோழர் பி.டி.ரணதிவே மறைவுக்கு பின்னர் சிஐடியுவின் அகில இந்திய தலைவராக 1990 முதல் 2002ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். சிஐடியுவின் வளர்ச்சிக்கும் அதன் அகில இந்திய மையப்பணிகளுக்கும் தோழர் பாலானந்தன் பங்கு மிக முக்கியமானது.
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில்
அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். அவரது மனைவி தோழர் சரோஜினி பாலானந்தன் கேரளா சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினராக பணியாற்றியவர். பாலானந்தன் தோழர்களுடன் மிகவும் அன்பாகவும் நேசத்துடனும் பழகிய தோழர். தனது 84ஆவது வயதில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி உயிர் நீத்தார். அவரது நினைவாக ஆய்வு மையம் எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.