articles

img

கிராமங்களை நோக்கி டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள்

கிராமங்களை நோக்கி டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள்

சென்னை, ஏப்.22 - தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவ தாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் திங்களன்று (ஏப்.21) மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணி யன், “2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடியாக இருந்தது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.40 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில், மீதமுள்ள 51.60 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களிலும் வாழ்கின்றனர். இந்த மக்கள் தொகை 2025 ஆம் ஆண்டிற்குள் 8.53 கோடியாக எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.  இது தவிர, நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோர் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், எந்த ஒரு அரசாங்கத்திற்கும் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, அதன் குடிமக்களுக்கு சிறப்பான சுகாதார சேவையை வழங்குவதாகும்” என்றார். புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டை பொறுத்தவரை 37 மாவட்ட தலைமையக மருத்துவமனைகள், 197 வட்ட மருத்துவமனைகள் மற்றும் 58  வட்டம் சாரா மருத்துவமனைகள் உள்ளன.

மேலும், 1,832 ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 424 ஆரம்ப சுகாதார நிலை யங்கள், 30 படுக்கைகளுடன் மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இத்துடன் 504 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் இயங்கி வருகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் தோராயமாக 4 முதல் 5 சுகாதார துணை மையங்கள், 8,713 துணை சுகாதார மையங்கள் மற்றும் 2,368 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரியை படிப்படியாக நிறுவ வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை. அதன்படி, 32 மாவட்டங் களில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்த தும் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு...

500 பட்ட மேற்படிப்பு இடங்கள்

மாநில மகப்பேறு செவிலியர் பயிற்சி நிறுவனம், தேசிய பயிற்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அரசு மருத்துவமனைகளில் 25 புதிய போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக 500 முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் உருவாக்கப்படும்.

உடல்எடை குறைப்பு சிகிச்சை

கிராமப்புற, நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் வகையில் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர் உட்பட 21 மாவட்டங்களில் உள்ள 50 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை திட்டம் விரைவில் மதுரையில் தொடங்க திட்டம் உள்ளது. டயாலிசிஸிக்கு உட்படும் அனைத்து நோயாளிகளுக்கும் புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும்.  சிதிலமடைந்த 1,823 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டப்படும்.

300 துணை சுகாதார கட்டிடங்கள்

 4 அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன PET சி.டி.ஸ்கேன் சேவைகள் வழங்கப்படும். கோவையில் ரூ.29.67 கோடியில் மருத்துவ சாதனங்கள் சோதனைக் கூடம்நிறுவப்படும். 44 அரசு சுகாதார நிலையங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய  கட்டடங்கள் கட்டப்படும். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரூ.125 கோடியில் உயர் சிறப்புச் சிகிச்சைக்கு புதிய கட்டிடம் நிறுவப்படும். தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலம் பெறும் 300 துணை சுகாதார கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும். கிராமப்புற மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்த 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.90 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படும். முதல் முறையாக, கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து அந்தப் பகுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும்.