இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் புதிய ஆயுதங்கள்
“இந்த நரமாமிசக் கொடூரனின் மீது சாபங்களை வீசுவதற்காக எனக்கு இடியின் குரலைத் தா, அவனது பயங்கர பசி பெண்களையும் குழந்தை களையும் கூட விட்டுவைப்பதில்லை.”
- மகாகவி ரவீந்திரநாத் தாகூர்
திட்டமிட்ட இயலாமையை உருவாக்குவது…
காசாவில் நடப்பது வெறும் போரல்ல - இது திட்டமிட்ட இயலாமையை உற்பத்தி செய்வதாகும். மயக்க மருந்து இல்லாமல் கைகால் வெட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும் குழந்தைகள், சக்கர நாற்காலி மறுக்கப்பட்டு ஊர்ந்து தப்பிக்க வேண்டிய ஊனமுற்றோர், அழிக்கப்படும் மருத்துவமனைகள் - இவை எல்லாம் யாருக்கும் “தொடர்பில்லா சேதம்” அல்ல. இது ஒரு புதிய வகை இனப்படுகொலை. உடல் களை மட்டும் அழிக்காமல், உயிர் பிழைப்போரை வாழ் நாள் முழுதும் பிறரைச் சார்ந்திருக்க வைக்கும் வகையில் ஊனமுற்றோராக மாற்றுவது. இது மூன்று அடுக்கு வன்முறை: உடனடி கொலை, நீண்ட கால சார்புநிலை, சமூக அழிவு. காசாவின் 23 லட்சம் மக்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் குழந்தைகள். இவர்களே முக்கிய இலக்கு. ஏனென்றால் ஊனமுற்ற குழந்தை என்பது வெறும் தற்போதைய பாதிப்பு அல்ல - அது பல தலை முறைகளுக்கு நீடிக்கும் சார்பு நிலை. 2025 ஆகஸ்ட்டில் ஊனமுற்றோர் உரிமைகள் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இது “இயலாமையின் மிகப் பெரிய அளவிலான உற் பத்தி” ஆகும். இந்தியாவின் தேசிய ஊனமுற்றோர் உரிமைகள் தளமும் இணைந்த இந்த அறிக்கை வெளிப்படுத்தும் உண்மை பயங்கரமானது: “கைவெட்டு, காயம், அதிர்ச்சி, அத்தியாவசிய சிகிச்சை மறுப்பால் ஆயிரக்கணக்கானோர் புதிதாக ஊனமுற்றோராக்கப்பட்டுள்ளனர்.”
பயங்கர புள்ளி விவரங்கள்
2025 ஆரம்பத்தில் ஐநா குழந்தைகள் அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு (UNICEF/WHO) தகவல்களின்படி, அக்டோபர் 7, 2023 துவங்கி 3,105 முதல் 4,050 கைகால் வெட்டு அறுவை சிகிச்சை கள் நடந்துள்ளன. இவர்களில் 25 சதவீதம் குழந்தை கள் - அதாவது 780 முதல் 1,000 குழந்தைகள். ஐ.நா. மனித உரிமைகள் துறை அலுவலகத்தின் மே 2025 அறிக்கையோ மொத்த கைகால் வெட்டு களை 4,700 என்று குறிப்பிடுகிறது - இதில் 850 பேர் குழந்தைகள். இஸ்ரேலிய தாக்குதல்களில் 59,000க்கும் மேற் பட்டோர் இறந்துள்ளனர், 1,43,000 பேர் காயம டைந்துள்ளனர். சுமார் 3,77,000 பேர் “காணாமல்” - இடிபாடுகளின் கீழ் புதைந்து கணக்கிடப்படாமல் உள்ளனர். ஆனால் இந்த எண்கள் உண்மையான அழிவை சொல்லத் தவறுகின்றன. ஒவ்வொரு கைகால் வெட்டு க்கும் பின்னால் ஒரு குடும்பம் உடைகிறது. ஒவ் வொரு ஊனமுற்ற குழந்தைக்கும் பராமரிப்பாளர் தேவைப்படுகிறார். சமூகம் முழுதும் ஒரு பெரிய மறுவாழ்வு மையமாக மாற்றப்பட வேண்டியுள்ளது - ஆனால் எல்லா மறுவாழ்வு மையங்களும் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுவிட்டன.
இனப்படுகொலையின் பழைய வழிமுறை
வரலாறு காட்டுவது என்னவெனில், இனப்படு கொலைகளில் ஊனமுற்றோர் முதலில் குறிவைக்கப் படுவார்கள். அவர்களால் தப்பித்து ஓட முடியாது, தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது, சாட்சி யாக நின்று கூச்சலிட முடியாது. நாஜிகளின் கொடூரம் தாண்டவமாடிய ஜெர்மனி யில் அகிடோன் டி4 (Aktion T4) என்ற பெயரின் கீழ் அங்கு நடந்த வெறியாட்டத்தில் 2,00,000 ஊன முற்றோர் கொல்லப்பட்டனர் - ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்ட மிகப் பயங்கரமான படு கொலைகளின் முன்னோட்டமாக. அவர்கள் “வாழ்வு க்கு தகுதியற்றவர்கள்”, “பூமியின் சுமை” என்று முத் திரை குத்தப்பட்டனர். விஷ வாயு அறைகளின் சோ தனை முதலில் அவர்கள் மீதுதான் நடத்தப்பட்டது. 1994 ருவாண்டாவில் ஊனமுற்றோர் தேவால யங்களில் பூட்டி எரிக்கப்பட்டனர். 1995 ஸ்ரேப்ரனிகா வில் வயோதிகர்களும் ஊனமுற்றோரும் தப்பிக்க முடியாமல் வலிந்து கொல்லப்பட்டனர். காசாவிலும் அதே வரலாறு திரும்புகிறது. குண்டு கள் மறுவாழ்வு மையங்களை நேரடியாக குறிவைக் கின்றன. முற்றுகை, மருந்துகளையும் சிகிச்சையை யும் தடுக்கிறது. கட்டாய இடப்பெயர்ச்சி ஆணைகள் ஊனமுற்றோரை நகர முடியாமல் மரண கண்ணிக் குள் சிக்க வைக்கின்றன.
பட்டினி ஆயுதம்
காசாவில் பட்டினி ஒரு தனி ஆயுதம். கர்ப்பிணித் தாய்மார்கள் மயக்க மருந்து இல்லாமல் குழந்தை பெறுகின்றனர். மருத்துவர்கள் செல்போன் ஒளியில் அறுவை சிகிச்சை செய்கின்றனர். பட்டினியால் தாய்ப்பால் சுரக்காது. இன்குபேட்டர்களுக்கு மின்சா ரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது “இனப்பெருக்க இனப்படுகொலை” - எதிர் காலத் தலைமுறையையே இலக்காக வைப்பது. பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, பிறவி ஊனங்களுடன் பிறக்கின்றனர். ஊனமுற்ற பெண்களுக்கு இது இரட்டிப்புக் கொடு மை. அவர்களால் ஓட முடியாது, பாதுகாப்பான இடம் தேட முடியாது. தனியுரிமை முற்றிலும் மறுக்கப்படு கிறது. பாலியல் வன்முறையின் ஆபத்து பலமடங்கு அதிகம். மகப்பேறு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பாலஸ்தீன பெண்ணிய கூட்டமைப்பு இதை துல்லியமாக “இனப்பெருக்க இனப்படுகொலை” என்று அழைக்கிறது. தாய்மார்களின் கருப்பை யையே அவர்களுக்கு எதிரான, சமூகத்திற்கு எதிரான ஆயுதம் ஆக்கும் பயங்கரம்.
லாபத்துக்கான போர்
காசாவில் நடப்பது வெறும் இனப்படுகொலை மட்டுமல்ல - இது ஒரு பெரிய வர்த்தக மையமும் கூட. இந்த போர் செயற்கை நுண்ணறிவு (AI) ஆயுதங் கள், கண்காணிப்பு தொழில்நுட்பம், கலகத் தடுப்பு கருவிகளுக்கான நேரடி சோதனை மையம் என காசா மாற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்கள் “போரில் சோதிக்கப்பட்டது” (Battle-tested) என்ற லேபிளு டன் இந்த ஆயுதங்களை உலகெங்கும் - இந்தியா வுக்கும் சேர்த்து - ஏற்றுமதி செய்கின்றன. பாலஸ் தீன உடல்கள் தான் அந்த ஆயுத சோதனை களின் கழிவுகள். மோடி அரசாங்கம் இஸ்ரேலிடமிருந்து வாங்கும் ஆயுதங்கள் காசாவின் குழந்தைகளின் இரத்தத்தில் சோதிக்கப்பட்டவை. இதுதான் “மேக் இன் இந்தியா” வின் குரூர வேர்கள். போர் தொழில்நுட்பம், கண்காணிப்பு, இராணுவ வாதம் - இவை எல்லாம் மனித அழிவிலிருந்து லாபம் பெறும் கார்ப்பரேட் பயங்கரங்கள். இனப்படுகொ லையும் முதலாளித்துவமும் நாஜி காலத்திலிருந்தே கைகோர்த்துத்தான் நடக்கின்றன.
சட்ட மீறல்கள்
இஸ்ரேல் ஊனமுற்றோர் உரிமை மாநாட்டை (CRPD) அங்கீகரித்துள்ளது. நான்காம் ஜெனீவா மாநாடு குடிமக்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்கிறது. ஆனால் மருத்துவமனைகள் குண்டுவீச்சுக்கு உள்ளாகின்றன. உதவி தடுக்கப்படுகிறது. இயலாமைக்கான சேவைகள் அழிக்கப்படுகின்றன. “இந்த மீறல்கள் சுதந்திர விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை கோருகின்றன” என்கிறது அறிக்கை.
இந்திய ஊனமுற்றோர் இயக்கத்தின் மௌனம்
மிகவும் வலி தரும் விஷயம் - இந்திய ஊனமுற் றோர் இயக்கத்தின் அரசியல் மௌனம். உலகளா விய ஊனமுற்றோர் அமைப்புகள் காசாவில் நடக் கும் இனப்படுகொலையைக் கண்டித்து போர் நிறுத்தம் கோருகையில், இந்திய ஊனமுற்றோர் இயக்கம் கண்களை மூடிக்கொண்டு மவுனம் காக்கிறது. “எல்லா வாழ்க்கையும் சமமானது”, “உரிமைக ளில் சமரசமில்லை” என்று சொல்லும் இயக்கம் பாலஸ்தீன ஊனமுற்ற குழந்தைகளுக்கு மட்டும் ஏன் மௌனம்? இதற்கு பல காரணங்கள் உள்ளன. பல அமைப்பு கள் அரசு நிதியுதவியில் இயங்குகின்றன. மோடி அர சாங்கத்தின் இஸ்ரேல் சார்புக் கொள்கைக்கு எதிராக பேச பயப்படுகின்றன. சில தலைவர்கள் நவதாராள வாதக் கொள்கைகளின் நேரடிப் பயனாளிகளாக உள்ளனர். வரலாற்றில் அரசு வன்முறைக்கும் சாதிய- வர்க்க அடக்குமுறைக்கும் எதிராக நின்ற ஊன முற்றோர் சமூகம், இப்போது சர்வதேச அடக்கு முறையில் மௌனத்திற்கு உடந்தையாகிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அனுதாபம், இயக் கத்தின் நம்பகத்தன்மையையும் மனசாட்சியையும் முழுவதுமாக கேள்விக்குள்ளாக்குகிறது. இது ஒரு அரசியல் நிலைப்பாடு - அதுவும் தவறான நிலைப்பாடு.
எழுந்து நில்!
வரலாறு கேட்கிறது: இன்னும் எத்தனை கைகால் கள் வெட்டப்பட வேண்டும்? எத்தனை தாய்மார்க ளின் கர்ப்பப்பைகள் வலிக்க வேண்டும்? எத்தனை குழந்தைகளின் எதிர்காலங்கள் உடைக்கப்பட வேண்டும்? போதும் என்று நாம் சொல்வதற்கு முன்? “ஊனமுற்றோர் வன்முறையால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர், ஆனால் பாதுகாப்பிலி ருந்தும் நினைவுகளிலிருந்தும் தொடர்ந்து விலக்கப் படுகின்றனர்.” காசாவின் அலறல் உலகம் முழுதும் கேட்கிறது. தாகூரின் இடிமுழக்கம் திரும்பி வருகிறது. இனப் படுகொலையை அனுமதிக்கும் ஒவ்வொரு நாளும் நம் அனைவரின் மனிதத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது. நம்முடைய மௌனம் ஒரு வகை வன்முறை. நம்முடைய அலட்சியம் ஒரு வகை உடந்தை. இந்திய ஊனமுற்றோர் இயக்கம் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது. உலகளாவிய நீதியை ஆத ரிக்க வேண்டிய நேரம் இது. பாலஸ்தீன ஊனமுற்ற குழந்தைகளுடன் ஒற்றுமை அறிவிக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால் நீதி பிரிக்க முடியாதது. ஊனமுற்றோர் உரிமைகள் எல்லை தாண்டியது. மனிதாபிமானம் எந்த பாஸ்போர்ட்டும் கேட்காது. வரலாறு நம்மை கேட்கும் - எங்கே நின்றீர்கள்?
கட்டுரையாளர் : தேசிய ஊனமுற்றோர் உரிமைகள் மேடையின் (NPRD) பொதுச் செயலாளர் தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்