ஜம்மு-காஷ்மீருக்கு பிரிவு 370-ன்படி வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்துசெய்த தீர்மானம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரான ஒரு மின்னல் தாக்குதலாக இருந்தது. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகப் பார்க்கக் கூடாது. தேசத்துகூட்டமைப்பின் அஸ்திவாரத்தையே தகர்ப்பதன் துவக்கமாக அது இருந்தது. அதற்குப் பிறகு தேசம்முழுவதும் நடந்த சம்பவங்களின் மூலம் இந்துத்துவஎதேச்சதிகார ஆட்சியின் உண்மையான தோற்றம் வெளிப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு உரிமைபறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கிடையில் தீவிரவாதமும் ஊழலும் குறைக்கப் படும் என்றும், வளர்ச்சி விரைவுபடுத்தப்படும் என்றும் கூறிய ஒன்றிய அரசின் வாக்குறுதிகள் வெறும் வெத்து வேட்டாக ஆகிவிட்டன.
பொருளாதாரம் தகர்ந்துவிட்டது
ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயகத்தை முழுவதுமாக இல்லாமற் செய்ததுடன் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்பாடு இன்றி அடக்கி ஒடுக்கினர் என்பதே பிரிவு 370 ரத்துச் செய்யப்பட்டதன் மூலம்அடைந்த ஒரே சாதனை! யுஏபிஏ எனும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் முதலான கருப்புச் சட்டங்களை எந்த வித்தியாசமும் பார்க்காமல் பிரயோகித்து மக்களின் வாழ்க்கையை-குறிப்பாக இளைஞர்களை துயரத்திற்குள்ளாக்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையே காஷ்மீர் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020 முதல் நாடு இரண்டு ஊரடங்குகளை எதிர்கொண்டபோது காஷ்மீர் 2019 ஆகஸ்ட் முதல் கடும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளில் ஒடுங்கியுள்ளது. சுற்றுலா, வியாபாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளில் நெருக்கடி மிகக் கடுமையாகிவிட்டதால் ஜம்மு-காஷ்மீரின் பொருளாதாரம் தகர்ந்துவிட்டது. பொருளாதாரத்தின் முக்கியதுறைகளாகிய விவசாயமும், மலர் விவசாயமும், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு வேலைகளும் உயிரற்ற நிலையில் உள்ளன.
புதிய காஷ்மீரில் நடப்பது என்ன?
370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் “புதிய காஷ்மீர்”. உண்டாக்கப்பட்டது என்று பாஜக அரசு பீற்றிக்கொண்டது. ஆனால், மக்களின் நீண்ட போராட்டங்கள் மூலமாகப் பெற்றவையெல்லாம் இப்போது நாசமாகிவிட்டன என்பதுதான் உண்மை.370-வது பிரிவை ரத்துசெய்தபோது வாக்குறுதியளித்த முதலீடுகளும் வேலையும் வளர்ச்சியும் எங்கே போய்விட்டன என்று மக்கள் இப்போது பாஜக-விடம் கேட்கிறார்கள். ஊழல்கள் குறைந்துவிட்டனவா? அல்லது ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறதா? காஷ்மீர்பண்டிட்களை அவர்களின் வீட்டுக்கு அழைத்துவர ஏதேனும் உருப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - என்பன போன்ற எந்தக் கேள்வியும் இதுவரை பரிசீலனைக்குக்கூட எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்பதுதான் உண்மை. கட்டுப்பாடுகளற்ற கைதுகளும் ஊடகங்களைத் துரத்தி அடக்குவதும் பாதுகாப்புப் படையைப் பயன்படுத்தி மக்களைக் குரல் அற்றவர்களாக ஆக்குவதும் பாஜக-வின் ‘புதியகாஷ்மீரில்’ ஒரு கொள்கையாகவே மாறிவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிய பிறகு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து மீண்டும் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஜம்மு-காஷ்மீரில் அமைதிநிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டது என்ற பாஜக அரசின் கூற்றுக்கு மாறாக இது உள்ளது. ‘‘சரியான சமயம்’’ என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை அரசுவிளக்க வேண்டியுள்ளது. 2019 ஆகஸ்ட் 5-க்குப் பின்னர்முதன்முறையாக ஜூன் 24 அன்று ஜம்மு-காஷ்மீர்தலைவர்களுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது. ஆனால், மக்களுக்கு ஏதேனும் நம்பிக்கை உண்டாக்குவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துவிட்டது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற வர்கள் எழுப்பிய எந்தவொரு பிரச்சனைக்கும் பிரதமர் தெளிவான உறுதிமொழி வழங்கவில்லை. ஜம்மு-காஷ்மீரிலும் வெளியிலும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையைப் பரிசீலிக்கவோ, ஒவ்வொரு காரணமாகச் சொல்லி மக்களுக்குத் துரோகம் இழைப்பதைத் தடுக்கவோ, மக்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கவோ தெளிவான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பெருமளவு அமைதியின்மை யையும், தாங்கள் அந்நியப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கருதுவதையும் இல்லாமற் செய்ய தேவையான முயற்சி ஏதேனும் அரசு மேற்கொள்ளுமென்று மக்களிடம் நம்பிக்கையுமில்லை. பிரதமருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதி எல்லை மறுநிர்ணயக் குழு (டீலிமிட்டேஷன் கமிஷன்) ஜம்மு-காஷ்மீரின் இரண்டு பகுதிகளுக்கும் வருகை தந்ததற்கு மேல் வேறொன்றும் நடக்கவில்லை.
தொகுதி மறுசீரமைப்புக் குழு
ஜம்மு-காஷ்மீர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும் (1957) ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் 47(3) பிரிவும் 2002-ல் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் திருத்தம் செய்து 2026 வரை சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செய்வது (டீலிமிட்டேஷன்) நடைபெறாமல் முடக்கப்பட்டிருந்தது. 2026-க்குப் பிறகான ஆரம்ப மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரை டீலிமிட்டேஷனை இந்தியா முழுவதும் நிறுத்தி வைப்பது என்பதன் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் திருத்தம் இருந்தது. ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இதை அங்கீகரிக்கவும் செய்தது. இதற்கு முரணாகவே ஒன்றிய அரசுமறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி டீலிமிட்டே ஷன் உருவாக்கியது. டீலிமிட்டேஷன் கமிஷன் தனதுநடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. டீலிமிட்டேஷன், தங்களை அதிகமாகத் தரம் தாழ்த்தும் குறிக் கோளையே கொண்டுள்ளது என்று பெரும் கவலையில்காஷ்மீர் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் தங்கள் தரப்பு கோரிக்கையைச் சொல்வதற்கு வாய்ப்பு வழங்காமல் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். அது முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதில் பல்வேறு காரணங்களைச் சொல்லி அரசுத்துறைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய அரசு.
தீர்வு என்ன?
அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாத அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூட மக்களை அனுமதிப்பதில்லை. 2019 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மக்களின் தன்னம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டது. மக்கள் ஒடுக்கப்படுவதாலும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாலும் மக்கள் தங்களின் தன்னம்பிக்கையை மீண்டும் பெறமுடியவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, மக்களுக்கு நிலத்திலும் வேலை வாய்ப்புகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வது முதலான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே நம்பிக்கைச்சூழலை உருவாக்க முடியும். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து நிலைநாட்டப்படுவதன் மூலம் மட்டுமே பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாகத் தீர்வுகாண முடியும்.
1947 ஆம் ஆண்டில் பிரிவினை சமயத்தில் ஒரு பிரத்தியேகமாய்ப் பல்வேறு கருத்துக்கள் கொண்ட, மதச்சார்பற்ற இந்தியா உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இஸ்லாமிய பாகிஸ்தானைவிட மதச்சார்பற்ற இந்தியாவின் பக்கம் சேருவதற்குத் தீர்மானித்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-லும் ஜம்மு-காஷ்மீரின் அரசமைப்புச் சட்டத்திலும் பெருமளவு சுயாட்சியும், தனி அந்தஸ்தும் உறுதிசெய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அரசமைப்புச் சட்டத்தின் இந்த உறுதிமொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமற் செய்ய ஆரம்பித்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. 2019 ஆகஸ்ட் மாதம் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை உடைத்துஒன்றிய அரசின் ஆட்சிப் பிரதேசங்களாக ஆக்கியது இந்திய ஒன்றியத்துடன் இருந்த ஜம்மு-காஷ்மீர் உறவைத் தகர்ப்பதற்குத் தீவிரமாக முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புத் தருவதாக அமைந்தது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சட்டப்படி அரசமைப்பு ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவுமான உரிமைகளை மறுக்கும் அணுகுமுறையை ஒன்றிய அரசு திருத்த வேண்டும். இதற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுசேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.
கட்டுரையாளர் : முகமது யூசுப் தாரிகாமி, மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
நன்றி: தேசாபிமானி நாளிதழ் (5.8.2021)
தமிழில்: தி.வரதராசன்