மலையாளத் திரைப்பட உலகில் நிலவும் பாலினப் பாகு பாட்டைக் களைவதற்காக இடது ஜனநாயக முன்னணி அரசு அமைத்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை அண்மையில் வெளிவந்துள் ளது. அது அங்கு நிலவும் ஆணாதிக்க அவலத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
கமிட்டி அமைவதற்கான பின்புலம்
2017இல் திரைப்பட பெண் கலைஞர் ஒருவர், தான் கடத்தப்பட்டு, கும்பல் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தாகப் புகார் அளித்தார். அவர் கூலிப் படையை அனுப்பிக் கொலை செய்யப் பட்டதைப் பார்த்தோம். ஆனால் பணம் கொடுத்து ஆள் அனுப்பி பாலியல் குற்றத்தை நடத்த ஏற்பாடு நடந்துள்ளது. இதன் மூளையாகவும் சதித்திட்டம் தீட்டி யவராகவும் கருதப்பட்ட பிரபல நடிகர் திலீப் உட்பட பலர் கைது செய்யப்பட்ட னர். திரைப்படங்களை விட அதிகமான திடுக்கிடும் திருப்பங்களோடு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இது மலை யாளத் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள அரசைப்பாராட்ட வேண்டும்
இதன் ஊடாக திரைப்பட பெண் கலை ஞர்கள் ஒன்று சேர்ந்து திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி திரை யுலகில் பெண்களின் பிரச்சனைகளுக்கா கக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். முதல மைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, தங்களது பிரச்சனைகளைத் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அந்த அடிப்படையில் கேரள இடது ஜன நாயக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஹேமா, திரைப்படக் கலைஞர் சி.சாரதா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி.வல்சலகுமாரி ஆகியோரைக் கொண்ட ஒரு கமிட்டியை உடனடியாக அமைத்தது.
திரையுலகில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கான நீதி விசாரணைக் குழு இது என்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப் படுகிறது. அப்படி அல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுக ளையும் விசாரித்து தீர்வுக்கான பரிந்துரை வழங்கும் முயற்சியாகவே நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியின் பணி வரையறையில், பாதுகாப்பு உள் ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள், பணி நிலைமை, ஊதியம், திரைப்படத்துடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பை விரிவு செய்வது, குறிப்பாக தொழில்நுட்ப தளத்தில் பெண்களுக்கு பயிற்சி கொடுக்க ஸ்காலர்ஷிப், கட்டணச் சலுகை போன்றவற்றை யோசிப்பது, பிர சவம், குழந்தைப் பராமரிப்பு, உடல் நலக் குறைவின் காரணமாக வேலைக்குப் போக முடியாவிட்டால் அந்தக் கால கட்டத்திற்கு நிவாரணம், திரைப்பட உள்ளடக்கத்தில் பாலின சமத்துவம் வரு வதற்கான ஏற்பாடு, திரைப்பட தயா ரிப்பில் பெண்கள் அதிகம் முன்னுக்கு வருவதற்கான ஊக்கம் அளிப்பு போன்ற பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது மிகச் சிறப்பானது. இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய ஏற்பாடு நடக்கவில்லை. உண்மையி லேயே கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தை இதற்காகப் பாராட்ட வேண்டும்.
அறிக்கை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
2019 டிசம்பர் 31இல் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (2020 பிப்ரவரி) நீதிபதி ஹேமா, அரசுக்கு எழுதிய கடிதத்தில், பல்வேறு சென்சிடிவ் விவரங்கள் இருப்ப தால் அறிக்கையைப் பொது வெளியில் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக முதலமைச்சர் சுட்டிக் காட்டி யுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையின் பல்வேறு இடங்களில், விவரங்களை சேகரிப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டி இருந்தது, உண்மைகளை முன்வந்து சொல்ல- பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பயந்தனர், அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் வெளியிடப்படாது என்று திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்த அடிப்படையிலேயே கமிட்டியி டம் பேசினர். எனவே அறிக்கை சமர்ப்பிப் பதற்கே 2 வருடங்கள் ஆயின எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையை வெளியிடு வதற்கு எதிராக (தனிநபர் அந்தரங்கத் தகவல்கள் – issues of privacy - அடிப்ப டையில்) வழக்குகள் போடப்பட்டன. இதற்கிடையே 2024 ஜூலையில் மாநில தகவல் ஆணையம் சென்சிடிவ் தகவல்களை அகற்றிவிட்டு அறிக்கை யை வெளியிடுமாறு ஆணை பிறப்பித் தது. உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதி தான், கடைசியாக ஒரு வழக்கைத் தள்ளுபடி செய்து, அறிக்கை வெளியிட உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 19ஆம் தேதி, 63 பக்கங்கள் நீக்கப்பட்டு மீதி அறிக்கை வெளி யிடப்பட்டது. தணிக்கை செய்யப்படாத முழு அறிக்கையை சீல் செய்யப்பட்ட கவரில் கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில் செப்டம்பர் 9ஆம் தேதி அதனை சமர்ப்பிப் பதற்கான ஏற்பாடுகளைக் கேரள அரசு செய்து வருகிறது.
மேலும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) ஏற்படுத்தப்பட்டு, அது அறிக்கையில் இடம் பெற்றுள்ள பாலியல் குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணையைத் துவங் கியிருக்கிறது. போக்சோ (POCSO) வழக்குகளை நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற பிரச்சனை களில் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும். அதற்கு உகந்த சூழலை காவல்துறையின் சிறப்பு புல னாய்வுக் குழு ஏற்படுத்த வேண்டும். திரைத் துறையில் பெண்களின் பாதுகாப்பு உறு திப்படுத்தப்படும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கேரள முதலமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் பணி யாற்றும் பல்வேறு துறை சார்ந்த பெண்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து பரிந்து ரைகளை விவாதிக்க கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவெடுத் துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் தலைமையி லான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக- இரண்டும் அரசியல் உள் நோக்கத்தோடு, இடது ஜனநாயக முன்னணி அரசை நிந்தனை செய்யும் ஆடு களத்தில் முன் வரிசையில் செயல்படு கின்றன. பிரச்சனை அரசியலாக்கப்படு வதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கமிட்டிக்கு வந்த பிரச்சனைகள்
மலையாளத் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஆண்கள் ஓர் அதிகார மையமாக உருவெடுத்து அவர்கள் வைப்பதே எழுதப்படாத சட்டமாக உள்ளது என்ற புகார் தான் முக்கியமாக வந்துள்ளது. அவர்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்தால் அடுத்து திரைப்படத் தொழிலுக்கே முழுக்குப் போட வேண்டி யதுதான். வாய்ப்புகள் முற்றாக மறுக்கப் படும். அதிகாரப்பூர்வமற்ற தடையாணை அமலுக்கு வரும்.
திரைத் துறையில் பெண்கள் 30 வித மான வேலைகளைப் பார்க்கிறார்கள். அடிப்படை சுகாதார வசதிகளில் போதாமை உண்டு. குறிப்பாக, துணை நடிகைகள் என்றால் உணவு, குடிநீர் உட்பட கிடைப்பது அரிது. கழிப்பிட வசதி பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்ப தில்லை. போக்குவரத்து, தங்கும் இடம் கூட பிரச்சனை தான். உடை மாற்றும் வசதி இல்லை. நிர்ணயித்த ஊதியம் கிடைப்ப தில்லை. கைக்கு வந்து சேரும் போது சில சமயம் கால் பங்கு தான் மிஞ்சும். படப் பிடிப்பின் போது காயமடைந்தால் சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் இல்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால் சிறு நீரை அடக்கி வைத்துக் கொள்வது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற முறைகள் கையாளப்படுகின்றன. இது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிறது. அல்லது ஒதுக்குப்புறத்தில் யாராவது புடவை அல்லது துணியை வைத்து மறைத்துக் கொண்டால் அடுத்தவர் சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் தண்ணீர் இருக் காது. மாதவிடாய் காலத்தில் படாத பாடுபட வேண்டும்.
வருமானம் உள்பட எதிலும் பாலியல் சமத்துவம் இல்லை. சிகை அலங்காரம், ஒப்பனை பணி செய்யும் பெண்களுக்கு சிகை அலங்காரம் செய்பவர் என்கிற பெயர் மட்டுமே கிடைக்கும். ஒப்பனைக் கலைஞர்களாகக் கருதப்பட மாட்டார்கள். எனவே ஆண்கள் மட்டுமே ஒப்பனைக் கலைஞர் சங்கத்தில் உறுப்பினராக முடியும்.
பாலியல் தாக்குதல்கள்
பாதிக்கப்பட்ட பலரும் கொடுமை யான பாலியல் தாக்குதல் குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். பிரபலங்கள் உட்பட பல்வேறு ஆண்கள் இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். சினிமா துறை யில் நுழையும்போதே அட்ஜஸ்ட்மென்ட், காம்ப்ரமைஸ் என்கிற இரண்டு வார்த்தை களைக் கேட்டுக் கொண்டே தான் பெண்கள் வர முடியும். யார் கேட்டாலும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் இதன் உட்பொ ருள். தங்கும் இடத்தின் கதவுகள் இடிந்து விழுவது போல தட்டி அழைப்பார்கள். இரவு முழுவதும் தூக்கமில்லாமல் பயந்து கொண்டு படுக்க வேண்டும் அல்லது படப்பிடிப்பு இடத்திற்கு உறவினர்களை அழைத்துக் கொண்டு வர வேண்டும். மறுத்தால், சிறு முணுமுணுப்பை செய்தால் கூட, உடனடியாக வாய்ப்பு கள் மறுக்கப்படும், பணிச்சூழல் தொந்த ரவு நிறைந்ததாக மாறும். இணைய வழி பாலியல் துன்புறுத்தல் உச்சகட்டத் துக்குப் போகும். பிரச்சனைகளைத் தட்டிக் கேட்பதற்கு எந்த ஏற்பாடும் இல்லை என அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் வந்ததாக ஹேமா கமிட்டி கூறுகிறது.
ஆங்கில பத்திரிகை நிருபர் ஒருவர், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் அத்தனை பேருக்கும் போதுமான அடிப்படை வசதி கள் என்பது நடைமுறை சாத்தியமற்றது என்றார். நீங்கள் தயாரிப்பாளர், இயக்குநர் கோணத்திலிருந்து மட்டும் பேசுகிறீர்கள். பங்கேற்கும் கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு என்ன பதில் என்று நாம் திருப்பிக் கேட்க வேண்டியிருந்தது.
ஒரு திரைப்பட பெண் கலைஞர் நம்மிடம் பேசும் போது, அடிப்படை சுகாதார வசதிகளில் கடந்த 20 வருடங்க ளில் முன்னேற்றம் உண்டு, இன்னும் மேம் படுத்தலாம் என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்றுமே இல்லை என்ற புகார்கள் காலாவதியானவை (out dated) என்று கூறினார். அதே போல் வாய்ப்பு வழங்குவ தற்கு ஈடாகப் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்துவது என்பது கமிட்டி கூறுவது போல பரந்துபட்டதாக இல்லை. மேலும் இயக்குநரோ தயாரிப்பாளரோ புகார் வந்தால் தலையிடுவது உண்டு எனவும் கூறினார்.
மொத்தத்தில் பரிந்துரைகளை விவாதிக்க அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் சில தெளிவுகள் கிடைக்கக் கூடும். பிரச்சனைகள் இவை தான் என வரையறுக்கவும் முடியும்.
பரிந்துரைகள்
o பாலியல் தாக்குதல் உட்பட பெண்க ளுக்கு எதிரான பாகுபாடு மிக அதிகமாக இங்கு நிலவுவதால் புகார் கமிட்டி (IC) வைத்துப் பயனில்லை. மாவட்ட நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம் படைத்த சுயேச்சையான தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் குறித்த அனைத்துப் பிரச்சனைகளும் இங்கு வரலாம். குறிப்பிட்ட கால வரையறையில் பிரச்ச னைகள் தீர்க்கப்பட வேண்டும். இதை எதிர்த்த மேல்முறையீடு உயர் நீதிமன்ற த்திற்குத் தான் செல்ல வேண்டும்.
o கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள், தங்குமிடம், போக்கு வரத்து, உடைமாற்றும் வசதி கண்டிப் பாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
o விரிவான திரைத்துறைக் கொள்கை ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். பாலின சமத்துவம் அதன் மையக்கருவாக இடம் பெற வேண்டும்.
o பாலின சமத்துவ உள்ளடக்கம் பெற்ற திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெண் தயாரிப்பாளர்க ளுக்குக் கடன் உதவி வழங்கப்பட வேண்டும். சமூகத்தின் நலிந்த பிரிவுக ளில் உள்ள பெண்கள், குடும்பஸ்ரீ குழுக்களின் பெண்கள் போன்றவர்க ளுக்கு திரைத் துறையின் பல்வேறு அம்சங்களில் தரமான பயிற்சி அளிக்க வேண்டும். கல்லூரிகளில் திரைத் துறைப் படிப்பு படிப்பதற்கு ஸ்கா லர்ஷிப் கொடுக்கப்பட வேண்டும். திரைத்துறையில் செயல்படும் தீர்மா னிக்கும் கமிட்டிகளில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும்.
o பிரசவம், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட காலங்களில் நிவாரணம் வழங்குவ தற்கு சேம நிதி ஒன்றை உருவாக்கி, அரசும் திரைத் துறையும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
o பெண்கள் மீது வன்முறை பிரயோ கிப்பதை ஆண்மையின் பெருமித மாகக் காட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். திரைப்படத்தில் விலங்கு கள் சித்ரவதை செய்யப்படுவதில்லை என சட்ட ரீதியாகப் போடுவதைப் போல இத்திரைப்படத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படவில்லை எனப் போட வேண்டும் என்கிற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் திரைத்துறையில் பணியாற்று பவர்களிலும், சினிமா உள்ளடக்கத்திலும் பிரதிபலிப்பதில்லையே. ஏன் என்கிற கேள்வியை ஹேமா கமிட்டி வலுவாக முன்வைக்கிறது. பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்பது மரபணுவில் உள்ளதா? இல்லை. அது சமூகக் கோட் பாடாக உள்ளது. எனவே சமூகக் கோட்பா டுகளைத் திருத்தி எழுத வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்க ளிலும் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு பல்வேறு வடிவங்களில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. கேரள மாடலை இதர மாநிலங்கள் பின்பற்றி னால், அது திரையுலகில் பாலின சமத்து வத்தை நிலை நாட்ட பெரிதும் உதவும்.
உ.வாசுகி
மத்தியக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)