சில கட்சிகளின் கொடிகளை தமிழ்நாட்டிலும், சில கட்சிக் கொடிகளை இந்தியாவிலும் பார்க்கலாம். ஆனால், உலகம் முழுவதும் பறக்கும் கொடி என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மட்டுமே.
முதலாளித்துவத்தின் தோல்வியும் இடதுசாரி எழுச்சியும்
உலகின் பல பகுதிகளில் வலதுசாரிகள் அதிகாரத்தை கைப்பற்றி வருகிறார்கள்.முதலாளித்துவத்தால் ஒருபோதும் தீர்வை கொண்டு வர முடியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் திவால் ஆகிப்போன பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடித்த இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதற்கெதிராக இலங்கை மக்களின் பெரும் போராட்டம், அந்த அரசை கவிழ்த்தது. இடதுசாரிகள் மக்கள் போராட்டங்களுக்கு முன் நின்று ஆதரவளித்ததன் விளைவாக தற்போது இலங்கையில் இடதுசாரிகளை மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.
ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறி
இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் உக்ரைன், ரஷ்யா போர் உள்ளிட்ட உலகில் நடைபெறும் பல்வேறு போர்களுக்கு ஏகாதிபத்திய நாடுகளே காரணமாக இருக்கின்றன. யுத்தங்களுக்கு காரணமான ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்துவதும், இதற்கெதிராக மக்களை அணி திரட்டி களத்தில் இறங்கி போராடுவது மட்டுமே தீர்வைத்தரும்.
முதலாளித்துவத்தின் அடக்குமுறை
முதலாளித்துவம் உலகம் முழுவதும் ஏகபோக உரிமையை அமல்படுத்த துடிக்கிறது. தொழிலாளர், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுகளை காவல்துறை மூலம் முடக்குகிறது. தவிர்க்க முடியாத சூழலில் நீதிமன்ற தீர்ப்பின் மூலமும் முடக்க நினைக்கிறது.
பாஜகவின் பாசிச ஆட்சி
இந்தியாவில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தனது சொந்த காலில் நிற்க முடியாமல், பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு மற்றும் வகுப்புவாத கொள்கையை கடைப்பிடிக்கும் அரசாக உள்ளது.
களப்போராட்டத்தின் அவசியம்
அனைவரும் சமம் என்று கூட்டி வந்த கூட்டத்திடம் கூறுவதை விட, அடக்குமுறைக்கு எதிராக ஒடுக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் சென்று அவர்களுக்காக களத்தில் நிற்க வேண்டும். பாசிசத்திற்கும், பாயாசத்திற்குமே வித்தியாசம் தெரியாதவர்கள், அரசியலில் வொர்க் பிரம் ஹோம் நடத்தி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். அரசியலில் வொர்க் பிரம் ஹோம் பண்ண முடியாது. களத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும்.
(சிபிஎம் கோவை மாவட்ட மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி ஆற்றிய உரையிலிருந்து)
அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், ‘மிகச்சிறந்த சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த சட்டம் நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீடித்து இருக்கும். கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் கெட்டுவிடும்’ என்றார். அதுதான் தற்போது மோடி ஆட்சியில் நடக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ஆகியவை அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டது அல்ல.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கொடுமைகள்
இந்த சட்டத்தில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; ஜாமீன் கிடைக்காது. எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். விசாரணை செய்யாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து சிறையில் வைக்கலாம். தில்லி ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி ஆகியோர் இந்த சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் வெளிவர முடியவில்லை. பாதிரியார் ஸ்டேன்சுவாமி நோய்வாய்ப்பட்டு சிறையிலே இறந்துவிட்டார்.
இருக்கும், ஆனால் இருக்காது என்ற நிலை
நாட்டில் நீதிமன்றம் இருக்கும்; ஆனால் ஜாமீன் கிடைக்காது. நாடாளுமன்றம் இருக்கும்; ஆனால் ஜனநாயகம் இருக்காது. அரசியல் சட்டம் இருக்கும்; ஆனால் ஜனநாயக உரிமைகள் இருக்காது. இத்தகைய மோசமான ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது.
கார்ப்பரேட் நலன்களுக்காக மட்டுமே இயங்கும் ஆட்சி
இந்தியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்துவிட்டனர். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி தருவதில்லை.
கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாத்தியம்
ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களிடம், நாடாளுமன்றத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லையே; இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா? என கேட்டார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிர்காலம் இல்லையென்றால், இந்தியாவிற்கு எதிர்காலம் இல்லை என தோழர் யெச்சூரி பதிலளித்தார். ஆகவே வரும் காலங்களில் பாசிச பாஜக அரசை வீழ்த்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி வீரியமிக்க போராட்டங்களை நடத்தும்.
(சிபிஎம் கோவை மாவட்ட மாநாட்டு பொதுக்கூட்டத்தில்
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதிலிருந்து)
கோவை மாவட்ட மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் உ.வாசுகி உரையாற்றினார்.