articles

img

பாட்டாளி வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்! - ஏ.கே.பத்மநாபன்

பாட்டாளி வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

1991 ஜூலை மாதம் நவதாராளமய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் அதற்கு எதிராக மகத்தான போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த ஆண்டு நவம்பரில் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினோம். இன்று வரை அத்தகைய போராட்டங்களை நடத்தி வருகிறோம். சமீபத்தில் ஜூலை 9ஆம் தேதி 25 கோடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.  முதன்மை எதிரி ஏகாதிபத்தியம்  ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கம் முதல் நடத்தி வருகிறோம். 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுகுண்டு வீசியது. லட்சோப லட்சம் மக்கள் செத்து மடிந்தனர். தற்போது வரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இந்த அணு ஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது முதன்மையான போராட்டமும் முதல் எதிரியும் ஏகாதிபத்தியம்தான். இனி ஒரு உலக யுத்தம் நடைபெறும் என்றால் அது அணு ஆயுத யுத்தமாகவே நடைபெறும். அந்த யுத்தம் முடிந்து நான்காவது உலக யுத்தம் நடைபெறுமானால் அது கற்கால மனிதனின் போராகவே அமையும்.  கியூபாவை பாதுகாப்போம்  1959இல் கியூபா விடுதலை அடைந்தது முதல் இன்று வரை தொடர்ந்து பொருளாதார தடைகளையும் வர்த்தக தடைகளையும் விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி செய்கிறது. கியூபாவை பாதுகாப்பதற்கான பல்வேறு நிகழ்வுகளை நாம் நடத்தி வருகிறோம். 1981இல் இந்திரா காந்தி கியூபா மக்களுக்கு உணவுக் கப்பலை அனுப்பினார். நமது தலைவர்கள் சுர்ஜித், எம்.ஏ.பேபி கியூபாவிற்காக பல்வேறு உதவிகளை ஒருங்கிணைத்தனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கப் பின்புலத்தில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்துள்ளது. காசா பகுதியில் மக்கள் உணவின்றி கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். ஆரம்பகாலம் முதலே பாலஸ்தீன மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய பாஜக அரசு இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது.  கடும் வறுமையில் இந்திய மக்கள்  இந்தியாவில் இருக்கும் 50 சதவீத மக்கள் வெறும் 3 சதவீதம் செல்வங்களை மட்டுமே பெற்றுள்ளனர். பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றபின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் மக்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்திய கார்ப்பரேட்டுகள் இக்காலகட்டத்தில் பெரும் லாபத்தை குவித்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய விவசாயிகள் 13 மாதங்கள் மகத்தான போராட்டத்தை நடத்தி 800 விவசாயிகளின் உயிர் தியாகத்திற்குப் பிறகு அச்சட்டத்தை திரும்பப் பெறச் செய்தனர்.  தீவிர போராட்டங்களின் காலம்  வரக்கூடிய காலத்தில் தொழிற்சங்கங் கள் மற்றும் விவசாயிகள் இணைந்த போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கன்வாடி, சத்துணவு தன்னார்வலர்கள் மற்றும் சேவை ஊழியர்களை கடும் சுரண்டலுக்கு ஆளாக்கியுள்ளனர். அவுட் சோர்சிங், பயிற்றுனர், இன்டர்ன்ஷிப் போன்ற பல வார்த்தைகளைக் கூறி தொழிலாளர்களை சுரண்டி வருகின்றனர். ராணுவத்தில் அக்னி வீர் திட்டமும் இத்தகைய திட்டமே.  வகுப்புவாதத்திற்கு எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும், அரசு சொத்துக்களைப் பாதுகாக்கவும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் இரண்டு கன்னியாஸ்திரிகளை கைது செய்தார்கள். தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.   சிஐடியு அமைப்பு துவங்கியது முதல் இன்று வரை தொழிலாளர் நலனிற்காகவும், விவசாயிகள், சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகளுக்காகவும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். அத்தகைய போராட்டங்களை வரக்கூடிய காலங்களில் பெரும் எண்ணிக்கையில் நடத்த வேண்டியுள்ளது.   சிஐடியு திருப்பூர் மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்து ஆற்றிய உரையில் இருந்து..