நேபாளப் போராட்டம் கற்றுத் தரும் பாடம் - எஸ். கண்ணன்
நேபாளத்தில் நடந்த போராட்டம், வன்முறை, தீவைப்பு, முன்னாள் பிரதமர் உள்ளிட்டவர் களின் வீடுகள், அமைச் சர்கள் மீது தாக்குதல் என செப். 8, 9 தேதிகளில் நடந்த போராட்டம் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த போராட்டம் மூலம் சிறைகள் உடைக்கப்பட்டு 13 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரச்சனைகளும் – சமூக வலைத் தளங்கள் முடக்கமும்
ஊழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஆளும்கட்சி தலைவர்களின் உறவினர்கள் சமூகத்தில் செலுத்தும் செல்வாக்கு ஆகியவை பெரும் பிரச்சனை எனக் கூறப்படுகிறது. இவை உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனைகள்தான். குறிப்பாக முதலாளித்துவ சமூகம் பின்பற்றும் கொள்கையின் விளைவாக எழுந்துள்ள பிரச்சனைகள்தான். ஆனால் நேபாளத்தில் வெடித்ததைப் போல் ஏன் எல்லா நாடுகளிலும் வெடிக்க வில்லை? இந்த கேள்விக்கும் சமூக வலைத் தளங்கள் மீதான தடைக்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது குடிமக்களின் மிக முக்கியமான கருத்துரி மையாக உள்ளது. இந்த கருத்து சுதந்திரம் தடை செய்யப்படும் போது ஏற்பட்ட விளைவு நேபாளத்தில் நடந்த போராட்டம் மற்றும் கலவரம். சமூக ஊடகங்கள் பொழுது போக்கு சாதனம் அல்லது கருத்துரிமைக்கான பொதுத் தளம் மட்டுமல்ல - அதன் மூலம் வருவாய் ஈட்டும் இளைஞர்களும் கணிச மாக உள்ளனர். 80 சதவீத வணிகம் நேபா ளத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கிறது. வாழ்வாதாரமும், வணிகமும், கருத்துரி மையும் ஒரு சேர தடுக்கப்பட்ட நிலையில், நேபாளத்தின் இளைஞர்கள் வீதிக்கு வந்தது நடந்துள்ளது.
நேபாளத்தின் வேலையின்மை'
கடந்த 10 ஆண்டுகளாக நேபாளத்தின் வேலையின்மை 10 சதத்தில் இருந்து 11 சத மாக உள்ளது. 15 வயதில் இருந்து 22 வயதுக் குள்ளான இளைஞர்களின் வேலை யின்மை 15 சதத்தில் இருந்து 22 முதல் 24 சதமாக அதிகரித்துள்ளது. உலக அளவில் வேலையின்மை விகிதம் 4.9 சதம் முதல் 5.1 சதமாக உள்ளது. பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் 4 சதமாக வேலை யின்மை விகிதம் உள்ளது. இளையோரின் வேலையின்மை 11.2 சதம் ஆகும். இந்தியா வில் 5.2 சதம் முதல் 5.6 சதம் உள்ளது. இந்தியாவில் 15 வயது முதல் 25 வயது கொண்ட இளையோரின் வேலையின்மை 14.9 சதம் ஆக உள்ளது. இந்த புள்ளி விவ ரங்களைக் கடந்து உண்மையான பாதிப்பு கள் இருக்கக்கூடும். ஆனால் வேலை யின்மையின் தாக்கம் உலக அளவில் பெரும் போராட்டங்களைத் தூண்டாத போது, நேபாளத்தில் பெரும் போராட்டமாக பிரதிபலித்தது ஏன்? புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக விகிதத்தில் உள்ள நாடாக நேபாளம் உள்ளது. மொத்த மக்கள் தொகை 2.97 கோடி. இதில் இந்தியாவில் புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர் எண்ணி க்கை இந்திய மக்கள் தொகை கணக்கின் படி 5,71,721 என உள்ளது. ஆனால் நேபாள கணக்கின் படி 80 லட்சம் வரை இருக்கலாம். இந்தியாவுடனான ஒப்பந்தம் 1950 படி, இந்தியாவிற்குள் நேபாளத்தினர் வந்து செல்லவும், இந்தியர்கள் நேபாளத்திற்குள் சென்று வரவும் தடை ஏதும் இல்லை. நாள் ஒன்றுக்கு 3000 பேர் நேபாளத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.
ஜென் இசட் (Gen Z) என்ற இளம்தலைமுறையினர்
கோவிட் 19 பாதிப்பிற்கு பின்தான் இந்த Gen Z (ஜென் இசட்) என்ற இளைஞர்கள் குறித்த கருத்தாக்கம் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக 1997க்கு பின்னரும், 2012க்கு முன்னரும் பிறந்தவர்கள், அதாவது 13 வயது முதல் 28 வயது கொண்ட இளைஞர்கள் ஜென் இசட் என குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் ஏராளமான தகவல்களைப் பெற்ற வர்களாக, அதிவேக செயல்பாடு கொண்ட வர்களாக உள்ளனர். மிக அதிக நேரத்தை டிஜிட்டலில் செலவிடக் கூடியவர்களாக இந்த பிரிவினர் உள்ளனர். அதிக மன அழுத்தம், நிதிச் சிரமம், கல்விக்கடன், நுகர்வு கலாச் சாரத்தின் தாக்கம், வேலைத் தளத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், போதுமான உடலியல் இயக்கம் இல்லாத உடல்ரீதியான பிரச்சனைகள் ஆகிய சமூக சவால்களை இந்த பிரிவினர் சந்திப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கண்ட காரணங்களால், மிகுந்த அக்கறையுடனும், கவனத்துடனும் வழி நடத்தப்பட வேண்டிய பிரிவினராக இந்த வயதினர் உள்ளனர். ஆனாலும் 57 லட்சம் பேர் மட்டுமே நேபாளத்தில் மேற்குறிப்பிட்ட வயது வரம்புக்குள் உள்ளனர். இது 6ல் ஒருவர் என்ற வகையில் உள்ளது. இந்தியா வில் 65 சதவீதமானோர் 35 வயதுக்குக் கீழ் உள்ளனர். மேலே குறிப்பிட்ட அனைத்து தாக்கமும் இந்தியாவில் உள்ள இளை ஞர்களிடம் இருக்கத்தான் செய்யும், எனும் போது, நேபாளத்தில் ஜென் இசட் பிரிவினர் தீவிர கலகத்தில் ஈடுபட்டது கவனத்திற்குரி யது; ஆய்வுக்குரியது. சமூக வலைத் தள பயன்பாடு இந்தியா 33.7 சதம், இலங்கை 35.4 சதம், வங்க தேசம் 34.3 சதம் என்ற ஒப்பீடுகளுடன் நேபாளம் 48.1 சதமாக அதிக அளவில் உள்ளது. காரணம் இந்தியா, மலேசியா, அரபு நாடுகள், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா என அயல்நாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் அதிக அளவில் உள்ளனர். எனவே சமூக வலைத்தள தொடர்புகள்தான் சொந்த நாட்டோடும், மக்களுடனும் பிணைத்து வைத்துள்ளன. மேலே கூறியது போல், சமூக வலைத்தளம் மூலமான வணிகம் இதர நாடுகளை விடவும் நேபாளத்தில் அதிகம் இருப்பதற்கு, மேற்படி புலம் பெயர்த லும் முக்கிய காரணம் ஆகும். இந்த விவரங் களின் பின்னணியில் நேபாளத்தில் உள்ள ஜென் இசட் பிரிவு இளைஞர்கள் அண்மை யில் ஏற்படுத்திய தாக்கம், மிக முக்கிய பாடமாக கருதப்பட வேண்டும்.
17 ஆண்டுகளில் 14 ஆட்சிகள்
கடந்த 17 ஆண்டுகளில் 14 அரசுகள் அமைந்துள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் தனி யாகவும், காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்தும் அரசுகள் அமைந்துள்ளன. இந்த ஆட்சி யாளர்கள், கடந்த காலத்தில் ஆட்சி செய்த மன்னராட்சி முறையை ஒழித்து இருந்தா லும், உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங் கள் முழுமையடையவில்லை. நிலையான ஆட்சியாளர்கள் இல்லாதது முக்கிய கார ணம். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டாக ஆட்சி அமைத்த போதிலும், மிகப் பெரிய அளவில் புலம் பெயர்தலைத் தடுக்கும் வகையிலோ, வலுவான தொழில் புரட்சிக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் தன்மையிலோ கொள்கை முடிவுகளை எடுக்க முடியவில்லை. சுற்றுலா போன்ற வேலைவாய்ப்பும், விவசாயமும் பிரதா னமாக உள்ளது. அதே நேரம் நில உடைமை யில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் ஏமாற்றம் அளித்தது, அடுத்த தலைமுறையிடம் அதிருப்தியை அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருந்த போதும், தேர்தல் மூலமாக அமைந்த நாடாளுமன்ற அமைப்பு முறை மூலமாக மட்டுமே கொள்கை முடிவு எடுக்கும் நிலை உள்ளது. உடனடியாக கொள்கை மாற்றங் களை முன்மொழிந்து அமலாக்கக் கூடிய தாக அமைந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகளும் இல்லை.
இலங்கை – வங்கதேசம் மற்றும் நேபாளம்
இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய மூன்று நாடுகளிலும் முன்னெழுந்த பிரச்சனைகள் ஒரேவிதமானவை. இலங்கை யில் மக்கள் தொகை 2.19 கோடி. வங்காள தேசத்தில் 17.36 கோடி. நேபாளத்தில் 2.97 கோடி ஆகும். மூன்று நாடுகளிலும் அடுத்தடுத்து பெரும் எழுச்சியும் தொடர்ந்த வன்முறையும் நடந்துள்ளது. 2022 முதல் இலங்கையில் ஏற்பட்ட போராட்டங்கள் அமைப்பு ரீதியில் இருந்தது. ஆட்சியாளர் கோத்தபய ராஜ பக்சே நாட்டை விட்டு ஓடும் அளவிற்கு மக்களின் தன்னெழுச்சியான போராட்டங் கள் வலுவாக இருந்தாலும், அதை ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒருங்கிணைத்தனர். அது அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சி மாற்றமாக மட்டும் இல்லாமல், கொள்கை மாற்றத்திற்கான சில முன்மொழிவுகளையும் வைத்துச் செயல்பட உதவியது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கலைக்கப்பட்டு, பேரா. முகம்மது யூனுஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்த முகமது யூனுஸ் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டினால் அழைத்து வரப்பட்டார். நேபாளத்திலும் போராட்டம், வன்முறை, துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி சுசீலா கார்கி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார். அதற்கு முன்னதாக காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா, இந்த பொறுப்பிற்கு முன்மொழியப்பட்ட வர்களில் ஒருவராக இருந்தார். அரசியல் ஈடுபாடு இருந்தாலும், இவர் அமெரிக்க நிதி யில் தன்னார்வ குழுக்கள் நடத்தி வந்துள் ளார். தன்னார்வ குழுக்கள் சில நாடுகளில் போராட்டங்களை வழிநடத்துவது, அரசியல் சார்ந்தும், அரசியல் சாராத அந்நிய நாட்டு தொடர்புகள் மூலமானதாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது. வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் சந்தித்துள்ள போராட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட கல்விசார் சமூகத்தினரின் ஈடுபாடுகளையும் உள்ளடக்கி இருப்பது ஆய்வுக்கு உரியது.
பூகோள அரசியல்
நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்றும் இந்தியாவின் அண்டை நாடுகள். நேபாளம், இந்தியா மற்றும் சீனாவை எல்லையாகக் கொண்ட நாடு. இந்தியா வுடன் 1751 கி.மீ, சீனாவுடன் 1389 கி.மீ எல்லையைக் கொண்டுள்ளது. அண்மை யில் நேபாளம் மற்றும் சீனா மேற்கொண்ட சில பொருளாதார உடன்படிக்கைகள் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளன என்பதையும் இதன் பின்னணியில் மனதிற் கொண்டும் இதைப் பார்க்க வேண்டும். எப்படியிருப்பினும் ஒரு ஆட்சி ஊழ லையும், வேலையின்மையையும், வறுமை யையும், சமூக பிரச்சனைகளையும் தீர்க்கா மல் இருக்க முடியாது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையுடன் இந்த பிரச்சனைகள் இணைந்திருக்கின்றன. எனவே கொள்கை மாற்றம் முன் வைக்கப் பட வேண்டும். உள்நாட்டில் உள்ள ஆட்சி யாளர்களுக்கான சலுகைகளை எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு பெரும் முதலாளிகளுக்கு வழங்கும் சலுகை களை எதிர்ப்பதும் முக்கியம் என்பதை போராட்டக்காரர்கள் உணர வேண்டி யுள்ளது.