“உன் கொள்கை எதிரிகள் வென்றுவிட்டால் உங்களில் இறந்தவர்களுக்குக்கூட பாதுகாப்பில்லை” என்றார் அறிஞர் வால்டர் பெஞ்சமின்.
2015க்கு பின்னர் இந்த நாட்டில் எது செய்தால் சரி எது செய்தால் தவறு என்ற பார்வை மாறி யார் செய்தால் சரி யார் செய்தால் தவறு என்று பார்க்கும் நடைமுறைக்கு வந்துவிட்டோம். கடந்த சில நாட்க ளில் நாட்டில் நடந்த சில சம்பவங்கள் நாடு ஒரு இருண்ட காலத்திற்குள் பயணிக்க இருப்பதை உணர்த்துவ தாகவே நான் அறிகிறேன்.
மாட்டுக் குண்டர்கள்
கடந்த ஆகஸ்ட் 23 அன்று ஆர்யன் மிஸ்ரா என்ற +2 மாணவனை “பசு பாதுகாவலர்கள்” (cow vigilants) என தங்களை தாங்களே அழைத்துக் கொள்கின்ற “மாட்டுக் குண்டர்கள்” முப்பது கிலோ மீட்டர் தூரம் காரில் விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அனில் கவுஷிக் என்பவன் தன் நண்பர்கள் சிலரோடு “நாட்டுக்காக வாழ்வோம்” என்ற அமைப்பை நடத்தி வருகிறான். அப்பகுதியில் மாடுகளைக் கடத்தி விற்பனை செய்பவர்கள் ஒரு சொகுசு காரில் வருவதாக அவனுக்கு ஒரு தகவல் வருகிறது. உடனே சாலை யில் வரும் கார்களை மறிக்க முயற்சிக்கிறான். ஒரு சொகுசு காரில் வந்த ஐந்து இளைஞர்களை நிறுத்த முயற்சிக்கும் போது அந்த கார் நிற்காமல் வேகமாக போகிறது. அவர்களை பசு கடத்தல்காரர்கள் என்று நினைத்து பின் தொடர்ந்து சென்று முப்பது கிலோ மீட்டர் தாண்டி அவர்களை நோக்கி துப்பாக்கியால் கவுஷிக் சுட்ட போதுதான் ஆர்யன் மிஸ்ரா குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே இறக்கிறான். உண்மை யில் அந்த வாகனத்தில் இருந்த இளைஞர்கள் அனை வரும் மாணவர்கள். அந்த காரில் வந்தவர்கள் இஸ்லா மியர்கள் என்று தவறாக நினைத்து கவுஷிக் சுட்டு விட்டான். ஆனால் இறந்த மாணவன் பிராமண சமூகத்தைச் சார்ந்த வன் என்பதை அப்போது அவன் அறியவில்லை.
ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட முதியவர்
ஆகஸ்ட் 28. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கவுன் மாவட்டத்தில் இருந்து கல்யாண் என்கிற பகுதிக்கு தனது மகள் வீட்டுக்கு ரயிலில் சென்ற 75 வயது முதியவர் ஹாஜி அஷ்ரப் என்பவரை அதே ரயிலில் பயணம் செய்த ஏழு குண்டர்கள், மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்று சொல்லி கண்மூடித்தனமாக தாக்குகின்றனர். தனது மனைவி தங்களது மகளுக்கு சமைத்து தந்த எருமை மாட்டுக் கறி என்றும் அது பசு மாட்டுக்கறி அல்ல என்றும் சொல்லி கையெடுத்து கும்பிட்டு தன்னை விட்டுவிட வேண்டும் என்று அழுது கெஞ்சுகிறார். எதற்கும் செவி கொடாமல் அவரை அடித்து ரயிலை விட்டு கீழே தள்ளுகி றார்கள் அந்த குண்டர்கள். இக்காணொலி இணை யத்தில் வைரலாக பரவி சமூக ஊடகங்கள் மூலமாக பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தாக்கப்பட்ட முதியவர், தன்னை அந்த குண்டர்கள் கொலை செய்ய முயற்சித்ததாகவும் தன்னிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டதாகவும் புகார் அளித்தார். ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட மகாராஷ்டிரா காவல்துறை கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யாமல் இலகுவாக ஜாமீன் கிடைக்கும் வகையில் அற்ப குற்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் மறுநாளே பிணையில் வர வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அடித்தே கொல்லப்பட்ட புலம் பெயர் தொழிலாளி
அதே ஆகஸ்ட் 28. ஹரியானா மாநிலத்தில் சார்க்கி தாத்ரி மாவட்டம். அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த புலம் பெயர் தொழி லாளர்கள் ஹன்சாவாஸ் குர்து கிராமத்தில், குடிசை கள் அமைத்து தங்கி கட்டிடங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் மாட்டுக்கறியை சமைத்து சாப்பிடுகிறார்கள் என்ற புரளியைக் கிளப்பி மாட்டுக் குண்டர்கள் அவர்களது குடிசைகளுக்குள் அத்துமீறி நுழைந்து சமையல் பாத்திரங்களை சோதனையிடுகின்றனர்.
அதில் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த 24 வயது சபீர் மாலிக் என்ற தொழிலாளியைப் பிடித்து அவர் வீட்டில் மாட்டுக்கறி இருந்தது என்று சொல்லி அவரை அடித்தே கொலை செய்தனர். இக்காணொலியும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, காவல் துறை யினர், இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழுபேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி இப்பாதகத்தை கண்டிப்பதை விட்டு விட்டு பசுவின் மீது மக்களுக்கு இருக்கின்ற பக்தியை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாதென் றும், மக்களது மதம் சம்பந்தப்பட்ட உணர்வுகளை மற்றவர்கள் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அங்கு வசிக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
கண்டு கொள்ளாத ஊடகங்கள்
மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் அல்லது சாப்பிட் டார்கள் என்று சொல்லி இஸ்லாமிய மற்றும் பட்டியல் இன ஏழை எளிய மக்களை கம்புகளால் அடித்தும், கற்களால் எறிந்தும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் கொலை செய்யும் இப்பெரும் கொடுமைகள் 2016 - 2017 க்கு பின்னர் மிக அதிகமாக நம் நாட்டில் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தேர்தல் வர இருப்பதால் இந்த மாட்டுக் குண்டர்கள் எவ்வித பயமும் இன்றி,பல நேரங்களில் ஆளும் கட்சியினரின் மறைமுக ஆதர வோடு இக்கொலைகளை தொடர்ந்து செய்துவரு கின்றனர். உ.பி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, ம.பி, மாநிலங்களில் வாக்காளர்க ளை மத அடிப்படையில் அணி திரட்ட இக்கொலை கள் அரசியல் நடவடிக்கையாக பயன்படுத்தப்படு வதை தேசிய ஊடகங்கள் கூட பெரிதாக கண்டு கொள்வதில்லை.
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாமிடம்
பசுக்களையும், காளைகளையும் மாமிசத்திற்காக வெட்டப்படுவதை பல மாநில அரசுகள் தடை செய்துள் ளன. எருமைகளை கொல்வதற்கு தடை ஏதும் இல்லை. ஆடு, கோழி போன்ற புலால் உணவுகள் மிகவும் விலை அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் தங்களது புரதச்சத்தின் தேவைக்காக மலி வாகக் கிடைக்கும் மாட்டுக்கறியை உண்கிறார்கள். கேரளம், கோவா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறிதான் பிரதான அசைவ உணவாக இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருக்கும் பாஜக வினர் இதைப் பற்றியே பேசுவதில்லை. மாட்டுக் கறிக்காக இத்தனை அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் நம் நாடுதான், பிரேசிலுக்கு அடுத்து இன்று உலகில் மிக அதிகமாக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யும் நாடு. கடந்த ஆண்டு மட்டும் நான்கு பில்லி யன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மாட்டுக்கறியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டுக்கறியை மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் முதல் ஆறு ஏற்றுமதி நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள். நமது பிரதமர் சீனா சென்றிருந்தபோது சீன அர சாங்கத்துடன் மாட்டுக்கறி ஏற்றுமதிக்காக தனி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மாட்டுத் தோல் ஏற்று மதியிலும், மாட்டெலும்பு ஏற்றுமதியிலும் இந்தியா முதல் இரண்டு இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. மாடுகளும், எருமைகளும் கொல்லப் படாமல் இவ்வளவு அதிகமான ஏற்றுமதிகள் எவ்வாறு சாத்தியமாகும்?
பல இந்து ஆலயங்களில் பசுக்களை பலியிடும் சடங்குகள் இன்றும் நடைபெறுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பசுபதிநாத் ஆலயத்தில் பசுக் களை பலியிட்டு வந்த சடங்குகளை உயர்நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தியது. இன்றும் நேபாளத்தில் காதிமை திருவிழா காலங்களில் சுமார் மூன்று லட்சம் மாடுகள் பலியிடப்படுகின்றன.
வாய் திறக்காத பிரதமர்
மத்தியப் பிரதேசத்தில் ரத்னா மாவட்டத்தில் பம்ஹுர் பகுதியில் கடந்த வாரம் பால் வற்றி தெருவில் அலையும் மாடுகளை அங்குள்ள இளைஞர்கள் ஆற்று வெள்ளத்தில் தூக்கி எறிந்து சாகடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “அவர்கள்” மாட்டைக் கொன்று கறியை ஏற்றுமதி செய்யலாம். அதன் தோலை உரித்து வியாபாரம் செய்யலாம். அதன் எலும்பு களை நொறுக்கும் தொழிற்சாலை நடத்தலாம். மாடு களின் தலைகளை வெட்டி பலி கொடுக்கலாம். பயனற்ற மாடுகளை ஆற்று வெள்ளத்தில் தள்ளி கொல்ல லாம். ஆனால் ஒரு ஏழை இஸ்லாமியனோ அல்லது பட்டியல் இனத்தை சார்ந்த ஒரு எளியவனோ தனது வயிற்றுப் பசிக்காக ஒரு அகப்பை மாட்டுக்கறி வைத்தி ருந்தால் அவனை அடித்துக் கொல்வார்களாம்! ஆம்! அதை முதலமைச்சர் கூட நியாயப்படுத்துவாராம்! கடந்த பதினைந்து நாட்களில் இதைப் போன்ற சம்பவங்கள் பதினைந்துக்கும் அதிகமாக நடந்தி ருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் இதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்! ரஷ்யா -உக்ரைன், பாலஸ்தீனம் -இஸ்ரேல் போன்ற சர்வதேச பிரச்ச னைகளுக்கான தீர்வுகளை ஏற்படுத்துவதில் மும்முர மாக இருக்கும் அவருக்கு பற்றி எரியும் மணிப்பூர் பற்றியோ, எப்போதும் உயிர் பயத்துடனே வாழும் சிறுபான்மை மக்கள் பற்றியோ சிந்திக்க, செயலாற்ற எப்படி நேரம் கிடைக்கும்?
இந்த மாட்டு குண்டர்களுக்கு வரலாறு தெரியாது. வேத காலங்களில் நம் நாட்டில் அனைவருமே மாட்டுக் கறி உண்பவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதை அவர்களுக்கு யாராவது எடுத்துச் சொல்லவேண்டும். உணவுப்பழக்கங்கள் தனிமனித விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது. பசி வந்தால் மனிதன் என்ன செய்வான்? எதுவும் இல்லை என்றால் “நரமாமிசம்” சாப்பிட்டவன்தானே மனிதன்.
நமீபியாவின் முடிவு
நேற்று ஒரு டைம்ஸ் ஆப் இந்தியா தகவல். தென் ஆப்ரிக்க நாடான நமீபியா அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று கோடி மக்களின் உணவுத் தேவைக்காக அந்நாட்டில் ஏராளமாக இருக்கும் யானைகளைக் கொன்று மக்களுக்கு யானைக் கறியை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மாட்டுக் குண்டர்களின் நெட்வொர்க்
மாட்டுக்குண்டர்களுக்கும் அவர்களது தலைவர்க ளுக்கும் இதெல்லாம் தெரியாதா என்ன? தெரியும். பின்னர் ஏன் இக்கொடுமைகளை தொடர்ந்து செய் கின்றனர்? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம்! அவர்களது தலைவர்களின் “வெறுப்பு அரசியலுக்கு” இதைப் போன்ற வன்முறைகள் தேவைப்படுகின்றன. தங்களால் மட்டும் தான் “கோமாதாவை” காப்பாற்ற முடியும் என்பதை பெரும்பான்மை இந்து மக்களுக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் அவளை அவமதிக்கிற இஸ்லாமியரையும் பட்டியல் இனத்து மக்களையும் பயமுறுத்தி அடக்கி ஆள தங்களால் மட்டுமே முடியும் என்பதை காட்டவும் இந்த மாட்டுக் குண்டர்களை அவர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். மாட்டுக் குண்டர்களுக்கு இது நல்லதொரு வருமானம் தரும் வியாபாரம். இக்குண்டர்கள் தேசிய நெடுஞ் சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை தங்க ளுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். அவர்களது பகுதி யில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அவர்கள் பாதுகாப்பு கொடுக்கின்றனர். அதற்கு மாட்டு வியாபாரி களிடம் பெரும் கட்டணம் வசூலிக்கின்றனர். தங்கள் பகுதியில் வரும் வாகனங்களை அடுத்தவர் பகுதி வரை அழைத்து சென்று பின்னர் அடுத்த குண்டரி டம் ஒப்படைத்து விடுவார். இதற்காக இவர்கள் ஒரு பெரிய நெட் ஒர்க் வைத்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் ஒரு பகுதியில் வாழும் இஸ்லாமியர்களுக்கு கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதுதான் பரம்பரை தொழில். 2015 இல் மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட பேலுக்கான் மற்றும் சிறுவன் ஜுனைத் இப்பகுதியை சார்ந்த வர்கள். இவர்கள் தங்களுக்கு வேண்டிய பசுக்களை ராஜஸ்தானில் இருக்கும் கால்நடைச் சந்தையில் இருந்து வாங்குவது வழக்கம். அப்படி வாங்கி வரும்போது மாட்டுக் குண்டர்கள் அவர்களை மடக்கி கொலை செய்கிறார்கள் என்பதால் இப்போது இஸ்லாமியர்கள் அங்கே சென்று மாடுகளை வாங்கி அங்கேயே இக்குண்டர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அவர்கள் இவர்களது ஊரில் கொண்டு வந்து மாடுகளை ஒப்படைத்து விட்டு ஒரு மாட்டுக்கு ரூபாய் ஐயாயிரம் கட்டணமாக வசூலித்துக் கொள்வ தாக ஒரு இஸ்லாமியர் கண்ணீரோடு தெரிவிக்கிறார்.
கோமாதா பெயரில் ஒரு கேவலமான பிழைப்பு
நம் ஊரிலும் இப்படி ஒரு வியாபாரம் நடந்தது. தமிழ் நாட்டின் உட்பகுதியில் இருந்து பயனற்ற மாடுகளை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கொண்டு செல்லும்போது “பசு பாதுகாப்பு அமைப்பி னர்” என்று சில தொண்டு நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு இந்த மாடுகளை அடிமாடுகளாக கேரளாவில் விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி காவல் நிலையத்தில் முதலில் புகார் செய்வார்கள். போலீசார் மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை நிறுத்தி விடுவர். பின்னர் அந்த மாடு களை கோசாலைகள் என்று அழைக்கப்படும் பசு பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாடுகளுக்கான விலையினை தங்களது தொண்டு நிறுவனம் தந்துவிடும் என்று காவல் நிலை யத்தில் தெரிவிப்பார்கள். அவர்களோடு வரும் வழக்கறி ஞர்கள் மிருகவதை தடைச் சட்டத்தின் படி மாடுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்பார்கள். பத்தாயிரம் ரூபாய் பெறுமானம் உள்ள மாட்டுக்கு ஆயிரம் ரூபாய் விலை வைத்து கொடுத்துவிட்டு மாடு களை அண்டை மாநிலங்களில் இருக்கும் கோசாலை களுக்கு கொண்டுபோகிறோம் என்று சொல்லி வியாபா ரிகளிடம் இருந்து மாடுகளை பறித்துக் கொள்வது; பின்னர் அவர்கள் அவற்றை வெளி மாநிலங்களில் நல்ல விலைக்கு விற்றுக் கொள்வது. கோமாதாவின் பெயரில் இப்படி ஒரு கேவலமான பிழைப்பு அரசியல்! இதைப்போன்ற அவலங்கள் என்று மாறும்? மாட்டு அரசியலால் அவர்களது தலைவர்களின் அதிகாரப் பசிக்கான வாக்குச் சீட்டுகள் குவிகின்றன. இக்குண் டர்களின் பணப்பைகளும் நிரம்புகின்றன. உயிரிழந்த ஏழைகளின் குடும்பங்கள் நியாயம் கேட்கின்றன!
கட்டுரையாளர் : மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்.