உறைந்து கிடக்கும் உதிரம்... கோவையின் சிவப்புக் காவியம்
1சுதந்திரமும் தொழிலாளியின் பசியும்
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டு, நம் தேசத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. ஆனால், அந்த விடுதலையின் கனல், கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் குடிசைக்குள் ஒளியைக் கொண்டு சேர்க்கவில்லை. ஒருபுறம், புதிதாகப் பிறந்த தேசம் கடுமையான பொ ருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பணவீக்கம் கோரத் தாண்டவமாடியபோது, மத்திய அரசு நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கில், “Produce or Perish” (உற்பத்தி செய் அல்லது அழிந்துபோ) என்ற முழக்கத்தை முன் வைத்தது. இந்த முழக்கம் முதலாளிகளின் காதில், “லாபத்தைக் குவி; அரசாங்கம் உனக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்” என்ற உரிமமாக ஒலித்தது. ஆனால், மறுபுறம், அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்ட நிலையில், ஒரு வேளை சோற்றுக்கே வழியின்றி தவித்த தொழிலாளி வர்க்கம், “முதலில் என் பசி தீர வேண்டும், என் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று முழங்கியது. இந்த இரண்டு முழக்கங்களும் உக்கிரமாக மோதிய களம்தான் கோயம்புத்தூர். மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான நேரடி யுத்தம் நடந்த மாபெரும் போர்க்களம். தென் இந்தியாவின் மான் செஸ்டர் என்று அழைக்கப்பட்டாலும், இதன் ஒவ்வொரு நூலிழையிலும், ஒவ்வொரு எந்திரத்தின் ஓசையிலும், வீரம் செறிந்த ஒரு வர்க்கப் போராட்டத்தின் ரத்தம் உறைந்து கிடக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
2 கூர்மையான வர்க்கப் பிரிவினை
அக்காலகட்டத்தில்தான், நாட்டின் பல்வேறு தொழில் மையங்களிலும் தொழிலாளர் எழுச்சி உச்சத்தை அடைந்தது; தெலுங்கானாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆயுதப் புரட்சி நடந்தது. இந்தப் பின்னணியில்தான், கோயம் புத்தூரில் மூலதனத்தின் கோட்டையை எதிர்த்து செங்கொடி எழுந்தது. கோயம்புத்தூரின் மில் அதிபர்கள், தென்னிந்திய மில் அதிபர்கள் சங்கம் (SIMA) என்ற ஒற்றைச் சக்தியின் கீழ் திரண்டனர். இவர்களின் லாப வேட்டைக்குத் தடையாக, மண்ணில் வேரூன்றி நின்றது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான செங்கொடிச் சங்கம். தோழர்கள் கே. ரமணி, ஆர். உமாநாத், கண்ணாகுட்டி, பி. இராம மூர்த்தி, ஏ. எஸ். கே. அய்யங்கார், ஜி. வி. கிருஷ்ணன் போன்ற வீரம் செறிந்த தலைவர்கள், தொழிலாளர்க ளின் கஷ்டத்தில் பங்கெடுத்து, அவர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி, மாபெரும் சக்தியாக மாற்றினர். செங்கொடிச் சங்கத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சியைக் கண்ட மில் அதிபர்கள், தங்கள் அதி காரத்தைப் பிரயோகிக்க முனைந்தனர். அவர்கள் தங்கள் ஆலைகளுக்குள்ளேயே கூலிப்படைகளை (Goondas) உருவாக்கி, அவர்களுக்குச் சீருடையும், நிர்வாகத்தின் துணையோடு ஆயுதங்களையும் வழங்கி, தொழிலாளர் வர்க்கத்தின் மீது திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இது வெறும் மோதல் அல்ல; முதலாளித்துவத்தால் திட்டமிடப்பட்ட வர்க்கப் போர்.
3 1946: ஸ்டேன்ஸ் மில்லின் முதல் துப்பாக்கிச் சத்தம்
1948ஆம் ஆண்டு நடந்த மிகப் பெரும் போராட்டத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் போரின் முன்னோட்டத்தைக் கோயம்புத்தூர் பார்த்தது. அதுதான் 1946 நவம்பர் 11ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு. ஸ்டேன்ஸ் குழுமத்தின் கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்லில், குறைந்த ஊதியத்துக்கும், மோசமான பணிச்சூழ லுக்கும் எதிராகப் பெண்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். நிர்வாகம் கூலிப்படைகளுடன் போலீஸை ஏவியது. அந்த நாளில், சுமார் 6,000 தொழி லாளர்கள் திரண்டிருந்தனர். போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டபோது, தொழிலாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அம்மு என்ற பெண் தொழிலாளி, போலீ ஸின் தாக்குதலுக்கு உள்ளாகி, குண்டடிபட்டு, அங்கேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து முதல் வீரமர ணம் அடைந்தார். தொழிலாளர்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கு சென்றனர். ஆவேசப் போராக மாறி யது. போலீஸ் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியது. இந்தக் கோரச் சம்பவம் குறித்துப் ‘பீப்பிள்ஸ் ஏஜ்’ (People’s Age) பத்திரிகையில் தோழர் என். கே. கிருஷ்ணன் அவர்கள் அப்போது எழுதிய கட்டுரை யில், அம்மு உட்பட மொத்தம் 12 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருக்கலாம் என்று விவரித்துள்ளார். இந்த அடக்குமுறையின் வீச்சை எதிர்கொண்ட தொழிலாளர்கள், சம்பவத்திற்குப் பின்னரும் அஞ்சவில்லை. அவர்கள் தங்கள் தலை வர்களைப் பாதுகாக்கவும், போலீஸின் கொடூரமான நடவடிக்கைகளை எதிர்த்துப் பல நாட்கள் போராட்டத்தை உறுதியுடன் தொடரவும் செய்தனர். தோழர் என். கே. கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்த வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: “உழைக்கும் மக்கள் சிந்திய ரத்தம், மண்ணில் கலந்து வீணாகப் ்போய் விடாது. அது, விடு தலைக்கான விதையாக முளைக்கும்.” அவர், இந்த மோதலை “போலீஸ் என்பது படுகொலைத் தோட்டாக்கள்” என்று வர்ணித்தார். இந்த அடக்குமுறையைத் தொழிலாளர்கள் வீரத்துடன் எதிர்த்து நின்ற விதத்தையும் அவர் விவரிக்கிறார். போலீஸின் துப்பாக்கிச் சூட்டையும், லத்திகளையும் எதிர்கொண்ட தொழிலாளர்கள், சிதறி ஓடாமல், தங்கள் கைகளில் கிடைத்த கற்களை யும், குப்பைகளையும் கொண்டு மில்லின் வாசலி லேயே ஒரு ‘காவியத் தற்காப்புப் போரில்’ (Epic Self-Defence) ஈடுபட்டனர். குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியபோது, அவர்கள் பின்வாங்காமல், உடல்ரீதி யான தாக்குதலையும், ‘அநாகரிகமான அடக்குமுறை களையும்’ சகித்துக்கொண்டு உறுதியாக நின்றனர். அடக்குமுறையின் கொடூரத்தை எதிர்கொண்ட இந்தத் தீர்க்கமான மனோபலம்தான், போராட்டத்தின் உணர்வை அணையாமல் வைத்திருந்தது. பெண் தொழிலாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதின் மூலம், சமூகத்தின் நெஞ்சுரத்தைக் குலைக்க மூலதனமும் அரசும் மேற்கொண்ட கோரமான உத்தி இது என அவர் எழுதினார்.
4 1948 ஜனவரி: 11,000 பேருக்கு வேலைநீக்க நோட்டீஸ்
1948 பிறந்தபோது, பொருளாதார நெருக் கடியைக் காரணம் காட்டி மூலதனம் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்தியது. குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தாமல், போனஸ் வழங்கா மல் மில் அதிபர்கள் தொழிலாளர்களை வஞ்சித்த னர். அதன் உச்சகட்டமாக, 1948 ஜனவரி 5ஆம் தேதி, ஒரே நாளில் சுமார் 11,000 தொழிலாளர்களுக்கு வேலை நீக்க (Retrenchment) நோட்டீஸ் வழங்கப்பட்டது. வாழ்வுரிமையைப் பறித்த இந்த அநீதி, உடனடி யாகப் பெரும் வேலைநிறுத்தத்தைத் தூண்டியது. கோயம்புத்தூரின் மில் சக்கரம் ஐந்து மாதங்கள் சுழலவில்லை.
5 ஆளும் அரசின் வேட்டையும் அடக்குமுறையும்
ஆளும் காங்கிரஸ் அரசு இந்தப் போராட்டத்தை அச்சத்துடன் பார்த்தது. கம்யூனிஸ்ட் கட்சி, “இது வெறும் பொருளாதாரப் போராட்டம் அல்ல, அதிகார வர்க்கத்துக்கு எதிரான அரசியல் கிளர்ச்சி” என்ற நிலைப்பாட்டில் இருந்ததால், அரசு அடக்குமுறையைத் தேர்ந்தெடுத்தது. 1948 மார்ச்சில், கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு, கே. ரமணி உள்ளிட்ட தலைவர்கள் தலைமறைவானார்கள். மேலும், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரி வான ஐ.என்.டி.யூ.சி, செங்கொடிச் சங்கத்துக்கு எதி ராக நின்றது. இந்த அரசியல் பிளவும், அடக்குமுறை யும், வர்க்கப் போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்தியது.
6 1948 நவம்பர்: உச்சகட்ட மோதல் – ‘கோயம்புத்தூர் போர்’
ஜனவரிப் போராட்டத்தின் மீதான அடக்கு முறை பலனளிக்காத நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி, ஸ்டேன்ஸ் மில் நிர்வாகம் திட்டமிட்டு லாக்-அவுட் அறிவித்தது; இதை எதிர்த்த போராட்டம் நவம்பர் மாதத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது. நவம்பர் 4ஆம் தேதி போலீஸ் படை குவிக்கப்பட்டது. நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அங்கு நடந்த மோதலைத் தான் ‘கோயம்புத்தூர் போர்’ என்று பீப்பிள்ஸ் ஏஜ் பத்திரிகையில் தோழர் என்.கே. கிருஷ்ணன் எழுதினார். ஆலைக்குள் நுழைய முயன்ற போலீஸைத் தடுக்க, தொழிலாளர்கள் தங்கள் கைகளில் கிடைத்த கற்களையும், குப்பைகளையும் கொண்டு தற்காப்புப் போரில் ஈடுபட்டனர்.
7 செங்கொடியின் பெண் சக்தி
1948 மோதலிலும் மிக உக்கிரமான பாத்தி ரத்தை வகித்தவர்கள் பெண் தொழிலாளர்களே. 1946இல் வீரமரணம் அடைந்த அம்முவின் தியாகத்தை மனதில் சுமந்த பெண் தொழிலாளர்கள், முன்னணிக் களத்தில் நின்றனர். ஆனால், போலீஸின் பதிலடி மிருகத்தனமாக இருந்தது.
8 சிறையை நிரப்பிய தொழிலாளர்கள்
அடக்குமுறையின் உச்சமாக, 5,000க் கும் அதிகமான தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டுச் சிறை நிரம்பியது. வேலை நீக்கம் செய்யப் பட்டவர்கள், மீண்டும் பணிக்குச் செல்ல முடியாமல், முதலாளிகளால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனர். ஆனாலும்,தொழிலாளர்களின் உறுதியைக் குலைக்க முடியாத நிலையில், ஒரு கட்டத்தில் முதல்வர் காமராஜரே தலையிட்டும் கூட, மில் அதிபர்கள் சங்கம் சமரசத்தை ஏற்க மறுத்தது. “முதல்வருடன் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை” என்று அறிவித்து, தங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் மீது போலீசை ஏவிய ஆளும் அரசையே நிராகரித்தனர் முதலாளிகள். இதுவே மூலதனத்தின் அதிகாரக் கொடூரமாகும்.
9 சட்டம் இப்படித்தான் வந்தது
போராட்டக் களத்தில் அடக்குமுறையை யும், மூலதனத்தின் ஆணவத்தையும் எதிர்கொண்ட செங்கொடிச் சங்கம் நீதிமன்றக் களத்தில் தன் போ ராட்டத்தைத் தொடர்ந்தது. வேலை நீக்கம் செய்யப் பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்காகச் சட்டரீதியாகப் போராடியதன் விளைவாக, நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு, ஆட்குறைப்பு செய்யப்பட்ட 6,600 தொழிலாளர்கள் இழப்பீடு பெற்றனர். இந்த இழப்பீட்டு வெற்றியானது, தனிப்பட்ட சிலருக்கான சலுகையாக நின்றுவிடவில்லை. இந்தத் தியாகத்தின் தொடர் விளைவாகத்தான், இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில், மத்திய அரசு தொழிற் தகராறுகள் சட்டத்தில் (Indus trial Disputes Act) ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்க ளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற “ஆட் குறைப்பு இழப்பீடு (Retrenchment Compensation)” பிரிவைச் சேர்க்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆம், கோவை தொழிலாளர் வர்க்கத்தின் - ஸ்டேன்ஸ் மில் தியாகிகளின் ரத்தம் மைதானத்தில் சிதறியிருக்கலாம். ஆனால், அந்த ரத்தமும் கண்ணீரும், இந்தியாவின் தேசியச் சட்டத்தில் ஒரு நிரந்தரமான திருத்தத்தை எழுதி, இன்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. இதுவே கோயம்புத்தூர் போராட்டத்தின் அழியாத காவியம்.
10செங்கொடியின் அணையாத கனல்
இன்று, நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்ற பெயரில், மீண்டும் மூலதனம் தன் கோரப் பற்களைக் காட்டுகிறது. ஆனால், நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமைக்கும், அன்று சிந்திய ரத்தமும், தோழர்களின் தியாகமுமே அடிப்படை. அம்முவின் வீரமும், கே.ரமணி உள்ளிட்ட மகத்தான தலைவர்களின் தீரமும் இன்றும் நம்மை வழிநடத்து கின்றன. கோயம்புத்தூர் எனும் சிவந்த மண்ணில் இன்று கூடும் சிஐடியு மாநில மாநாடு, அந்தப் போராட்ட உணர்வின்நீட்சி. வீர வரலாற்றைத் தாங்கி, தியாகங்க ளைச் சுமந்து,நாம் புதிய போருக்கான சபதத்தை ஏற்போம்! செங்கொடி ஓயாது! வெற்றி உறுதி!
