“மனவெளியில் மகத்தான ஞான உலா”
நிழல் மறைப்பதில்லை; அது வெளிப்படுத்துகிறது. ஜப்பானியர்கள் நிழலை விட்டு ஓடுவதில்லை; அதைத் தேடுகிறார்கள்.” துறவி ஒருவர் வாசிக்கும் இசையை அவர் வாழும் கிராமம் ‘முடிவற்ற விருப்ப உணர்ச்சிப் பெருக்கு” (Endless Passion) என்று புகழ்கிறது.ஆனால் அடுத்த கிராமம் இதே இசையை “முடிவிலா சோகம்”(Infinite Sadness) என்று அழைக்கிறது”. புத்த துறவிகளின் மேற்கண்ட கோட்பாட்டு வசனங்களை பின் நவீனத்துவத்தில் அலசுகின்ற படமே,”கிராண்ட் டூர் “. 1917 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழுள்ள ரங்கூனில்,ஆங்கில நாட்டு அதிகாரியாக எட்வர்ட் பணி புரிகிறான்.ஏழு வருடங்களுக்கு முன்பாக இவ னுக்கு இணையராக நிச்சயிக்கப்பட்ட மோலி,அவனைத் திருமணம் செய்வதற்காக லண்டனிலிருந்து ரங்கூன் வருகிறாள்.மோலியை வரவேற்கப் பூங்கொத்துடன் துறைமுகத்தில் காத்திருக்கும் எட்வர்ட்,திடீரென மனம் மாறுகிறான்.கையிலிருக்கும் பூங்கொத்தை அங்குள்ள வர்களிடம் மகிழ்ச்சியோடு பிரித்து கொடுக்கிறான்.அந்நேரம் சிங்கப்பூர் செல்கின்ற கப்பலில் ஏறி அவளிட மிருந்து விலகி தாய்லாந்து, பாங்காக், சைகான், ஜப்பான் இறுதியில் சீனா வந்தடைகிறான். “எதிர்பாராத எனது பணிநிமித்தம் காரணமாக ரங்கூனை விட்டு செல்ல நேர்ந்தது.எனவே நீ, லண்ட னுக்கு திரும்பிவிடு.என்னை மன்னித்து விடு.இப்படிக்கு, பேரன்புமிக்க எட்வர்ட்”என எழுதிய கடிதத்தை மோலி ரங்கூனில் படிக்கிறாள். சத்தத்தோடு ஏளனமாகச் சிரிக்கிறாள்.லண்டன் திரும்பாமல் அவனைப் பின் தொடர்கிறாள். வழியில் நோய்வாய்ப்படுகிறாள். சாண்டர் என்ற அமெரிக்க மாட்டு வியாபாரி இவள் மீது நேசம் கொள்கிறான். மாசற்ற அவனது அன்பையும் நிராகரித்து எட்வர்டை நோக்கி ஓடுகிறாள். இருவரது வழியிலும் துறவிகள், மதபோதகர்கள் உள்ளிட்ட பலவிதமான வழிபோக்கர்கள் குறுக்கி டுன்றனர். கிழக்காசிய பண்பாட்டு கலாச்சாரங்களின் நல் விழுமியங்களையும் உள்வாங்குகின்றனர். இப்புதிய அனுபவங்கள் எட்வர்டு, மோலிக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்தை உணர வைக்கிறது. ஆனால் மனதிடம் மிக்க மோலி மனந்தளராமல் இறுதி மூச்சு உள்ளவரை அவனைப் பின்தொடர்கிறாள். இதுவே கதை. இதனை போர்ச்சுகல் இயக்குநர் மிகுல் கோமஸ், காலம் மற்றும் இடங்களைக் கடந்து அதாவது கதை நடக்கும் 1917-18 மற்றும் 2021-22காலக் கட்டத்தையும் அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறார். இரண்டு காலகட்டத்தையும் இயக்குநர் காட்சி மொழி யால் பார்வையாளர்களை ஒரு கனவு நிலைக்குக் கொண்டு செல்கிறார். கதை நாயகர்களின் மனநிலை மற்றும் கிழக்காசியா வின் பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றை அந்தந்த நாடுகளின் மொழிகளிலே,பின்னணிக் குரலில் விளக்கிப் படத்தை நகர்த்துகிறார். கதை மாந்தர்கள் பயணிக்கும் பெரும்பாலான நக ரங்களின் தெருக்களையும், காடுகளையும், சமகால ஆசியாவின் ஜாஸ் கிளப்புகளையும், சாலைகள், பிரம்மாண்ட கட்டடங்களை கதையோடு தொடர்பு படுத்தும் விதமாக,16 மிமீ பிலிமில் படமாக்கியுள்ளார். இம்மூன்று அம்சங்களும் கலந்துள்ள இப்படத்தை தனித்துவமிக்கதாக ஆக்கியுள்ளார் இயக்குநர். மூங்கில் காட்டில் தனித்து விடப்பட்ட எட்வர்ட், மக்கிய இலைகளின் மேல் அயர்ந்து உறங்குகிறான். அருகே புத்தரின் முழு உருவ தியானச் சிலையின் உடை பட்ட தலை மட்டும் கிடக்கும். மோலி, எட்வர்டை தேடி, ஆபத்தான ஆற்றின் போக்கிற்கு எதிர்புறமாகச் செல்கை யில் நவீன கால பிரம்மாண்ட புத்தர் சிலை ஆற்றங்கரை யில் அமர்ந்த நிலையில் கண் விழித்திருக்கும் காட்சி வரும். இவ்விரண்டு புத்தருமே இருவர் மனதின் படிமங்கள். திடமான மனம் கொண்ட மோலியை தவிக்க விட்டதை எண்ணி எட்வர்ட்டும்,சைனாவின் மன்னராட்சி வீழ்வதை தடுக்க இயலாது என்றவாறு ஓபியம் புகைக்கும் துறவியும் காட்டில் உதிர்ந்த இலைகளின் மேலே உறங்கு கின்றனர். உறங்கும் இருவரது முகத்திலும் இலைகள் உதிர்கின்றன.இங்கு உதிர்ந்த இலைகள், மாற்றத்தின் தொடக்கம். விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து பரபரப்பாகத் தப்பிக்கும் பயணிகள் மத்தியில், தண்டவாளத்தில் அமர்ந்து,எவ்வித பிரக்ஞையுமின்றி வன அழகை ரசிக்கிறான்.அங்குள்ள பறவைகளின் அழகை ஓவியமாகத் தீட்டுகிறான் எட்வர்ட். எதார்த்த வாழ்வை மறுப்பவனின் மனநிலையை விவரிக்கின்றது இக் காட்சி. நோய்வாய்ப்பட்ட மோலி எட்வர்ட் இருக்குமிடம் நோக்கி தடைகள் தாண்டிச்சென்றாலும் எட்வர்டை காணா மலே இறுதியில் இறக்கிறார்.இதோடு படக்குழுவினர் தங்கள் வேலையை முடிக்கும் காட்சியையும், அதன்பின் இறந்த மோலி, நடிகையாக எழுந்து செல்வதோடு படம் முடிகிறது. இதன் மூலம் இறப்பு கேள்விக்கும், நையாண்டிக்கும் உள்ளாகிறது. ஓடும் எட்வர்ட், துரத்தும் மோலி இவர்களின் கன விலோ, யதார்த்த சூழலிலோ ஆங்காங்கு நடை பெறும் நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. ரங்கூனில் ரங்க ராட்டினத்தைச் சுற்றும் இளைஞர்கள்; ஆண், பெண் பொம்மலாட்டம்; ஆயிரக்கணக்கான தேங்காய் மட்டை களை உரிக்கின்ற தாய்லாந்து கிராமத்து பெண்கள்; இரைதேடும் வாத்துக் கூட்டம். வாத்து முட்டைகள் சேகரிப்பு; பின்னணியில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை; ஊர் ஊராய் சென்று பிச்சை எடுக்கும் “ஒலிவழித் தியான” துறவிகள். சைகான் நகரில் இருசக்கர வாகனங்கள் ஓடும் காட்சி திரும்ப திரும்ப காட்டப்படுகிறது. மணிலா நகரத்தில் கோழிச் சண்டையில், பணம் கட்டியவர்களின் கூச்சல்; வாழை,பலா,மா மரங்கள்;இரண்டு பெண்கள் கைகளில் பெண் கோழியும்,இரண்டு ஆண்கள் கைகளில் சேவலும் நடனமாடும் நிகழ்ச்சியில் இரண்டும் புணர்ந்து முட்டையிடும் காட்சி. சாந்தமான பான்டா; ஆவியோடு பேசுகிற குறி சொல்கிறவள்; சோகப்பாடல் பாடுகிறவர் எனக் கலவையான காட்சித் தொகுப்பு;ஹோட்டலில் ஒருவர் பாடுகிறார்:
“இப்போது முடிவின் நேரம் வந்து விட்டது, நான் எல்லாம் செய்தேன், என்னுடைய பாணியில்! வாழ்வின் பாதைகளில் நான் துணிந்து நடந்தேன்,. ஒரு வார்த்தை சொல்லி, என் பாதையை வகுத்தேன், தவறுகள் இருந்தும், நான் தைரியமாய் இருந்தேன்,. ஒருபோதும் கண்ணீர் சிந்தவில்லை! நான் வாழ்ந்தேன், என் வழியில்! காதல், துன்பம், வெற்றி, தோல்வி எல்லாம், நான் என் முறையில் சந்தித்தேன்!”
என்று பாடும் மணிலாவாசி அழுகிறார். இதுபோன்ற பல ஆவணக் காட்சிகளை முன்னிறுத்தி இயக்குநர் பார்வை யாளர்களை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கி றார். சினிமா கதை சொல்லலின் பாரம்பரியக் கோட்பாடு களை உடைக்கும் பின்நவீனத்துவ சினிமாவை சிறப்பாகத் தந்துள்ளார் இயக்குநர்.புனைகதை மற்றும் ஆவணப்படம் ஆகியவற்றை கலந்து,ஒரு வசீகரிக்கும் மானுட பயணத்தை இந்த “கிராண்ட் டூர்” தந்துள்ளது. கருப்பு வெள்ளையிலும் அவ்வப்போது வண்ணக் காட்சியிலும் படமாக்கி, ஒவ்வொரு காட்சியும் ஓர் ஓவியம் போல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய இசை படத்தோடு ஒன்ற வைக்கிறது.முக்கிய கதா பாத்திரங்களின் நடிப்பு மிகவும் இயல்பாகவும், அவர்களின் உணர்ச்சிகள் பார்வையாளரை உள்ளி ழுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. 1914-1918 முதல் உலகப்போர் காலம்.தொழிற்புரட்சி யின் விளைவாக உலகளாவிய சந்தைக்காக ஏகாதி பத்திய நாடுகள் மூன்றாம் உலகநாடுகளை வேட்டைக்கள மாக்கிச் சண்டையிட்ட காலம். உலகின் முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியன் உருவான காலம். 2021-22 கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திய காலம். ஆனால் பின்நவீனத்துவம் மனிதகுல அவலத்தின் மையப் புள்ளியை விட்டுவிட்டு விளைவுகளைக் கற்பனாவாதக் கருத்தியல் ரீதியில் விவரிக்கிறது என்பதை கூடுதலாக புரிந்து கொள்ள முடிகிறது. 2024க்கான சிறந்த இயக்குநருக்கான விருதை இப்பட இயக்குநர் மிகைல் கோமஸ்க்கு, கான்ஸ் உலகத் திரைப் பட விழா வழங்கியுள்ளது. முபியில் இப்படம் உள்ளது.