அரசியல் சட்டத்தை யார் பாதுகாக்க முடியும்
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்தியா அணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். 2011ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசின் ஆதரவோடு கொலைகள் உட்பட பல செயல்களில் ஈடுபட்ட சல்வா ஜுடும் எனும் அமைப்பு சட்ட விரோதமானது என தீர்ப்பளித்த அமர்வின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் சுதர்சன் ரெட்டியும் ஒருவர். இதனையே அமித் ஷா விமர்சிக்கிறார். இதன் மூலம் உள்துறை அமைச்சருக்கு இந்திய சமூகத்தில் மாவோயிஸ்டுகள் போன்ற தவறான கோட்பாடுகளை கொண்ட அமைப்பு ஏன் உருவாகிறது என்பதும் அதனை சந்திக்க அரசே சட்டவிரோத அமைப்புகளை உருவாக்கு வதன் ஆபத்துகளும் புரியவில்லை என்பது தெளிவாகிறது.
2007ஆம் ஆண்டு செயற்பாட்டாளர் நந்தினி சுந்தர்/ வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா/ முன்னாள் ஐஏஎஸ் ஈ.ஏ. எஸ்.சர்மா ஆகியோர் சல்வா ஜுடும் எனும் அமைப்பை தடை செய்ய வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வில் சுதர்சன் ரெட்டி அவர்களுடன் எஸ்.எஸ். நிஜ்ஜார் எனும் நீதிபதியும் இருந்தார். எனினும் அமித் ஷா, சுதர்சன் ரெட்டியை மட்டுமே விமர்சிக்கிறார். உச்ச நீதிமன்றம் உட்பட எந்தவொரு தீர்ப்பையும் எவர் ஒருவரும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் நீதியை வழங்கிய நீதிபதியை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது மரபு அல்ல. எனினும் பாஜக தலைவர்கள் என்றைக்கு மரபுகளை கடைப்பிடித்தனர்? தேசத்தின் உள்துறை அமைச்சரே மரபை காலில் போட்டு மிதித்தால் அவர்களின் அடிவருடிகள் எந்த அளவுக்கு போவார்கள் என நாம் கற்பனை செய்து கொள்ளலாம். சல்வா ஜுடும் செயல்பாடுகளை விமர்சித்த நீதிபதிகள் 2011 தீர்ப்புக்கு முன்னரே வேறு சில அமர்வுகளும் இதே போன்றதொரு கருத்துகளை முன்வைத்துள்ளனர். அதனை அமித் ஷா திறமையாக மறைத்து விட முயல்கிறார்.
2007ஆம் ஆண்டு சல்வா ஜுடும் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கைகளை அமலாக்குமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்/ பி. சதாசிவம்/ ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு சத்தீஸ்கர் அரசாங்கத்துக்கு ஆணை பிறப்பித்தது. முதன்மை நீதிபதி பாலகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு கூறினார்: “அந்த அறிக்கையை படிக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது. சல்வா ஜுடும் அமைப்பினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கலகங்களிலும் கொள்ளையிலும் ஈடுபடுவதாகவும் அறிக்கை ஆதாரங்களு டன் குறிப்பிடுகிறது.” நீதிபதி மேலும் கூறினார்: “சல்வா ஜூடும் போன்றவர் களுக்கு நீங்கள் ஆயுதம் வழங்கினால் அவர்கள் போலி காவல்துறையினர் ஆகிவிடுகின்றனர். எந்த குற்றங்களை செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லையோ அந்த குற்றங்களை செய்கின்றனர்.” 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், அஃப்தாப் ஆலம் அடங்கிய இன்னொரு உச்சநீதிமன்றத்தின் அமர்வு இதே போல கடுமையான கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைத்தது: “இது சட்ட ஒழுங்கு பிரச்சனை. நீங்கள் பொது மக்களில் சிலருக்கு ஆயுதங்களை தந்து இன்னொரு பிரிவினரை கொல்ல அனுமதிக்க முடியாது.
அவ்வாறு செய்வது 302ஆவது பிரி வின்படி கொலைக்கு உடந்தை எனும் குற்றத்துக்கு சமம்.” சல்வா ஜுடுமை ஆதரிப்பது அதன் கொலை வெறிச்செயல்களுக்கு உடந்தையாக இருப்ப தற்கு சமம் என இந்த அமர்வு கடுமையாக விமர்சித்தது. சல்வா ஜுடுமை விமர்சித்த நீதியரசர்கள் கே.ஜி. பாலகிருஷ்ணன்/ பி. சதாசிவம்/ ஜே.எம்.பன்சால்/ அஃப்தாப் ஆலம்/ நிஜ்ஜார் ஆகிய அனைவருமே நக்சல் ஆதரவாளர்கள் என உள்துறை அமைச்சர் சொல்ல முன்வருகிறாரா? குஜராத்தில் பிரஜாபதி என்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷாவை விடுதலை செய்த நீதிபதி சதாசிவம் என்பதும் அவர் பின்னாளில் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பதும் வரலாற்று உண்மைகள். அவரையும் நக்சல் ஆதரவாளர் என்று சொல்கிறாரா அமித் ஷா? சுதர்சன் ரெட்டிக்கு எதிராக ஏன் விமர்சனம்? துணை ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழரை வேட்பாளர் ஆக்கியதன் மூலம் 2026 தேர்தலில் அரசியல் கொள்முதல் எடுக்கவும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கவும் பாஜக திட்டமிட்டது. பாஜகவின் வேட்பாளர் ஒரு அப்பட்டமான ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்பதாலும் அவர் தமிழக நலன்களுக்காக எந்த குரலும் தரவில்லை என்பதாலும் பாஜகவின் சூழ்ச்சி எடுபடவில்லை.
மாறாக ஆந்திராவைச் சேர்ந்த சிறந்த சட்ட நிபுணரை தேர்வு செய்ததன் மூலம் இந்தியா அணி இதே போன்றதொரு அரசியல் எதிர் உத்தியை பாஜகவுக்கும் அதன் முக்கிய கூட்டாளியான தெலுங்கு தேசத்துக்கும் உருவாக்கியது. இதன் விளைவாக பாஜகவின் சூழ்ச்சி முற்றிலும் கரைந்து போனது. துணை ஜனாதிபதி தேர்தல் என்பது இரு அரசியல் அணிகளுக்கு இடையே அல்ல! மாறாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் பிரிவுக்கும் அதனை அழிக்க முயலும் பிரிவுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்பது மேலும் மேலும் முன்னுக்கு வந்துள்ளது. இதனை சுதர்சன் ரெட்டி கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: “நான் எந்த ஒரு சித்தாந்தத்தையும் விரும்பவும் இல்லை; வெறுக்கவும் இல்லை. அது என் வேலை அல்ல. ஆனால் ஆர்எஸ்எஸ் செயல்பாடுகள் குறித்து எனக்கு கடுமையாக வேறுபாடுகள் உள்ளன.
ஏனெனில் நான் அரசியலமைப்பு சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயகவாதி. பாபா சாகேப் அவர்களின் சகோதரத்துவத்தை போதிக்கும் சித்தாந்தத்தி லும் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை விழுமியங்களிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” இந்த கருத்து காரண மாகவே சுதர்சன் ரெட்டியை அமித் ஷா விமர்சிக்கிறார். துணை ஜனாதிபதி தேர்தல், அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் போராட்டமாக பரிணமித்து வருகிறது. இயற்கையிலேயே அரசியல் சட்டத்தை சிதைத்து அந்த இடத்தில் மனு தர்மத்தை நிலைநாட்ட முயல்பவர்கள் சுதர்சன் ரெட்டி மீது வெறுப்பை உமிழ்கின்றனர். அதன் வெளிப்பாடுதான் அமித் ஷாவின் இந்த பொய்யான வெறுப்புப் பேச்சு.