articles

பெண்ணின் குரல் கேட்கப்படாமல் போகும்போது..! - வே.தூயவன்

பெண்ணின் குரல் கேட்கப்படாமல் போகும்போது..! 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கை காட்டிப் புதூர் பகுதியைச் சேர்ந்த  அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யா (27). கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூ ரைச் சேர்ந்த கவின்குமார் என்பவருடன் இவருக்குத் திருமணம் நடந்தது. ஆனால் சுமார் இரண்டரை மாதங்களில் அவிநாசி யை அடுத்த செட்டிப்புதூர் பகுதியில் சாலையோரம் காரில் விஷம் அருந்தி தன் வாழ்வை முடித்துக் கொண்டார். விஷம் அருந்துவதற்கு முன்பாக அவர் வாட்ஸ் ஆப்பில் அவரது அப்பாவுக்கு அழுது கொண்டே பேசி அனுப்பியிருக்கும் குரல் பதிவு செய்தி (வாய்ஸ் மெசேஜ்) சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலை வாக்குமூலமான அந்த பதிவு கேட்பவர்களைக் கலங்கச் செய்து, மனதை உலுக்கி விடுகிறது.

“கவின்குமார் அவரது பெற்றோர் உள்ளிட்ட அந்த குடும்பமே கிரிமினல் குடும்பம், திட்டமிட்டு தன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர். என்னுடைய முடிவுக்கு இந்த திருமண வாழ்க்கைதான் காரணம் என்று ரிதன்யா கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு 500 சவரன் தங்கம் தருவதாகச் சொல்லி, 300 சவரன் தங்கம் வரதட்சணையாக மணமகன் வீட்டா ருக்குக் கொடுத்திருக்கின்றனர். ரூ.70 லட்சம் மதிப்பில் சொகுசு கார் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். ரூ.இரண்டரை கோடி செலவு செய்து திருமணத்தை நடத்தி உள்ளனர். 

தொடங்கிய பிரச்சனையும் அடைக்கப்பட்ட கதவுகளும்

திருமணம் முடிந்த சில தினங்களி லேயே மீதி 200 சவரன் நகையைக் கேட்டு ரிதன்யாவை மனரீதியாக சித்ரவதை செய்திருக்கின்றனர். கணவன் கவின் குமார் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதை செய்ததாக ரிதன்யா கூறி யிருக்கிறார். கழிவிரக்கத்துடன் தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்கும் கொடிய வேதனையை ரிதன்யா அனு பவித்திருக்கிறார். அவரது பேச்சு, எல்லா வித நம்பிக்கைகளையும் இழந்து, ஆத ரவு தருவதற்கு யாருமே இல்லை, நிலைமை மாறவே மாறாது, எல்லாமே முடிந்து விட்டது என்ற மனநிலையை வேத னையோடு வெளிப்படுத்தி இருக்கிறது. புதிய திருமண வாழ்வில் பிரச்சனை தொடங்கியபோதே பெற்றோரிடம் கூறி யிருக்கிறார். பெற்றோரும், உறவினர் களும் போகப் போக எல்லாம் சரியாகி விடும், இன்னும் நிறைய பார்க்க வேண்டி யிருக்கிறது என்று அவரை சமாதானப் படுத்தி இருக்கின்றனர். அவர் பிரச்சனை யை காது கொடுத்துக் கேட்டு அதற்குரிய சரியான தீர்வை கண்டறிவதற்கு பதில் வெற்று நம்பிக்கை வார்த்தைகள், ரிதன்யாவிற்குத் தன்னைச் சுற்றிலும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன என்றே உணர்த்தியிருக்கிறது.

போலியாக கட்டமைக்கப்பட்ட கௌரவம்

கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடத்தி வைத்த நிலையில், மகள் பிரச்சனை என்று வீட்டிற்கு வந்து விட்டால், சொந்தமும், சாதி உறவுகளும் என்ன சொல்லும்? என்று போலியாக கட்டமைக்கப்பட்ட கௌரவ உணர்ச்சியே குடும்பத்தாரை வழி நடத்தியிருக்கிறது. அதுதான் ரிதன்யாவிடம், “பொறுத்துப் போ, எல்லாம் சரியாகிவிடும்” என சொல்ல  வைத்திருக்கிறது. திருப்பூர் மட்டுமின்றி இந்த மேற்கு மாவட்டங்களில் ஓரளவு வசதி படைத்த பெரும்பாலான குடும்பங்களில், ஆணும், பெண்ணும் ஒருவருக்கொரு வர் புரிந்துணர்வுடன், கூட்டாக வாழ்க்கை நடத்துவது என்ற புரிதலுடன் திரு மணத்தை ஏற்பாடு செய்வதை விட, தாங்கள் சார்ந்த சாதி சமூக வட்டத்தில், தங்கள் பொருளாதார அந்தஸ்தை வெளிப்படுத்தக்கூடியதாக திருமண விழா வை நடத்துவதை  காண்கிறோம். மண விழா என்பதை விட பொருளாதார பலத்தைக் காட்டக்கூடிய விழாக்களாக நடத்துகிறார்கள். அங்கே இயல்பான மகிழ்ச்சியை விட, போலி பெருமித உணர் ச்சிக்கே முக்கியத்துவம் இருப்பதைக் காண்கிறோம். ஆடம்பரமும், அதற்காக செய்யப்படும் அதீதச் செலவுகளும், வீண் விரயமும் திருமண விழாவின் அடிப்படை நோக்கத்திற்கு அந்நியமாகப் போய்விடுகிறது. சமூகப் பாரம்பரியம், குடும்ப கௌர வம் என கட்டமைக்கப்படும் எல்லா விச யங்களும், பெண்களை, குறிப்பாக வளர் இளம் பெண்களை மையப்படுத்தி திட்ட மிட்டு கருத்தியல்ரீதியாக வலிந்து திணிக்கப்படுகிறது.

சாதி, மதவாதிகளின் நுட்பமான திணிப்பு

ரிதன்யாவின் மரணத்தை ஒட்டி இது குறித்து சமூக ஊடகங்களில் ஏராள மான விமர்சனங்கள் வந்து கொண்டி ருக்கின்றன. வள்ளி கும்மி என நடத்தப்படும் நிகழ்வும், அதில் இளம்  பெண்களிடம் வாங்கப்படும் உறுதிமொழி யும் பெண்களின் மீதான தாக்குதலாகும் என விமர்சிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ தனித்தனி குடும்பங்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளக்கூடிய சடங்கு அல்ல. நம் பண்பாட்டுப் பெருமை என சாதி, மதப் பெருமித உணர்ச்சியைத் தூண்டி விடுவதன் மூலம் அந்த மக்க ளை அணிதிரட்டி ஆதாயம் அடையலாம் என்ற நோக்கத்துடன் ஆர்எஸ்எஸ்., மதவாத, சாதிய கூட்டம் இதை நுட்பமாகச் செய்து வருகிறது.  சாதி, மதம் அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் சடங்குகள், ஜாதகம், ஜோதிடம், பரிகாரம், சிறப்பு பூஜைகள் பிரச்சனையின் உண்மையான கோணத்தை காட்டாமல் மூளையை மழுங்கடிக்கின்றன என்றும் சமூக ஊடகத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்..

தெளிவாகத் தெரிந்தும்...

தங்கள் பொருளாதார வசதி காரண மாக, பெண்களைப் படிக்க வைத்து உயர்கல்வி வரைக் கற்றுக் கொடுத்தா லும், குடும்பங்கள் பிற்போக்கு சாதியப் பண்பாட்டுத் திணிப்பை தொடர்ந்து நுட்பமாக மேற்கொள்கின்றன. இதனால் நவீன கல்வி கொடுக்க வேண்டிய தன்னம்பிக்கை, அநீதிக்கு எதிராக துணிவுடன் எதிர்த்து நிற்பது, சவாலான வாழ்க்கையை எதிர் கொள்வது என்ற விழுமியங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கே ஒரு பெண்ணின் குரல் கேட்கப் படாமல் போகும்போது, எத்தகைய வலிமையான கோட்டையும் தகர்ந்து போகும்! “இந்த பஞ்சாயத்து, கோயிலுக்கு கூட்டிட்டுப் போறது, பஞ்சாங்கம் பார்க்கிறது இதுனால என்னைக்குமே ஒரு பிரச்சனை தீராது என்பதை ரெம்பத் தெளிவா தெரிஞ்சுக்கிட்டேன்!”  என்று குரல்பதிவில் ரிதன்யா அழுத்தமாக கூறியிருக்கிறார். அனுபவத்தின் மூலம் உண்மையை கண்டறியும் திறன் பெற்றிருந்த ரிதன்யாவுக்கு தன்னம்பிக்கை, அநீதிக்கு எதிரான போராட்ட குணத்தை கற்றுக் கொடுத்திருந்தால் இந்த துயரமான முடிவை எடுத்திருக்க மாட்டார்.