சவால்
கடந்த ஆண்டு நடந்த ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு சவால்களை தேசிய மாநாட்டுக்கட்சி எதிர்கொள்கிறது. ஒன்று, மாநிலங்களவைத் தேர்தல். பிற கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்று பாஜக களத்தில் இறங்கியுள்ளது. இரண்டாவது, பட்காம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலாகும். இந்தத் தொகுதியில் தேசிய மாநாட்டுக்கட்சி வலுவாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஓமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். அதில் ஒன்றுதான் இந்த பட்காம் தொகுதியாகும். கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். ஆனால், அவரை கட்சியின் மக்களவை உறுப்பினர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஓமர் அப்துல்லா தலைமையிலான ஓராண்டு ஆட்சியை மக்கள் இதில் எடைபோடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தியாகம்..!!
‘என்ன திடீர் ஞானோதயம்’ என்று திகைத்துப் போய் நிற்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியன் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளப் போவதில்லையாம். இதை மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவித்திருக்கிறார். ‘வெளிநாட்டுப் பயணம் என்றால் எதையும் விட்டு வைக்க மாட்டாரே நமது பிரதமர்’ என்று புருவங்கள் உயர்ந்துள்ளன. ‘சாத் பூஜை வருகிறதே.. அதனால் வரவில்லை’ என்றாராம். இந்தப் பூஜை பீகாரில் கொண்டாடப்படுவதாகும். அங்கு தேர்தல் நடக்கவிருப்பதால், பூஜை செய்யப் போகிறார். இத்தனைக்கும், கோலாலம்பூரில் டிரம்ப்போடு சந்திப்பும் திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் பூஜை இருப்பதால் வெளிநாட்டுப் பயணத்தையும், நண்பர் டிரம்ப்புடனான சந்திப்பையும் மோடி தியாகம் செய்திருக்கிறார்.
எதிர்க்கேள்வி
திடீர் புள்ளிவிபரங்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத். ஹலால் செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை பயங்கரவாதத்திற்கு உதவுகிறது என்றும், இதுவரையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் நிதி சென்றிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘11 ஆண்டுகள் ஒன்றிய ஆட்சியிலும், உத்தரப் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகள் அதிகாரத்திலும் பாஜக இருந்தும், இவ்வளவு பெரிய தொகை எப்படி பயங்கரவாதத்திற்கு சென்றது’ என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு செய்தது என்ன, வேலைவாய்ப்புகள் எவ்வளவு உருவாக்கப்பட்டன என்பன பற்றியப் புள்ளிவிபரங்களை அரசு வெளியிட்டால் மக்களுக்கு நல்லது என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
கிடுக்கிப்பிடி
பட்டியலின மக்களுக்கு எதிரான சாதி ரீதியான தாக்குதல்களின் எண்ணிக்கையில் எப்போதுமே பாஜக ஆளும் மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன. முதல் மூன்று இடங்களில் பீகார் எப்போதுமே இடம் பிடித்து விடுகிறது. தாக்குதல்களைப் பதிவு செய்ய மறுப்பதும், பதிவு செய்தால் விசாரித்து தண்டனை வழங்குவதும் மிகவும் குறைவாகும். இது குறித்த வினாக்களுக்கு மட்டும் விடையளிப்பதில் லோக் ஜன் சக்தி கட்சித்தலைவரான சிராக் பஸ்வான் திணறுகிறார். ஆளும் கூட்டணிக்கு அப்படியே மொத்தமாக பல லட்சம் பட்டியலின மக்களின் வாக்குகளை இவர் அள்ளித்தருவார் என்று சொல்லப்படும் நிலையில், அந்த மக்களின் நிலை படுமோசமாக உள்ளது என்ற செய்தி சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இரட்டை என்ஜின் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள். ‘இவ்வளவு நாளா ரெண்டு மாட்டிதான வண்டி ஓடிட்டு இருந்துச்சு’ என்று மக்கள் கிடுக்கிப்பிடி போடுகின்றனர்.
