இந்திய தொழிலாளர் இயக்கத்தின் முதல் குரல்
இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர், மே தினத்தின் முன்னோடி, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். உழைக்கும் மக்களின் விடுதலை இன்றி நாட்டின் உண்மையான சுதந்திரம் சாத்தியமில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்கம் 1918-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கத்தை’ சிங்காரவேலர் நிறுவினார். பி & சி மில், டிராம்வே, ரயில்வே, அச்சுத் தொழில் எனப் பல்வேறு துறைகளில் 13-க்கும் மேற்பட்ட சங்கங்களை அவர் உருவாக்கினார். இவரது உத்வேகத்தால் தொழிலாளர் போராட்டம் காட்டுத்தீயாய் மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கும் பரவியது. கயாவும் கான்பூரும் 1922 கயா காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற அவர், “தொழிலாளர்களைப் பயன்படுத்தத் தவறியதால் நாடு சுதந்திரத்தை அடையத் தாமதமாகிறது” என முழங்கினார். 1925-இல் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் இவரே. உற்பத்தி சாதனங்கள் தொழிலாளர் வசப்பட வேண்டும் என்பதே கம்யூனிசத்தின் அடிப்படை என்று அந்த மாநாட்டில் அவர் பிரகடனப்படுத்தினார். மே தினத்தின் முன்னோடி 1888-இல் சிகாகோவில் உதித்த மே தினத்தை, 1923 மே 1 அன்று இந்தியாவிலும் ஆசியாவிலும் முதன்முறையாகச் சென்னையில் கொண்டாடி வரலாற்றில் இடம்பிடித்தார். அதே நாளில் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஒருங்கிணைக்க ‘தொழிலாளர் கிசான் கட்சி’யையும் தொடங்கினார். போராட்டக் களமும் சிறைவாசமும் 1921-இல் பி & சி ஆலை வேலைநிறுத்தத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில், போலீஸ் துப்பாக்கிக்கு எதிராகத் தனது மார்பைக் காட்டி நின்ற வீரம் இவருடையது. 1927-28 தென்னிந்திய ரயில்வே பொன்மலை வேலைநிறுத்தத்திற்காகக் கைது செய்யப்பட்டு, 18 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார். தொழிலாளர்களுக்காக ‘Labour Kisan Gazette’ மற்றும் ‘தொழிலாளர்’ ஆகிய இதழ்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சமூகச் சீர்திருத்தமும் சமத்துவமும் இன்று தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் மதிய உணவுத் திட்டத்தை, 1925-இல் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது முதன்முதலில் தொடங்கி வைத்தவர் சிங்காரவேலர். வறுமையால் கல்வி தடைபடக்கூடாது என்பதே அவரது நோக்கம். சிங்காரவேலர் ஏற்றி வைத்த அந்தப் போராட்டச் சுடர் இன்றும் ஓயவில்லை. 1991 முதல் 2025 வரை தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் நடத்தி வரும் தேசியப் பொது வேலைநிறுத்தங்கள் அதன் தொடர்ச்சியே. 2025 ஜூலையில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றது, பிப்ரவரி 12 வேலை நிறுத்தத்தில் 30 கோடி உழைப்பாளர்கள் பங்கேற்றது - என்பது அவர் விதைத்த வர்க்கப் போராட்டத்தின் வீரியத்தைக் காட்டுகிறது. சமத்துவமே கம்யூனிசத்தின் இறுதி இலக்கு; உழைப்பின் பலன் உழைப்பாளருக்கே கிடைக்க வேண்டும் என்ற சிங்காரவேலரின் கனவை நனவாக்கச் செங்கொடி ஏந்தித் தொடர்ந்து பயணிப்போம்.
