articles

img

காஷ்மீரில் ‘மனசாட்சியை விற்ற’ ஊடகங்கள் - குவாராதுலைன் ரெஹ்பார்

காஷ்மீரில் ‘மனசாட்சியை விற்ற’ ஊடகங்கள் - குவாராதுலைன் ரெஹ்பார்

ஸ்ரீநகரிலிருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹல்காமில், காலியான கடைகளின் நிழலில் 3 விற்பனையாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் கண்கள் 2.44 மில்லியன் பேர் பின்பற்றும் ‘பி பாய்ஸ்’ யூடியூப் சேனலில் பதிந்துள்ளன. 25 இந்து சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் இஸ்லா மியரும் கொல்லப்பட்ட ஏப்ரல் 22 தீவிரவாதத் தாக்கு தலுக்குப் பின், ஊடகங்களும் சமூக வலைதளப் பிரபலங்களும் பஹல்காமை நோக்கி படையெடுத்து, காஷ்மீர் மக்களின் துன்பத்தைக் காட்சிப் பொருளாக்கினர். “நீங்கள் ஏன் இதற்கு எதிராகப் போராடவில்லை? தாக்குதலுக்கு எதிராக ஏன் பேசவில்லை?” என்று வலைப்பதிவர் கேட்கிறார். கேமிரா, தயக்கமுள்ள முகங்களில் சிறிது நேரம் நிலைக்கிறது. “எல்லாம்  சகஜமாக இருக்கிறது... தாக்குதலை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் தீவிரவாதிகள்தான்” என்கிறார் வலைப்பதிவர். வாரத்துக்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் காணொலியைப் பார்த்தனர். “இந்தியாவுக்கு எதிரான மக்களின் உண்மை முகங்களை காண்பித்த தற்கு நன்றி” என பலர் பின்னூட்டங்கள் இட்டனர்.

கட்டாயப்படுத்தப்பட்ட கண்டனங்கள்

“எங்களுக்கு எதிரான பிரச்சாரம் வெளியாகிறது. அது அவநம்பிக்கையையும் அந்நியப்படுதலையும் அதிகப்படுத்துகிறது” என்கிறார் உள்ளூர் விற்பனையாளர் நிசார் அகமது. குறைந்தது ஐந்து  நிருபர்கள் தன்னை அணுகி தாக்குதலைக் கண்டிக்கச் சொன்னதாகவும், தான் கேமிரா முன் பேச மறுத்த தாகவும் பெயர் சொல்ல விரும்பாத கடைக்காரர் கூறுகிறார். விடுதி உரிமையாளர் அராபத் அகமத் கூறுகையில், “22 வருடங்களில் முதன்முறையாக இத்தகைய கொடூரத்தைப் பார்த்தேன். இந்தி தொலைக்காட்சி நிருபர்கள் ‘உள்ளூர் இஸ்லாமியர்களா, பாகிஸ்தானி யர்களா யார் செய்தார்கள்?’ என்று கேட்டனர். ‘இதைச்  செய்தவர்கள் மனித வேட்டையாடுவோர், மனிதர் அல்ல’ என்று பதிலளித்தேன்” என்கிறார். தாக்குதல் நடந்த நாளில் தமது விடுதியின் பத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். ஊடகங்கள் குவிந்த பின்னர், சமூக வலைதளச் செய்திகளால் பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளை விட்டு வெளியேறினர். “நீங்கள் சமூக ஊடகங்களை பார்க்கவே முடியாது. எங்களுக்கு எதிராக இவ்வளவு வெறுப்பு உள்ளது. மாணவர்களும் உள்ளூர் வர்த்தகர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளை நாங்கள் மதிக்கிறோம், பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களைப் பற்றி உயர்வாகப் பேசியுள்ளனர், ஆனால்  ஊடகங்கள் அதைக் காட்டாது” என்று அகமது வேதனையுடன் கூறினார். ஜிஸ்ட் நியூஸின் ஒரு காணொலி தங்களுக்கு எதிரான கோணத்தில் வெளியான செய்திகள் பற்றிய உள்ளூர் மக்களின் கோபத்தைக் காட்டியது. “பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளோடு காஷ்மீர் மக்கள் ஒன்றுபட்டிருக்கிற தரவுகளை, காஷ்மீர் மக்களின் இடத்தில் தங்களை வைத்துப் புரிந்து  கொள்கிற உணர்வோடு காட்டுவதுதான் இப்போதைய தேவை” என்று அகமது கூறினார்.

தவறான தகவல் சூறாவளி

முகநூலில் பத்து லட்சம் பேர் பின்தொடரும் டிஜிட்டல் சேனல், காஷ்மீரிகளை ஆக்ரோஷமாகப் பின்தொடர்ந்து, “என்ஐஏ விசாரிக்கிறது, எதுவும் சொல்ல முடியாது” என்ற பதிலை வலுக்கட்டாயமாக பெற்றது. இது X தளத்தில் மூன்று லட்சம் பேரால்  “அல்லாவை நம்பாத 26 பேர் பற்றி முஸ்லிம்களுக்கு கவலை இல்லை, காஷ்மீரின் பொருளாதாரத்தைப் பற்றியே அக்கறை” என்று பரப்பப்பட்டது. விஷால் சௌராசியா போன்ற செல்வாக்காளர்கள் காஷ்மீர் புறக்கணிப்பு பிரச்சாரம் நடத்தினர். 1,25,000 பேர் பின்தொடரும் இன்ஸ்டாகிராமில் “பயங்கரவாதத்திற்கு ஒரே ஒரு மதம்தான் உள்ளது, அது இதுதான்?” என்ற பதிவுக்கு ‘இஸ்லாம்’ என ஏராளமான பின்னூட்டங்கள் வந்தன. கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி லெப்டினன்ட்  வினய் நர்வாலின் மனைவியின் இறுதித் தருணங் கள் என்று தவறான காணொலி பரப்பப்பட்டது. உண்மையில் அது ஏப்ரல் 14 காஷ்மீர் பயணத்தின் போது எடுக்கப்பட்ட ஆஷிஷ் செஹ்ராவத், யாஷிகா சர்மா தம்பதியின் காணொலி என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேரால் பின்தொடரப்படும் ஒரு முன்னணி தொலைக் காட்சி சேனலின் பத்திரிகையாளர், பாகிஸ்தானுக்கு “இஸ்ரேல் போன்ற தீர்வு வேண்டுமா?” என்று உள்ளூர் மக்களிடம் கேட்டார்.

மறைக்கப்பட்ட மனிதநேயம்

நியூஸ்லாண்ட்ரி ஆசிரியர் மனிஷா பாண்டே கூறுகிறார்: “ஆரம்பத்திலிருந்தே இரண்டு விஷயங்கள் தெளிவாக இருந்தன. முதலில், பாதிக்கப்பட்டவர்கள் மதத்தின் அடிப்படையில் குறிவைக்கப்பட்டனர்; தாக்குதல் நடத்தியவர்கள், தாங்கள் குறி வைக்கும் நபர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிய முயற்சித்தனர், இஸ்லாமியர்களின் பிரார்த்த னைப் பாடலான ‘கலிமாவை’ ஓதச் சொன்னார்கள், பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்ற பிரச்சாரத் தகவல் ஒன்று; “இரண்டாவது- இது உண்மையானது; - உள்ளூர் வாசிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அசாதாரண முயற்சிகள் செய்தனர். மட்டக் குதிரையோட்டிகள், டாக்ஸி ஓட்டுநர்கள், வழிகாட்டிகள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாத்த னர். இரவு முழுவதும் அவர்களுடன் தங்கி பாதுகாப்பை  உறுதி செய்தனர். ஆனால் ஊடகங்கள் இந்த உண்மைகளை புறக்கணித்தன.” “ஊடகங்கள் சமநிலையுடன் செய்தி வெளி யிட்டிருந்தால், காஷ்மீரில் நடந்த பெரிய அளவிலான போராட்டங்கள், மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டங் கள், கடையடைப்புகள் - வன்முறையை பொது மக்கள் வலுவாக நிராகரித்ததற்கான ஆதாரங்களாக முன்னிறுத்தப்பட்டிருக்கும்” என்கிறார் பாண்டே.

திட்டமிடப்பட்ட வெறுப்பு

‘ஒருங்கிணைத்து பரப்பப்படும் வெறுப்பு ஆய்வுமைய’ இயக்குநர் ரகிப் ஹமீத் நாயக் கூறுகிறார்: “இது இயல்பான சீற்றம் அல்ல. பல தளங் களில் ஆழமாக வலைப்பின்னல் செய்யப்பட்ட, திட்ட மிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வெறுப்பு நட வடிக்கை. தீவிர வலதுசாரி குழுக்களும் ஆளும் கட்சி ஆதரவாளர்களும் தொடர்ந்து நடத்தும் செயல்பாடு.” மக்தூப் உள்ளிட்ட சுதந்திர ஊடக அமைப்புகள், X தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் “முஸ்லிம்கள் நடத்தும் படுகொலையை” ஆதரிக்கும் விவாதங்கள் நடப்பதாக செய்தி வெளியிட்டன. “ஒவ்வொரு காஷ்மீரியும் இந்தப் படுகொலையில் ஈடுபட்டார். ஒவ்வொரு காஷ்மீரியும் இதைச் செய்தார்” எனும் அறிக்கைகளை அவை வெளியிட்டன. ‘சுதந்திர பேச்சுக்கான கலெக்டிவ்’ ஆசிரியர் கீதா சேஷு : “அரசாங்கத்தை கேள்வி கேட்க வேண்டிய ஊடகங்கள், வெறுப்பையும் பிரிவினையையும் திணிக்க விரும்புவோரின் கைகளில் நேரடியாகச் செயல்படுகின்றன. உயிர் பிழைத்தவர்கள் கூட உள்ளூர் மக்களால் அவர்களுக்கு எவ்வாறு உதவி கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டனரே” என்கிறார். காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின்: “தொலைக்காட்சிகள் அரசுக்கு நெருக்கமான வணிகக் குழுமங்களுக்குச் சொந்தம். உண்மையான கேள்விகளிலிருந்து கவனத்தைத் திருப்ப, ‘உள்ளே இருக்கும் எதிரிகள்’ என காஷ்மீரிகளை நோக்கி விரல் நீட்டுகின்றன” என வேதனை தெரிவித்தார்.

எதிர்க்குரல்களும் மிரட்டல்களும்

கொல்லப்பட்ட கடற்படை அதிகாரியின் மனைவி ஹிமான்ஷி நர்வால் “இந்தத் துயர சம்பவத்துக்கு முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறை  சொல்ல வேண்டாம்” என்று கூறியதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தார். பாஜக உறுப்பினர்கள் உட்பட பலர் அவர் ‘உணர்ச்சியற்றவர்’ என்றும்; தாக்குதலின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டதாகவும் விமர்சித்தனர். மக்தூப் மீடியா ஆசிரியர் அஸ்லா கய்யலகாத், உள்ளூர் மக்களின் நேர்மறையான குரல்களை வெளி யிட்டதற்காக இந்திய எண்களில் இருந்து கிட்டத்தட்ட 50 மிரட்டல் அழைப்புகள் பெற்றார். “தாக்குதலின் அனைத்து பக்கங்களையும் காண்பித்தோம், ஒரு பக்கச் செய்தியை மட்டும் பெரிதாக்கவில்லை” என்கிறார் அஸ்லா. ஸ்ரீநகரில் உள்ளூர்வாசிகள் ஒரு முக்கிய செய்தி  சேனல் நிருபரை அவரது பாரபட்சமான செய்திக்காகக் கண்டித்து, நேர்காணல் வழங்க மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசின் மௌனம்

‘தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு’, மோதல்களைத் தூண்டும் செய்திகள் பற்றி கவலை எழுப்பியுள்ளது. தேசிய நலனுக்கு எதிராக அவை வன்முறையைத் தூண்டக்கூடும் என்றும்  எச்சரித்துள்ளது. செய்தி மற்றும் தகவல், ஒளிபரப்பு அமைச்சகங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. “2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, ஊடகங்கள் எவ்வாறு செய்திகள் வெளியிட வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது அரசாங்கம் செய்ததைத் போல, ஊடகங்கள் எவ்வாறு பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று தலையிடுவதற்கான கருவிகள் தற்போதும் அரசிடம் உள்ளன” என்று கீதா சேஷு கூறுகிறார். “ஆனால் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள், ஊடக பிரமுகர்களால் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரம் அரசாங்கத்தின் நலன்களுக்கு சேவை செய்வதால் அரசாங்கம் கண்மூடித்தனமாக இருக்கிறது. சிவில் சமூகம் இவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்க முயற்சிக்கிறது, ஆனால் அந்தக் குரல்கள் நசுக்கப்படுகின்றன” என்கிறார் அவர். “தொலைக்காட்சி சேனல்கள் ஏளனம், வெறு ப்பைத் தூண்டும் பேச்சு, போர் வெறியைக் கிளப்பும் ஆக்ரோஷமான தொனியின் வாகனங்களாக மாறிவிட்டன” என்கிறார் பாசின். ஊடகங்கள் பொறுப்பான செய்தியாக்கத்திற்குப் பதிலாக காஷ்மீர் மக்களின் துயரத்தை வணிகமாக்கி, வெறுப்பின் விதைகளை விதைத்தன. மனசாட்சியை விற்ற இந்த ஊடகங்கள் காஷ்மீரின் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக ஆழப்படுத்துகின்றன. கட்டுரையாளர் : காஷ்மீர்-தில்லியில் பணியாற்றும்  சுதந்திரப் பத்திரிகையாளர். பிரெண்ட்லைன் ஏட்டில் வெளியான கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் : கா. வேணி