உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தில் பேரதிர்ச்சியை சந்தித்துவரும் நிலையில் நமக்கெல்லாம் மற்றுமொரு பேரதிர்ச்சியாய் வந்தந்த செய்தி. அன்புத் தலைவர் கே.வரதராசன் மறைவுச் செய்தி கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. கே.வி என்றழைக்கப்பட்ட தோழர் கே.வரதராசன் திருச்சி மாவட்டம் பொதுவுடைமை இயக்கத்திற்கு அளித்த மகத்தான ஆளுமைகளின் வரிசையில் மற்றொரு அற்புதமான தலைவர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து பட்டய பொறியியல் படிப்பில் தேர்ச்சிபெற்று நெல்லையில் பொறியாளராக அரசுப் பணியில் சேர்ந்தார். அங்கு தோழர் பாலவிநாயகம் மூலமாக பொதுவுடைமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். நேர்மையும், போர்குணமிக்க அவரால் அரசுப் பணியில் நீடிக்க முடியவில்லை. வேலையை ராஜினாமா செய்து விட்டு நேரடி அரசியலில் ஈடுபட திருச்சிக்கு வந்துசேர்ந்தார்.
பொன்னி அச்சகம் என்ற பெயருடன் துவங்கப்பட்ட அச்சகம் பெயரளவுக்குத்தான். கே.வி.யின் முழுகவனமும் கட்சிப் பணியில்தான் இருந்தது. திருச்சி மாவட்டத்தில்கட்சியின் வட்டாரச் செயலாளர், மாவட்ட செயலாளர், விவசாய இயக்கத்தின் தலைவர் என பல பொறுப்புகளில் பணியாற்றினார். அவசரநிலை காலத்தில் தலைமறைவாக கட்சிப் பணியாற்றி, கட்சியின் 10-வது மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் கே.வி. மாவட்டத்தில் இயக்கப்பணி ஆற்றிய காலம் திருச்சி மாவட்ட கட்சி வரலாற்றில் பொற்காலம் எனலாம். கட்சி பெரிதும் வளர்ச்சிபெற்ற காலம் அது.தொழிற்சங்க அமைப்புகள் மட்டுமே செயல்பட்டு வந்த காலத்தில் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் கிராமப்புற இயக்கங்களை வலுவாக உருவாக்கிட தோழர் கே.வி. எடுத்த முன்முயற்சிகளின் பலனாக வலுவான செங்கொடி இயக்கத்தையும், கட்சிக்கு தலைவர்கள் முதல் பொருத்தமான ஊழியர்களையும் கொண்டுவர முடிந்தது என்றால் அது மிகையாகாது.
உலக அளவில் வியட்நாமிடம் அடிவாங்கி அமெரிக்க ஏகாதிபத்தியம் பின்னடைவை சந்தித்தது. சோவியத் யூனியனில் சோசலிச முகாம் உலகம் முழுவதும் வலுவுடன்விளங்கியது. இந்திய நாட்டில் அவசர நிலையை எதிர்த்து ஜனநாயக பேரெழுச்சி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் உருவானது. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா என அடுத்தடுத்து இடதுசாரிகளின் ஆட்சி அமைந்து இடதுசாரி அரசியல் ஊக்கம் பெற்றது. இதனால் நாடு முழுவதும் போராட்ட அலைகள் உருவாயின.
அக்காலத்தில் மாவட்டத்தில் வெடித்த வீரம் செறிந்த போராட்டங்கள் சிம்கோ தொழிலாளர் போராட்டம், தினமலர்தொழிலாளர் போராட்டங்கள் என அனைத்து போராட்டங்களிலும் தோழர் கே.வி.யின் பங்கு மகத்தானது. தோழர் கே.வி.யின் பங்களிப்பின் பிரதான முனை கிராமப்புற இயக்கங்களை வளர்ப்பதிலேயே இருந்தது. கிராமப்புற இயக்கம் வலுவடையாமல் மக்கள் ஜனநாயக புரட்சி மலராது. எனவே நமது அடிப்படை பணி கிராமப்புற மக்களைத் திரட்டுவதே என உணர்ந்து அதைத் தனது முன்னுரிமைப் பணியாக தேர்வு செய்தார். கிராமப்புற அடித்தட்டு மக்களான சிறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரையும் திரட்டி இயக்கங்களை நடத்தினார்.
திருச்சி, லால்குடி, முசிறி தாலுகாக்களில் அக்காலத்தில் உக்கிரமான கூலிப் போராட்டங்கள் நடந்தன. அவை அனைத்தும் தோழர் கே.வி.யால் திட்டமிடப்பட்டு நல்ல தயாரிப்புடன் வெற்றிபெறச் செய்து ஏராளமான தாக்குதல்களும், வழக்குகளும் சந்தித்து நடந்த அந்த போராட்டங்களில் நிறைய தலைவர்கள் உருவானார்கள். அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடைந்துள்ளன. செங்கொடி இயக்கம் கிராமப்புறங்களில் இளைஞர்களை ஈடுபடுத்தி திட்டமிட்டு பரவுகிறது என முழுப்பக்க கட்டுரை வெளியிட்டது.
பச்சைமலையில் உள்ள மலையக மக்களை திரட்டிட வலுவான இயக்கங்கள் நடந்தன. கிளர்ச்சிக்காரர், பொதுக்கூட்ட பேச்சாளர், எழுத்தாளர் என அவருக்கு பன்முகம் . இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மிகச் சிறந்த அமைப்பாளர் என்ற அம்சமே மேலோங்கிய பண்பாகும். அவர் எப்போதும் ஊழியர்களை கட்சியின் சொத்தாக நினைப்பார். அவர்களது குடும்ப பிரச்சனை முதல், வாழ்வாதாரம் வரை அக்கறையுடன் தலையிட்டு தீர்வு காண்பார். அவரிடம் எப்போது வேண்டுமானாலும் எந்த பிரச்சனை குறித்தும் மனம்விட்டு பேசலாம். தவறுகள் ஏற்படும்போது அவற்றை சுட்டிக்காட்டி திருத்துவார். ஆனால் ஊழியரை பாதுகாப்பார். தோழர்கள் சோர்வுற்ற நிலையில் அவரால் பாதுகாக்கப்பட்ட பலர் இன்றும் தலைவர்களாக உள்ளனர்.
இவரது காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் அமைப்பான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி சார்பாக முதல் முறையாக திருச்சியில்தான் ‘இளைஞர் முழக்கம்’ எனும் புத்தகம் பொன்னி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தோழர் கே.வி. மாநிலம் முழுவதும் கட்சிக் கல்விப் பணியில் ஈடுபட்டு வகுப்புகள் எடுப்பார். இந்திய தத்துவம் குறித்து ‘தத்துவ தரிசனம்’ என்றநூலை எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்சனையையொட்டி தேசிய இன பிரச்சனை குறித்து விவாதம் எழுந்த நிலையில் கட்சிக்குள்ளும் அது வலுவாக எழுந்தது. தேசிய இனப் பிரச்சனையை கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறு அணுக வேண்டும்என்பது குறித்து அக்காலத்தில் தோழர் கே.வி. கட்டுரைகளை எழுதியும் அவரது பேரவை கூட்டங்களிலும் கட்சித்
தோழர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தினார். இந்திய நிலையில் சாதியம் குறித்து சரியான புரிதலுடன் பொருளாதார போராட்டத்துடன் சமூக போராட்டங்களையும் இணைக்க வேண்டும் என்றார் தோழர் கே.வி.
தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்படுவதற்கு தோழர் கே.வி. முக்கிய காரணமாக இருந்தார். அகில இந்திய அளவிலும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பு உருவானபோது தோழர்கே.வி. அதில் முக்கிய பங்கு வகித்தார். மாவட்ட பொறுப்புகளிலிருந்து விடுபட்டு மாநில, அகில இந்திய அளவில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக, அகில இந்திய விவசாய சங்க பொதுச் செயலாளராக பல பொறுப்புகளில் இருந்தபோதும் எப்போதும்போல் அணுகுவதற்கு யாருக்கும் எளியவராகவே இருந்தார். தோழர் கே.வி. கட்சியை தன் குடும்பமாக கருதியது மட்டுமல்ல, குடும்பத்தையும் அரசியல்படுத்தினார். அவரதுமனைவி தோழர் சரோஜா மாதர் சங்க செயல்பாட்டில் இருந்தார். மகன் பாஸ்கர், சகோதரர்கள், மருமகன்கள் எனதன் குடும்ப உறுப்பினர்கள் பலரையும் கம்யூனிஸ்டுகளாக ஆக்கியதில் தோழர் கே.வி.யின் பங்கு உண்டு.
பன்முகத் தன்மையுடன் கூடிய சிறந்த தலைமைப் பண்பாளர், நமக்கெல்லாம் வழிகாட்டிய அன்புத் தலைவர் கே.வி. இன்றில்லை. ஆனால் அவர் விட்டுச்சென்ற மகத்தான வாழ்க்கை நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிரும்.
கட்டுரையாளர்:எஸ்.ஸ்ரீதர், சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்